அடைக்கலம் தேடி வந்த ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைக்குமா?

வங்கதேசம், ஷேக் ஹசீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2022-ம் ஆண்டு வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியா வருகை தந்தபோது எடுக்கப்பட்ட படம்.
    • எழுதியவர், ஷுபஜ்யோதி கோஷ்
    • பதவி, பிபிசி வங்கமொழிச் சேவை, டெல்லியில் இருந்து

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் அமலில் உள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் இருக்கிறார்.

ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி கோரியுள்ளது.

ஆனால், இந்தியாவில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் மற்றும் நிபுணர்கள், வங்கதேசத்தில் ஹசீனா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அவரை திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறுகின்றனர்.

ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேச அரசிடம் இருந்து கோரிக்கை வந்தால் இந்தியா என்ன செய்யும்?

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "நாம் நாடு கடத்துவது பற்றிப் பேசினால், அது முற்றிலும் ஊகம் சார்ந்த கேள்வி. இதுபோன்ற சூழ்நிலையில் எந்தவொரு கற்பனையான கேள்விக்கும் பதிலளிக்கும் மரபு இல்லை," என்று கூறியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதை இப்போதைக்கு தவிர்த்துவிட்டாலும், விரைவில் அல்லது பின்னர் டாக்காவில் இருந்து இப்படியொரு கோரிக்கை வரலாம் என்ற சாத்தியத்தை இந்தியா நிராகரிக்கவில்லை.

இதனுடன், வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைமையும் இந்த விவகாரம் நீண்ட காலத்திற்கு 'கற்பனையாகவே' இருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

வங்கதேச வெளியுறவுத்துறை ஆலோசகர் எம்.தௌஹித், கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "ஷேக் ஹசீனாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில், அவரை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரப்படுமா இல்லையா என்பதை உள்துறை மற்றும் சட்ட அமைச்சகம் முடிவு செய்யும். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம்,” என்றார்.

ஆனால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் நாடு கடத்தக் கோரினாலும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது எளிதல்ல என்பது வங்கதேசத்துக்கும் நன்றாகவே தெரியும்.

இதற்கான காரணம், இந்த ஒப்பந்தத்தில் இதுபோன்ற பல நிபந்தனைகள் அல்லது விதிகள் உள்ளன. அதன் உதவியுடன் இந்தியா அவர்களை நாடு கடத்துவதை மறுக்க முடியும்.

இது தவிர, சட்டச் சிக்கல்களை காரணம் காட்டி வங்கதேசத்தின் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்படலாம்.

கடந்த 50 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் விசுவாசமான நண்பர்களில் ஒருவராக இருப்பது மிகப்பெரிய விஷயம்.

இவ்வாறான சூழ்நிலையில், நீதி விசாரணையை எதிர்கொள்ளவோ, ​​அல்லது தண்டனையை எதிர்கொள்ளவோ ​​இந்தியா ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்காது என்று கருதவும் இடமுள்ளது.

இதற்கு ஆயிரக்கணக்கான வாதங்களை முன்வைக்கலாம்.

இதற்கிடையில், ஹசீனா மூன்றாவது நாட்டிற்குச் சென்று தஞ்சம் புகுந்தால், இந்தியா எந்த இக்கட்டான சூழலையும் சந்திக்க வேண்டியதில்லை.

இதன் காரணமாக, இது தொடர்பான கேள்வியைக் ‘கற்பனை’ என்று சொல்லி அதற்கு பதில் சொல்வதை இந்தியா தற்போது தவிர்த்து வருகிறது.

ஹசீனாவை திருப்பி ஒப்படைக்குமாறு வங்கதேசத்திடம் இருந்து கோரிக்கை வந்தால், எந்த வாதங்களை வைத்து இந்தியா அதனை நிலுவையில் வைக்கவோ, நிராகரிக்கவோ முடியும்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வங்கதேசம், ஷேக் ஹசீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரு நாடுகளுக்கும் இடையே நாடு கடத்தல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. (அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணாவுடன் வங்கதேச வெளியுறவு அமைச்சராக இருந்த தீபு மணி)

என்ன காரணத்தால் நிராகரிக்கலாம்?

2013-இல் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு முக்கியமான ஷரத்து, ஒப்படைக்கப்பட வேண்டிய நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் இயல்புடையதாக இருந்தால், கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்று கூறுகிறது.

இதன்படி, ஒரு குற்றம் 'அரசியல் சம்பந்தப்பட்டது' என்றால், அத்தகைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபரை ஒப்படைக்க மறுக்கலாம்.

ஆனால் எந்தெந்த குற்றங்கள் ‘அரசியல் குற்றங்கள்’ என்று அழைக்கப்படாது என்ற பட்டியலும் மிக நீளமானது. கொலை, காணாமல் போதல், குண்டுவெடிப்பு, மற்றும் பயங்கரவாதம் போன்ற குற்றங்கள் இதில் அடங்கும்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா மீது கடந்த இரண்டு வாரங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கொலை மற்றும் படுகொலை ஆகியவை அடங்கும். காணாமல் போதல் மற்றும் சித்ரவதைகள் தொடர்பிலும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றை ‘அரசியல் குற்றங்கள்’ என்று ஒதுக்குவது கடினம்.

இது தவிர, 2016-ஆம் ஆண்டில், அசல் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்து ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டது. இது பரிமாற்றச் செயல்முறையை மிகவும் எளிதாக்கியது. இந்த மாற்றத்தின் நோக்கம், தப்பியோடியவர்களை விரைவாகவும், எளிதாகவும் நாடு கடத்துவதாகும்.

திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பிரிவு 10 (3), குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஒப்படைக்க கோரும் போது, ​​சம்பந்தப்பட்ட நாடு அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இருந்து கைது வாரன்ட்டை சமர்ப்பிப்பது மட்டுமே சரியான கோரிக்கையாக கருதப்படும்.

அதாவது வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்குகளில் ஏதாவது ஒரு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், அதன் அடிப்படையில்தான் அவரை இந்தியாவிடம் இருந்து நாடு கடத்த வங்கதேச அரசு கோர முடியும்.

ஒப்பந்தத்தில் இதுபோன்ற பல உட்பிரிவுகள் உள்ளன. அதன் உதவியுடன் ஒப்படைப்புக் கோரிக்கையை நிராகரிக்கச் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு உரிமை உண்டு.

எடுத்துக்காட்டாக, ஒரு குற்றத்திற்காக அந்த நபருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்து, அந்த நாட்டில் இருந்து அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கை வந்தால், அதைக் காட்டி அந்த நாடு அந்த கோரிக்கையை நிராகரிக்கலாம்.

இருப்பினும், ஷேக் ஹசீனா விஷயத்தில் இது பொருந்தாது.

காரணம், அவர் மீது இந்தியாவில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை அல்லது எதிர்காலத்தில் அதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை.

இந்த ஒப்பந்தத்தின் மற்றொரு பிரிவின் கீழ், ஒரு நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘நேர்மையான நீதிச் செயல்முறையால் செய்யப்படவில்லை’ என்று சம்பந்தப்பட்ட நாடு கருதினால், அந்தச் சந்தர்ப்பத்திலும் நாடு கடத்தல் கோரிக்கையை நிராகரிக்க உரிமை உண்டு.

இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றவியல் சட்டத்தின் வரம்பிற்குள் வராத சமூகக் குற்றங்கள் தொடர்பானதாக இருந்தால், அந்த வழக்கிலும் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை இந்தியா உண்மையிலேயே பெற்றால், இந்தப் பிரிவைப் பயன்படுத்தி கோரிக்கையை நிராகரிக்கலாம் என்று டெல்லியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வங்கதேசம், ஷேக் ஹசீனா, இந்தியா

பட மூலாதாரம், S Pattnaik

படக்குறிப்பு, ஸ்மிருதி பட்நாயக்

மூலோபாய சிந்தனைக் குழுவான ஐ.டி.எஸ்.ஏ-வின் மூத்த உறுப்பினரான ஸ்மிருதி பட்நாயக், இதுகுறித்து பிபிசி வங்காள சேவையிடம் பேசினார்.

"முதலாவதாக, ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிடம் முறையாகக் கோரும் என்று நான் நினைக்கவில்லை," என்கிறார்.

இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கசப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பது அவரது கருத்து. வங்கதேசத்தின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், சமீபத்தில் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இதுபோன்ற அபாயமான செயலைக் கையில் எடுக்காது.

மேலும் பேசிய ஸ்மிருதி பட்நாயக், "இவ்வாறு கோரிக்கை ஒரு பெறப்பட்டால், அது அரசியல் நோக்கத்திற்காகச் செய்யப்பட்டது என்பதை நிரூபிக்கப் போதுமான வாதங்கள் இந்தியாவிடம் இருக்கும்," என்கிறார்.

"உதாரணமாக, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் கல்வி அமைச்சர் திபுமணி தாக்கப்பட்ட விதம், அல்லது முன்னாள் தொழில்துறை ஆலோசகர் சல்மான் எஃப் ரஹ்மான் அல்லது முன்னாள் சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் நீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்ட விதத்தையெல்லாம் பார்க்கும் போது, ஷேக் ஹசீனாவுக்கும் அது நடக்காது என யார் உத்தரவாதம் அளிப்பார்கள்?” என்கிறார்.

எளிமையாகச் சொன்னால், இந்தியா இந்தச் சம்பவங்களை உதாரணமாகக் கூறி, ‘வங்கதேசத்தில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்குப் பிறகு ஷேக் ஹசீனாவுக்கு நீதி கிடைக்கும் என்று தோன்றவில்லை, எனவே அவரை நாடு கடத்த முடியாது’ என்று பதிலளிக்கலாம்.

டெல்லியில் உள்ள பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, 'நீதித்துறை செயல்முறையின் நேர்மை மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்' என்று கூறும் பிரிவின் உதவியுடன் இந்தியா ஒப்படைப்பு கோரிக்கையை நிராகரிக்க முடியும்.

வங்கதேசம், ஷேக் ஹசீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் முன்னாள் உயர்மட்டத் தூதர் டி.சி.ஏ.ராகவன்

நேரத்தை வீணடிக்க ஒரு வழி

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவைக் கோரினால், இந்திய அரசாங்கம் அதனை உடனடியாக நிராகரிப்பதற்குப் பதிலாக நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்கலாம் என்று இந்தியாவில் உள்ள சில அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடும் நெருக்கடியின் போது ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது அதன் கொள்கை என்று இந்தியாவின் முன்னாள் உயர்மட்டத் தூதர் டி.சி.ஏ.ராகவன் கூறுகிறார். முன்பிருந்ததைவிட ஒரு பெரிய நெருக்கடிக்குள் ஹசீனாவைத் தள்ள இந்தியா விரும்பாது என்கிறார் அவர்.

வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரிப்பதற்கான வழியையோ வாதத்தையோ கண்டுபிடிப்பது ஒன்றும் இந்தியாவுக்குப் பெரிய பிரச்னை இல்லை என்று அவர் கருதுகிறார்.

“இந்த நேரத்தில் ஷேக் ஹசீனாவை ஆதரிக்காவிட்டால், உலகில் உள்ள எந்த நட்பு நாடுகளின் தலைவர்களும் எதிர்காலத்தில் இந்தியாவை நம்ப மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,” என்கிறார் ராகவன்.

ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவளிப்பது மட்டுமே அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்கும்.

இதற்குக் காரணம், இத்தகைய ஒப்பந்தங்களில் பல்வேறு சட்ட ரீதியான ஓட்டைகள் இருப்பதுதான். அவற்றைப் பயன்படுத்தி, சட்ட வல்லுநர்கள் நாடு கடத்தும் கோரிக்கையை பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் நிலுவையில் வைத்திருக்க முடியும்.

நாடு கடத்தும் கோரிக்கை கிடைத்தால், ஷேக் ஹசீனா விஷயத்திலும் அதே வழியை இந்தியா கடைபிடிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும், டாக்காவில் உள்ள முன்னாள் உயர் ஸ்தானிகருமான பினாக் ரஞ்சன் சக்ரவர்த்தி, இதுபோன்ற ஒப்பந்தத்தின் கீழ், நாடு கடத்தல் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கச் சில சந்தர்ப்பங்களில் பல ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்.

பிபிசி வங்காள மொழிச் சேவையிடம் பேசிய சக்ரவர்த்தி, "26/11 மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தானிய அமெரிக்கர் ஹுசைன் ராணாவை இந்தியா 2008-இல் இருந்து நாடு கடத்திக் கொண்டுவர முயன்று வருகிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 1997-இல் இருந்தே இதுகுறித்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது,” என்கிறார்.

"அப்படிப்பட்டச் சூழ்நிலையில், அவர் இந்நேரம் இந்தியா வந்திருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, கலிஃபோர்னியா நீதிமன்றம், ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இது நடந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரை இந்தியா கொண்டுவர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை,” என்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில், ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்தால், ஒரு சில நாட்கள் அல்லது மாதங்களில் அது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை.

அதற்கு முன், ஹசீனா இந்தியாவை விட்டு வெளியேறி மூன்றாவது நாட்டில் தஞ்சம் பெறக் கூடும். இந்திய அரசு இன்னும் இதற்கான சாத்தியத்தை மறுக்கவில்லை. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், வங்கதேசத்திடம் இருந்து அத்தகைய கோரிக்கையைப் பெறுவது அல்லது அதன் அடிப்படையில் எந்த முடிவையும் எடுப்பது என்ற கேள்வியே எழாது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)