தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசிய 5 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், TVK
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 26) காலை நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் பேசி வைத்துக் கொண்டு நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்வில் விஜய் பேசிய ஐந்து முக்கிய விஷயங்கள் யாவை? இந்தத் தொகுப்பில் காணலாம்.
- அதிமுக வாக்கு வங்கியை விஜய் குறி வைக்கிறாரா? அவருக்கான வாக்குகள் எங்கிருந்து வரும்?
- விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன?
- விஜய் வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் என்ன நடக்கிறது? 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா?
- விசிக - தவெக: 'திருமாவுக்கு கூட்டணிக் கட்சிகளால் அழுத்தம்' - விஜய் திருமாவளவன் குறித்துக் கூறியது என்ன?

1. 'எல்லோருக்கும் பிடித்தவன் அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் வரும்'
"அரசியலில் யார் எப்போது யாரை எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்று தெரியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் கிடையாது என்று கூறுவார்கள்.
மக்களுக்கு அதிகமாகப் பிடித்த ஒருவர் அரசியலுக்கு வந்தால் நல்லவர்கள் அதை வரவேற்பார்கள், ஆனால் ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படும்," என்று விஜய் பேசினார்.
அதோடு, "இதுவரை நாம் சொன்ன பொய்களை நம்பி மக்கள் வாக்களித்தார்களே, ஆனால் இவன் இன்று மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறானே, எப்படி இவனைச் சமாளிக்கலாம் என்று நினைப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராகப் பேசுகிறார்கள் இல்லையா அந்த மாதிரி," என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், PTI
2. 'கட்சி நிர்வாகிகள் இளைஞர்களாக இருந்தால் என்ன தவறு?'
கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாக இருப்பது குறித்து விமர்சிக்கப்படுவதாகக் கூறிய விஜய் அதற்கான தனது பதிலையும் தெரிவித்தார்.
அப்போது, "ஏன் இருந்தால் என்ன? அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியபோது அவர்களின் பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள்தானே! அவர்களால்தான் 1967, 1977 தேர்தல்களில் வெற்றி கிடைத்தது," என்று பேசினார்.
3. 'பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவோம்'
அதோடு, கட்சி நிர்வாகிகளின் பின்னணி குறித்தும் பேசப்படுவதாகக் குறிப்பிட்ட த.வெ.க. தலைவர் விஜய், "கட்சி நிர்வாகிகள் சாதாரண குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பதையும் நம் மீதான புகாராகக் கூறுகிறார்கள். சாதாரணமானவர்கள்தான் பெரிது பெரிதாகச் சாதித்துள்ளனர். இது எளிய மக்களுக்கான கட்சி, பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது," என்று கூறினார்.
"அந்தக் காலத்தில், பண்ணையார்கள் கட்சியில் இருப்பார்கள். ஆனால் இப்போது கட்சியில் இருப்பவர்கள் பண்ணையாளர்களாக மாறிவிடுகிறார்கள்.
மக்கள் நலன், வளர்ச்சி ஆகியவை குறித்துக் கவலைப்படாமல், எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் பெறலாம் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது நோக்கம்," என்று விமர்சித்தார்.
4. 'மும்மொழிக் கொள்கை'

பட மூலாதாரம், @TVKVijayTrends
"புதிதாக ஒரு பிரச்னையைக் கிளப்பிவிடுகிறார்கள்" என்று கூறி மும்மொழிக் கொள்கை குறித்தும் விஜய் தனது கருத்தைத் தெரிவித்தார்.
அப்போது, "மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தாவிட்டால் மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை கொடுக்க மட்டார்கள் என்பது எல்கேஜி, யுகேஜி சிறுவர்கள் சண்டை போட்டுக் கொள்வது போல உள்ளது" எனக் கூறிய அவர், கொடுக்க வேண்டியது அவர்களது கடமை, வாங்க வேண்டியது இவர்களது உரிமை என்றார்.
மேலும், "இரண்டு பேரும் – அதாவது பாசிசமும் பாயாசமும் - அதாவது நமது அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசி வைத்துக் கொண்டு சமூக ஊடகத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் அடித்துக் கொள்வது மாதிரி நடிப்பார்களாம், அதை மக்கள் நம்ப வேண்டுமாம்," என்று பாஜக, திமுக இருதரப்புமே மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்வதாக விமர்சித்தார் விஜய்.
மேற்கொண்டு பேசியவர், "நமது ஊர் சுயமரியாதை ஊர், அனைவரையும் மதிப்போம், அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கூட்டாட்சித் தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் கல்விக் கொள்கையை மொழிக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி?" என்றும் பாஜகவை விமர்சித்தார்.
5. 'கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்'

பட மூலாதாரம், TVK
தமிழக வெற்றிக் கழகம் இப்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட விஜய், மாநில அளவில் நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும், கட்சியின் கட்டமைப்புதான் ஒரு கட்சிக்குப் பலமே என்பதால் அதை வலுவாகக் கட்டமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரஷாந்த் கிஷோருடன் கை கோர்க்கும் விஜய்
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கடந்த வாரம் சென்னையில் விஜயை சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கான தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் பணியில் ஈடுபடப் போவதாக, இன்று தவெக விழாவில் பங்கேற்ற பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.
அப்போது, "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றி பெறச் செய்ய உதவுவேன்" என்று கூறினார்.
"எனது நண்பர், எனது சகோதரர்" என்று பிரஷாந்த் கிஷோரை குறிப்பிட்டுப் பேசிய விஜய், "தமிழ்நாட்டில் 1967 மற்றும் 1977 சட்டமன்றத் தேர்தல்களைப் போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைப்போம் என்ற தீர்க்கமான உறுதியுடன் இயங்கி வரும் வளர்ந்து வரும் முதன்மை அரசியல் சக்தி தவெக" என்றார். கட்சியின் கொள்கைகளில் சமரசம் செய்யாமல் பிரஷாந்த் கிஷோருடன் பணியாற்றப் போவதாகவும் அவர் பேசினார்.

பட மூலாதாரம், @TVKVijayTrends
நிகழ்வில் பேசிய பிரஷாந்த் கிஷோர் "கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக குஜராத் மாடல் வளர்ச்சியே சிறந்தது என ஒப்புக்கொள்ள இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு வளர்ச்சி மாடல்தான் சிறந்தது" என்றார். எனினும் இதுவரை இல்லாத அளவிலான அரசியல் ஊழல் தமிழ்நாட்டில் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
"தமிழ்நாடு பிற மாநிலங்களைவிட பல குறியீடுகளில் முன்னோடியாக உள்ளது. ஆனால் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கான அரசியல் ஊழல் இங்கு நடைபெறுகிறது. வாரிசு அரசியல் குறித்து நாம் பெரிதாகக் கவனிப்பதில்லை.
கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கரின் வாரிசுகள் மட்டுமே ஆட வேண்டும் என்றால் நமக்கு எப்படி சச்சின், தோனி போன்ற வீரர்கள் கிடைத்திருப்பார்கள்? தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ளவர், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தோனி. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் அவரைவிடப் பிரபலமான பிகாரி நானாக இருக்க வேண்டும். அடுத்த 100 நாட்களில் தமிழக வெற்றிக் கழக குடும்பத்தைப் பத்து மடங்கு பெருக்க வேண்டும் என்று சூளுரை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பேசினார்.
இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து தவெகவில் அண்மையில் இணைந்திருந்த ஆதவ் அர்ஜூனா மேடையில் பேசினார்.
முன்னதாக 'கெட் அவுட்' என்று மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் கூறும் வகையில் கையெழுத்திடும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் விஜய் முதல் கையெழுத்திட்டார். அந்த பேனரில் பிரஷாந்த் கிஷோரை கையெழுத்திடுமாறு ஆதவ் அர்ஜுனா கூறியபோது, அவர் மறுத்துவிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












