'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்

பிளானெட்டரி பரேட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்கெனவே செவ்வாய் கோள் இடதுபக்கத்திலும், வியாழன் கோள் நடுவிலும், சனி மற்றும் வெள்ளி கோள்கள் வலதுபக்கத்திலும் தெரிந்தது. ஆனால், இந்த வாரம் ஏழு கோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்
    • எழுதியவர், மேடி மோல்லோய்
    • பதவி, பிபிசி காலநிலை & அறிவியல் செய்தியாளர்

பிப்ரவரி 28 அன்று (நாளை) செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என்பது, வானியல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இப்படி பல கோள்கள் அணிவகுத்து நிற்கும் இந்த அரிய நிகழ்வை 'பிளானெட்டரி பரேட்' (planetary parade) என அறிவியல் மொழியில் அழைக்கின்றனர். இப்போது இந்த நிகழ்வை நீங்கள் தவறவிட்டால், 15 ஆண்டுகள் கழித்து 2040-ம் ஆண்டில்தான் தோன்றும்.

இந்த நிகழ்வை இன்னும் சில தினங்கள் பார்க்க முடியும் என்கின்றனர் வானியலாளர்கள். சூரியன் மறைந்த பின்னர், முடிந்தவரை அனைத்து கோள்களையும் பார்ப்பதற்கு சிறந்த நேரமாகும்.

இதுகுறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்வி-பதில்களை இங்கே தொகுத்துள்ளோம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

'பிளானெட்டரி பரேட்' என்பது என்ன?

நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது, புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 புவி ஆண்டுகள் ஆகும்.

கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடியும். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தரும். இதை 'பிளானெட்டரி பரேட்' என்கின்றனர்.

சூரியனை சுற்றிவரும் கோள்கள் வெவ்வேறு வேகம் மற்றும் தொலைவில் சூரியனை சுற்றிவருகின்றன. அப்படியிருக்கும் போது பூமியிலிருந்து ஒரே நேரத்தில் அணிவகுத்து நிற்கும் கோள்களை பார்ப்பது பிரமிக்கத்தக்க காட்சியாக இருக்கும். எனினும், இந்த கோள்கள் பூமியிலிருந்து வெகு தொலைவிலேயே இருக்கும்.

பிளானெட்டரி பரேட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வானில் கோள்கள் ஒரே நேரத்தில் வரிசையாக நிற்பதை சித்தரிக்கும் படம்

அனைத்து கோள்களையும் வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா? சிறந்த நேரம் எது?

புதன், வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை வெறுங்கண்களாலேயே பார்க்க முடியும். சனிக்கோள் அடிவானத்தில் கீழாக இருக்கும் என்பதால் அதை பார்ப்பது கடினம். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை தொலைநோக்கி மூலமே பார்க்க முடியும்.

அடிவானம் மற்றும் வானம் தெளிவாக இருந்தால் அனைத்து கோள்களையும் பார்ப்பதற்கு சிறப்பான வாய்ப்பாக இருக்கும். ஆனால், ஏழு கோள்களையும் பார்ப்பதற்கான நேரம் மிக குறைவானதே.

தென்கிழக்கு லண்டனில் உள்ள கிரீன்விச் ராயல் கோளரங்கத்தின் வானியலாளர் முனைவர் எட்வர்ட் ப்ளூமர் கூறுகையில், "நாம் எளிதாக பார்க்கும் விதத்திலான இடத்தில் அந்த ஏழு கோள்களும் இருக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது." என்றார்.

எந்தெந்தெ கோள்களை பார்ப்பது கடினம்?

சூரியன் மறையும்போது சனி மற்றும் புதன் கோள்களும் மறையும் சமயம் என்பதால், அவற்றை பார்ப்பது கடினமானது.

"சூரியன் மறைந்த பிறகு அந்த கோள்களை பார்ப்பதற்கு உங்களுக்கு சில நிமிடங்களே இருக்கும். அதன்பின், அவை அடிவானத்துக்குக் கீழே சென்றுவிடும். அதன்பின்னும் வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை இன்னும் சிறிது அதிக நேரத்துக்கு பார்க்க முடியும்," என்கிறார் ப்ளூமர்.

பிளானெட்டரி பரேட்

பட மூலாதாரம், Getty Images

கோள்களை பார்ப்பதற்கு சிறந்த சூழல் எது?

வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் மிக பிரகாசமான கோள்கள் என்பதால் அவற்றை எளிதாக பார்க்க முடியும். அதேசமயம், செவ்வாய் கோள் தனித்துவமான சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

"யுரேனஸ் கோளை வெறுங்கண்ணால் பார்க்க முடியும், ஆனால் உங்களுக்கு சிறந்த பார்வை திறனும் தகுந்த சூழலும் அமைய வேண்டும்," என விளக்குகிறார் ப்ளூமர்.

ஒளி மாசு குறைவாகவும் அடிவானம் தெளிவாகவும் தெரியும் இடத்துக்கு சென்று பார்த்தால், அதிகமான கோள்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கூடும் என்றும் முனைவர் ப்ளூமர் அறிவுறுத்துகிறார்.

"நீங்கள் அப்போதுதான் உங்கள் சமையலறையிலிருந்து கொல்லைப்புறத்துக்கு வந்திருந்தால், அதன் வெளிச்சத்துக்கு நீங்கள் பழக நேரம் எடுக்கும். அதற்கு சிறிது நேரம் கொடுங்கள், அந்த வெளிச்சத்துக்கு முழுமையாக உங்கள் கண்கள் பழகுவதற்கு அரை மணிநேரம் ஆகும்," என்கிறார் ப்ளூமர்.

"உங்கள் மொபைல்போனை பார்ப்பதை தவிருங்கள், சௌகரியமாக இருங்கள். அடிவானத்தை தடையின்றி பார்ப்பதை உறுதிசெய்யுங்கள்."

இது ஓர் ஆச்சர்யகரமான வாய்ப்பு எனக்கூறும் அவர், இரவு வானத்தை உற்றுநோக்குவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஊக்கப்படுத்துகிறார்.

"எப்படி விஷயங்கள் மாறுகின்றன என்பதை கவனியுங்கள்," எனக்கூறுகிறார் அவர். "சூரிய குடும்பத்தின் இயக்கவியலை கவனிப்பதற்கான ஒரு வாய்ப்பு வானத்தைப் பார்ப்பதுதான்." என்கிறார் அவர்.

இந்தியாவில் பார்க்க முடியுமா?

பிளானெட்டரி பரேட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதன், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவு பிரகாசமாக இருக்கின்றன

உலகம் முழுவதிலும் இந்த வானியல் அற்புதத்தைப் பார்க்க முடியும் என்கிறார், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்

"வெறுங்கண்ணாலேயே பெரும்பாலான கோள்களை பார்க்க முடியும். யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரு கோள்களை மட்டும் தொலைநோக்கியால் பார்க்க முடியும். வானம் தெளிவாக இருக்க வேண்டும், மேக மூட்டத்துடன் இருக்கக் கூடாது என்பதை மட்டும் தான் நினைவில் கொள்ள வேண்டும்." என்றார் அவர்.

சென்னை பிர்லா கோளரங்கத்தின் விஞ்ஞானி லெனின் கூறுகையில், "இதை வீட்டிலிருந்தே பார்க்க முடியும். இது பிப். 28-ல் தொடங்கி சில நாட்களுக்கு தெரியும். அதன்பின், ஒவ்வொரு கோளும் வெவ்வேறு காலத்தில் அடிவானத்தில் கீழே சென்றுவிடும்." என்றார்.

கூடுதல் தகவல்கள்: ஜோனதன் ஓ'கலஹன், பிபிசி அறிவியல் செய்தியாளர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)