வங்கதேசத்தில் ஹசீனா அரசை அகற்றிய மாணவர்களின் புதிய கட்சி எந்த அளவுக்கு மாறுபட்டது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, பிபிசி செய்தியாளர்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஹசீனா அரசுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்த மாணவர்கள் தாங்கள் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சிக்கு ஜாதிய நாகரிக் கட்சி என்று பெயரிட்டுள்ளனர்.
இது ஆங்கிலத்தில் நேஷனல் சிட்டிசன் பார்ட்டி (தேசிய குடிமக்கள் கட்சி) என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்டில் வரும் தேர்தலில் பழம்பெரும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக இந்தக் கட்சி போட்டியிடும்.
கேள்வி என்னவென்றால் வங்கதேசத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளிலிருந்து இந்தப் புதிய கட்சி எவ்வளவு வித்தியாசமானது? அது மக்கள் மத்தியில் என்ன கொள்கைகளை எடுத்துச் செல்ல இருக்கிறது?
முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தக் கட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அரசியல் வல்லுநர்கள் இக்கட்சிக்கான எதிர்காலத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் கண்டறிய நாங்கள் முயற்சி செய்தோம்.
கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் தொடக்க விழா, இஸ்லாம், இந்து, பௌத்தம் மற்றும் கிறித்துவம் ஆகிய மதங்களின் புனித நூல்களின் பாராயணத்துடன் தொடங்கியது. சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு குறித்து சமீபகாலமாக கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் ஒரு நாட்டில், அனைத்து மதங்களின் புனித நூல்களுக்கும் பகிரங்கமாக மதிப்பளிக்கப்பட்டது ஆச்சர்யத்தை அளித்தது.
- ஷேக் ஹசீனா அரசை அகற்றிய மாணவர் இயக்கத்தினர் சார்பில் புதிய கட்சி - வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?
- வங்கதேசத்தில் தொடங்கியுள்ள 'சாத்தான் வேட்டை' என்றால் என்ன? அங்கு பயமும், நிச்சயமற்ற சூழலும் நிலவுவது ஏன்?
- மொழியின் பெயரில் பிரிந்த வங்கதேசம், இப்போது மத தேசியவாத நாடாக மாறுகிறதா?
- இந்தியாவுடன் முரண்படும் வங்கதேசத்தை வளைக்க சீனா முயற்சியா?

சிறப்புச் சிந்தனை ஏதாவது இருந்ததா?

இந்த புதிய இளைஞர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அனிக் ராய் பேசுகையில், "எங்கள் இயக்கத்தில் அனைத்து மதம் மற்றும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். எங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது. குர்ஆனை படித்து எந்தப் பணியை தொடங்கினாலும், அங்கு அனைத்து மதங்களின் புனித நூல்களும் குறிப்பிடப்படவேண்டும்," என்று கூறினார்.
இந்தக் கட்சியை வழிநடத்தும் மாணவர் தலைவர்கள் அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த ஆண்டு போராட்டக்களம் கண்டனர். 1971இல் வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய குடும்பங்களுக்கு வேலைகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2018 இல் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவால் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. ஆனால் 2024 ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் அதை மீண்டும் அமலாக்க உத்தரவிட்ட போது நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன.
இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த ஹசீனா அரசு ஒடுக்குமுறைகளை கையாண்டதால் மாணவர் போராட்டம் மேலும் வலுப்பெற்றது. இதன் நீட்சியாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன் பிறகு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசில் மாணவர் தலைவர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் தொடங்கியுள்ள புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் விழா பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்றது.
வங்கதேசத்தின் பழைய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் சில தலைவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர்.
'பிரிவினை அரசியலில் இருந்து விலகி இருப்போம்'
நாஹித் இஸ்லாம் கடந்த ஆண்டு 'பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர்கள் அமைப்பை' வழிநடத்தினார். பின்னர் இடைக்கால அரசில் தகவல் ஒளிபரப்பு மற்றும் பிற துறைகளின் ஆலோசகராக செயல்படத்துவங்கினார்.
26 வயதான நாஹித் சமூகவியலில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவர் தேசிய குடிமக்கள் கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
இவரைத் தவிர கட்சியின் உயர்மட்ட தலைமையை ஒன்பது பேர் கொண்ட குழு வழிநடத்தி வருகிறது. இந்தக் குழுவில் அரிஃபுல் இஸ்லாமும் இடம்பெற்றுள்ளார்.
"உண்மையில் சுதந்திரத்திற்குப் பிறகு இங்கு பிரிவினைவாத அரசியல் சூழலை நாங்கள் பார்த்து வருகிறோம். கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற அடிப்படை விஷயங்களை வழங்குவதற்குப் பதிலாக, கலாசாரம் மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன," என்று பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
"இதனால்தான் பெரிய அரசியல் கட்சிகள் தோல்வியடைந்து விட்டதாக நாங்கள் நினைக்கிறோம். இந்த கட்சிகளால் ஹசீனாவின் 'பாஸிச' ஆட்சியைக்கூட முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகள் அதாவது சமூகத்தின் அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்த பின்னரே இந்த பணியை செய்ய முடிந்தது," என்று புதிய கட்சியின் மூத்த இணை ஒருங்கிணைப்பாளர் அரிஃபுல் இஸ்லாம் கூறினார்.
இருப்பினும் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் கடைசி நாட்களில் நடந்த வன்முறைகளுக்கு பாதுகாப்புப் படையினரிடையே இருந்த ஒழுக்கமின்மையே காரணம் என்று அவரது அவாமி லீக் கட்சி கூறுகிறது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை அன்றைய அரசியல் தலைமை மீது குற்றம் சுமத்துகிறது.
புதிய கட்சி எந்த சித்தாந்தத்தில் இயங்கும்?
"நாங்கள் இடதுசாரி அல்லது வலதுசாரி கட்சியாக இருக்க மாட்டோம். வங்கதேச மக்களின் மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம்," என்று அரிஃபுல் இஸ்லாம் விளக்கினார்.
வங்கதேசத்திற்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க விரும்புவதாகவும், இந்த புதிய அரசியலமைப்பின் மூலம் வங்கதேசத்தை புதிய குடியரசாக மாற்ற விரும்புவதாகவும் கட்சியின் தொடக்க விழாவில் கட்சித் தலைமை தெளிவுபடுத்தியது.
"சர்வாதிகாரத்தை மீண்டும் நிறுவுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் புதிய ஜனநாயக அரசியலமைப்பின் மூலம் அகற்ற வேண்டும்" என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நாஹித் இஸ்லாம் கூறினார்.
முந்தைய அரசு இந்தியாவுக்கு சார்பாக இருந்ததாக மாணவர்களும் மற்ற அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டினர். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெயர்களை குறிப்பிட்ட நாஹித், தங்கள் கட்சி இந்தியா அல்லது பாகிஸ்தான் சார்பு கொள்கைகள் அல்லது அரசியலில் இருந்து விலகி இருக்கும் என்று கூறினார்.
"இந்தியா போன்ற அண்டை நாடுகளுடனான உறவுகள் சமத்துவத்தின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்வோம். ஒரு அரசியல் கட்சியுடன் அல்லாமல் வங்கதேச மக்களுடன் இந்தியா உறவுகளை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அரிஃபுல் இஸ்லாம் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வன்முறைகள் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பரில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் நாஹித் இஸ்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த சம்பவங்கள் வங்கதேசத்தின் உள்விவகாரம் என அப்போது இந்தியா கூறியது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய போது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் இந்தியா வேண்டுகோள் விடுத்தது.
போராட்டங்களின் போது நிர்வாகத்தின் தோட்டாக்களுக்கு குறைந்தது 1,400 பேர் பலியானதாகவும், அந்த வன்முறைச் சம்பவங்களில் 44 காவல்துறையினர் கொல்லப்பட்டதாகவும் ஹசீனா அரசின் கடைசி நாட்களைப் பற்றிய ஐ.நா அறிக்கை தெரிவித்தது. அப்போதைய அரசு மனித உரிமைகளை மீறியதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புடன் கூடவே அந்நாட்டுடன் உறவை மேம்படுத்துவது குறித்தும் இந்தியா தொடர்ந்து பேசி வருகிறது.
அனைத்து மாணவர்களின் பிரதிநிதித்துவம் இருக்கிறதா?

கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முதல் குரல் டாக்கா பல்கலைக் கழகத்தில் இருந்து எழுப்பப்பட்டது. தற்போது மாணவர்களின் சம்மதத்துடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதும் டாக்காவில் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பல மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பிபிசியிடம் பேசும்போது, சட்டம்-ஒழுங்கு குறைபாடு பற்றி குறிப்பிட்டனர். போராட்டங்களின் போது, உள்துறை அமைச்சக ஆலோசகர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகிறது.
வங்கதேசத்தில் உள்ள மாணவர் அமைப்பு மிகப் பெரியது. கூடவே வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டவர்களை உள்ளடக்கியது.
டாக்கா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தும் மாணவர் தலைவரான நஜிஃபா ஜன்னத்தை பிபிசி சந்தித்தது. அவர் கடந்த ஆண்டும் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களை வழிநடத்தினார்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட புதிய கட்சியில் தான் இணையப் போவதில்லை என்று நஜிஃபா கூறுகிறார். "அனைத்து விதமான கருத்துகளையும் கேட்டு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை நான் அவர்களிடம் (புதிய கட்சி) காணவில்லை. இந்த கட்சியில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இல்லை. இதுதவிர இந்தக் கட்சியில் அரசியல், கலாசாரம் மற்றும் பொருளாதாரம் குறித்த அணுகுமுறையில் சில மாற்றங்களைக் காண நான் விரும்பினேன். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை," என்று அவர் தெரிவித்தார்.
அப்படியானால் அவரது ஆதரவு வேறு ஏதாவது கட்சிக்கு கிடைக்குமா?
"இந்தக் கட்சி அனைத்து மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் பழைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்தக் கட்சியை ஒரு சிறந்த மாற்றாக நான் கருதுகிறேன்," என்று அவர் பதில் அளித்தார்.
புதிய கட்சி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பல்வேறு அமைப்புகளில் உள்ள பதற்றம் மற்றும் பதவிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாயின.
பொது மக்கள் இதை சொல்லத் தயங்குகிறார்கள். ஆனால் வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு நாசப்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல அரசியல் வல்லுநர்கள், 'மாணவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டதாக' நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
பேராசிரியை ஜூபைதா நஸரீன், டாக்கா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கடந்த ஏழு மாதங்கள் மக்களுக்கு சிந்திக்க ஒரு வாய்ப்பை அளித்துள்ளதாக அவர் நம்புகிறார்.
"கடந்த ஆண்டு வங்கதேசத்தில் தங்களால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று பல்வேறு குழுக்களும் உரிமை கோரும் நிலை நிலவுகிறது. அந்த நிகழ்வுகள் பற்றிய தெளிவான தகவல்கள் இப்போது மக்களுக்கு கிடைக்கின்றன. மக்கள் தங்கள் பழைய கருத்துகளைப் பற்றி சிந்தித்து, விவாதம் செய்து, மன்னிப்பு கேட்பதை இப்போது சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
ஹசீனா அரசுக்கு எதிரான பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் போராட்டம், அக்கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது ஆகியவற்றை பொதுமக்கள் நினைவில் கொள்வார்கள் என்று முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி நம்புகிறது. எனவே மாணவர்களின் புதிய கட்சியை பெரிய சவாலாக அவரது கட்சி பார்க்கவில்லை.
அமீர் குஸ்ரோ மஹ்மூத் செளத்ரி 2004 இல் கலீதா ஜியாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பிபிசியிடம் பேசிய அவர், "இங்குள்ள சர்வாதிகார ஆட்சியை கவிழ்த்தது மாணவர்களின் சாதனையல்ல. இதன் பெருமை ஒட்டுமொத்த நாட்டிற்கும் உரித்தானது, இருப்பினும் அரசியல் கட்சியாக எங்களது பங்களிப்பு மிகப்பெரியது. மக்கள் செய்த தியாகம் அனைவரையும் ஒன்றிணைத்தது," என்றார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா 1991-96 மற்றும் 2001-2006 வரை நாட்டை வழிநடத்தினார் என்பது முக்கியமானது. தேர்தல் செயல்பாட்டில் நடுநிலைமை இல்லை என்று காரணம் காட்டி அவரது கட்சி 2014 ஆண்டு முதல் பொதுத் தேர்தலை புறக்கணித்து வருகிறது.
புதிய மாணவர்கள் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
"1948-இல் ஜின்னா அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் உள்ள டாக்காவுக்குச் சென்று உருது மட்டுமே தேசிய மொழியாக இருக்கும் என்று கூறியபோது மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்க மொழியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வாதிட்டனர்," என்று தி டெய்லி ஸ்டார் செய்தித்தாளின் ஆசிரியர் மஹ்ஃபூஸ் ஆனம் குறிப்பிட்டார்.
"1952 இயக்கத்தில் இதே விஷயம் தொடர்பாக பல மாணவர்கள் உயிர்தியாகம் செய்தனர். கிழக்கு பாகிஸ்தானிலும் மாணவர்கள் ராணுவச் சட்டம் மற்றும் அயூப் கானுக்கு எதிராக குரல் கொடுத்தனர். சுதந்திர வங்கதேசத்தில் கூட ராணுவ ஆட்சியை மீறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே பிளவுபட்டதையும் நான் பார்த்திருக்கிறேன்," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
புதிய மாணவர் கட்சி தயார் நிலையில் உள்ளதா?
"கடந்த 6 மாதங்களாக நாங்கள் மக்களிடம் சென்று பேசுகிறோம். நாங்கள் ஒரு இயக்கத்தை நடத்தினோம். இதில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை எங்களிடம் தெரிவித்தனர்," என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அனிக் ராய் பிபிசியிடம் தெரிவித்தார்.
"நாங்கள் என்ன செய்ய வேண்டும், நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட என்ன செய்யவேண்டும் என்ற யோசனைகளை அவர்கள் முன்வைத்தனர். நாங்கள் முழுமையாக தயார் நிலையில் இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் களத்தில் இறங்கத்தான் வேண்டும். பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்," என்றார் அவர்.
மாணவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த உணர்வு 2024 ஆகஸ்டில் இருந்தது போல் இப்போது இல்லை என்று பேராசிரியர் ஜூபைதா நஸரீன் கருதுகிறார்.
"நாங்கள் மாணவர்களின் அரசியலை ஆதரிக்கிறோம். ஏனெனில் நாங்கள் பிஎன்பி அல்லது அவாமி லீக் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் அரசியலால் சோர்வடைந்துவிட்டோம். அவர்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
"முதலாவது மக்களின் நம்பிக்கையைப் பெறுவது. இரண்டாவது பிஎன்பி மற்றும் அவாமி லீக் போன்ற பெரிய கட்சிகளை எதிர்கொள்வது. மூன்றாவது, மாணவர்களிடம் எந்த குறிப்பிட்ட சித்தாந்தமும் இல்லாமல் இருப்பதால் மக்களை ஈர்ப்பதில் சிரமம்," என்று அவர் கூறினார்.
மாணவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும்?
ஷேக் ஹசீனாவின் அரசை கவிழ்த்ததை தவிர எந்த அடிப்படையில் மாணவர்கள் மக்களிடம் செல்ல முடியும்?
"நாட்டில் எவ்வாறு நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும், நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள இடைக்கால அரசு 6 குழுக்களைத் தொடங்கியுள்ளது," என்று மஹ்ஃபூஸ் ஆனம் குறிப்பிட்டார்.
"நாட்டில் தொடங்கப்பட்ட இந்த சீர்திருத்த செயல்முறைகளுக்கான பெருமையை மாணவர்கள் எடுத்துக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் இது வாக்காளர்கள் மீது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை," என்றார் அவர்.
வரவிருக்கும் தேர்தல் முடிவுகளில் மாணவர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைக்கக் கூடாது என்று மஹ்ஃபூஸ் ஆனம் தெரிவித்தார். வரும் தேர்தலில் ஆட்சியை பிடிப்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கக்கூடாது என்கிறார் அவர்.
"மாணவர்கள் 'நீண்ட கால தொலைநோக்கு' கொண்டவர்களாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் 10-15 இடங்கள் பெற்றாலும், அங்கு அவர்களின் இருப்பு பழம்பெரும் கட்சிகளை உலுக்கி வாக்குறுதிகளை நிறைவேற்ற அவற்றை கட்டாயப்படுத்தும்" என்று அவர் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தின் 17 கோடி மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் 40 வயதுக்குட்பட்டவர்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில் இந்த இளைஞர் கட்சி மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. மேலும் தங்கள் பார்வை வரும் தேர்தலின் மீது மட்டுமே இல்லை என்று மாணவர் தலைவர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












