முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை எவ்வளவு குறைவு? எப்படிப்பட்ட மருந்துகள் இங்கு கிடைக்கும்?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மலிவு விலையில் மருந்துகளை விற்கக்கூடிய 'முதல்வர் மருந்தகம்' எனப்படும் 1,000 மருந்துக் கடைகள் திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 24) தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளன. இந்த மருந்துக் கடைகளில் விலைகள் எப்படி இருக்கின்றன? மத்திய அரசின் 'மக்கள் மருந்தகங்களுக்கும்' இதற்கும் என்ன வித்தியாசம்?
'ஜெனரிக்' வகை மருந்துகளைக் குறைந்த விலையில் விற்கக்கூடிய 1,000 மருந்துக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் துவங்கப்படும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்வர் மருந்தகத்தைப் பொறுத்தவரை, இந்தக் கடைகளில் காப்புரிமை இருக்கக்கூடிய மருந்துகள் கிடைக்காது. பொதுப் பெயர் மருந்துகள் எனப்படும் ஜெனரிக் மருந்துகளும், பெரிய பிராண்டுகள் தயாரித்து விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துகளும் கிடைக்கும்.
- போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா
- கோவை: கல்லுாரிகளில் மாணவர்கள் மூலம் கஞ்சா விற்கப்படுகிறதா? காவல் துறை பகிரும் அதிர்ச்சி தகவல்
- 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?
- நெஞ்சுவலி மருந்து தேடலில் 'வயாகரா' கிடைத்தது எப்படி?சோதனையில் பங்கேற்ற நபர்கள் கூறியது என்ன?

'முதல்வர் மருந்தகம்' திட்டம்
கடந்த நவம்பர் மாதத்தில், முதல்வர் மருந்தகம் கடைகளை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பி. ஃபார்ம் அல்லது டி. ஃபார்ம் படித்தவர்களோ, அவர்களது ஒப்புதலைப் பெற்ற தொழில்முனைவோரோ, கூட்டுறவு அமைப்புகளோ இதற்கென விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அப்படி விண்ணப்பிப்போர் 110 சதுர அடி இடத்தை அளிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கு 3 லட்ச ரூபாய் வரை மானிய உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வந்த விண்ணப்பங்களில் தொழில்முனைவோர் 500 பேர், கூட்டுறவு சங்கங்கள் 500 என 1,000 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவர்களில் தொழில் முனைவோருக்கு மூன்று லட்ச ரூபாயும் கூட்டுறவு அமைப்புகளுக்கு 2 லட்ச ரூபாயும் மருந்தாகவும் உட்கட்டமைப்பு உதவிகளாகவும் மானியமாக அளிக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்துக் கடைகளில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகமும், பிராண்ட் மருந்துகள், சர்ஜிகல் பொருட்கள், இந்திய மருந்துகள் உள்ளிட்டவற்றை இம்காப்ஸ் மூலமும் கொள்முதல் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பு வைக்க 38 மாவட்டங்களிலும் மாவட்ட மருந்துக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிடங்குகளில் மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் பராமரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மருந்துக் கடைகளில் ஒரு மருந்து தீர்ந்துபோய்விட்டால், அவற்றை அந்தந்த மருந்துக் கடைகள் ஆன்லைன் மூலம் கோரிப் பெற முடியும். இந்த மருந்தகங்களை அமைப்பதற்குக் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடன் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்தகங்களில் ஜெனிரிக் வகை மருந்துகள், அதாவது காப்புரிமை இல்லாத மருந்துகள் 25 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இதுதவிர, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய தலைவலி தைலம், சில சோப்புகள், குழந்தைகளுக்கான சில உணவுப் பொருட்கள் ஆகியவையும் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.
மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களைவிட விலை குறைவா?

பட மூலாதாரம், janaushadhi.gov.in
ஜெனிரிக் மருந்துகள் என்பவை தமிழில் பொதுப் பெயர் மருந்துகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. காப்புரிமை காலம் முடிந்துவிட்ட மருந்துகளைப் பல மருந்து நிறுவனங்கள் தங்கள் பிராண்ட் பெயர்களில் விற்பனை செய்கின்றன.
அதே மருந்துகள், எவ்வித பிராண்ட் பெயரும் குறிப்பிடப்படாமல், அந்த மருந்தின் பெயரிலேகூட விற்பனை செய்யப்படும். ஏதாவது ஒரு பிராண்டின் கீழ் விற்பனையாகும் மருந்துகளோடு ஒப்பிட்டால், இந்த ஜெனரிக் மருந்துகளின் விலை மிகக் குறைவாக இருக்கும். பிராண்டட் மருந்துகளைவிட இந்த ஜெனரிக் மருந்துகள், 30 முதல் 80 சதவீதம் வரை விலை குறைவானதாக இருக்கும்.
முதல்வர் மருந்தகத்தைப் பொறுத்தவரை, அதில் இருந்து 25 சதவீதம் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, இந்த விலை குறைவான ஜெனரிக் மருந்துகள், அவற்றின் அதிகபட்ச சில்லறை விலையிலிருந்தும் 25 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே, மத்திய அரசின் மக்கள் மருந்தகம் அல்லது ஜன ஔஷதி மருந்தகங்களைவிட இங்கே மருந்துகளின் விலை குறைவாக இருக்கும்.
கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம் ஆகியவை வழக்கமான மருந்தகங்களைப் போலவே இவையும் செயல்படுகின்றன. அவற்றில் எல்லா மருந்துகளுக்கும் 25 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும். ஆனால், அவை ஜெனரிக் மருந்துகளுக்கான பிரத்யேக விற்பனையகம் அல்ல. ஆனால், முதல்வர் மருந்தகம், இந்த ஜெனரிக் மருந்துகளுக்கான பிரத்யேக விற்பனை நிலையங்களாகச் செயல்படும்.
குறைந்த விலையில் மருந்துகள்

இதுபோல, மருந்துகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் முயற்சிகள் புதிதல்ல. 2006 - 2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது கூட்டுறவுத் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 216 மருந்துக் கடைகள் திறக்கப்பட்டன.
இதற்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அம்மா மருந்தகம் என்ற பெயரின் கீழ் சுமார் 100 மருந்துக் கடைகள் இதே பாணியில் கூட்டுறவு அமைப்புகளால் திறக்கப்பட்டன.
இந்தக் கடைகளில் மருந்துகள் 25 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டன. இதுதவிர மத்திய அரசு மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மருந்துக் கடைகளை நடத்தி வருகிறது.
ஆனால், முதல்வர் மருந்தகம் இந்த மூன்று வகை மருந்துக் கடைகளில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டவை என்கிறார் ஆயிரம் விளக்குத் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் எழிலன் நாகநாதன்.

பட மூலாதாரம், Facebook
''ஏழை மக்களால் மருந்துகளுக்கு அதிகம் அவ்வளவு செலவழிக்க முடியாது அவர்களுக்காகவே இந்த மருந்தகங்கள் துவங்கப்பட்டிருக்கின்றன" என்று கூறினார் எழிலன்.
தொடர்ந்து பேசிய அவர், "கூட்டுறவு மருந்தகங்களைப் பொறுத்தவரை, எல்லா மருந்துகளும் 25 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும். அம்மா மருந்தகத்திலும் 25 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கும். இவை தொடர்ந்து இயங்கும். மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களைவிட அதிக தள்ளுபடி முதல்வர் மருந்தகங்களில் வழங்கப்படுகிறது.''
''மக்கள் மருந்தகத்தை நடத்தும் ஒருவர், வெளியில் இருந்தும் மருந்துகளை வாங்கி விற்க முடியும். ஆனால், தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் மருந்துக் கடைகளை நடத்துபவர்கள் வேறு வகையில் மருந்துகளை வாங்கி விற்கக்கூடாது. எல்லா மருந்துகளும் கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலமாகவோதான் விநியோகிக்கப்படும்" என்கிறார் எழிலன்.

"உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்றவற்றுக்கு ஒருவர் வாழ்நாள் முழுக்க மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
அவற்றுக்கான ஜெனரிக் மருந்துகள் இங்கே கிடைக்கும். இதன் மூலம் சாதாரண மக்கள் தங்கள் மாதாந்திர மருத்துவச் செலவில், பெருந்தொகையை மிச்சப்படுத்த முடியும்" என்கிறார் எழிலன்.
'பிற மருந்துக் கடைகளை நடத்துபவர்கள் இந்த மருந்தகங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா?' எனக் கேட்டபோது, "நிச்சயமாக பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் பிராண்டட் மருந்துகளை விற்பவர்கள். அவர்களுடைய வாடிக்கையாளர்களும் அத்தகைய மருந்துகளை வாங்குபவர்கள்தான். ஆகவே, அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்" என்றார் எழிலன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












