கும்பமேளா: சாதுக்களின் தங்குமிடம், திரிவேணி சங்கமம் எப்படி இருக்கிறது? புகைப்படத் தொகுப்பு
கட்டுரை தகவல்
எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் & டேனியல் பி
பதவி, பிபிசி தமிழ்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13ஆம் தேதி துவங்கிய கும்பமேளா, பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவுக்கு வருகிறது.
பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நிகழ்ந்துவரும் இந்தக் கும்பமேளாவில் இதுவரை 62 கோடி பேர் நீராடியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானவர்கள் இரவும் பகலும் இந்த திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகிறார்கள். முக்கிய தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் இந்த எண்ணிக்கை கோடிகளைத் தொடுகிறது.
உச்சகட்டமாக வசந்த பஞ்சமி தினத்தன்று மொத்தம் 2.33 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த கும்பமேளா நடக்கும் பகுதி, வெறும் நதிகளின் சங்கமமாக மட்டும் இருப்பதில்லை. மாறாக, பல்வேறு விதமான பக்தர்கள், வியாபாரிகள், துறவிகள், நம்பிக்கையாளர்களின் சங்கமமாகவும் இருக்கிறது.
கச்ச த்வார் என்ற கீழ்க்காணும் இந்தப் பகுதிதான், சங்கம் பகுதிக்குள் நுழைவதற்கான முக்கிய நுழைவாயிலாக இருக்கிறது.
படக்குறிப்பு, இந்த இடத்தில் இரவு - பகல் என எப்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளே நுழைந்துகொண்டிருப்பதையும் வெளியேறுவதையும் பார்க்க முடியும்
பிரயாக்ராஜில் கும்பமேளா நடக்கும் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள பாலத்தில் கும்பமேளாவின் பின்னணிக் கதையை விளக்கும் படம் வரையப்பட்டிருக்கிறது.
படக்குறிப்பு, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும்போது கிடைத்த அமுதத்தின் துளிகள் விழுந்த இடங்களில்தான் கும்பமேளா நடந்ததாக நம்பப்படுகிறது.
படக்குறிப்பு, கும்பமேளா பகுதி முழுக்க, இதுபோல ஆசி வழங்கும் நிர்வாண சாதுக்களை நூற்றுக்கணக்கில் பார்க்க முடியும்.
படக்குறிப்பு, கும்பமேளாவில் புனித நீராடிய பிறகு, இதுபோல நெற்றியில் இந்து மதச் சின்னங்களையோ, 'ஜெய் ஸ்ரீராம்' என்றோ 'ராதே.. ராதே' என்றோ பக்தர்கள் வரைந்துகொள்கிறார்கள்.
படக்குறிப்பு, நெற்றியில் இட்டுக்கொள்வதற்கான வண்ணப் பொடிகளை இங்கே நூற்றுக்கணக்கான இடங்களில் விற்கிறார்கள்.
படக்குறிப்பு, கும்பமேளா நடக்கும் இடத்திற்கு செல்லும் வழியிலும் உள்ளேயும் இதுபோல கயிற்றின் மீது நடக்கும் குழந்தைகளைப் பார்க்க முடிகிறது.
படக்குறிப்பு, கும்பமேளாவுக்கு பக்தர்கள் மட்டுமல்ல, சில சமயங்களில் கடவுள்களும் வருகிறார்கள்.
படக்குறிப்பு, இங்கேயே தங்கியிருக்கும் நாகா சாதுக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். செய்தித் தாள் படிக்காமல் அன்றைய பொழுது நகராது என்கிறார் இந்த நாகா சாது.
படக்குறிப்பு, கும்பமேளாவுக்குள் யாசகம் கேட்பவர்களுக்கு அரிசியைத் தானமளிப்பது வழக்கமாக இருக்கிறது. இதற்காக அரிசியை விற்க, இதுபோன்ற சிறிய கடைகளும் இருக்கின்றன.
படக்குறிப்பு, தங்களது வாகனத்தை நிர்வாண சாதுக்களிடம் அளித்து, அவர்களை அதனை ஓட்டச் செய்வதன் மூலமும் சிலர் ஆசீர்வாதம் பெறுகிறார்கள்.
படக்குறிப்பு, நாகா சாதுக்கள் இரவில் தங்கள் உணவை தாங்களே செய்து சாப்பிடுகிறார்கள். நான்கைந்து பேர் சேர்ந்து சமையல் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
படக்குறிப்பு, சமையல் வேலையை ஆரம்பித்துவிட்டு, தேவையான சில பொருட்களை வாங்கிவரும்படி சொல்கிறார் இந்த சாது.
படக்குறிப்பு, இரவு உணவுக்கு முன்பாக, இதுபோன்ற பெரிய கூடாரங்களில் கூடும் சாதுக்கள் பக்திப் பாடல்களைப் பாடுகின்றனர்.
படக்குறிப்பு, திரிவேணி சங்கமத்தில் குளிக்க நேரம் ஒரு பிரச்னையில்லை. இரவிலும் நீராடுவது தொடர்கிறது.