'மரத்திற்கு பின்னே யானை நின்றாலும் தெரியாது' - இந்த பெண்களின் ஆபத்தான காட்டுவழிப் பயணம் யாருக்காக?

ஆஷா பணியாளர்கள், நீலகிரி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Xavier Selvakumar/BBC

''முதுமலை காட்டுக்குள் ஓர் ஆற்றைக் கடந்து நான் ஒரு பழங்குடி கிராமத்துக்குப் போக வேண்டும். மழைக்காலத்தில் வெள்ளம் அதிகமாக வரும் போது ஆண்கள் கயிற்றைப் பிடித்து அக்கரைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் மருந்து மற்றும் உபகரணங்கள் உள்ள பையை வைத்துக் கொண்டு, கயிற்றைப் பிடித்துச் செல்வது கஷ்டம். அத்தகைய நாட்களில் எனது கணவரை அழைத்துக் கொண்டு போவேன். மரங்களுக்குப் பின்னால் யானை நிற்பதே தெரியாது. யானைகளிடமிருந்து நான் இரு முறை தப்பியிருக்கிறேன்!''

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா ஊழியரான சிவகாமியின் வார்த்தைகள்தான் இவை.

''நான் அடிக்கடி நடந்து செல்லும் கோழித்துறை பழங்குடி கிராமப் பாதையில்தான், கடந்த மாதத்தில் ஒரு யானை தாக்கி, பழங்குடி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதே பாதையில்தான் பல நாட்களில் நான் தனியாக நடந்து செல்கிறேன்.''

இது குஞ்சப்பனை ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா ஊழியரான கவிதாவின் அனுபவ பகிர்வு.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நீலகிரி மாவட்டத்தில் இவர்களைப் போலவே பல்வேறு ஆபத்துகளுக்கு இடையில் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர் ஆஷா பணியாளர்கள்.

நீலகிரியில் பழங்குடி மக்கள் ஆரோக்கியத்தின் முதுகெலும்பாக செயல்படும் ஆஷா பணியாளர்களின் ஒரு நாள் எப்படி இருக்கும்? அவர்களது பணி எத்தனை சவால்களை கொண்டது? அத்தனை சவால்களைக் கடந்தும் அவர்கள் இந்த பணியை மேற்கொள்ளக் காரணம் என்ன? விளக்குகிறது இந்த கட்டுரை.

6 பழங்குடி இனத்தவர் வசிக்கும் நீலகிரி

நீலகிரியில், காப்புக்காடுகளுக்கு மத்தியிலும், மலையுச்சிகளிலும், பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் என பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் நிறையவுள்ளன. இவற்றில் பெரும்பாலான கிராமங்களுக்கு சாலையே இல்லை.

ஆனாலும் அங்குள்ள மக்களுக்கும் சுகாதார வசதிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளது. சுகாதாரத் துறையின் நீலகிரி மாவட்ட துணை இயக்குநர் சோமசுந்தரம் பகிர்ந்த தகவலின் படி, இத்தகைய கிராமங்களுக்கு மருத்துவ சேவை செய்யும் பணியில், 94 கிராம சுகாதார செவிலியர் (VHN), 128 இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் ((MLHP) மற்றும் 403 ஆஷா பணியாளர்கள் என்றழைக்கப்படும் சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆஷா பணியாளர்கள், நீலகிரி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Xavier Selvakumar/BBC

படக்குறிப்பு, மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டுள்ள ஆஷா பணியாளர்

காட்டுயிர்கள் நடமாடும் அடர்ந்த காடுகள், ஆள் அரவமற்ற ஒற்றையடிப்பாதை, செங்குத்தான மலையுச்சி, வெள்ளம் பாயும் ஆறுகள் என பலவிதமான ஆபத்துகளைக் கடந்து, இந்த கிராமங்களுக்குச் சென்று மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், இவர்கள் மருத்துவப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்குமான அனுபவங்கள் வேறுபட்டவை.

இவற்றை அறிவதற்காக பிபிசி தமிழ் கள ஆய்வை மேற்கொண்டபோது, இவர்களில் சிலர் வழக்கமாகச் செல்லும் பாதைகளே பலவிதமான ஆபத்துகளை உள்ளடக்கியதாக உள்ளதை அறிய முடிந்தது. அதிலும் அன்றாடம் இந்த கிராமங்களுக்குச் சென்று, ஒரு நாளுக்கு 10 வீடுகள், 20 நோயாளிகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள ஆஷா ஊழியர்களின் அனுபவங்கள் அச்சம் தருவதாயிருந்தன.

ஆபத்துக்கு மத்தியிலும் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள்

குஞ்சப்பனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளராகப் பணியாற்றும் கவிதா, மாமரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழித்துறை, கோழிக்கரை, மேல் கூப்பு, கீழ்கூப்பு, கெராடா, அட்டாடி உள்ளிட்ட 14 பழங்குடி கிராமங்களில் வசிக்கும் 1436 பழங்குடியின மக்களுக்கு மருத்துவப் பணி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். இதே பகுதியிலுள்ள வேறு சில பழங்குடியின கிராமங்களில் தேன்மொழி என்ற ஆஷா ஊழியரும் பணியாற்றி வருகிறார்.

அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கரடுமுரடான பாதையில் இவர்கள் இருவரும் தனித்தனியாகவும், சில நாட்களில் சேர்ந்தும் 4 முதல் 5 கி.மீ. வரை நடந்து சென்று பணி செய்கின்றனர். இவர்களிருவரும் இந்த கிராமங்களுக்குச் செல்லும்போது பிபிசி தமிழும் உடன் சென்று கள ஆய்வு செய்தது.

இருவரும் மேல் கூப்பு என்ற கிராமத்தில் சில நோயாளிகளைச் சந்தித்துவிட்டு, கோழித்துறை என்ற கிராமத்துக்குச் சென்றனர். அங்கு சென்று சில நோயாளிகளைப் பார்த்து விட்டு, அதே பாதையில் திரும்பி வந்தபோது, அவர்கள் நடந்து வந்த அதே பாதையில் மிகப்பெரிதான 2 காட்டுமாடுகள் (Indian Gaur) நிற்பதை பிபிசி தமிழ் நேரில் பார்த்தது.

''இந்த காட்டில் யானை, காட்டுமாடு, புலி, சிறுத்தை, விஷப்பாம்புகள் நிறைய இருக்கின்றன. கடந்த மாதத்தில் இதே பாதையில் பழங்குடி பெண் ஒருவர் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார். மழைக்காலத்தில் இந்தப் பாதையில் அட்டைக்கடி அதிகமாயிருக்கும். உப்பு மற்றும் ஷாம்பூ தடவிக் கொண்டு நடப்போம். பல நாட்களில் யானை வழிமறித்தால் பல மணி நேரம் பாதுகாப்பான இடத்தில் நின்று காத்திருக்க நேரிடும்.'' என்று தன்னுடைய அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார் ஆஷா ஊழியரான கவிதா.

இந்தப் பாதையில் கடும் விஷமுள்ள பாம்புகளை பல முறை பார்த்துள்ளதாகத் அவர்கள் தெரிவிக்கின்றனர். யானை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முடியாமல், பல நாட்களில் மிக அருகில் பார்த்துத் தப்பி ஓடியிருப்பதாகச் சொல்கிறார்கள். வனத்துறையினரும், பழங்குடியின மக்களும் இத்தகைய ஆபத்தான நேரங்களில் உதவியதையும் இருவரும் நன்றியோடு பகிர்கின்றனர்.

''இங்குள்ள கிராமங்களில் இருளர், குரும்பர் இன பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்களில் பலருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கும் சத்தான உணவு கிடைப்பதில்லை. அதேபோல, குறைவான சர்க்கரை, குறைவான இரத்த அழுத்த பாதிப்பும் பலருக்கு இருக்கிறது. நாங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதித்து, அவர்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொடுக்கிறோம்.'' என்றார் கவிதா.

ஆஷா பணியாளர்கள், நீலகிரி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Xavier Selvakumar/BBC

படக்குறிப்பு, பழங்குடி மக்கள் மத்தியில் சர்க்கரை, குறைவான இரத்த அழுத்த பாதிப்பும் பலருக்கு இருக்கிறது என கூறுகின்றனர் ஆஷா பணியாளர்கள்

பழங்குடி மக்களோடு பிணைப்பு

ஆஷா ஊழியர்கள் போலவே, கிராம சுகாதார செவிலியர், இடைநிலை சுகாதாரப் பணியாளர் ஆகியோரும், 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட இடைவெளியில் இந்த கிராமங்களுக்கு வந்து, நோயாளிகளைச் சந்திக்கின்றனர். இவர்களை வரவேற்கும் முறையைப் பார்க்கும் போதே, பழங்குடி மக்கள் இந்த சுகாதாரப் பணியாளர்களுடன் எவ்வளவு நெருக்கமாகவுள்ளனர் என்பது தெரிகிறது.

ஆஷா பணியாளர்களால் தங்கள் கிராமத்தில் பலரும் பலவித பாதிப்புகளிலிருந்து மீண்டதாக பால் குரும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த கண்ணம்மாள் கூறுகிறார்.

''எங்கள் கிராமத்தில் காசநோய் பாதிப்பு பலருக்கும் இருந்தது. குறிப்பாக பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆஷா பணியாளர்கள் தொடர்ந்து அளித்த சிகிச்சை காரணமாக பலருக்கும் அதிலிருந்து நிவாரணம் கிடைத்தது. எனக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருக்கிறது. அதற்கு இவர்கள் மருந்து தருவதுடன் என்னென்ன சாப்பிட வேண்டுமென்பதையும் தெளிவாகச் சொல்லித் தருகின்றனர். மிகவும் நலிவுற்றிருந்த நான் இப்போது ஓரளவுக்கு தேறியிருக்கிறேன்.'' என்றார் கண்ணம்மாள்.

ஆஷா பணியாளர்கள், நீலகிரி, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, ஜாக்குலின் செல்வகுமாரி மற்றொரு சுகாதாரப் பணியாளருடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சி

பழங்குடி ஆஷா பணியாளர்களின் பங்களிப்பு

நீலகிரியில் மிகவும் தனித்துள்ள பல பழங்குடி கிராமங்களுக்கும், காடுகளுக்குள் நான்கும், ஐந்துமாக இருக்கின்ற வீடுகளுக்கும் சென்று மருத்துவ சேவை செய்யும் பலரும் அதே பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன், பழங்குடிகளாகவும் இருப்பது இவர்கள் அர்ப்பணிப்போடும் எதிர்பார்ப்பின்றியும் பணி செய்வதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

நீலகிரியில் 418 பழங்குடி கிராமங்களில் வசிக்கும் 39 ஆயிரம் பழங்குடி மக்களுக்கு, சுகாதாரத்துறை மருத்துவ சேவைகளை வழங்கி வருவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம், இதில் ஆஷா ஊழியர்களின் பங்களிப்பு மகத்தானது என்கிறார்.

''மாவட்டத்தில் பணியாற்றுவோரில் பழங்குடிகளின் எண்ணிக்கை குறித்து தனியான விவரம் ஏதும் இல்லை. ஆனால் பழங்குடி கிராமங்களில் பணியாற்றுவோரில் 10 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள், பழங்குடிகள்.'' என்றார் சோமசுந்தரம்.

காணொளிக் குறிப்பு, நீலகிரி: ஆபத்துகள் பல கடந்து பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் ஆஷா ஊழியர்கள்

தோடர் பழங்குடி பெண்ணான ஜாக்குலின் செல்வகுமாரி, 23 மந்துகள் (தோடர் கிராமங்கள்) மற்றும் பழங்குடி அல்லாத சில பகுதிகளுக்குமான கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றி வருகிறார். உதகையில் வசிக்கும் இவர் செல்லும் பல பழங்குடி கிராமங்களுக்கு பேருந்து வசதியில்லை. காட்டுப்பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும்.

''நான் போகும் மந்துகள் எல்லாமே காட்டுக்குள்தான் உள்ளன. அதற்கு நடந்து செல்லும்போது, 2 முறை புலியைப் பார்த்திருக்கிறேன். காட்டுமாடுதான் ஆபத்தானது. எப்போது எப்படித் தாக்குமென்றே தெரியாது. அதனால் இரவாகி விட்டால் பல நாட்களில் கிராமத்திலேயே தங்கிவிடுவேன். பல நாட்களில் எனது கணவரை அழைத்துக் கொண்டு போய் வருவேன்.'' என்கிறார் ஜாக்குலின் செல்வகுமாரி.

இவரைப் போலவே, இருளர் பழங்குடி பெண்ணான சிவகாமி, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள குரும்பர்பாடி, குரும்பர்பள்ளம், தக்கல் உள்ளிட்ட 5 பழங்குடியின கிராமங்களுக்கான ஆஷா ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரும் 2 முறை யானை தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார். இவர் செல்லும் ஒரு கிராமம், செங்குத்தான பாறைகள் நிறைந்த மலையுச்சியில் உள்ளது. மற்றொன்றுக்கு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் அந்த ஆற்றில் வெள்ளம் வேகமாகச் சென்றால் அங்கு செல்வதற்கு வேறு பாதைகள் எதுவும் கிடையாது. கயிறு கட்டியே கடந்து செல்ல வேண்டும்.

சிவகாமி செல்லும் சில கிராமங்களுக்கு பிபிசி தமிழ் உடன் சென்று கள ஆய்வு செய்தது. கோடை துவங்கியுள்ள இந்த காலகட்டத்தில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. வெயில் கொளுத்துகிறது. ஆற்றில் சிறிதளவே தண்ணீர் சென்றது. அதைத் தேடி காட்டுயிர்கள் வருவதால், அவற்றின் நடமாட்டம் அதிகமிருப்பது நன்றாகவே தெரிந்தது. காமன் லங்கூர் எனப்படும் குரங்குகள், காட்டுமாடுகள் மற்றும் மான்கள் நடமாடும் பகுதிகளைக் கடந்து சிவகாமி, இயல்பாக நடந்து தன் பணிகளை மேற்கொண்டார்.

''மூங்கில் காடுகளில் யானைகள் நிற்பதே தெரியாது. கவனிக்காமல் சென்றால் சிக்கல்தான். இங்கே கரடிகள் தொல்லையும் அதிகம். ஆற்றில் வெள்ளம் அதிகமாகும்போது, கணவரின் துணையுடன் கயிறு கட்டி கடந்து செல்வேன். பல நாட்களில் இரவு நேரங்களில் பிரசவ வலி என்று அழைப்பார்கள். உடனே மசினகுடிக்குச் சொல்லி ஆம்புலன்சை வரவழைத்து, நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் சென்று, பெண்களை அழைத்துச் சென்று மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்துள்ளோம்.'' என்றார் சிவகாமி.

நீலகிரியின் ஆஷா பணியாளர்கள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, கிராம மக்களை சந்தித்துப் பேசும் ஜாக்குலின் செல்வகுமாரி

"எங்களுக்கு இவர்கள் செய்வது பேருதவி"

குரும்பர்பள்ளம் என்ற கிராமத்துக்குச் சென்ற சிவகாமி, அங்கே சிலருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவைப் பரிசோதித்து மருந்துகளைக் கொடுத்தார். அங்குள்ள பல பெண்களுக்கு பரிசோதனைகள் செய்து, உணவு முறையை சொல்லிக் கொடுத்தார். சில குழந்தைகளுக்கு கட்டிகள், காயங்களுக்கும் மருந்துகளை வழங்கினார்.

பிபிசி தமிழிடம் பேசிய பழங்குடியினப் பெண் அம்பிகா, ''நாங்களாக எங்கும் சென்று இரத்த அழுத்தம் பார்ப்பதில்லை. எங்களில் பலருக்கு அது குறைவாகவும், அதிகமாகவும் இருப்பது இவர்கள் செய்யும் பரிசோதனையில்தான் தெரியவந்தது. மருந்து கொடுத்தார்கள். இப்போது எல்லாமே கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது. எங்களைப் போன்ற கிராமவாசிகளுக்கு இவர்கள் செய்வது பேருதவிதான்!'' என்றார் .

சர்க்கரை நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பழங்குடியான ஈரன், தற்போது ஓரளவுக்கு நடமாடும் நிலைக்கு முன்னேறியிருப்பதற்கும், தனக்கு வீடு தேடிக் கொண்டு வந்து கொடுத்த மருந்துகள்தான் காரணமென்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''இப்போது நாங்கள் எடுக்கும் பரிசோதனையால்தான் இரத்த அழுத்தம், சர்க்கரை, இரத்த சோகை உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. நாங்கள் இடைவிடாமல் மருந்து கொடுப்பதாலும், டாக்டரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை தருவதாலும் பலரும் நன்றாக இருக்கின்றனர்.'' என்கிறார் சிவகாமி.

நீலகிரியின் ஆஷா பணியாளர்கள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
படக்குறிப்பு, ஆஷா பணியாளர் சிவகாமி

பிரசவ கால மரணங்கள் முற்றிலும் தவிர்ப்பு

காடுகளுக்குள் அமைந்துள்ள பழங்குடி கிராமங்களில் கர்ப்பிணிகளை இரவு, பகல் பாராமல் அழைத்து வரும் ஆஷா ஊழியர்களின் சேவை போற்றத்தக்கது என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த உதகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, இதனால் கடந்த 2 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் பிரசவ கால மரணம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பகிர்ந்தார்.

ஆபத்து நிறைந்த காட்டுப்பகுதியில் பணியாற்றும் ஆஷா ஊழியர்களுக்கு, அரசு தரும் ஊக்க ஊதியம் 5500 ரூபாய் மட்டுமே. பத்தாம் வகுப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் இவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சில பயிற்சிகளை வழங்கி, இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. சமவெளிகளிலும், போக்குவரத்துள்ள பிற பகுதிகளிலும் பணியாற்றும் ஆஷா ஊழியர்களுக்கும், இவர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியமே வழங்கப்படுகிறது.

நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க (NAWA) செயலாளர் ஆல்வாஸ், ''ஆபத்துகள் நிறைந்த காட்டுப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மருத்துவப் பணி செய்யும் இவர்களுக்கும், சமவெளிகளில் பணி செய்வோருக்கும் ஒரே மாதிரி ஊதியம் என்பது மிகப்பெரிய முரணாகவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஆஷா ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டுமென்று உதகையில் தமிழக அரசால் நடத்தப்பட்ட சுகாதார அவையில் (Health Assembly) எங்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தினோம்.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஊதியம் தங்களுக்கு மிகக்குறைவுதான் என்றாலும், கூட பழங்குடி மக்களுக்காக நாங்கள் செய்யும் பணி மகத்தானது என்பதை புரிந்து கொண்டுள்ளதாக சிவகாமி தெரிவிக்கிறார்.

"எங்களுடைய மக்களுக்கு நாங்களே செய்யாவிட்டால் வேறு யார் இதைச் செய்ய முடியும் என்று கேட்கிறார். தங்களைப் பொருத்தவரை, இந்த பணி தங்களுடைய மக்களுக்கு சேவை செய்வதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு," என்கிறார்கள் சிவகாமியும், ஜாக்குலின் செல்வகுமாரியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)