இஸ்ரேல் - ஹெஸ்பொலா மோதல் பற்றி ஹமாஸ், ஹூதி ஆயுதக் குழுக்கள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், ஜரோஸ்லாவ் லூகீவ்
- பதவி, பிபிசி நியூஸ்
இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில் உள்ள ஹெஸ்பொலா இலக்குகள் மீது தங்கள் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, ஹெஸ்பொலாவும் இஸ்ரேல் பிராந்தியத்தில் தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
“இந்த அச்சுறுத்தல்களைக் களைவதற்கான தற்காப்பு நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக” இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இரானால் ஆதரவளிக்கப்படும் ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்பொலா இயங்கும் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு லெபனான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ராக்கெட்டுகள் குறித்து மக்களை எச்சரிக்கும் சைரன்கள் வடக்கு இஸ்ரேல் முழுவதும் கேட்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் யாரேனும் காயமடைந்தனரா, உயிரிழப்புகள் ஏதும் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை.
இந்நிலையில், அரசின் பாதுகாப்பு அமைச்சரவையின் அவசரக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், ஹெஸ்பொலா ஆகிய இரு தரப்புமே போரை விரும்பாவிட்டாலும், முழு அளவிலான போருக்குத் தயாராகவே இருப்பதாக அறிவித்துள்ளன.
ஹெஸ்புலா பதில் தாக்குதல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் பிராந்தியத்தில் லெபனானில் இருந்து ஹெஸ்பொலா சுமார் 150 எறிகணைகளை ஏவியுள்ளதாக” தெரிவித்துள்ளது.
“இஸ்ரேல் விமானப்படையின் ஜெட் விமானங்கள் தற்போது தெற்கு லெபனானின் பல்வேறு இடங்களில் இலக்குகளைத் தாக்கி வருகின்றன” என்று டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
இதனிடையே, தாங்கள் ஏற்கெனவே 320-க்கும் மேற்பட்ட கத்யுஷா ரக ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாகவும், அவை 11 இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ராணுவ குடியிருப்புகளைத் தாக்கி வருவதாகவுவும் ஹெஸ்பொலா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images
டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் ராணுவ தளத்தில் இருந்து பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் இருவரும் “நிலைமையைக் கண்காணித்து வருவதாக” பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் இருந்து ஹெஸ்போலா ஏவிய ட்ரோன்களை இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் அந்நாட்டு போர் விமானம் இடைமறித்து அழித்துள்ளது. அந்த புகைப்படங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், EPA
தாக்குதல் முடிந்தது - ஹெஸ்பொலா அறிவிப்பு
இஸ்ரேல் மீதான இன்றைய தாக்குதல்களை தாம் முடித்துவிட்டதாக ஹெஸ்பொலா கூறியுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் தாக்குதல்களை தொடங்கி லெபனானின் எல்லை தாண்டி "விரும்பிய இலக்கை நோக்கி பல வழிகளிலும்" தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறுகிறது.
லெபனான் மீதான தாக்குதல் முன்னெச்சரிக்கையாக நடத்தப்பட்டது, அதில் சில குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி அழித்தோம் என்பது போன்ற இஸ்ரேலின் கூற்றுகளை ஹெஸ்பொலா மறுத்துள்ளது. களத்தில் உள்ள உண்மைக்கு மாறான தகவல்களை இஸ்ரேல் தெரிவிப்பதாக ஹெஸ்பொலா கூறியுள்ளது.
இஸ்ரேல் மீதான தங்களின் தாக்குதல், “சியோனிச (இஸ்ரேலின் முதன்மைத்துவத்தை ஆதரிப்பது) தாக்குதல் காரணமாக ஃபவுத் ஷுக்கரின் உயிர்த் தியாகத்திற்குப் பதிலடி” என ஹெஸ்பொலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹெஸ்பொலாவின் மூத்த தளபதியான ஃபவுத் ஷுக்கர், கடந்த ஜூலை மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
காஸாவில் ஹமாஸ் உடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல், லெபனானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெஸ்பொலாவுடன் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
அடுத்தது என்ன?
ஃபுவாத் ஷுக்ரின் கொலைக்கான பதிலடியின் முதல் கட்டத்தை முடித்துவிட்டதாக ஹெஸ்பொலா கூறியுள்ளது.
நேற்று காலை இஸ்ரேல் மீதான ஹெஸ்பொலாவின் தாக்குதல்கள் ஒப்பீட்டளவில் சிறிய சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இரு தரப்பிலும் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேலோ, ஹெஸ்பொலாவின் பெரிய தாக்குதல் ஒன்றை வெற்றிகரமாக முறியடித்ததாக நம்புகிறது.
கடந்த அக்டோபரில் காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் - லெபனான் எல்லையில் நடந்து வரும் வழக்கமான எல்லை தாண்டிய பழிக்குப் பழி தாக்குதல்கள் நடப்பதை நாம் மீண்டும் பார்க்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது நேற்றைய தாக்குதல்கள் இன்னும் ஆபத்தான ஒன்றாக மாறுமா? என்ற கேள்வியும் இருக்கிறது.
இஸ்ரேலிய மற்றும் ஹெஸ்பொலா தலைவர்கள் மற்றொரு முழு அளவிலான போரை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இரு தரப்புமே அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஹமாஸ், ஹூதி அமைப்புகள் கூறுவது என்ன?
இஸ்ரேல் மீதான ஹெஸ்பொலாவின் தாக்குதலை ஹமாஸ் வரவேற்றுள்ளது.
தங்களின் டெலிகிராம் சேனலில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹமாஸ், ஹெஸ்பொலாவின் தாக்குதலை புகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலை "பலமான பதிலடி," என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
ஹெஸ்பொலாவின் மூத்த தளபதி பவுத் ஷுக்கர் படுகொலை செய்யப்பட்ட பிறகு ஹெஸ்பொலாவின் கடுமையான பதிலடி கொடுத்திருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.
"பாலத்தீன மற்றும் லெபனான் மக்கள் மீது நடத்தப்பட்ட குற்றச்செயல்களுக்கு தண்டனை கிடைக்காமல் இருக்காது," என்று ஹமாஸ் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"இஸ்ரேலிய எதிரிக்கு எதிராக எடுக்கப்பட்ட தைரியமான பதிலடி" என்று ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹூதி தெரிவித்துள்ளது.
ஜூலையில் ஏமன் நாட்டில் அமைந்துள்ள துறைமுகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்குவோம் என்று அந்த அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது. அதற்கு முன்பாக டெல் அவிவ் மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக அந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












