விண்வெளிக்குச் சென்று திரும்பும் இந்தியாவின் முதல் ராக்கெட் சோதனை - சென்னை நிறுவனம் அசத்தல்

- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ரூமி 1’ (RHUMI-1), சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து, நேற்று (சனிக்கிழமை, ஆகஸ்ட் 24) காலை 7.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மேற்பார்வையில், தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் செயல்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து இந்த ‘ரூமி - 1’ ராக்கெட்டை தயாரித்துள்ளன.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை கொண்டு செயற்கைக் கோள்களை ஏவுவதால் செலவு மிச்சமாகும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றும் 'ஸ்பேஸ் ஸோன்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று கியூப் செயற்கைக் கோள்களைச் சுமந்துகொண்டு, ஒரு மொபைல் ஏவுதளத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட், செயற்கைக் கோள்களை புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்திவிட்டு, 7 நிமிடங்களில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பிவிட்டதாக ஸ்பேஸ் ஸோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருவதுடன் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து அவற்றை விண்ணில் செலுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் ஒரு மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டை உருவாக்கி வந்தது.
ஹைப்ரிட் எனும்போது திரவ, திட எரிபொருட்கள் என இரண்டுமே ராக்கெட்டில் பயன்படுத்தப்படும். இதனால் ராக்கெட்டின் செயல்முறை அதிகரிப்பதோடு, அதை விண்ணில் ஏவுவதற்கான செலவும் குறைகிறது.
இதன் எடை சுமார் 80 கிலோ எனவும் இந்த ராக்கெட்டுக்கான உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் ஏறத்தாழ 6,000 பள்ளி மாணவர்களும் ஈடுபட்டதாகவும் ஸ்பேஸ் ஸோன் நிறுவனம் தெரிவித்திருந்தது.
காலநிலை மாற்றம், காஸ்மிக் கதிர்வீச்சு, புறஊதா கதிர்வீச்சு, காற்றின் தன்மை ஆகிய தரவுகளைச் சேகரிக்க உதவும் 3 கியூப் செயற்கைக் கோள்கள் மற்றும் 50 சிறிய செயற்ககைக் கோள்கள் இதில் பொருத்தப்பட்டு, ஆகஸ்ட் 24 அன்று ஒரு மொபைல் ஏவுதளம் மூலம் விண்ணில் ஏவப்படும் என அந்நிறுவனம் கூறியிருந்தது.

இந்த ராக்கெட் ஏவுதல் தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, “வழக்கமாக செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியவுடன் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும்.
ஆனால், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் ராக்கெட் உருவாக்கப்பட்டிருப்பது ராக்கெட் தயாரிப்பில் அடுத்த கட்டம்,” என்று கூறியிருந்தார்.
அப்போது பேசிய ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், “3 செயற்கைக் கோள்களையும் குறிப்பிட்ட தூரத்தில் விண்ணில் செலுத்திய பிறகு அதில் உள்ள பாராசூட் மூலம் இந்த ராக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்.
அந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. நாங்கள் இதுபோல் ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறியிருந்தார்.
பூமிக்குத் திரும்பிய ராக்கெட்

நேற்று (சனிக்கிழமை, ஆகஸ்ட் 24) அதிகாலை ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதைக் காண மக்கள் பலர் தங்கள் குடும்பத்தோடு கிழக்குக் கடற்கரை சாலையில் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர்.
“எனது மகனுக்காக இங்கு வந்துள்ளேன். அவனுக்கு ராக்கெட் குறித்த ஆர்வம் அதிகம். அதிகாலையிலேயே இங்கு வந்துவிட்டோம். முதல்முறையாக ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்கப் போகிறோம்,” என்று கூறினார் சென்னையைச் சேர்ந்த லலிதா.
இந்த நிகழ்வைக் காண, கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்த வினோத் பேசுகையில், “இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பைப் பார்த்தவுடன் பதிவு செய்துவிட்டேன். இஸ்ரோ, நாசா போன்ற இடங்களுக்குச் சென்று ராக்கெட் ஏவப்படுவதைக் காண நமக்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியாது. எனவே இதைத் தவறவிடக்கூடாது என வந்துவிட்டேன்” என்று கூறினார்.
முதலில் 7:05 மணிக்கு ஏவப்படும் என முடிவு செய்யப்பட்டு, பின்னர் சில தொழில்நுட்பக் காரணங்களால் தாமதமாகி, 7:30 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்பேஸ் ஸோன் மற்றும் மார்ட்டின் குழும உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“இது ஏறத்தாழ 18 மாத உழைப்பு. அதுவும் கடந்த ஒரு வாரமாக தூக்கமில்லாமல் சோதனைகள் செய்து வந்தோம். ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதும் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,” என்று கூறினார் ஸ்பேஸ் ஸோன் குழுவின் இணை பொறியாளர் லக்ஷ்மி பிரபா.
புவியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திவிட்டு, ராக்கெட் பூமிக்குத் திரும்பிவிட்டதாகவும், அதை மீட்டெடுத்து தரவுகள் சேகரிக்கப்படும் என்றும் ஸ்பேஸ் ஸோன் குழுவின் இணை பொறியாளர் நவீன் தெரிவித்தார்.
ஏவுதளத்திற்கு சில கிலோமீட்டர்கள் தூரத்தில் ஒரு விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த 6,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, தமிழக கிராமப்புற தொழில்கள், குடிசைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில்கள் துறை அமைச்சர் டி.எம்.அன்பரசன், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் மெய்யநாதன் மற்றும் ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
‘இந்திய விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, "ரூமி – 1 ராக்கெட் இந்தியாவின் விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும், நமது நாட்டின் விண்வெளிக் கண்டுபிடிப்புகளில் வளர்ந்து வரும் திறன்களையும் காட்டுவதாக,” கூறினார்.
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, சில நிமிடங்களில் திருப்பி அனுப்பும் திறன்கொண்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைப்ரிட் ராக்கெட்டின் முன்னேற்றம், நம்மிடம் உள்ள தொழில்நுட்ப வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"இதற்காகக் கடுமையாக உழைத்த ஸ்பேஸ் ஸோன் இந்தியா விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கும் இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்த மார்ட்டின் குழுமத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறிய அவர், இந்தியாவிற்கு இதுவொரு பெருமையான தருணம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக கிராமப்புற தொழில்கள், குடிசைத் தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் துறை அமைச்சர் டி.எம். அன்பரசன் பேசுகையில், “தமிழ்நாடு தொடர்ந்து பொறியியல் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. புதுமை மற்றும் அற்புதமான சாதனைகளை வளர்க்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ‘ரூமி - 1’ ராக்கெட்,” என்றார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இத்தகைய முன்னேற்றங்களை ஆதரிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், @MartinGroup_
தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் சிவா வி. மெய்யநாதன் பேசுகையில், “இன்று, நாம் மொபைல் ஏவுதளத்தில் இருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைப்ரிட் ராக்கெட்டை ஏவும்போது, ஒரு தொழில்நுட்ப சாதனையை மட்டும் படைக்கவில்லை, நிலையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தையும் இது குறிக்கிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வில் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதோடு, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது” என்றார்.
‘ரூமி – 1’ குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, “‘ரூமி – 1’ இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் புதிய அளவுகோல்களை அமைத்திருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.”
“இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு வந்திருப்பது என்பது நமது அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் எல்லையில்லா ஆற்றலை நிரூபிக்கிறது” என்று கூறினார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும், அவர்களைப் பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றன.
சர்வதேச விண்வெளித் துறையில் இந்த மூன்று நாடுகளுக்கு அடுத்தபடியாக மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருகிறது.
“மிகக் குறைந்த செலவில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் இதுபோன்ற புதிய முயற்சிகள் இந்தியாவின் விண்வெளித் திட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கும்” என்று மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ‘ரூமி - 1’ திட்டத்தின் தலைவர், டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் பேசுகையில், “ரூமி-1 வெற்றிப் பயணம் எங்கள் குழுவின் கடின உழைப்பு மற்றும் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி. எங்களுடன் இணைந்து பணியாற்றிய மாணவர்களின் அசாத்திய திறமையையும் இது வெளிப்படுத்துகிறது. இது ஸ்பேஸ் ஸோன் நிறுவனத்திற்கான துவக்கம் மட்டுமே. மேலும் இதுபோன்ற பல திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்,” என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












