யுக்ரேனில் உள்ள அரிய கனிமங்களுக்கு அமெரிக்கா குறி வைப்பது ஏன்? அவற்றின் முக்கியத்துவம் என்ன?

அரிய வகை கனிமங்கள், யுக்ரேன் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாதுக்கள் அடங்கிய பாறை
    • எழுதியவர், ரெபெக்கா தார்ன், ஆன்னா குண்டிரென்கோ, நவீன் சிங்
    • பதவி, பிபிசி உலக செய்திகள்

அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு யுக்ரேன் ஒப்புக் கொண்டுள்ளது என்று கீவில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாங்கள் உண்மையில் பல நல்ல திருத்தங்களுடன் அதை ஒப்புக் கொண்டுள்ளோம். இதை ஒரு நேர்மறையான முடிவாக பார்க்கிறோம்" என்றும் தெரிவித்தார். அந்த அதிகாரி இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் எந்த விவரத்தையும் வழங்கவில்லை.

அரிய வகை கனிமங்களை யுக்ரேன் கொண்டிருந்தாலும், இவற்றில் பெரும்பாலானவை ரஷ்ய துருப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலேயே உள்ளன.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் தொடர்ச்சியாக யுக்ரேனுக்கு ஆதரவளிப்பதற்கு கைமாறாக இதனைச் செய்ய வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்பின் முன்மொழிவுகள் இத்தகைய கனிமங்கள் அமெரிக்காவுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இவற்றால் என்ன பலன், அமெரிக்காவுக்கு என்ன கிடைக்கும்?

அரிய வகை கனிமங்கள், யுக்ரேன் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அரிதான கனிமங்கள் எவை?

நவீன தொழிற்துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படும், வேதியியல் ஒற்றுமை கொண்ட 17 கனிமக் கூறுகளை கூட்டாக "அரிய புவி கனிமங்கள்" (Rare Earths) என குறிப்பிடலாம்.

இந்த கனிமக் கூறுகள் ஸ்மார்ட்போன்கள், கணினிகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவறைத் தயாரிப்பதில் முக்கிய பங்களிக்கின்றன.

இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை: Sc-ஸ்காண்டியம், Y- இத்ரியம், La-லாந்தனம், Ce- சீரியம், Pr- ப்ராசியோடியம், Nd - நியோடிமியம், Pm - புரோமெத்தியம், Sm - சாமரியம், Eu- யுரோப்பியம், Gd - கேடோலினியம், Tb - டெர்பியம், Dy - டிஸ்ப்ரோசியம், Ho - ஹோல்மியம், Er - எர்பியம் , Tm - துலியம், Yb - இத்தர்பியம், Lu - லுத்தேட்டியம்.

இவற்றை தூய்மையான வடிவில் கண்டெடுப்பது எளிதல்ல என்பதால் இவை, அரிதானவை என அறியப்படுகின்றன. ஆனால், இவற்றின் படிமங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே இருக்கின்றன.

இந்த அரிய வகை கனிமங்கள் தோரியம், யுரேனியம் போன்ற கதிர்வீச்சு கூறுகளுடன் சேர்ந்தே இருக்கின்றன. இவற்றை பிரித்தெடுக்க சில நச்சு வேதிப்பொருட்கள் தேவைப்படுவதால், இந்த பணி சில நேரங்களில் கடினமானதாகவும் அதிக செலவாகக் கூடியதாகவும் மாறுகிறது.

அரிய வகை கனிமங்கள், யுக்ரேன் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஓப்லாஸ்ட் பகுதிகளில் உள்ள கிரெட்டேசியஸ் பிலோகுஸ்மினிவ்கா பாறைகள் உக்ரைனின் மதிப்புமிக்க கனிமங்களுக்கு தாயகமாகும்

யுக்ரேனில் உள்ள அரிய கனிமங்கள் என்ன?

அரிய வகை கனிமங்கள், யுக்ரேன் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா
படக்குறிப்பு, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேனின் பகுதிகளைக் காட்டும் வரைபடம்

ஐரோப்பிய யூனியனால் "முக்கியமான மூலப் பொருட்கள்"(Critical raw materials) என வகைப்படுத்தப்பட்டுள்ள 30 ல் 21 கனிமங்கள் யுக்ரேனில் உள்ளன. இது உலகின் மொத்த இருப்பில் 5 சதவிகிதமாகும்.

யுக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரிஸ்டல்லின் ஷீல்டு பகுதியில், முதன்மையாக அஸோவ் கடலின் அடிப்பகுதியில் கனிம படிமங்கள் இருக்கின்றன. இவற்றின் பெரும்பாலான பகுதிகள் தற்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் மத்திய புஷ், கியவ் , வின்னிட்சியா (Vinnytsia) மற்றும் சிட்டோமியர் (Zhytomyr) பிராந்தியங்களிலும் உறுதியளிக்கக் கூடிய வகையிலான திட்டங்கள் செயல் வடிவம் பெறலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி புவியில் பலநூறு எண்ணிக்கையில் கனிம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றில் சில மட்டுமே பொருளாதார ரீதியில் சாத்தியமான பலனைத் தரக் கூடியவையாக இருக்கும் என கூறுகின்றனர்.

பெஞ்ச்மார்க் கனிம நிபுணத்துவ அமைப்பில் பேட்டரிக்கான மூலப் பொருட்கள் பிரிவின் தலைவராக இருக்கும் ஆடம் வெப் கூறும் போது "மதிப்பீடுகளை மட்டுமே கணக்கில் கொண்டால், இதுபோன்று பல எண்ணிக்கையில் மதிப்பீடுகள் உள்ளன" என்கிறார்.

"இந்த கனிம இருப்புகள் உண்மையிலேயே பொருளாதார பலன்களை தரக்கூடியவை என நிறுவ, நிறைய பணிகள் செய்யப்பட வேண்டும்" என ஆடம் கூறுகிறார்.

ஃபோர்ப்ஸ் யுக்ரேன் பத்திரிகையின் கூற்றுப்படி, அந்நாட்டில் உள்ள 70 சதவிகித கனிம மூலாதாரங்கள், டொனெட்ஸ்க் (Donetsk), நிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk), லுஹான்ஸ்க் (Luhansk) பிராந்தியங்களில் காணப்படுகின்றன. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டு, இன்னமும் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலேயே பெரும்பாலானவை உள்ளன.

அரிய வகை கனிமங்கள், யுக்ரேன் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லித்தியம் என்பது ஜின்வால்டைட்டிலிருந்து பிரித்தெடுக்கக் கூடிய முக்கிய கனிமமாகும்

யுக்ரேன் அரசு அளித்த தகவல்களின்படி, 450,000 டன் லித்தியம் இருப்புகளை அந்நாடு கொண்டுள்ளது. இவற்றை வெட்டி எடுப்பதற்கான திட்டங்கள் இருந்தாலும், எந்த பணிகளும் செயல்பாட்டில் இல்லை.

குறைந்தது இரண்டு லித்தியம் இருப்பு பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஷெவ்சென்கிவ்ஸ்கெ (Shevchenkivske) மற்றும் பெர்டியான்ஸ்க் (Berdyansk) பிராந்தியத்தில் உள்ள க்ருதா பால்கா கூட்டு தாதுக்கள் ஆகியவை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

கிரோவோஹ்ராட் (Kirovohrad) பிராந்தியத்தில் உள்ள லித்தியம் தாது படிமங்கள் யுக்ரேனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அமெரிக்காவுக்கு இந்த கனிமங்கள் ஏன் தேவை?

அரிய வகை கனிமங்கள், யுக்ரேன் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மின்னணு பொருட்கள், ஏஐ தொழில்நுட்ப தரவு தளங்களுக்கான கட்டமைப்புகளுக்கு கனிமங்கள் தேவை

உலகச்சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவுடன் போட்டியிடும் நோக்கமும், இந்த அரிய கனிமங்கள் மற்றும் முக்கிய தாதுக்களின் விநியோகத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் விருப்பத்திற்கு காரணமாக உள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக அரிய கனிமங்களை வெட்டி எடுப்பது மற்றும் பிரித்தெடுப்பதில் முன்னிலை வகிக்கும் சீனா, உலக உற்பத்தியில் 60 முதல் 70 சதவிகிதத்தை கொண்டுள்ளது. கனிமங்களை பிரித்தெடுக்கும் திறனில் 90 சதவிகிதம் சீனாவிடம் உள்ளது.

இந்த விஷயத்தில் சீனாவைச் சார்ந்திருப்பது, பொருளாதாரம் மற்றும் தேசப் பாதுகாப்பு என இரண்டு அம்சங்களிலும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கவலை அளிக்கக் கூடியதாக இருக்கலாம்.

மின்சார கார்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை உயர்தர அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு இந்த தாதுக்கள் அத்தியாவசியமாக உள்ளன.

அரிய வகை கனிமங்கள், யுக்ரேன் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாங்காயில் உள்ள டெஸ்லாவின் ஆற்றல் சேமிப்பு அமைப்பு தொழிற்சாலை

டிரம்பின் நோக்கம் மற்றும் செயல்பாட்டில் முரண்பாடு

இது தோற்றத்திலேயே ஒரு முரண்பாடானது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கைகளை (renewables policies) ஒதுக்கிவிட்டு, படிம எரிபொருள் (fossil fuel) உற்பத்தியை விரிவாக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதேநேரத்தில், பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கான மூலாதாரங்களான முக்கிய தாதுக்களையும் எங்கிருந்தேனும் கைப்பற்ற நினைக்கிறார்.

இந்த கனிமங்கள் நுகர்வோர் மின்னணு பொருட்கள், ராணுவ மற்றும் வழிகாட்டு சாதனங்கள், மிக முக்கியமாக செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை கட்டமைப்பதிலும் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான உள் கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு முக்கிய கனிமங்கள் (Critical Minerals) அதிக அளவில் தேவைப்படும் - முக்கியமாக காப்பர், சிலிகான், பலேடியம் மற்றும் புவி கனிமங்களும் தேவைப்படுகின்றன.

இந்த முக்கிய கனிமங்களின் விநியோகம் ஏற்கெனவே சரியத் தொடங்கியுள்ளது. இதுவே உலக அளவில் பசுமை எரிசக்தியின் வளர்ச்சி குறைவதற்கும் காரணமாக இருக்கிறது.

அரிய வகை கனிமங்கள், யுக்ரேன் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷான்டோங் மாகாணத்தின் கிங்டாவோ-வில் நடைபெற்ற சீன மேம்பட்ட பொருட்கள் தொழில் கண்காட்சி 2024-ல் அரியவகை புவி நிரந்தர காந்தங்கள் மற்றும் கரையாத உலோகங்களின் ஸ்டால்களை பார்வையாளர்கள் பார்க்கின்றனர்

அரிய தனிமங்களை (rare earth elements) உள்ளடக்கிய முக்கிய கனிமங்களை (critical minerals) கையாளுவதில் சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்காவுடனான அந்நாட்டின் புவிசார் அரசியலும் காரணமாக இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல தசாப்தங்களாக மெருகேறிய தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் சீனா, சந்தையை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட இயற்கை கிராஃபைட் மற்று டிஸ்ப்ரோசியம் விநியோகத்தில் 100 சதவிகிதம், கோபால்ட் விநியோகத்தில் 70 சதவிகிதம் மற்றும் புராசஸ் செய்யப்பட்ட லித்தியம் மற்றும் மாங்கனீஸ் விநியோகத்தில் 60 சதவிகிதம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை கூறுகிறது.

ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்க நாடுகளில் சுரங்கங்களின் உரிமையை வைத்திருக்கும் சீனா, அரிய தனிமங்கள் (Rare Earth Elements) மற்றும் முக்கிய உலோகங்களை உலகெங்கும் உற்பத்தி செய்து வழங்குவதில் இறுக்கமான பிடியை உறுதி செய்கிறது.

"உலக விநியோக சந்தையில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, முக்கிய மற்றும் மூலோபாய கனிமங்களுக்கான புதுமையான விநியோகத்தை அமெரிக்கா உறுதி செய்வது அவசியம்" என பைடனின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஆயுத சேவைகள் குழு கூறியது.

யுக்ரேன் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளை தனது விநியோகச் சங்கிலியில் புதுமையான அணுகுமுறைகளை சேர்ப்பதற்கான தளங்களாக டிரம்ப் நிர்வாகம் பார்க்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)