கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' உண்மையில் இருந்ததா? கோவில் அகழாய்வு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெய்தீப் வசந்த்
- பதவி, பிபிசி குஜராத்தி
கிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு, துவாரகை நகரம் மூழ்கியது என்று புராணங்கள் கூறுகின்றன. அதன் பிறகு அந்நகரம் ‘மேலும் ஐந்து முறை உருவாக்கி அழிக்கப்பட்டதாகவும்' நம்பப்படுகிறது.
ஆனால் இதுகுறித்த அறிவியல், தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதுதவிர, தற்போது குஜராத்தில் துவாரகை என்ற பெயரில் உள்ள ஊர், புராண துவாரகையா, அல்லது அது வேறு இடத்தில் இருந்ததா என்பது குறித்தும் விவாதங்கள் உள்ளன.
தற்போதைய துவாரகையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலவும் முரண்பாடான கதைகள், கோவில்களின் இடிபாடுகள் ஆகியவையும் இந்த விவாதத்தைத் தூண்டின.
இருப்பினும், இன்றைய துவாரகை ஊரில், இந்திய சுதந்திரத்திற்குப் பின் நடந்த அகழ்வாராய்ச்சிகள், பண்டைய நகரம் பற்றிய பிரபலமான நம்பிக்கைகளுக்குப் புதிய ஆதரவைக் கொடுத்தன.
இவ்விடத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆய்வு நிலத்தில் தொடங்கி கடல் வரை செய்யப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
துவாரகை அகழாய்வு எப்படி துவங்கியது?
கடந்த 1947இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது, அகழாய்வு சார்ந்த இடங்களும் இரு நாடுகளுக்கும் இடையில் பிரிக்கப்பட்டன.
சிந்து சமவெளி நாகரிகமான, ஹரப்பா நாகரிகத்தின் பல முக்கிய இடங்கள் பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்றன. இந்தியாவை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பிரிவினைக்குப் பிந்தைய இந்திய நிலப்பரப்பில் அகழாய்வு செய்வதற்கான முக்கிய இடங்களைத் தேடினர்.
இந்திய தொல்லியல் துறை, இந்தியாவின் வரலாற்றுக் கட்டடங்கள், பழங்கால இடிபாடுகள், நாட்டுப்புறக் கதைகள், மற்றும் பழங்கால எழுத்துகள் பற்றிய புதிய ஆய்வுகளை மேற்கொண்டது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1960ஆம் ஆண்டுக்குப் பின் மூன்று ஆண்டுகளுக்கு, துவாரகையில் ஒரு குறிப்பிடத்தக்க அகழாய்வு முன்னெடுக்கப்பட்டது. சமஸ்கிருத அறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான டாக்டர் ஹஸ்முக் சங்காலியா இதை முன்னெடுத்தார். அதில் குஜராத்தின் தொல்லியல் தொடர்பான ஒரு கருதுகோளும் சேர்க்கப்பட்டது.
இந்த அகழாய்வின் கண்டுபிடிப்புகள் குறித்து புனே கல்லூரியால் 'துவாரகாவில் அகழ்வாராய்ச்சி' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
அதன் முதல் அத்தியாயத்தில், டாக்டர் ஹஸ்முக் சங்காலியா இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களான துவாரகையில் ஆய்வு செய்தனர். ஆனால், உள்ளூர்வாசியான டாக்டர். ஜெயந்திலால் தாக்கர் என்பவரும், துவாரகையின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களைத் தனது சொந்த வழியில் நுணுக்கமாக ஆய்வு செய்தார்.
டாக்டர் தாக்கரின் ஆய்வு மற்றும் முடிவின்படி, அப்பகுதியில் 35-40 அடி ஆழத்திற்குக் கவனமாகத் தோண்டித் திறக்கப்பட்டால், துவாரகாதீஷ் கோவிலைச் சுற்றி முக்கியமான கோபுரங்கள் கண்டுபிடிக்கப்படலாம்."
டாக்டர் ஹஸ்முக் சங்காலியா இந்த முடிவை தர்க்க ரீதியானது என்று குறிப்பிட்டார்.
துவாரகை ஆய்வுக்கு வந்த சோதனைகள்

டாக்டர் ஹஸ்முக் சங்காலியா இந்த அகழாய்வு பற்றியும் அதற்கு ஏற்பட்ட தடைகள் பற்றியும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கோவிலின் வடமேற்கு திசையில் உபாத்தியாயா குடும்பத்தினரின் வீடு காணப்பட்டது. அது அங்கிருக்கும் ஜகத் மந்திர் கோவிலைப் போலவே, சுற்றியுள்ள பகுதியைவிடச் சற்று உயரமாக இருந்தது. அகழ்வாராய்ச்சி நடந்த இடத்திற்கும் ஜகத் மந்திர் கோவிலுக்கும் இடையில் ஒரே ஒரு வழிப்பாதை மட்டுமே இருந்ததால், அகழ்வாராய்ச்சியின் போது அங்கு சான்றுகள் கிடைக்கும் வாய்ப்பு வலுவாக இருந்தது.
இருப்பினும், இது குறிப்பிடத்தக்க சிக்கல்களையும் கொண்டிருந்தது. இந்த வீட்டின் தெரு மிகவும் குறுகலாக இருந்தது, மேலும் ஒருவர் மட்டுமே கீழே இறங்கும் வகையில் அங்கு குழியைத் தோண்ட முடியும். சுற்றுவட்டாரத்தில் உள்ள பல வீடுகளில் சிமென்ட் அல்லது சுண்ணாம்பு பூசப்படவில்லை.
சுற்றியுள்ள வீடுகள் சேதமடையாமல் இருக்க வேண்டும், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாகச் சென்று வர வேண்டும், தொழிலாளர்கள் அல்லது ஆய்வாளர்கள் நிலச்சரிவால் நசுக்கப்படாமல் இருக்க வேண்டும், அல்லது அகழ்வாராய்ச்சிக்கான இடம் தீர்ந்துவிடாமல் இருக்கவேண்டும் — இவையே தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொண்ட சோதனைகள்.
இந்த வரம்புகளைக் கருத்தில் கொண்டு, கிடைக்கக்கூடிய நிலத்தில் 25 x 20 அடி பரப்பளவில் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்ய முடிந்தது. ஆனால் அகழ்வாராய்ச்சியின்போது அடுக்குகள் விலகத் தொடங்கின.
அதனால், மண்ணின் தரத்தைக் கருத்தில் கொண்டு, ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பிற்காக 10 x 10 அடிக்கு மட்டுமே தோண்ட முடிவு செய்தனர். 20 அடி ஆழம் வரை தோண்டிய பிறகு, ஆராய்ச்சித் தளம் 6 X 6 அடியாகச் சுருக்கப்பட்டது. மண் விழுவதைத் தடுக்க மரப் பலகைகள் அமைக்கப்பட்டன.
அவ்வாறு செய்யும்போது, ஆராய்ச்சியாளர்கள் சுமார் 38 அடி ஆழத்தை அடைந்தனர். அங்கு பாறை நிலம் இருந்தது. அப்போதைய கடல் மட்டமும் அந்த அளவுதான் இருந்தது.
ஏழு அடுக்குகள், ஐந்து காலகட்டங்கள்

பட மூலாதாரம், Youtube Screengrab
'ஒரு மதத் தளம் அழிக்கப்படும் இடத்தில், அது மீண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும்' என்ற நம்பிக்கை, கோவிலைச் சுற்றியுள்ள உயரமான பகுதியில் அகழ்வாய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தது. இதை ஓர் உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.
ஒரு புத்தகம் ஏழு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை முதல் பாகம் கீழே, ஏழாவது பாகம் மேலே என்று அடுக்கி வைத்தால், அடியில் இருக்கும் முதல் பாகம் பழமையானது, மேலே இருக்கும் ஏழாவது பாகம் கால வரிசைப்படி மிகச் சமீபத்தியது.
இந்த ஆகழாய்வில் ஏழு அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட அடி ஆழத்திலிருந்த ஏழாவது அடுக்கு மிகப் பழமையானது. இது கி.மு. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த அடுக்கு சுமார் 5மீ அளவுக்குத் தடிமனாக இருந்தது. இதில் வர்ணம் பூசப்பட்ட மண் பாண்டங்கள், வளையல்கள் ஆகியவற்றின் துண்டுகள், ஒரு இரும்புத் துண்டு ஆகியவை அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்கு அடுத்த அடுக்கு, சுமார் 2.5மீ தடிமன் கொண்டது, இது கி.பி 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மண்பாண்டங்கள் தவிர, பளபளப்பான பாத்திரங்கள் மற்றும் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்காலத்தில் மேற்கு இந்தியாவின் துறைமுகப் பகுதிகளில் இத்தகைய பொருட்களின் பயன்பாடு பரவலாக இருந்தது. இது மதுபானம், எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. இந்த எச்சங்கள் அன்றைய காலகட்டத்தில் இங்கு மனிதர்கள் வாழ்ந்ததைச் சுட்டிக் காட்டுகின்றன.
பிற்காலத்தில் செதுக்கப்பட்ட கல் எச்சங்கள் இங்குள்ள பழைய கோவிலைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.
இந்த அடுக்குக்கு மேலிருந்த இரண்டு அடுக்குகளுக்கும் இடையே மிகக் குறைவான வேறுபாடுகளே இருந்தன. நான்காவது அடுக்கில் வளையல்கள் காணப்படவில்லை. இது அதைக் கீழே உள்ள ஐந்தாவது அடுக்கில் இருந்து பிரித்தது.
அடுத்த மூன்று அடுக்குகளில் குஜராத் சுல்தானகக் காலத்தின் நாணயங்கள், கண்ணாடி வளையல்கள், மற்றும் மெருகூட்டப்பட்ட பாத்திரங்கள் ஆகியவை கிடைத்தன. இது கிட்டத்தட்ட நவீன காலம் வரை நீண்டது.
கண்ணாடி வளையல்கள் மற்றும் மெருகூட்டப்பட்டப் பாத்திரங்கள் இஸ்லாமிய சகாப்தத்துடன் தொடர்புடையவை. 10ஆம் நூற்றாண்டில் இன்றைய துவாரகைக்கு அருகிலுள்ள தீபகற்பமான ஒக்காமண்டல் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மத்திய தரைக்கடல் பகுதி மக்களுடன் கடல் வழியாக வர்த்தகம் செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே, இந்தப் பொருட்கள் இங்கு வந்திருக்கலாம்.
இந்த அகழ்வாராய்ச்சியின் போது வெகு சில பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டன. கடல் நீரின் தாக்கத்தால் பல பொருட்கள் சிதைந்துவிட்டன. அவற்றைத் தொல்லியல் ரீதியாகத் தேதியிடுவது கடினம்.
துவாரகை நகரம் உண்மையில் இருந்ததா?

பட மூலாதாரம், Getty Images
கடந்த 1980ஆம் ஆண்டுவாக்கில் எஸ்.ஆர்.ராவ் தலைமையில் இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) கோவில் வளாகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வு கடல் தளம் வரை நீட்டிக்கப்பட்டது.
ராவ், தனது ‘கடல் தொல்லியல்’ (மரைன் ஆர்க்கியாலஜி) புத்தகத்தில் துவாரகையில் எத்தனை முறை கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அந்தக் காலகட்டத்தின் சான்றுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
அவரது கூற்றுப்படி, முதல் துவாரகை கி.மு.14-15ஆம் நூற்றாண்டில் கடலில் மூழ்கி அழிந்தது. அந்த சகாப்தத்தின் ஆதாரமாக, ஆராய்ச்சியாளர்கள் பளபளபான சிவப்புப் பாத்திரத்தை கண்டுபிடித்தனர்.
கி.மு. 10ஆம் நூற்றாண்டில் துவாரகையில் இருந்த மற்றொரு குடியேற்றமும் வெள்ளத்தில் மூழ்கியது, அல்லது கடலால் விழுங்கப்பட்டது.
அதன்பிறகு, இயேசுவுக்கு முந்தைய அல்லது இயேசுவின் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சத்ரபதிகளின் காலத்தில், மூன்றாவது மக்கள் குடியேற்றம் இங்கு நிறுவப்பட்டது. அந்தக் காலத்தின் பளபளப்பான சிவப்புப் பாண்டங்கள் மற்றும் சத்ரபதிகள் காலத்தைச் சேர்ந்த நாணயங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில்தான் துவாரகையில் முதல் கோவில் உருவானது.
அக்கோவிலின் கல்லில் சுண்ணாம்பு பூசப்பட்டது. அதில் ஓவியங்களின் சில கோடுகள் தெரியும். இதன் காரணமாக, கோவிலின் பீடம் அன்றைய நிலமட்டத்திற்கு மேலே இருந்திருக்கும், அதன் காரணமாக மக்களால் அதைத் தொலைவிலிருந்து பார்த்திருக்க முடியும், என்று ஊகிக்கப்படுகிறது.
முதல் கோவிலின் இடிபாடுகளின் மேல் இரண்டாவது கோவில் தோன்றி, அதுவும் மூழ்கியிருக்கலாம். எஸ்.ஆர்.ராவ் தனது புத்தகத்தில் இந்தக் கோவில் கி.பி 3 மற்றும் 7ஆம் நூற்றாண்டுக்கு இடையில் இருந்ததாகக் கூறுகிறார்.
மூன்றாவது கோவில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 12ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புயல்கள் கோவிலின் கூரையை அழித்தன. ஆனால் கட்டடம் மற்றும் சுவர்கள் தப்பிப் பிழைத்தன. அதன்பிறகு நான்காவது கோவில் விரைவில் உருவாக்கப்பட்டது. தற்போதுள்ள கோவில் இந்தத் தொடரில் ஐந்தாவது கோவிலாகும்.
இந்த ஐந்து கோவில்களும், துவாரகையின் மூன்றாவது முதல் ஏழாவது குடியிருப்புகளைக் குறிக்கின்றன. தற்போதைய நவீன துவாரகை நகரம், அந்த இடத்தின் எட்டாவது குடியிருப்பு ஆகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












