தக்கோலப் போர்: சோழர்களின் தோல்விக்கு வித்திட்ட ராஜாதித்த சோழன் கொலை - யானை மீதிருந்தவருக்கு என்ன நேர்ந்தது?

பட மூலாதாரம், BJP Tamilnadu / Instagram
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்துக்கு ராஜாதித்த சோழனின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தக்கோலத்துக்கும் ராஜாதித்த சோழனுக்கும் என்ன தொடர்பு? அந்தப் போரில் நடந்தது என்ன?
மார்ச் ஏழாம் தேதியன்று ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்தில் நடைபெற்ற 56வது நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அந்த மையத்துக்கு ராஜாதித்த சோழனின் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். தக்கோலத்துக்கும் ராஜாதித்த சோழனுக்கும் இடையிலான தொடர்பை மனதில் வைத்தே இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
பிற்காலச் சோழ மரபைச் சேர்ந்தவரான ராஜாதித்த சோழன் ஒருபோதும் மன்னராக இருந்ததில்லை. இருந்த போதும், சோழ வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தக்கோல யுத்தத்தின் முக்கியத்துவம்
பிற்காலச் சோழ மன்னர்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர் முதலாம் பராந்தகச் சோழன். கி.பி. 955ல் இவர் மரணமடைந்தார். சோழ மன்னர்களிலேயே மிகவும் புகழ்பெற்ற மன்னராக இருந்த ராஜராஜ சோழன் கி.பி. 985ல் மன்னராக முடிசூடினார். இந்த இரு மன்னர்களுக்கும் இடையிலான காலகட்டம் 30 ஆண்டுகள்.
ஆனால், 'இந்த முப்பது ஆண்டுகள் சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதி' எனக் குறிப்பிடுகிறார், சோழர்களின் வரலாற்றை எழுதிய பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. அப்படி ஒரு கடுமையான சூழலை சோழ அரசுக்கு ஏற்படுத்திய யுத்தம்தான் தக்கோல யுத்தம்.
முதலாம் பராந்தகச் சோழன் இரண்டு சேர இளவரசிகளை மணந்திருந்தார். அவர்களில் கோ கிழான் அடிகளுக்குப் பிறந்தவர்தான் ராஜாதித்தன். பராந்தகச் சோழனுக்கு கண்டராதித்தன், அரிஞ்சயன் என வேறு இரு மகன்களும் உண்டு.

பட மூலாதாரம், PIB
ராஜாதித்தன் கொல்லப்பட்ட போர்
ராஷ்டிரகூட (ஏறக்குறைய தற்போதைய கர்நாடகப் பகுதி) மன்னனான மூன்றாம் கிருஷ்ண தேவன், கி.பி. 949-இல் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தார். கங்க நாட்டின் மன்னனான இரண்டாம் பூதுகனும் பெரும் படையுடன் அவருக்கு துணையாக சேர்ந்துகொண்டார்.
இந்த இரு படைகளும் ஒன்றாகச் சேர்ந்து, சோழ நாட்டின் ஒரு பகுதியான தொண்டை நாட்டைத் தாக்கின. அந்தத் தருணத்தில் திருநாவலூரில் தன் படையுடன் சோழ இளவரசனான ராஜாதித்தன் தங்கியிருந்தார். ராஷ்டிரகூட படைகளை எதிர்கொள்வதற்காக தக்கோலத்துக்குச் சென்றார் ராஜாதித்தன். இந்தப் போரில்தான் அவர் கொல்லப்பட்டார்.
இந்தப் போர் திடீரெனத் துவங்கியதில்லை. இந்தப் போருக்கு ஒரு நீண்ட காலப் பின்னணி இருந்தது. இந்தப் பின்னணியை தனது 'லார்ட்ஸ் ஆஃப் எர்த் அண்ட் சீ' (Lords of Earth and Sea) நூலில் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் அனிருத் கனிசெட்டி.
தக்கோலப் போருக்கான விதை
கி.பி. 930களின் பிற்பகுதி.
பராந்தகச் சோழனின் அரசவையில் வந்து நின்ற அந்த இளைஞன், எல்லாவற்றையும் இழந்திருந்தாலும் அவனுடைய ஆடைகள் சிறப்பாகவே இருந்தன. அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சில மாதங்களுக்கு முன்புவரை ராஷ்டிரகூட ராஜ்ஜியத்தின் மன்னனாக இருந்தவன்.
தன்னுடைய தளபதிகளே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து, தன்னைத் தூக்கியெறிந்துவிட்டு தனது வயதான சித்தப்பாவை மன்னராக்கியிருப்பதாகவும் தனக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்து நாட்டை மீட்டுத்தர வேண்டுமென்றும் பராந்தகச் சோழனிடம் சொன்னான் அந்த இளைஞன் (இவரது பெயரை கெனிசெட்டி குறிப்பிடவில்லை. ஆனால், இந்த மன்னன் கி.பி. 930 முதல் கி.பி. 936வரை ராஷ்டிரகூட நாட்டை ஆண்ட நான்காம் கோவிந்தன் என்கிறார், வரலாற்றாசிரியரான சதாசிவ பண்டாரத்தார்).

பட மூலாதாரம், Juggernaut
தொடர்ந்து வெற்றிகளைச் சந்தித்து வந்த பராந்தகச் சோழன் அந்த இளைஞனை ஆதரிக்க முடிவுசெய்தார். அவனுக்கு தன் மகளையும் திருமணம் செய்துவைத்தார். தன் கணவருக்கு சோழ நாடு ஆதரவு அளித்திருப்பதை தெரிவித்ததைக் குறிக்கும் வகையில், தக்கோலத்தில் இருந்த ஒரு கோவிலுக்கு அணையா விளக்கு ஒன்றை பரிசளித்தாள் பராந்தகச் சோழனின் மகள். ஆனால், அதே தக்கோலத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கக் காத்திருந்தன.
கி.பி. 939ஆம் ஆண்டு. சோழ தேசத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்த மான்யகேதா நகரம் அன்றைக்கு விழாக் கோலம் சூடியிருந்தது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞனின் தலையில் தங்கக் கிரீடத்தை வைத்து, அவனை ராஷ்டிரகூட நாட்டின் மன்னனாக அறிவித்தார்கள் அந்நாட்டின் தளபதிகள். அந்தப் புதிய மன்னனின் பெயர் மூன்றாம் கிருஷ்ணன்.
உண்மையில், ராஷ்டிரகூட நாட்டின் சிம்மாசனத்துக்கான வரிசையில் மூன்றாம் கிருஷ்ணன் இருக்கவில்லை. ஆனால், மோசமான ஆட்சியின் காரணமாக கோவிந்தன் நாட்டை விட்டு துரத்தப்பட்ட பிறகு, மூன்றாம் கிருஷ்ணின் தந்தை அரசராக்கப்பட்டார்.
தந்தை மன்னனாக இருந்த காலத்திலேயே, மூன்றாம் கிருஷ்ணன், தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ளத் துவங்கினார். தான் அரசனாக முடிசூடிய பிறகு மத்திய இந்தியாவில் பல இடங்களைப் பிடித்த அவர், கங்க நாட்டில் இருந்த அரசனைத் தூக்கியெறிந்துவிட்டு இரண்டாம் பூதுகன் என்பவருக்கு முடிசூடினார்.
இந்நிலையில்தான், தன் மருமகனுக்கு ஆதரவாக கங்க நாட்டின் மீது படையெடுத்தார் பராந்தகச் சோழன். இந்தப் போரில் வெற்றி கிடைக்கவில்லை. இந்தப் போரில், முன்னாள் ராஷ்டிரகூட மன்னனான பராந்தகச் சோழனின் மருமகனும் கொல்லப்பட்டான். இதற்குப் பிறகு, பராந்தகச் சோழன் ராஷ்டிரகூடர்களின் மீது படையெடுக்கவில்லையென்றாலும், மூன்றாம் கிருஷ்ணன் விடுவதாயில்லை. கி.பி. 949ல் சோழ நாட்டை நோக்கி தன் படைகளைத் திருப்பினான் மூன்றாம் கிருஷ்ணன்.
ராஷ்டிரகூடர்களை எதிர்கொள்ள தஞ்சையிலிருந்தபடியே மிகப் பெரிய படையை தனது வட எல்லைக்கு அனுப்பினார் பராந்தகச் சோழன். அந்தப் படைகளுக்கு ராஜாதித்தன் தலைமை தாங்கினார். கிட்டத்தட்ட நடு வயதை எட்டியிருந்த ராஜாதித்தன் இன்னமும் பட்டத்து இளவரசனாக முடிசூட்டப்பட்டிருக்கவில்லை. இவருக்கு ஏற்கனவே நல்ல பெயர் இருந்தாலும், இந்தப் போரில் வெற்றிபெற்றால், அடுத்த மன்னர் அவர்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த யுத்தத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் சேர நாட்டைச் சேர்ந்த வெள்ளன் குமரன்.

பட மூலாதாரம், BJP Tamilnadu/Instagram
அணையா விளக்கும் கிருஷ்ணனின் படைகளும்
கிருஷ்ணனின் படைகள் தக்கோலத்தில் வந்து இறங்கின. 11 ஆண்டுகளுக்கு முன்பாக, தன் கணவனுக்காக சோழ இளவரசி எந்த ஊரில் அணையா விளக்கை ஏற்றினாரோ, அதே தக்கோலத்தில் கிருஷ்ணனின் படைகள் நின்றுகொண்டிருந்தன. மிகப் பெரிய படை. கிருஷ்ணனின் யானைக்கு முன்பாக மிகப் பெரிய கொடி மரத்தை பிடித்திருந்தார்கள். அதில் ராஷ்டிரகூடர்களின் கொடிக்குக் கீழே, அவனிடம் தோற்ற மன்னர்களின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
திடீரென துந்துபிகள் முழங்கின. நிலம் அதிர படைகள் இரு திசைகளிலும் முன்னேறின. கத்திகள் மோதும் ஒலியும் அம்புகள் பறக்கும் ஒலியும் அந்த இடத்தை நிறைத்தன. அடுத்த சில விநாடிகளில் மனிதக் கூக்குரல்களும் எழுந்தன.
ராஜாதித்தனின் தளபதியான வெள்ளன் குமரன் ஒரு பக்கம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, யானை மீதிருந்து கங்க மன்னன் பூதுகனுடன் போரிட்டுக் கொண்டிருந்தார் ராஜாதித்தர். அவருடைய யானைக்கு அருகே பயிற்சி பெற்ற வாள் வீரர்கள், வேல் வீரர்கள் இருந்தனர். அவர்களும் கங்க மன்னனின் யானையை வீழ்த்த முயன்றனர். அதேபோல, எதிர்த் தரப்பும் முயன்று கொண்டிருந்தது. இந்த யுத்தம் மிகக் கொடூரமானதாக இருந்தது. யுத்தத்தின் ஆரம்பத்தில், ராஷ்டிரகூட - கங்கர் கூட்டணியை கிட்டத்தட்ட பின்னுக்குத் தள்ளினார் ராஜாதித்தர்.
சோழர்கள் தோல்விக்கு வித்திட்ட திருப்புமுனை நிகழ்வு
ஒரு தருணத்தில் திடீரென பூதுகனின் யானை, ராஜாதித்தரின் யானைக்கு அருகில் வந்தது. சட்டென தனது கத்தியை உருவியபடி ராஜாதித்தனின் யானை மீது ஏறிய பூதுகன், ராஜாதித்தனை வீழ்த்தினார். யானை மீதே இறந்து போனார் ராஜாதித்தன். இதற்குப் பிறகு சோழப் படைகள் சிதற ஆரம்பித்தன.
வெள்ளன் குமரனுக்கு இந்தச் செய்தி வந்து சேர்ந்த போது, திகைத்துப் போனான். போர்க்களத்தில் எந்த இடத்தில் ராஜாதித்தர் விழுந்து கிடக்கிறார், யார் கொன்றது என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை.
ராஜாதித்தன் இறந்த பிறகு, கிருஷ்ணன் தஞ்சையையும் மதுரையையும் சூறையாடினான் என்கிறார், அனிருத் கனிசெட்டி. சில கல்வெட்டுகள் மூன்றாம் கிருஷ்ண தேவனை 'கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன்' என குறிப்பிடுகின்றன.
கார்காட் செப்பேடுகள் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டை வென்று அதனை தனது தளபதிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாகவும் இலங்கை உள்ளிட்ட அரசர்களிடமிருந்து கப்பம் பெற்று, ராமேஸ்வரத்தில் ஒரு வெற்றித் தூணை நிறுவியதாகவும் கூறுகின்றன.

ஆனால், அவன் தஞ்சையை வெற்றி கொண்டதாகச் சொல்ல முடியாது என்கிறார், பிற்காலச் சோழர்கள் நூலை எழுதிய சதாசிவ பண்டாரத்தார். தற்போதைய பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகை வீரட்டானத்துக்கு தெற்கே மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆகவே, சோழர்களின் கீழிருந்த தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் வென்று, தனது கூட்டாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்ததையே மிகைப்படுத்தி கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கூறியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.
ராஜாதித்தர் கொலை குறித்த மாற்று கருத்து
ஆனால், ராஜாதித்தர் கொல்லப்பட்டது குறித்து வேறு விதமான கருத்தும் இருக்கிறது. இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பு, ராஜாதித்தரின் மார்பைத் துளைத்ததால் அவர் கொல்லப்பட்டதாக லெய்டன் செப்பேடுகளை அடிப்படையாக வைத்து குறிப்பிடுகிறார் சதாசிவ பண்டாரத்தார்.
பூதுகனின் செயலைப் பாராட்டி அவனுக்கு மிகப் பெரிய அளவிலான பிரதேசங்களை மூன்றாம் கிருஷ்ணன் வழங்கியதாகவும் (மாண்டியாவுக்கு அருகில் உள்ள) ஆதக்கூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், திருவெள்ளறை ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் 'ஆனைமேற்றுஞ்சினார்' என ராஜாதித்தனைக் குறிப்பிடுகின்றன.
ராஜாதித்தனின் மரணம் முதலாம் பராந்தகச் சோழனைக் கடுமையாக பாதித்தது. அடுத்த ஆண்டே, அதாவது கி.பி. 950ஆம் ஆண்டே தனது இரண்டாவது மகனான கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே அதாவது கி.பி. 953- 55க்குள் இறந்தும் போனார் பராந்தகச் சோழன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












