ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்

ஆனைமலை, தாவரங்கள், காடுகள், இயற்கை, மேற்குத் தொடர்ச்சி மலை

பட மூலாதாரம், IFGTB

படக்குறிப்பு, காட்டு ஆப்பிள் எனப்படும் ஆன்டிஸ்ட்ரோப் செராட்டிபோலியா
    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் அழியும் நிலையிலுள்ள 25 தாவரங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குப் புத்துயிர் அளித்து, பரவலாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் தமிழக வனத்துறை இறங்கியுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் முதலில் 8 தாவரங்களைக் கண்டறிவதற்கான கள ஆய்வில், ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் 4 தாவரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சோலைக்காடுகளில் இந்தத் தாவரங்கள் இருக்கும் பகுதியைக் கண்டறிந்து, அவற்றை விதைகள் அல்லது நாற்றுக்கள் மூலமாக மீட்டெடுத்து, பரவலாக வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் தன்மையையும், காட்டுயிர்களுக்கான உணவுச் சுழற்சியையும் பாதுகாக்க முடியுமென்று தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் காடுகளில் பரவி வரும் அந்நிய களைச்செடிகளையும் தொடர் நடவடிக்கைகளால் முற்றிலும் அழிக்க வேண்டுமென்று சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவிலேயே பன்முகத்தன்மை கொண்ட பூக்கும் தாவரங்கள் உள்பட அதிகளவிலான தாவர வகைகளைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம் என்று சொல்கிறது மத்திய அரசின் கீழ் செயல்படும் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் கள கையேடு.

தமிழகத்தில் மொத்தம் 6,723 தாவரங்கள் இருப்பதாகச் சொல்லும் அந்தக் கையேடு, அவற்றில் 4,264 தாவரங்கள் காடுகளிலும், பிற தாவரங்கள் மற்ற பகுதிகளிலும் இருப்பதாகத் தெரிவிக்கிறது.

அதிலும் தென்னிந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் காணப்படும் 1,585 வகையான தாவரங்களில் 292 வகையான அரிய வகைத் தாவரங்கள், தமிழகத்திலுள்ள மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுவதாக கள கையேடு கூறுகிறது.

அழிவுப் பட்டியலில் 100 அரிய வகை தாவரங்கள்

ஆனைமலை, தாவரங்கள், காடுகள், இயற்கை, மேற்குத் தொடர்ச்சி மலை

பட மூலாதாரம், IFGTB

படக்குறிப்பு, வால்பாறை மலையிலுள்ள சோலைக்காடுகளில் மட்டுமே காணப்படும் சிறிய பசுமை மரமான பிலாந்தஸ் ஆனைமலையானஸ்

இத்தகைய அரிய வகைத் தாவரங்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழக வனத்துறையின் சார்பில், தமிழ்நாடு பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம் (TBGPCCR) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் சார்பில், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்துடன் (ICFRE-IFGTB) இணைந்து, கடந்த 2023ஆம் ஆண்டில் 'தமிழகத்தின் அரிய மற்றும் அழிந்து வரும் தாவரங்களைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தாவரவியல் விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள், வனத்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கருத்தரங்கில், அழிந்து வரும் 100 அரிய வகைத் தாவரங்கள் பட்டியலிடப்பட்டன.

அப்போது பட்டியலிடப்பட்ட தாவரங்களில் 25 தாவரங்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து, அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, தற்போது அழிவு நிலையிலுள்ள அரிய தாவரங்களை (RET-RARE, ENDANGERED, THREATENED PLANTS) கணக்கெடுக்கும் பணியை தமிழக வனத்துறை தொடங்கியுள்ளது. கோவையிலுள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்துடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

தமிழக காட்டுப் பகுதிகளில், அரிய வகைத் தாவரங்கள் அதிகம் இருப்பதாக அறியப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகவுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில்தான் முதற்கட்டமாக இந்தக் கணக்கெடுப்புப் பணியை வனத்துறை மேற்கொண்டுள்ளது.

இதற்காக வனத்துறையில் பணியாற்றும் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காவலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் தீத்தடுப்புக் காவலர்கள் என களப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு இதற்கான பயிற்சியை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் வழங்கினர்.

கடந்த வாரத்தில் துவங்கிய இந்தக் கணக்கெடுப்பு, வால்பாறை, டாப்ஸ்லிப், அக்காமலை, மானாம்பள்ளி பகுதிகளில் நடக்கிறது.

ஆனைமலை, தாவரங்கள், காடுகள், இயற்கை, மேற்குத் தொடர்ச்சி மலை

பட மூலாதாரம், IFGTB

படக்குறிப்பு, களப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் வழங்கிய பயிற்சி

இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய தமிழக வனத்துறையின் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், ''கடந்த 2023ஆம் ஆண்டில் பட்டியலிட்ட 100 அரிய வகைத் தாவரங்களில், சில தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதாக தாவரவியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அதன் பிறகே, அந்தப் பட்டியலில் எங்குமே சமீபத்தில் பார்க்கவே முடியாத 25 அரிய வகைத் தாவரங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவை காடுகளுக்குள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அடையாளம் கண்டறிந்து, மீட்டெடுக்கும் பணியைத் துவக்கியுள்ளோம். இவற்றில் சில தாவரங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக ஆனைமலையில் முதன் முறையாகக் கண்டறியப்பட்டவை,'' என்றார்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மலையிலுள்ள சோலைக் காடுகளில் மட்டுமே காணப்படும் சிறிய பசுமை மரத்துக்கு பிலாந்தஸ் ஆனைமலையானஸ் (Phyllanthus anamalayanus) என்றும், காபிச்செடி போன்ற குறுஞ்செடிக்கு சைக்கோட்ரியா ஆனைமலையானா (Pshchotria anamamaiayana) என்றும் தாவரவியல் பெயர்கள் சூட்டப்பட்டதற்கு இதுதான் காரணம் என்பதையும் அன்வர்தீன் விளக்கினார்.

இவற்றைக் கண்டறிய களப்பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இது அந்தத் தாவரங்களை மீட்டெடுப்பதற்கான திட்டத்தின் (Species Recovery Program) முதல் பணி என்றார்.

'காலநிலை மாற்றம், காடழிப்பு மற்றும் மனித செயல்பாடுகளே காரணம்'

ஆனைமலை, தாவரங்கள், காடுகள், இயற்கை, மேற்குத் தொடர்ச்சி மலை

பட மூலாதாரம், IFGTB

படக்குறிப்பு, காபிச் செடி போன்ற குறுஞ்செடி, சைக்கோட்ரியா ஆனைமலையானா

மலைப் பகுதிகளில் அடர் வனங்களுக்குள் இருக்கும் இந்தத் தாவரங்கள் எவ்வாறு அழிவுக்குள்ளாயின என்ற கேள்விக்கு பிபிசி தமிழிடம் விளக்கமளித்தார், இந்த கணக்கெடுப்பை வழி நடத்தும் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தின் வன சூழலியல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான துறையின் தலைவர் முனைவர் ராஜசேகரன்.

''காலநிலை மாற்றம், காடழிப்பு, காடுகளின் தரம் குறைவது, ஈரத்தன்மை பாதிப்பு, மனித செயல்பாடுகள் மற்றும் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை பெருகி மேய்ச்சல் அதிகமாவது போன்றவற்றால் இந்தத் தாவரங்கள் அழிந்திருக்கலாம். சில பகுதிகளில் இயற்கைப் பேரிடர்களும்கூட, குறிப்பிட்ட சில அரிய வகைத் தாவரங்கள் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்'' என்கிறார் முனைவர் ராஜசேகரன்.

மேலும் தொடர்ந்த அவர், ''அழிந்து வரும் அனைத்துத் தாவரங்களையும் பாதுகாப்பது மிகக் கடினம். அதனால்தான் முன்னுரிமை அளித்து சில தாவரங்களை மீட்டெடுக்க முயற்சி எடுக்கிறோம். பட்டியலிட்ட 100 தாவரங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்ட 25 தாவரங்களில், முதலில் 8 வகைத் தாவரங்களைக் கண்டறிய களப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தோம்'' என்றார்.

பயிற்சியில், ஒவ்வொரு தாவரத்தின் புகைப்படங்களைக் காண்பித்து, அவை ஒவ்வொன்றுக்குமான தனித்துவமான அடையாளம், ஒரே மாதிரியாக இருக்கும் இரு தாவரங்களில் வித்தியாசம் அறிவது என பயிற்சி அளிக்கப்பட்ட விதத்தையும் அவர் விளக்கினார். பயிற்சி அளிக்கப்பட்டதன் அடிப்படையில், களப்பணியாளர்களால் அடையாளம் காணப்பட்ட 4 தாவரங்களைப் பற்றிய விவரங்களையும், அவற்றுக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்களையும் பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்தார்.

காட்டு ஆப்பிள் (ஆன்டிஸ்ட்ரோப் செராட்டிபோலியா - Antistrophe serratifolia), கரஞ்சிலி அல்லது சிராத்த அஞ்சிலி அல்லது கல்பயின் (டிப்டெரோகார்பஸ் போர்டில்லோனி - Dipterocarpus bourdillonil), காட்டு காபிச் செடி (சைக்கோட்ரியா ஆனைமலையானா - Pshchotria anamamaiayana), ஆனைமலை நெல்லிக்காய் (பிலாந்தஸ் ஆனைமலையானஸ் - Phyllanthus anamalayanus) ஆகிய இந்த 4 வகைத் தாவரங்களும் ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பில் முக்கியப் பங்காற்றும் மற்றொரு ஆய்வாளரான முகமது அலி நெளஷாத் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''ஒரு மாதத்துக்கு இந்தக் கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. தாவரவியல் வல்லுநர்களால் மட்டுமே கண்டறிய முடிந்த இந்தத் தாவரங்களை இப்போது வனத்துறை களப்பணியாளர்கள் எளிதில் கண்டறிய பயிற்சி பெற்றுள்ளனர். தாவரங்களைக் கண்டறிந்து, அவற்றின் எண்ணிக்கை, இருப்பிடங்கள், அவை அருகில் எப்படிப் பரவியுள்ளன என்கிற விவரங்களைப் படிவங்களில் பதிவு செய்து ஒப்படைப்பார்கள்'' என்றார்.

'தமிழகத்தில் 3 இடங்களில் கண்டறியப்பட்ட காட்டு ருத்ராட்சை மரம்'

ஆனைமலை, தாவரங்கள், காடுகள், இயற்கை, மேற்குத் தொடர்ச்சி மலை

பட மூலாதாரம், IFGTB

படக்குறிப்பு, கணக்கெடுப்பை வழி நடத்தும் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தின் வன சூழலியல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான துறையின் தலைவர் முனைவர் ராஜசேகரன்

அழிந்து வரும் இந்தத் தாவரங்கள் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே (Fragmented population) வளர்வதும், இவற்றின் வாழ்விடம் சீரழிக்கப்பட்டிருப்பதுமே, இவற்றுக்கான பொதுவான அச்சுறுத்தல் என்கிறார் தாவரவியல் ஆய்வாளர் ராஜசேகரன். இவை தவிர்த்து, ஒவ்வொரு தாவரத்தின் எண்ணிக்கை குறைந்து வருவதன் பின்னணியிலும் ஒவ்வொரு விதமான பாதிப்பு இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இவை இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பினும், ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளில் மட்டுமே, இவை வாழ்வதற்கான சூழல் இருப்பதாகச் சொல்கிறார் அவர்.

''இந்த 4 தாவரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இப்படியே விட்டுவிட்டால் அவை முற்றிலும் அழிவதற்கு வெகு காலமாகாது. உதாரணமாக, எலேயோகார்பஸ் பிளாஸ்கோய் (Elaeocapus Blascoi Weibel) எனப்படும் காட்டு ருத்ராட்சை மரம், தமிழகத்திலேயே 3 இடங்களில்தான் கண்டறியப்பட்டுள்ளன. உலகத்திலேயே இந்த மரம் இவ்வளவுதான் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில், மரபியல்ரீதியாக அதை உடனடியாக மீட்டெடுப்பதே இந்தத் திட்டம்'' என்கிறார் அன்வர்தீன்.

இவ்வாறு எடுத்த முயற்சிகள் பலன் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மோனோசிஸ் ஷேவராயென்சிஸ் (Monosis shevaroyensis) என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைச்சுத்தி மரம், தாவரவியல் வல்லுநர் ஒருவரால் ஒரே ஒரு இடத்தில் கண்டறியப்பட்ட பின், அதை ஏற்காடு பூங்காவில் நட்டு வளர்த்ததில் நன்றாக வளர்ந்திருப்பதாக அவர் கூறினார். அதேபோல, அழிந்து வரும் தாவரங்கள் அனைத்தையும் மீட்டெடுக்க முயற்சி எடுக்கிறோம் என்றும் அன்வர்தீன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தின் விஞ்ஞானி சுப்பிரமணி, இந்தத் தாவரங்களைக் கணக்கெடுப்பது குறித்த தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கியுள்ளார். தாவரங்களின் எண்ணிக்கை, அவை பூக்கும் பருவம், காய்க்கும் பருவம், மரத்துக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா, அதற்கு அருகில் ஏதாவது புதிய நாற்றுகள் இருக்கின்றனவா என்பதையும் கணக்கெடுப்பதற்கு, களப்பணியாளர்களுக்கு ஆய்வாளர்கள் பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

''காட்டு ஆப்பிள் எனப்படும் ஆன்டிஸ்ட்ரோப் செராட்டிபோலியாவை போலவே, காட்டுக்குள் நிறைய செடிகள் இருக்கும். ஆனால் இதற்கு மட்டுமே இலையின் நுனிப்பகுதி ரம்பம் போன்று மிகச்சிறிய பற்களுடன் இருப்பதைப் பார்க்க முடியும்.

இப்படி நுண்மையான சில விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளோம். அதை வைத்தே, வால்பாறை சோலைமுக்கு, அக்காமலை போன்ற பகுதிகளில் பசுமை மாறாக்காடுகளில் இந்தச் செடிகள் இருப்பதை களப்பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர்'' என்கிறார் ஆய்வாளர் சுப்பிரமணி.

அந்நிய களைச்செடிகள் பரவுவதால் ஏற்படும் பாதிப்பு

ஆனைமலை, தாவரங்கள், காடுகள், இயற்கை, மேற்குத் தொடர்ச்சி மலை

பட மூலாதாரம், IFGTB

படக்குறிப்பு, நீலகிரி மாவட்டம் கூடலுார் நாடுகாணியில் மரபியல் ரீதியாக தாவரங்களை மீட்டெடுக்கும் சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் அன்வர்தீன்

"காட்டு நிலப்பரப்பில், யானைகள் அதிகமுள்ள பகுதி, சிங்கவால் குரங்குகள் வாழும் பகுதி, வரையாடு வாழும் பகுதி என அடையாளப்படுத்தப்படுவது போலவே, தாவரங்களை வைத்து, ஆனைமலை நெல்லிக்காய் உள்ள பகுதி, காட்டு காபிச்செடி உள்ள பகுதி எனவும் அடையாளப்படுத்தப்படும்." இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவற்றின் நிலையை அறிந்து அதுபற்றிய தகவலைப் பதிவு செய்யவும் களப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் விஞ்ஞானி ராஜசேகரன்.

இப்போது 8 தாவரங்களை அடையாளம் காண்பது போல, அடுத்த ஆண்டில் முன்னுரிமையில் மீதமுள்ள 17 தாவரங்களைக் கண்டறிவதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார். இவற்றில் சில விதைகளாலும், சில தண்டுகளை (Cutting) வெட்டி வைப்பதாலும் வளர்கின்றனவா என்பதை ஆய்வு செய்வோம்.

அதன் பிறகு, காடுகள் அல்லது வெளியிடங்களில் அதற்கு உகந்த பகுதிகளில் இவற்றை வளர்த்தெடுப்பதன் மூலமாக, இந்தத் தாவரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்க முடியுமென்று ராஜசேகரன் நம்புகிறார்.

தமிழக வனத்துறையின் இந்த நடவடிக்கையைப் பாராட்டும் சூழலியல் செயற்பாட்டாளர் ஓசை காளிதாசன், இதேபோல தமிழகத்திலுள்ள காடுகளில் வெகுவாகப் பரவி, நமது மண்ணின் தாவரங்களை அழித்து வரும் அந்நிய களைச் செடிகளை அகற்றும் பணியும் தொடர்ச்சியாக நடக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.

ஒரு தாவரம் அழிவதைப் போலவே, ஒரு தாவரம் மிகுதியாவதும் மிகவும் ஆபத்து என்கிறார் அவர். மேலும், ''ஒரு தாவரம் நேரடியாக மனிதர்களுக்கு உதவாவிட்டாலும் சூழல் தன்மைக்கு ஏதோவொரு வகையில் பங்களிப்பை வழங்கும். அதனால் இந்த மண்ணிலுள்ள எந்தவொரு தாவரமும் அழியக்கூடாது. அதற்கு இந்த நடவடிக்கை அவசியம்தான்'' என்றார் காளிதாசன்.

'தாவரங்கள் அழிந்தால், உயிரினங்கள் அழியும்'

ஆனைமலை, தாவரங்கள், காடுகள், இயற்கை, மேற்குத் தொடர்ச்சி மலை

பட மூலாதாரம், Facebook/Osai Kalidasan

படக்குறிப்பு, இயற்கையில் சிறிய இனம், பெரிய இனம் என்று எதுவுமில்லை, எல்லாமே பாதுகாக்கப்பட வேண்டியதுதான் என்கிறார் ஓசை காளிதாசன்

அழிவுப் பட்டியலில் உள்ள இந்தத் தாவரங்களும், பல்வேறு பூச்சியினங்கள், காட்டுயிர்கள் எனப் பலவற்றுக்கும் பலவிதமான தொடர்புகள் இருக்கின்றன என்று கூறும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், ஒரு தாவரம் அழிந்து விட்டால் அதை நம்பியுள்ள உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளதால் மரபியல் பாதுகாப்பு நடவடிக்கையாகவே இதை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

''நீலகிரி மாவட்டம் கூடலுார் நாடுகாணியில் ஏற்கெனவே மரபியல் ரீதியாக தாவரங்களை மீட்டெடுக்கும் சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆசனுாரில் மேலும் ஒரு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையங்களில் அழிவு நிலையிலுள்ள தாவரங்களை மீண்டும் வளர்த்தெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார் அன்வர்தீன்.

ஒவ்வொரு தாவரத்துக்கும் வேறு சில உயிர்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் ஓசை காளிதாசன், ''ஆலமரம் நுாற்றுக்கணக்கான உயிர்களுக்கு வாழ்விடம். ஆனால் ஆலங்குளவி என்ற சிறு பூச்சியினம், ஆலமரத்துக்கு வராவிட்டால் அதில் மகரந்தச் சேர்க்கை நடைபெறாது.

இயற்கையில் சிறிய இனம், பெரிய இனம் என்று எதுவுமில்லை. எல்லாமே பாதுகாக்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஒரு தாவரம் அழிந்து போவதும், மிகவும் அதிகமாவதும் இயற்கையாக நடக்காது. அது மனிதர்களால்தான் நடக்கும்'' என்று விளக்கினார்.

மாதுளம் பழ மரம் அந்நியத் தாவரம் என்றாலும் அது தானாகப் பரவாது என்பதைச் சுட்டிக்காட்டும் காளிதாசன், நம் ஊருக்கு ஆங்கிலேயர்களால் அழகுச் செடியாகக் கொண்டு வரப்பட்ட உண்ணிச்செடி போன்ற பற்றிப் படரும் களைச்செடிகளால்தான் நம் மண்ணின் தாவரங்களுக்கு மிகவும் ஆபத்து என்கிறார்.

"விறகுக்காக விதைக்கப்பட்ட சீமைக்கருவேலம், சமவெளியிலுள்ள மண்ணின் தாவரங்களை அழித்துள்ளதுபோல, மலைப் பகுதிகளில் புல்வெளிகளில் நடப்பட்ட யூகலிப்டஸ், சீகை போன்ற மரங்கள்தான் பரவி வளர்ந்து, இயற்கைப் புல்வெளியை அழித்துள்ளன. அழியும் தாவரங்களைக் காப்பாற்றும் அதேவேளையில் அந்நிய களைச் செடிகளை அகற்றவும் தொடர் நடவடிக்கை தேவை" என்கிறார் காளிதாசன்.

அழியும் நிலையிலுள்ள தாவரங்களைப் பாதுகாக்கும் இந்த நடவடிக்கை, அந்நிய களைச்செடிகளைப் பரவாமல் தடுப்பதற்கு உதவுமா என்று தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீனிடம் கேட்டபோது, ''அதற்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை. இந்தத் தாவரங்கள், குளுமை நிறைந்த பசுமை மாறாத அடர்வனங்களில் உள்ள சீதோஷ்ணநிலையில் (Micro climate) மட்டுமே வளர்பவை. இவற்றை அழியாமல் காப்பதுதான் இந்தக் கணக்கெடுப்புக்கான முக்கிய நோக்கம்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு