பாரத் பச்சாவோ பேரணி: சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு சிவசேனை எதிர்ப்பு

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images
டெல்லியின் சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு சிவசேனையும், பாரதிய ஜனதா கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய `பாரத் பச்சாவோ` பேரணியில் ராகுல்காந்தி உரையாற்றியபோது, என் பெயர் ராகுல் காந்தி. ராகுல் சாவர்க்கர் இல்லை. அதனால் நான் மன்னிப்பு கோர மாட்டேன். காங்கிரஸை சேர்ந்த யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்'' என பேசினார்.
இன்றைய நிலையில் ஜிடிபி நான்கு சதவீதமே உள்ளது. ஜிடிபி கணக்கிடும் முறையை பாஜக மாற்றியது. அப்படி மாற்றியே 4 சதவீதம்தான் உள்ளது. இதுவே பழைய முறையாய் இருந்தால் 2.5% தான் ஜிடிபி இருக்கும் என பொருளாதார மந்தநிலை குறித்து ராகுல் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மதங்களை அடிப்படையாக கொண்டு நாட்டை பிரித்து கொண்டிருக்கின்றனர். அசாம் , மிசோரம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு போய் பார்த்தால் நரேந்திர மோதி அங்கே தீ மூட்டியிருக்கிறார் எனத் தெரியும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
''தொலைக்காட்சியில் முப்பது நொடிகள் தெரிந்தால் அதற்கு லட்ச கணக்கில் செலவு செய்யவேண்டியிருக்கும். ஆனால் மோதி நாள் முழுவதும் வருகிறார். இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது. மக்களின் பணத்தை எடுத்து யாரிடம் நரேந்திர மோதி தருகிறாரோ அவர்கள் கொடுக்கிறார்கள்'' என குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.
சோனியா, பிரியங்கா, சிதம்பரம் பேச்சு

பட மூலாதாரம், Getty Images
இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, "குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அசாம், வடகிழக்கு மாநிலங்களை போல் இந்தியாவின் ஆன்மாவை துண்டாடிவிடும் என்பதை நினைத்து மோதியும், அமித் ஷாவும் கவலைப்படவில்லை" என்று கூறினார்.
நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்றும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறிய சோனியா காந்தி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கருப்புப்பணம் ஏன் மீட்கப்படவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், இந்த கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் குற்றங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி ஏன் அமைதி காக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images
"பாஜக தலைமையிலான உத்தரப் பிரதேச அரசின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, அவர்களால் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை கூட பராமரிக்க முடியவில்லை" என்று பிரியங்கா காந்தி பேசினார்.
அதே கூட்டத்தில் உரையாற்றிய, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், கடந்த ஆறு மாதங்களில் பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
"நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. ஆனால், அதுகுறித்து அமைச்சர்களுக்கு எவ்வித புரிதலும் இல்லை. மத்திய அரசு வருங்காலத்தில் வரிகளை மேலும் உயர்த்தும்போது, அது நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்கு கொண்டுசெல்லும்" என்று அவர் மேலும் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் பதில்
ராகுல் காந்தி, சாவர்க்கர் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு பாஜகவும், சிவசேனையும் விமர்சனங்களை தெரிவித்துள்ளன.
பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மால்வியா பதிவிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “இந்த முறை ராகுல் காந்தி சரியாக கூறியுள்ளார். ராகுல் காந்தி ராகுல் சாவர்க்கராக இருக்க முடியாது. வீர் சாவர்க்கர் இந்திய நாட்டின் அமைப்பில் என்றும் இருக்கும் ஒரு தேசிய அடையாளம். அவரது பங்களிப்பு இந்திய அரசியலில் தொடர்ந்து இருந்து வருகிறது. வரும் தலைமுறைகளிலும் இருக்கும். அவர் விட்டு சென்றதை நேரு காந்தி குடும்பத்தின் ஐந்து தலைமுறையினர் அளவிட்டுவிட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மறுபுறம் மூத்த பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங்கும் ரகுல் காந்தியை விமர்சித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
வீர் சாவர்க்கர் உண்மையான தேசபக்தர் என்று பதிவிட்டுள்ள கிரிராஜ் சிங், காந்தி என்ற பெயரை மட்டும் வைத்து கொண்டு, யாரும் தேசபக்தராகிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கிரிராஜ் சிங், இந்த மூன்று பேரும் யார்? இவர்கள் மூவரும் குடிமக்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
சிவசேனையின் விமர்சனம்
சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் ட்விட்டர் பதிவிட்டு விமர்சித்துள்ளார்.
“வீர் சாவர்க்கர் மகாராஷ்டிர மாநிலத்துக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டுக்கே தெய்வம் போன்றவர். சாவர்க்கர் நமது தேசத்திற்கே பெருமை. நேரு மற்றும் காந்தியை போல சாவர்க்கரும் சுதந்திரத்திற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர். இது போன்றவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். இதில் எந்த சமரசமும் கிடையாது” என்று கூறியுள்ளார்.
மேலும், “பண்டிட் நேரு மற்றும் மகாத்மா காந்தியிடம் நம்பிக்கை கொண்டிருந்தால் வீர் சாவர்க்கரையும் அவமதிக்க வேண்டாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












