சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை

தனது இறுதி உண்ணாவிரதத்தின் போது உறவினருடன் பேசும் சாயர் தேவி

பட மூலாதாரம், Pranay Modi

படக்குறிப்பு, தனது இறுதி விரதத்தின்போது சாயர் தேவி
    • எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்
    • பதவி, பிபிசி உலக சேவை

கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, 88 வயதான சாயர் தேவி மோதி சிகிச்சை பெற வேண்டாம் என்று முடிவு செய்தார். அதற்குப் பதிலாக, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அவர் முடிவு செய்தார்.

"ஜூன் 25ஆம் தேதியன்று வந்த அவரது பயாப்ஸி பரிசோதனை முடிவு, அவருக்குப் புற்றுநோய் பரவுவதைக் காட்டியது. 2024ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, அவர் பிரார்த்தனை செய்துவிட்டு சூப் சாப்பிட்டார். அடுத்த நாள் எங்களை அழைத்து சந்தரா மேற்கொள்ளும் தனது விருப்பத்தை எங்களிடம் கூறினார்" என்று அவரது பேரன் பிரனய் மோதி நினைவு கூர்ந்தார்.

சல்லேகானா என்றும் அழைக்கப்படும் சந்தரா என்பது உணவு மற்றும் தண்ணீரைக் கைவிட்டு மரணத்தைத் தழுவுவதை உள்ளடக்கிய நடைமுறை. இது சமண மதத்தைப் பின்பற்றும் சிலரால் கடைபிடிக்கப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த நடைமுறை, சமண மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றல்ல. இந்திய ஊடக செய்திகள், ஒவ்வோர் ஆண்டும் சமண மதத்தைச் சேர்ந்த சுமார் 200 முதல் 500 நபர்கள் மட்டுமே இந்த முறையிலான மரணத்தைத் தேர்வு செய்வதாக மதிப்பிடுகின்றன.

சிலர் இந்த நடைமுறையை எதிர்க்கிறார்கள், இதைத் தற்கொலை என்கிறார்கள். அதுமட்டுமின்றி, சந்தராவுக்கு தடை கோரிய மனு இந்திய உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமணர்களின் சந்தரா நடைமுறை எப்போதிருந்து தொடங்கியது?

குறைந்தது 2,500 ஆண்டுகள் பழமையான சமண மதத்தின் மையமாக அகிம்சை உள்ளது. அவர்களுக்கென கடவுள் இல்லை என்றாலும், சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் "தூய்மையான, நிரந்தரமான, தனிப்பட்ட மற்றும் எல்லாம் அறிந்த ஆத்மாவை" நம்புகிறார்கள்.

ஏறக்குறைய சமண மதத்தைச் சேர்ந்த அனைவரும் சைவ உணவு உண்பவர்களாகவும், தார்மீக விழுமியங்களுக்கு உறுதியான முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும், உலக இன்பங்களைக் கைவிடுபவர்களாகவும் உள்ளனர்.

இந்தியாவில் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 50 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலும் நன்கு படித்தவர்கள். பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற 9 சதவீத இந்திய பொது மக்களோடு ஒப்பிடும்போது, சமணர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பல்கலைக் கழகப் பட்டம் பெற்றுள்ளனர் என அமெரிக்காவை சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. மேலும், சமண மதத்தினர் பலரும் ஒப்பீட்டளவில் பணக்காரர்களாக உள்ளனர் என்றும் அறியப்படுகின்றது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள சமண கோவில் வளாகத்தில் மகாவீரர் சிலை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிமு 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாவீரரை நவீன சமண மதத்தின் நிறுவனராக சமணர்கள் கருதுகின்றனர்.

பரந்த இந்திய சமுதாயத்தில் சமண குருக்கள் பெரும்பாலும் மதிக்கப்படுகிறார்கள். ஆச்சார்யா ஸ்ரீ வித்யாசாகர் ஜி மஹாராஜ் என்ற ஒரு குறிப்பிட்ட சமண குரு மறைந்தபோது, பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில், அவரது மறைவு "நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு" என்று இரங்கல் பதிவிட்டதோடு, அவரது ஆசீர்வாதத்தையும் கோரினார்.

மரியாதைக்குரிய குருவான அவர் மூன்று நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு 77 வயதில் இறந்தார். மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் இந்தச் செயல்முறையை கருணைக்கொலை அல்லது பிறரின் உதவியுடன் செய்துகொள்ளும் தற்கொலையுடன் ஒப்பிடக்கூடாது என்று சமணர்கள் வாதிடுகின்றனர்.

"சல்லேகனா அல்லது சந்தரா என்பது பிறரின் உதவியுடன் செய்யும் தற்கொலையில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் இது மருத்துவரின் உதவியின்றி மேற்கொள்ளப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான எந்த மாத்திரையையும் இதில் எடுத்துக் கொள்வதில்லை அல்லது ஊசியையும் பயன்படுத்துவதில்லை," என்று கொலராடோ-டென்வர் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியரும் சமண நிபுணருமான ஸ்டீவன் எம்.வோஸ் பிபிசியிடம் கூறினார்.

"உடலை விட்டுவிடுதல்" அல்லது "உடலைச் சிதைந்துபோக அனுமதித்தல்" எனக் குறிப்பிடப்படும் இந்த நடைமுறை, 6ஆம் நூற்றாண்டில் இருந்து கடைபிடிக்கப்படுவதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளதாகவும் பேராசிரியர் வோஸ் விவரித்தார்.

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதை குடும்பத்தினர் எப்படிப் பார்க்கின்றனர்?

மரணத்தை நெருங்கும் தருவாயில் சோபாவில் படுத்திருக்கும் ஒரு பெண்ணைச் சூழ்ந்து நிற்கும் குடும்பத்தினர்.

பட மூலாதாரம், Pranay Modi

படக்குறிப்பு, தனது இறுதி உண்ணாவிரதத்தின்போது ஒரு சோபாவில் படுத்துள்ள சாயர் தேவி

வினைப் பயன், ஆன்மா, மறுபிறப்பு, முக்தி ஆகியவற்றில் நம்பிக்கை கொள்வதுதான் சந்தராவின் முக்கியக் கூறுகள்.

சாயர் தேவி போன்ற சில சமணர்கள், தங்கள் மரணம் நெருங்கிவிட்டதாக உணரும்போது அல்லது குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட பிறகு இந்த வகையான மரணத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

உண்ணாவிரதத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், சாயர் தேவி வெள்ளை நிறப் புடவை உடுத்தி, சதுர வடிவத் துணி ஒன்றால் தனது வாயை மூடிக்கொண்டுள்ளார்.

"அமைதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் காணப்பட்ட அவர், இறுதிவரை பேசிக் கொண்டிருந்தார்" என்று நினைவுகூர்ந்தார் பிரனாய் மோதி.

தனது பாட்டியின் இறுதி உண்ணாவிரதத்தின்போது, ​​மத்திய இந்தியாவின் கப்ரிதாமில் உள்ள அவர்களது மூதாதையர் இல்லம், ஏராளமானோர் கலந்து கொண்டதால், விழாக்கோலம் பூண்டதாக மோதி கூறுகிறார்.

"அது மரணமடைந்த ஒருவரின் வீடாகத் தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் பல அந்நியர்கள் வந்து அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றனர்" என்கிறார் அவர்.

தனது இறுதி நாட்களில்கூட, 48 நிமிடங்கள் நீடிக்கும் ஒரு சமண பிரார்த்தனையைச் செய்வதற்கான ஆற்றலைத் திரட்டினார் தேவி.

"மருந்துகளை நிறுத்திய பிறகு அவர் மிகவும் வேதனையடைந்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் அவர் எதைப் பற்றியும் குறை கூறவில்லை. அவர் பிரகாசமாகவும் அமைதியாகவும் தோன்றினார்" என்று மோதி கூறுகிறார்.

தேவியின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகள் அவரது உயிர் பிரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"அவர் இப்படி இறப்பதைப் பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது" என்று கூறும் மோதி, "இருப்பினும் அவர் ஒரு நல்ல இடத்தில் இருக்கப் போகிறார் என்று எனக்குத் தெரியும். அவருடைய முடிவை நாங்கள் மதித்தோம்" என்றும் தெரிவித்தார்.

சந்தரா நடைமுறையை சமண சமூகம் எப்படிப் பார்க்கிறது?

ஒரு சமண இறுதிச் சடங்கில் பக்தர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சந்தராவால் இறந்தவர்களின் உடல் அமர்ந்த நிலையில் தகனம் செய்யப்படுகிறது

சந்தரா எப்போதும் அமைதியான முடிவைத் தராது. பேராசிரியர் மிக்கி சேஸ் இந்தத் தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, பல இறுதி நோன்புகளை நேரில் கண்டுள்ளார்.

"ஒரு நபர் இறுதிக்கட்ட புற்றுநோய் என்ற மருத்துவ அறிக்கையுடன் சந்தரா மேற்கொண்டார். அவர் கடுமையான வலியில் இருந்ததால், அவரது குடும்பத்தினர் அவரின் உறுதியைப் பார்த்துப் பெருமைப்பட்டு ஆதரித்தாலும், அவர் கஷ்டப்படுவதைக் கண்டு அவர்களும் போராடினர்," என்று விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் அங்குள்ள ஸ்ரீஅனந்தநாத் ஜெயின் ஸ்டடீஸ் பிரிவின் தலைவருமான சேஸ் கூறுகிறார்.

மற்றொரு நிகழ்வில், இறுதிக் கட்ட புற்றுநோயுடன் வாழ்ந்த ஒரு பெண் நோன்பு மேற்கொண்ட பிறகு மிகவும் அமைதியாக மாறியதை சேஸ் கண்டார்.

"அவரை ஊக்குவிப்பதும், அவருடைய உறுதியை வலுவாக வைத்திருப்பதும் குடும்பத்தினராகத் தங்களது பொறுப்பு என்று அவர்கள் கருதுகிறார்கள், அவர்கள் அவருக்காக பக்திப் பாடல்களைப் பாடுவார்கள்" என்று அவருடைய மருமகள் தன்னிடம் தெரிவித்ததாக சேஸ் கூறுகிறார்.

மேலும் குறிப்பிட்ட அளவு போராட்டம் தவிர்க்க முடியாதது என்று பேராசிரியர் வோஸ் நம்புகிறார்.

"பட்டினியால் இறப்பதைப் பார்ப்பது ஒருபோதும் இனிமையானது அல்ல, இறுதித் தருணங்கள் வேதனையளிக்கும். உடல் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளப் போராடும்போது அந்த நபர் உணவு அல்லது தண்ணீரைக் கேட்கலாம், அது கொடுக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் இது பொதுவாக முடிவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

இந்த வழியில் இறந்த திகம்பர துறவிகளின் (நிர்வாணமாக அலைந்து திரிபவர்கள்) சமூக ஊடகப் படங்கள், அவர்களின் கன்னங்கள் சுருங்கி, விலா எலும்புகள் நீண்டு இருப்பதைக் காட்டுகின்றன. இது பட்டினி மற்றும் நீரிழப்புக்கான தெளிவான அறிகுறிகளாகும்.

சந்தராவை தேர்வு செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என நம்பப்படுகிறது. பெண்கள் அதிக பக்தி கொண்டவர்களாகக் காணப்படுவதாலும், ஆண்களைவிட அதிகமாக வாழக்கூடிய அவர்களின் திறனாலும் இது ஏற்படுவதாக பேராசிரியர் வோஸ் நம்புகிறார்.

சமண சமூகம் சந்தராவை "ஓர் அற்புதமான ஆன்மீக சாதனையாக" பார்ப்பதாகவும் பேராசிரியர் சேஸ் கூறுகிறார்.

சந்தரா நடைமுறை பற்றி சமண துறவி சொல்வது என்ன?

ஸ்ரீ பிரகாஷ் சந்த் மஹாராஜ் ஜி தனது மேல் உடலை ஒரு துண்டு மற்றும் தனது வாயை ஒரு சதுர வடிவிலான துணியால் மூடியுள்ளார்.

பட மூலாதாரம், Kamal Jain

படக்குறிப்பு, "உண்ணாவிரதம் மற்றும் மரணத்தைத் தழுவுவதன் மூலமாக ஒருவர் உடலையும் ஆன்மாவையும் சுத்தப்படுத்த முடியும், அடுத்த பிறவியில் சிறந்த ஆன்மீக வாழ்வைப் பெறுவதற்காக தீய வினைப்பயன்களைக் குறைக்க முடியும்" என மற்றொரு துறவியான மஹாராஜ் ஜி விளக்குகிறார்.

ஸ்ரீ பிரகாஷ் சந்த் மஹாராஜ் ஜி (1929ஆம் ஆண்டு பிறந்தவர்), ஸ்வேதாம்பர பிரிவின் மூத்த சமணத் துறவிகளில் ஒருவர். அதாவது வெள்ளை ஆடைகளை அணிந்தவர். அவர் 1945இல் துறவற வாழ்வில் நுழைந்தார். துறவிகளான அவரது தந்தையும் இளைய சகோதரரும் சந்தராவை மேற்கொண்டனர்.

"எனது அப்பா மற்றும் சகோதரரைப் பார்த்து நான் வருத்தப்படவில்லை. நான் முற்றிலும் பிரிந்துவிட்டேன். நான் யாருமற்று இருப்பதாகவோ அல்லது என் வாழ்க்கையில் வெற்றிடம் இருக்கும் என்றோ நான் உணரவில்லை" என்கிறார் அவர்.

அவருக்கு இப்போது 95 வயதாகிறது. வட இந்தியாவில் உள்ள கோஹானா நகரில் உள்ள மடாலயத்தில் வசித்து வருகிறார். தொலைபேசிகள் அல்லது மடிக்கணினிகளைப் பயன்படுத்தாத அவர், தனது சீடர் ஆஷிஷ் ஜெயின் உதவியுடன் பிபிசியிடம் பேசினார்.

"ஒரு நல்ல மரணம் என்பது இந்த வாழ்க்கையின் சரியான முடிவு மற்றும் அடுத்த வாழ்க்கையின் சிறந்த தொடக்கம் என்பது எனது தத்துவ, ஆன்மீக, மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பல நிலைகளை உள்ளடக்கிய சந்தரா வழக்கத்தை, அவசரமாகவோ அல்லது திடீரென்றோ மேற்கொள்ள முடியாது என்று அந்தத் துறவி கூறுகிறார். அதற்கு குடும்பத்தின் அனுமதியும், மஹாராஜ் ஜி போன்ற ஆன்மீக ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தேவை.

சந்தராவின் முதல் நிலை, உங்களது கடந்தகால பாவங்கள் மற்றும் தவறான செயல்களைப் பிரதிபலித்து ஏற்றுக்கொள்வது. அதன் பிறகு ஒருவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

"உண்ணாவிரதம் மற்றும் மரணத்தைத் தழுவுவதன் மூலம், ஒருவர் உடலையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தவும், அடுத்த பிறவியில் சிறந்த ஆன்மீக வாழ்க்கையை அடைய தீய வினைப் பயன்களைக் குறைக்கவும் முடியும்," என்று மஹாராஜ் ஜி விளக்குகிறார்.

"இது இறுதியில் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு, ஆன்மாவின் விடுதலையில் முடிவடையும்" என்றும் தெரிவித்தார் மஹாராஜ் ஜி.

சட்ட சவால்கள் என்ன?

கடந்த 2015ஆம் ஆண்டில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த நடைமுறைக்குத் தடை விதித்தது, ஆனால் அந்தத் தீர்ப்பு பின்னர் உச்சநீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டது.

முன்னாள் அரசு ஊழியர் டி.ஆர்.மேத்தா, சந்தராவின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க விரும்பும் மனுதாரர்களில் ஒருவர்.

"சமணர்கள் இதை மரணத்தின் சிறந்த வடிவமாகப் பார்க்கிறார்கள். இது மரணத்தை உணர்வுப்பூர்வமாகவும், அமைதியாகவும், கண்ணியமாகவும் ஏற்றுக்கொள்ளும் நடைமுறை. ஆன்மீக சுத்திகரிப்பு மற்றும் நித்திய அமைதியே அதன் முக்கிய நோக்கங்கள்" என்கிறார் இந்தியாவின் மத்திய வங்கி துணைத் தலைவர், பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பின் தலைவர் போன்ற பதவிகளை வகித்த மேத்தா

கடந்த 2016ஆம் ஆண்டு ஹைதராபாதில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததால் இந்த நடைமுறைக்கு மீண்டும் எதிர்ப்பு உருவானது. அவர் 68 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு இறந்தார், ஆனால் சமீப ஆண்டுகளில் சந்தரா மேற்கொண்ட அனைவரும் வயதானவர்கள்.

கோமதேஸ்வரா என்றும் அழைக்கப்படும் பாகுபலியின் 57 அடி ஒற்றைக்கல் சிலையுடன் கூடிய ஷ்ரவணபெலகொலா கோவிலின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கர்நாடகாவில் உள்ள இந்தக் கோவில் வளாகத்தில் சந்தராவை பற்றிய பழமையான கல்வெட்டுகள் சிலவற்றைக் காணலாம்

மஹாராஜ் ஜி 2016ஆம் ஆண்டில் சந்லேகானா செயல்முறையைத் தொடங்கினார். இது சந்தராவுக்கு முன்னோடியாக உள்ளது.

ஆரம்பத்தில் பத்து பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கத் தொடங்கிய அவர், இப்போது தண்ணீர், மருந்து என இரண்டே உணவுப் பொருட்களை மட்டுமே உண்டு உயிர் வாழ்கிறார். இருப்பினும் அவர் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

"அவர் நோயுற்றவராகவோ, பலவீனமாகவோ அறியப்பட மாட்டார். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அதிகம் பேசமாட்டார்" என்கிறார் அவரது சீடர் ஆஷிஷ் ஜெயின்.

மஹாராஜ் ஜி தனது சிக்கனமான வாழ்க்கை ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவியதாக நம்புகிறார்.

"என் உள்ளமும் மனமும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ஆனந்தமான மனநிலையில் இருக்கிறேன்" என்கிறார் மஹாராஜ் ஜி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)