பெண் என்றால் யார்? ஒலிம்பிக் முதல் உள்ளூர் வரை நீடிக்கும் சர்ச்சைக்கு இந்த தீர்ப்பு வழிகாட்டியாகுமா?

பட மூலாதாரம், Giggle/Facebook
- எழுதியவர், சோபியா பெட்டிசா
- பதவி, சோபியா பெட்டிசா பாலினம் மற்றும் அடையாள நிருபர் பிபிசி உலக சேவை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், பெண்களுக்கான பிரத்யேக சமூக ஊடக செயலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
ரோக்ஸான் டிக்கிள் என்பவருக்கு பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் அந்த செயலியில் அவர் `ஆண்’ என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. அந்த செயலியில் ரோக்ஸான் டிக்கிளுக்கு எதிராக நேரடியாகப் பாலின பாகுபாடு காட்டப்படவில்லை என்றாலும், அவர் மறைமுகப் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் கண்டறிந்தது. இது ஒரு குறிப்பிட்ட பண்புக்கூறு கொண்ட ஒரு நபருக்கு அந்த செயலி பாதகத்தை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது என்று கூறி அவருக்கு A$10,000 (Australian dollar) மற்றும் இதர செலவுகளைச் கொடுக்குமா செயலி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலின அடையாளம் தொடர்பான வழக்கில் இது ஒரு முக்கிய தீர்ப்பு. இந்த வழக்கின் மையத்தில் இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி : பெண் என்றால் யார்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பெண்களுக்கான செயலி
2021 ஆம் ஆண்டில், டிக்கிள் "கிகில் ஃபார் கேர்ள்ஸ்" (“Giggle for Girls”) என்ற செயலியை பதிவிறக்கம் செய்தார். அந்த செயலியில் பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். அதேநேரத்தில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் பெண்கள் தங்கள் கருத்துகளை அனுபவங்களை பதிவு செய்ய சுதந்திரமான பாதுகாப்பான தளமாக அந்த செயலி பார்க்கப்பட்டது.
இந்த செயலியில் இணைய, அவர் ஒரு பெண் என்பதை நிரூபிக்க ஒரு செல்ஃபியை பதிவேற்ற வேண்டியிருந்தது. இது ஆண்கள் உள்நுழைவதை தடுக்க வடிவமைக்கப்பட்ட பாலின அங்கீகார மென்பொருளைக் கொண்டு அவரது பாலினத்தை மதிப்பிடும்.
அவரால் அந்த செயலியில் இணைய முயன்றாலும் கூட, ஏழு மாதங்களுக்குப் பிறகு அவரது உறுப்பினர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.
ஒரு பெண்ணாக அடையாளம் காணப்படும் நபராக டிக்கிள், பெண்களுக்கான செயலியை பயன்படுத்த சட்டப்பூர்வமாக தனக்கு உரிமை இருப்பதாகவும் ஆனால் தனது பாலின அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், EPA
டிக்கிள் அந்த சமூக ஊடக தளம் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சால் க்ரோவர் மீது வழக்குத் தொடர்ந்தார். க்ரோவரின் "தவறான பாலினம் பற்றிய பார்வை தொடர்ச்சியான கவலை மற்றும் அவ்வப்போது தற்கொலை எண்ணங்களை தூண்டியதாகக் கூறி, A$200,000 (Australian dollar) தொகையை இழப்பீடாக கோரினார்.
“என்னைப் பற்றியும் இந்த வழக்கைப் பற்றியும் குரோவர் வெளியிட்ட பொது கருத்துகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், மனச்சோர்வடையச் செய்வதாகவும், சங்கடமாகவும், புண்படுத்துவதாகவும் உள்ளது. இது இணையத்தில் என்னை நோக்கி வெறுக்கத்தக்க கருத்துகளை வெளியிடுவதற்கும், மற்றவர்களை மறைமுகமாக அதைச் செய்ய தூண்டுவதற்கும் வழிவகுத்தது" என்று டிக்கிள் ஒரு வாக்குமூலத்தில் கூறினார்.
பாலினம் என்பது ஒரு உயிரியல் கருத்து (biological concept) என்று கிகில் செயலியின் சட்டக் குழு வாதிட்டது.
டிக்கிளின் பாலின அடையாளத்தை வைத்து பாகுபாடு காட்டவில்லை. ஆனால் அவரின் பாலினத்தை வைத்து பாகுபாடு காட்டப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பாலினத்தின் அடிப்படையில், செயலியை பயன்படுத்த டிக்கிளை அனுமதிக்க மறுப்பது `சட்டப்பூர்வமான பாலின பாகுபாடு’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த செயலி ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் நிறுவனர் டிக்கிளை ஆண் என்று உணர்ந்ததால் - செயலியை பயன்படுத்த அனுமதி மறுப்பது சட்டபூர்வமானது என்று அவர் வாதிடுகிறார்.
ஆனால் நீதிபதி ராபர்ட் ப்ரோம்விச் வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பில், பாலினம் என்பது "மாற்றக்கூடியது மற்றும் இரண்டில் ஒன்று என்ற தன்மை கொண்டதல்ல" என்று இவ்வழக்கில் சட்டம் கண்டறிந்துள்ளது என்றார். இறுதியில் கிகில் நிறுவனத்தின் வாதத்தை நிராகரித்தார்.
இந்த தீர்ப்பு " பெண்களுக்கு எதிரான பாகுபாட்டிலிருந்து அவர்களை பாதுகாப்பதை காட்டுகிறது" என்று டிக்கிள் கூறினார். மேலும் இந்த வழக்கு "திருநங்கைகள் மற்றும் மாற்று பாலின சமூகத்துக்கு ஆறுதலாக இருக்கும்" என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
"துரதிருஷ்டவசமாக, நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வந்திருக்கிறது. பெண்களின் உரிமைகளுக்கான எங்களின் போராட்டம் தொடரும் ”என்று க்ரோவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
"டிக்கிள் வெர்சஸ் கிகில்" என்று அழைக்கப்பட்ட இந்த வழக்கு, ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தால் பாலின அடையாள பாகுபாடு குறித்து விசாரிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இது சமீபக் காலங்களில் மிகவும் கடுமையான கருத்தியல் விவாதங்களில் ஒன்று. `டிரான்ஸ் இன்க்லூஷன்’ மற்றும் `பாலின அடிப்படையிலான உரிமைகள்’ வழக்கு நீதிமன்றத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உள்ளடக்கியது.

பட மூலாதாரம், EPA
‘எல்லோரும் என்னை பெண்ணாகவே நடத்தினார்கள்’
டிக்கிள் ஆணாக பிறந்தார், ஆனால் பாலினத்தை மாற்றிக்கொண்டு 2017 முதல் ஒரு பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.
நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது, அவர் கூறுகையில்: "இதுவரை, எல்லோரும் என்னை ஒரு பெண்ணாகவே நடத்தினர்."
"நான் அவ்வப்போது முக சுளிப்பை எதிர்கொள்கிறேன். சிலர் முறைத்துப் பார்க்கின்றனர், குழப்பமான தொணியில் கேள்வி கேட்கின்றனர். நான் எல்லாவற்றையும் கடந்து வாழ்கிறேன்” என்றார்.
ஆனால் க்ரோவர் எந்த மனிதனாலும் பாலினத்தை மாற்ற முடியாது என்று நம்புகிறார் - இது பாலினத்தை பற்றிய விமர்சனத்துக்குரிய சித்தாந்தம்.
டிக்கிலின் வழக்கறிஞர் ஜார்ஜினா காஸ்டெல்லோ க்ரோவரை குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் கூறியது:
“பிறவியில் ஆணாக பிறந்த ஒருவர் அறுவைசிகிச்சை செய்து, ஹார்மோன்கள் செலுத்தி, முகத்தில் வளரும் முடிகளை அகற்றி, முகத்தில் சில மாற்றங்களை செய்து, தலைமுடியை நீளமாக வளர்த்து, மேக்கப் போட்டு, பெண் ஆடைகளை அணிந்து, பெண்ணாக மாறி தன்னை ஒரு பெண்ணாக உணர்கின்றனர். தங்களை ஒரு பெண்ணாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர், பெண்களின் உடை மாற்றும் அறைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் பிறப்புச் சான்றிதழை மாற்றுகிறார்கள் - அவர்களை ஒரு பெண்ணாக நீங்கள் ஏற்க மறுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
"இல்லை" என்று குரோவர் பதிலளித்தார்.
டிக்கிளை "பெண்" என்று அழைக்க மறுப்பதாகவும், "டிக்கிள் ஒரு உயிரியல் ரீதியான ஆண்" என்றும் அவர் கூறினார்.
க்ரோவர் திருநங்கைகளை பெண்ணாக ஏற்றுக் கொள்ளாத பெண்ணியவாதி என்று தன்னை அறிவித்துக் கொண்டவர் ஆவார்.
"பெண் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஆணால் நான் பெடரல் நீதிமன்றம் வரை அழைத்துச் செல்லப்படுகிறேன், ஏனென்றால் நான் உருவாக்கிய பெண்களுக்கான தளத்தை அவர் பயன்படுத்த விரும்புகிறார்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“பெண்களுக்கான பிரத்யேக தளத்தை பயன்படுத்த எந்த பெண்ணுக்கும் தடை விதிக்கப்படவில்லை” என்று அவர் வறியுள்ளார்.
ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளராகப் பணிபுரிந்த போது ஆண்களால் சமூக ஊடகங்களில் பல முறைகேடுகளைப் பெற்ற பிறகு, 2020 ஆம் ஆண்டில் “கிகில் ஃபார் கேர்ள்ஸ்” என்ற தனது செயலியை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.
"உங்கள் உள்ளங்கையில் பாதுகாப்பான, பெண்களுக்கு மட்டுமேயான தளத்தை உருவாக்க விரும்பினேன்" என்று அவர் கூறினார்.
“டிக்கிள் ஒரு பெண் என்பது சட்டப்பூர்வமான கற்பனை. அவரது பிறப்புச் சான்றிதழ் ஆணிலிருந்து பெண்ணாக மாற்றப்பட்டுள்ளது, ஆனால் அவர் ஒரு உயிரியல் மனிதர், எப்போதும் அப்படி தான் இருப்பார்”
" பெண்களுக்கான தளத்தில் பாதுகாப்பிற்காக நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம், ஆனால் அடிப்படை உண்மைக்காகவும் சட்டம் பிரதிபலிக்க வேண்டும்." என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Grata Fund
ஒரு முன்மாதிரி
இந்த வழக்கின் முடிவு மற்ற நாடுகளில் பாலின அடையாள உரிமைகள் மற்றும் பாலின அடிப்படையிலான உரிமைகளுக்கு இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கான சட்ட முன்மாதிரி தீர்ப்பாக அமையும்.
இதைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான மாநாடு (CEDAW). இது 1979 இல் ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும் - இது பெண்களுக்கான உரிமைகளுக்கான பிரத்யேக சர்வதேச மசோதா.
`CEDAW’- வுக்கு ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்தது, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசைக் கட்டாயப்படுத்துகிறது என்று கிகிலின் சட்டக் குழு வாதிட்டது.
எனவே டிக்கிளுக்கு ஆதரவாக வெளியான இன்றைய தீர்ப்பு CEDAW அங்கீகரிக்கப்பட்ட அனைத்து 189 நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கும். பிரேசில், இந்தியா முதல் தென்னாப்பிரிக்கா வரை அனைத்து நாடுகளுக்கும் செய்தியாக இருக்கும்.
சர்வதேச ஒப்பந்தங்களை விளக்கும் போது, தேசிய நீதிமன்றங்கள் மற்ற நாடுகள் அதை எவ்வாறு அணுகுகின்றன என்பதை அடிக்கடி உற்று நோக்குகின்றன.
அதிக அளவிலான ஊடக கவனத்தைப் பெற்ற வழக்கில் ஆஸ்திரேலியாவின் சட்டத்தின் விளக்கம் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
காலப்போக்கில் நீதிமன்றங்கள் பெருகிவரும் பாலின அடையாள உரிமை கோரல்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால் - மற்ற நாடுகளும் இதைப் பின்பற்றும் வாய்ப்புகள் அதிகம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












