அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் - யுக்ரேன் அதிகாரிகள் தகவல்

அமெரிக்க-யுக்ரேன் கனிம ஒப்பந்தம்

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

    • எழுதியவர், அப்துஜலில் அப்துராசுலோவ், ஜரோஸ்லாவ் லுகிவ், அந்தோணி சுர்சர்
    • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு யுக்ரேன் ஒப்புக் கொண்டுள்ளது என்று கீவில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாங்கள் உண்மையில் பல நல்ல திருத்தங்களுடன் அதை ஒப்புக் கொண்டுள்ளோம். இதை ஒரு நேர்மறையான முடிவாக பார்க்கிறோம்" என்றும் தெரிவித்தார். அந்த அதிகாரி இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் எந்த விவரத்தையும் வழங்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமான வருவாயில் 500 பில்லியன் டாலர் (£395 பில்லியன்) உரிமைக்காக ஆரம்பத்தில் வைத்த கோரிக்கைகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் யுக்ரேனுக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கவில்லை. இது யுக்ரேன் முன் வைத்த முக்கிய கோரிக்கையாகும்.

இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட நிலையில், இந்த வாரம் வாஷிங்டனில் யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

ஓர் உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தாமல் பேசிய டிரம்ப், இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக யுக்ரேன் "போராடுவதற்கான உரிமையை" பெறும் என்று தெரிவித்திருந்தார்.

"அவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் "அமெரிக்காவும் அதன் நிதியும் ராணுவ தளவாடங்களும் இல்லாவிட்டால், இந்த போர் மிகக் குறுகிய காலத்தில் முடிந்திருக்கும்" என்றார்.

யுக்ரேனுக்கு அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளின் விநியோகம் தொடருமா என்று கேட்டதற்கு, "ஒருவேளை ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்யும் வரை... நாம் ஒரு உடன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும், இல்லாவிட்டால் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்," என்றார்.

எந்தவொரு சமாதான ஒப்பந்தம் போடப்பட்டாலும், அதை தொடர்ந்து யுக்ரேனில் "ஒருவித அமைதி காத்தல்" தேவைப்படும், ஆனால் அது "அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக" இருக்க வேண்டும் என்று டிரம்ப் மேலும் கூறினார்.

கடந்த வாரம், டிரம்ப் ஜெலன்ஸ்கியை ஒரு "சர்வாதிகாரி" என்று வர்ணித்தார். ஜெலன்ஸ்கி, அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் கனிம வளத்திற்கான ஒப்பந்த கோரிக்கைகளை நிராகரித்திருந்தார். இதன் பின்னர், போரைத் தொடங்கியதற்கு யுக்ரேனை குற்றம் சாட்டியிருந்தார் டிரம்ப்.

அமெரிக்க-யுக்ரேன் கனிம ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

நிதியுதவிக்கு ஈடாக கனிம உரிமை கோரும் அமெரிக்கா

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து யுக்ரேனுக்கு வழங்கிய முந்தைய ராணுவ மற்றும் பிற உதவிகளுக்கு ஈடாக யுக்ரேனின் கனிமங்களை தருமாறு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

அந்த அளவுக்கு அமெரிக்க உதவிகள் வழங்கப்படவில்லை என்று வாதிடும் ஜெலன்ஸ்கி, "எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது" என்று கூறினார்.

அமெரிக்கா யுக்ரேனுக்கு 300 பில்லியன் டாலர் முதல் 350 பில்லியன் டாலர் வரை வழங்கியதாக டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறினார்.

"நாங்கள் அந்த பணத்தை திரும்பப் பெற விரும்புகிறோம்," என்று டிரம்ப் கூறினார்.

"ஒரு நாட்டின் ஒரு மிகப் பெரிய பிரச்னையை எதிர்கொள்ள உதவிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் வரி செலுத்தும் மக்கள் இப்போது தங்கள் பணத்தை மீண்டும் பெறப் போகிறார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் துணைப் பிரதமர் ஸ்டெபானிஷினா செவ்வாய்க்கிழமை கனிம ஒப்பந்தம் குறித்து முதலில் செய்தி வெளியிட்ட பைனான்சியல் டைம்ஸ் ஊடகத்திடம் இந்த ஒப்பந்தம் "பெரிய திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே" என்று கூறினார்.

"இது ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என்று அமெரிக்க நிர்வாகம் கூறுவதை நாங்கள் பல முறை கேட்டுள்ளோம்" என்று பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய ஸ்டெபானிஷினா கூறினார்.

யுக்ரேனிய வட்டார தகவல்களின் படி, போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேனுடனான ஒப்பந்தத்தில் அமெரிக்கா அதன் சில கடுமையான நிபந்தனைகளில் இருந்து பின்வாங்க வேண்டியிருந்தது.

உதவிகள் வழங்குவதில் கொள்கை மாற்றம் ஆரம்பம்?

எவ்வாறாயினும், ஒரு முன்னுதாரணம் உருவாகியுள்ளது. டிரம்ப் காலத்தில் அமெரிக்க உதவிகள் முன்பை போல கிடைக்கப் போவதில்லை. திருப்பித் தர வேண்டியிராத நல்லலெண்ண உதவிகள் என்பது முடிந்து போன விஷயமாகிவிட்டது. அவை மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி அல்லது மூலோபாய காரணங்களுக்காக வழங்கப்படும் உதவியாக இருந்தாலும் சரி.

இது மார்ஷல் திட்டம் முதல் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றம் குறிக்கிறது.

யுக்ரேன் ஒரு தொடக்கம்தான். டிரம்பும் அவரது வெளியுறவுக் கொள்கை குழுவும் அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகெங்கிலும் அவர்களின் "அமெரிக்காவுக்கு முன்னுரிமை" கோட்பாடுகளை செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

யுக்ரேன் செய்தி இணையதளமான யுக்ரேன்ஸ்கா பிராவ்தா, கனிம வள ஒப்பந்தத்தில் யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் கையெழுத்திட இருப்பதாக தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் புனரமைப்பு முதலீட்டு நிதியம் ஒன்றை அமைக்க உடன்பட்டுள்ளதாக செய்தி தளத்தின் பொருளாதார பிரிவு கூறுகிறது.

லித்தியம் மற்றும் டைட்டானியம் உட்பட முக்கிய கனிமங்களின் பெரும் இருப்புகளை யுக்ரேன் கொண்டுள்ளது. அத்துடன் கணிசமான நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் மற்றும் யுரேனிய இருப்புகள் உள்ளன. இவை பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை.

கடந்த ஆண்டு, ஜெலன்ஸ்கி யுக்ரேன் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளிடம் "ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை" முன்வைத்தார். அது போரின் முடிவில் வெளிநாட்டு நிறுவனங்கள் யுக்ரேனின் சில கனிம வள ஒப்பந்தங்களைப் பெற முடியும் என்று முன்மொழிந்தது.

அமெரிக்க-யுக்ரேன் கனிம ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடுமையான வார்த்தைப்போர் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், இந்த கனிம ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

செவ்வாயன்று, ரஷ்ய அதிபர் புதின் அரிய கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக கூறினார். இதில் யுக்ரேனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளும் அடங்கும்.

யுக்ரேனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் கடந்த வாரம் சௌதி அரேபியாவில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உட்பட, அமெரிக்கா - ரஷ்யா இடையே சமீப காலமாக நிலவும் சுமூக உறவுகள் குறித்து அதிக எச்சரிக்கை கொண்டுள்ளன.

யுக்ரேனிலும் ஐரோப்பா முழுவதிலும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கம் கொண்ட எந்தவொரு பேச்சுவார்த்தைகளில் இருந்தும் அவர்கள் ஒதுக்கப்படலாம் என்ற கவலை நிலவுகிறது. ஐரோப்பிய கண்டத்தின் எதிர்கால பாதுகாப்பு ஒட்டுமொத்தமாக அவர்களே இடம் பெறாத பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர்.

யுக்ரேனில் உள்ள தாதுக்கள் எவை?

அமெரிக்க-யுக்ரேன் கனிம ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளில் 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனிம வளங்கள் உள்ளன என்று யுக்ரேன் கூறுகிறது.

உலகின் "முக்கியமான மூலப்பொருட்களில்" சுமார் 5% யுக்ரேனில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  • மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க பயன்படும் கிராபைட்டின் நிரூபிக்கப்பட்ட இருப்பு 19 மில்லியன் டன் ஆகும்.
  • ஐரோப்பாவில் அனைத்து லித்தியம் இருப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, இவை தற்கால பேட்டரிகளில் முக்கிய அங்கமாகும்.
  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்குவதற்கு முன்பு, யுக்ரேன் உலகின் 7% டைட்டானியத்தை உற்பத்தி செய்தது. இது விமானங்கள் முதல் மின் நிலையங்கள் வரை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • யுக்ரேனில் அரிய உலோகங்களின் குறிப்பிடத்தக்க இருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை, நவீன உலகில் முக்கியமான ஆயுதங்கள், காற்றாலைகள் , மின்னணுவியல் மற்றும் பிற தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் 17 கனிமங்களின் தொகுப்பாகும்.

சில கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. யுக்ரேனின் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்வைரிடென்கோ, 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள வளங்கள் இன்று ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ளன என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)