செலவிட பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள் - ஆய்வு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிகில் இனாம்தார்
- பதவி, பிபிசி, மும்பை
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 100 கோடி பேர் விருப்பத்திற்கேற்ப செலவிடும் அளவுக்கு பணம் இல்லாதவர்களாக இருக்கின்றனர் என அறிக்கை ஒன்று கூறுகிறது.
நாட்டின் நுகர்வோர் பிரிவினர், ஸ்டார்ட் அப்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களால் மதிப்பு மிக்க சந்தையாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில் மெக்சிகோவுக்கு இணையாக அதாவது 13 முதல் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிக்கின்றனர் என Blume Ventures எனும் முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.
இதுதவிர மேலும் 30 கோடி பேர் வளர்ந்து வரும் அல்லது விருப்பமுடைய (Aspirants) நுகர்வோராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தயக்கத்துடன் செலவுகளை செய்கின்றனர். பட்டனைத் தட்டியதும் நடக்கும் வகையில் செலவிடுதலை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எளிதாக்கியுள்ள நிலையில், இவர்கள் இப்போது தான் தங்கள் செலவிடும் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளனர்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர்
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் நுகர்வோர் பிரிவு ஆழமாக சென்றுள்ள அளவுக்கு விரிவடையவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் என்னவென்றால் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை, மாறாக ஏற்கெனவே பணக்காரர்களாக இருப்பவர்களே மேலும் பணம் படைத்தவர்களாக மாறி வருகின்றனர்.
இவை அனைத்தும் நாட்டின் நுகர்வோர் சந்தையை தனித்துவமான வழிகளில் வடிவமைக்கிறது. "ப்ரீமியமைசேஷன்" போக்கு துரிதப்படுத்தப்படுகிறது. இதில் வெகுஜன மக்களுக்கு பயன்படும் பொருட்களுக்கு பதிலாக இருமடங்கு விலை மதிப்பு கொண்ட பொருட்களை சந்தைப்படுத்தி வளர்ச்சியை ஊக்கப்படுத்த பிராண்டுகள் முயலுகின்றன.
மிக ஆடம்பரமான வீடுகள் மற்றும் பிரீமியம் போன்களின் விற்பனையில் ஏற்றம் இருக்கும் நிலையில், இதே வகையில் குறைந்த விலை பொருட்களின் விற்பனைக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. எளிதில் வாங்கக் கூடிய குறைந்த விலை வீடுகளின் விற்பனை 5 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த சந்தையில் 40 சதவிகிதமாக இருந்த நிலையில், இது தற்போது வெறும் 18 சதவிகிதமாக குறைந்துள்ளது. பிராண்டட் பொருட்களும் சந்தையில் மிகப்பெரிய பங்கை கைப்பற்றி வருகின்றன.
"அனுபவ பொருளாதாரம்" (Experience Economy) எனப்படும் அதிக விலையில் டிக்கெட் விற்கப்படும் நிகழ்ச்சிகளுக்கான சந்தையும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. சர்வதேச கலைஞர்களான கோல்ட்பிளே மற்றும் எட் ஷீரன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் அதிவேகத்தில் விற்றுத் தீர்ந்தன.

பட மூலாதாரம், Getty Images
மாற்றத்தை ஏற்றுக் கொண்ட நிறுவனங்கள் செழிப்படைகின்றன என பிபிசியிடம் கூறியிருக்கிறார் இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான சஜித் பாய். "பெரும் மக்கள் திரளை மட்டுமே குறிவைப்பவர்கள் அல்லது பிரீமியம் நுகர்வோருக்கு கவனம் செலுத்தாதவர்கள் சந்தையை இழக்கின்றனர்" என்கிறார் சஜித்.
பெருந்தொற்று காலத்திற்குப் பிந்தைய மீட்சியில் இந்தியாவின் வளர்ச்சி ஆங்கில எழுத்தான K வடிவிலிருக்கிறது அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் வாங்கும் சக்தியை இழக்கின்றனர் என்ற கருத்துக்கு இந்த ஆய்வின் முடிவுகள் மேலும் வலுவூட்டுகின்றன.
உண்மையில் இந்த நீண்ட கால மாற்றமானது பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. சமமற்ற வளர்ச்சி இந்தியாவில் தற்போது மேலும் அதிகரித்து வருகிறது, இது எப்படி எனில் டாப் 10 இந்தியர்கள் தேசிய வருவாயில் 57.7 சதவிகிதத்தைப் பெற்று வருகின்றனர். இது 1990 ல் 34 சதவிகிதமாகவே இருந்தது. இந்த கட்டமைப்பின் கீழ்ப் பகுதியில் இருக்கும் சரிபாதி பேரின் வருவாய் தேசிய வருவாயில் 22.2 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் நுகர்வுத் திறனில் ஏற்பட்டுள்ள சரிவு, வாங்கும் திறனில் ஏற்பட்ட பின்னடைவை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக நிதி சேமிப்பில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி மற்றும் மக்களிடையே அதிகரித்து வரும் கடன் சுமையும் இதனை அதிகப்படுத்துகிறது.
கோவிட் பெருந்தொற்றுக்கு பின்பு பாதுகாப்பற்ற கடன் வழங்கும் செயல்முறைகள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
வளர்ந்து வரும் அல்லது விருப்பமுடைய நுகர்வோர்(Aspirants) மேற்கொள்ளும் நுகர்வு செலவீனங்கள் , இத்தகைய கடன் பெறுதலால் நிகழ்கின்றன. "இதற்கான வழியை அடைப்பது நுகர்வில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்", என்கிறார் சஜித் பாய்.
வேளாண் மகசூலில் அடைந்துள்ள புதிய சாதனை மற்றும் சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 12 பில்லியன் டாலர் அதாவது 1 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை ஆகிய இரண்டும் குறைந்த கால அடிப்படையில் செலவுகளை ஊக்கப்படுத்த உதவக் கூடியவையாக உள்ளன. இது அசாத்தியமான நாடகத்தன்மையில் இருக்காது எனினும் நுகர்வு அடிப்படையில் இயங்கும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஒரு அரை சதவிகிதம் அதிகரிக்க பயன்படும் என்கிறார் சஜித்.
ஆனால் நீண்ட கால அடிப்படையிலான சவால்கள் அப்படியே தொடர்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
மார்செல்லஸ் முதலீட்டு மேலாண் நிறுவன (Marcellus Investment Managers) தரவுகளின்படி, இந்தியாவின் நுகர்வோர் தேவைக்கான பிரதான உந்து சக்தியாக விளங்கும் நடுத்தர வர்க்கத்தினர் நசுக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் வருவாய் பெரும்பாலும் மாறுதலின்றி தொடர்கிறது.
"இந்தியாவில் வரி செலுத்தும் மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பேரின் வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் முழுமையாக தேக்கமடைந்துள்ளது. இது உண்மை கருதுகோள்களில் (பணவீக்கத்திற்கு ஏற்ப சரி செய்யப்படும் போது) வருமானம் பாதியாக குறைந்துள்ளதைக் குறிக்கிறது" என கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.
"இந்த நிதி நெருக்கடி நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை நலிவடையச் செய்துள்ளது. இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கி பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினர் தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுகள் மோசமான நிலையை வரும் ஆண்டுகளில் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் காட்டுகிறது" எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
கிளெரிக்கல், செயலாக்க வேலைகள் மற்றும் வழக்கமான பணிகளை செயற்கை நுண்ணறிவு எளிதாக்குவதால், நகர்ப்புற வொயிட் காலர் வேலைகள் கிடைப்பது கடினமாகி வருகின்றன.
" உற்பத்திப் பிரிவுகளில் பணியமர்த்தப்படும் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது" எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதே கவலைகளை அரசின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக தொழிலாளர்கள் இடம் பெயர்வது, இந்தியா போன்ற சேவை சார்ந்த பொருளாதாரத்திற்கு கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் கணிசமான பங்கு பணியாளர்கள், குறைந்த அளவு திறன் கூட்டப்பட்ட பணிகளில் இருக்கும் போது, பாதிப்புக்கு ஆளாகக் கூடிய துறையாக உள்ளது.
"இந்தியாவும் நுகர்வு அடிப்படையிலான பொருளாதாரம், எனவே நுகர்வில் ஏற்படக் கூடிய சரிவு, இத்துறையின் பணியாளர்கள் இடம்பெயர்வதற்கு காரணமாக அமைகிறது. கணிப்புகளில் கூறப்படும் மோசமான சூழல் உண்மையாகும் பட்சத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையையே திசை திருப்பும் ஆற்றலை இது கொண்டிருக்கலாம்" எனவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












