சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்தது நிரூபணம் - தேர்தலில் போட்டியிட சிக்கல் வருமா?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், கெல்லி என்ஜி
சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங், நாடாளுமன்றக் குழுவின் முன் சத்தியப்பிராமணம் செய்த போது பொய் கூறியுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரீதம் சிங் மீதான குற்றச்சாட்டுகள், அவர் தனது கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரயீசா கானை எப்படி எதிர்கொண்டார் என்பதுடன் தொடர்புடையது.
முன்னதாக, வேறு ஒரு விவகாரத்தில் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் கூறியிருந்தார்.
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரிதம் சிங் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, சிங்கப்பூர் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நேரத்தில் வெளியாகியுள்ளது.
அந்த தேர்தல் நவம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 இடங்களில் ஒன்பது இடங்களை சிங்கின் தொழிலாளர் கட்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீதம் சிங் தேர்தல் போட்டியிட சிக்கல் வருமா?
சிங்கப்பூரில், குறைந்தபட்சம் 10,000 சிங்கப்பூர் டாலர் (7,440 டாலர் ; 5,925 யூரோ) அபராதம் விதிக்கப்பட்டாலோ அல்லது ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலோ, எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் பதவியை இழக்கலாம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம்.
திங்களன்று இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி லூக் டான், மக்கள் நிரம்பிய நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார்.
இந்த அமர்வு பல்வேறு பத்திரிகையாளர்களுக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"கான் ஒருபோதும் தனது பொய்யை ஒப்புக்கொள்வதை" சிங் விரும்பவில்லை என்பதை பல்வேறு சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று நீதிபதி தெரிவித்தார் .
கான் தனது பொய்யைத் தொடர வழிகாட்டியதில் சிங்குக்கு "நேரடி மற்றும் நெருக்கமான ஈடுபாடு" இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
சிங் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் 7,000 சிங்கப்பூர் டாலர் (5,200 டாலர்;4,200 யூரோ) அபராதம் விதிக்க வேண்டுமென்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

48 வயதான சிங், விசாரணை முழுவதும் தான் குற்றமற்றவர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஒரு முக்கியமான பிரச்னையைச் சமாளிக்க கானுக்கு நேரம் கொடுக்க விரும்பியதாக அவர் வாதிட்டார்.
ஆகஸ்ட் 2021-இல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவரிடம் காவல்துறை தவறாக நடந்துகொண்டதை தான் பார்த்ததாக கான் நாடாளுமன்றத்தில் கூறியதிலிருந்து இந்த விவகாரம் தொடங்கியது.
பின்னர் தான் கூறியது உண்மை இல்லை என்பதை கான் ஒப்புக்கொண்டார்.
பிறகு, கான் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பொய் சொல்லி தவறாகப் பயன்படுத்தியதற்காக, அவருக்கு 35,000 சிங்கப்பூர் டாலர் (26,000 டாலர், 21,000 யூரோ ) அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.
தான் கூறியது உண்மையில்லை என்று தெரிந்த பிறகும்,"அதே நிலைப்பாட்டை தொடருங்கள்" என்று ப்ரீதம் சிங் உட்பட அவரது கட்சியின் தலைவர்கள் தன்னிடம் கூறியதாக, அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையின் போது கான் சாட்சியம் அளித்தார்.
தான் பொய் சொன்னதாக கான் ஒப்புக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கான் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த சிங், "இந்த விவகாரம் குறித்து கானிடம் பேசுவதற்கு முன், நிலைமையைக் கையாள அவருக்கு அதிக நேரம் கொடுத்ததாக" கூறினார் .
அதனையடுத்து, சிங் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று முடிவு செய்த நாடாளுமன்றக் குழு , இந்த வழக்கை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பியது.
கானின் பொய்யைப் பற்றி கண்டுபிடித்த சிங், "ஒரு கட்டத்தில் தவறான தகவலை ரயீசா கான் விளக்குவதை விரும்பவில்லை" என்பதை சிங்கின் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக நீதிபதி டான் திங்களன்று கூறினார்.
சிங்கின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
2020-ஆம் ஆண்டு தேர்தலின் போது, அவரது கட்சிக்கு கணிசமான வெற்றி கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியின் இடங்கள் ஆறிலிருந்து பத்தாக உயர்ந்தது.
1965-இல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு எதிர்க்கட்சி அடைந்துள்ள மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
தேர்தலுக்குப் பிறகு, சிங் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ரயீசா கான் ராஜினாமா செய்துள்ளதால், நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தை அக்கட்சி இழந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












