உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?

சமையல் எண்ணெய், உடல் பருமன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சஜித் ஹுசைன்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

முன்பெல்லாம் உடல் பருமன் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் பிரச்னையாக பார்க்கப்பட்டது, ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் பிரச்னையாக மாறியுள்ளது.

இதை எதிர்கொள்ளும் பொருட்டு, உடல் பருமனுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

"ஆரோக்கியமான நாடாக மாறுவதற்கு நாம் உடல் பருமனை சமாளிக்க வேண்டும். அதிக உடல் எடை பல வித பிரச்னைகள் மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கிறது," என்றும் அந்நிகழ்ச்சியில் மோதி பேசினார்.

சமையல் எண்ணெய், உடல் பருமன்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது என்ன?

'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஓர் ஆய்வின்படி, எட்டு பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

"குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. உலக சுகாதார மைய தரவுகளின்படி, 2022-ல் உலகளவில் சுமார் 250 கோடி பேர் உடல் எடை அதிகமாக உள்ளனர். அதாவது, சரியான எடையை விட அவர்கள் அதிக எடையுடன் உள்ளனர்," என்றார்.

2024-ம் ஆண்டில் 'தி லேன்செட்' ஆய்விதழ் ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-ம் ஆண்டில் இந்தியாவில் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுள் ஒரு கோடியே 25 லட்சம் குழந்தைகள் அதிக எடையுடன் உள்ளனர்.

அவர்களுள் 73 லட்சம் ஆண் குழந்தைகள். 52 லட்சம் பெண் குழந்தைகள் 1990-ல் இந்த எண்ணிக்கை வெறும் 4 லட்சமாக இருந்தது. குழந்தைகள் மட்டுமல்லாமல் வயது வந்தோரிடையேயும் உடல் பருமன் கவலைக்குரிய பிரச்னையாக மாறியுள்ளது.

அந்த ஆய்வறிக்கையின்படி, 2022-ல் இந்தியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட 4.4 கோடி பெண்கள் மற்றும் 2.6 கோடி ஆண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990-ல், இந்த எண்ணிக்கை 24 லட்சம் பெண்களாகவும் 11 லட்சம் ஆண்களாகவும் இருந்தது.

ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வும் இந்தியாவில் உடல் பருமன் பிரச்னையை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட 23% ஆண்கள் மற்றும் 24% பெண்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், 2015-16ல் இந்த எண்ணிக்கை 20.6% பெண்கள் மற்றும் 18.9% ஆண்கள் என இருந்தது.

எண்ணெய் எப்படி பங்காற்றுகிறது?

சமையல் எண்ணெய், உடல் பருமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எண்ணெய் பயன்பாடும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது

நொறுக்குத் தீனிகள் மற்றும் உடல் உழைப்பில்லாத வாழ்வியல் முறை போன்றவை உடல் பருமன் பிரச்னைக்கு முக்கிய காரணங்களாக பெரும்பாலும் கூறப்படுகின்றன. ஆனால், நம்முடைய உணவில் நாள் முழுவதும் சேர்த்துக் கொள்ளப்படும் எண்ணெய் உடல் பருமனை அதிகரிப்பது குறித்து புறந்தள்ளிவிடுகிறோம்.

அனைத்து இந்திய மேம்பட்ட ஆய்வு மற்றும் உடல் பருமன் சங்கத்தின் தலைவர் டாக்டர் மகேந்திர நர்வாரியா, "இந்திய உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எண்ணெய் ஆகியவை அதிகளவில் உள்ளன. எந்தவொரு உணவையும் சுவையானதாக மாற்ற எண்ணெய் மற்றும் நெய் பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக, நமது உடலில் கொழுப்பு அதிகமாகிறது. நாம் அதிகமாக உடற்பயிற்சி செய்யாததால், உடலில் உள்ள கொழுப்பு கரைவதில்லை." என்கிறார்.

"நம் உணவில் அதிகமாக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடலில் நுழைந்ததும் கொழுப்பாக மாறுகின்றன. மேலும், கொழுப்பும் நம் உடலில் சேருகிறது. இதனால் உடல் பருமன் அதிகரிப்பதற்கான ஆபத்து ஏற்படுகிறது."

"நமது உடலில் கொழுப்பின் அளவு எப்போதும் அதிகமாக இருக்கும். உடல் மெலிந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் அவருடைய உடலிலும் 30-40% கொழுப்பு இருக்கும், அதுவே மிக அதிகம். மற்றொருபுறம், விளையாட்டு வீரர்களின் உடலில் 7-8% கொழுப்பு இருக்கும்."

"நமது உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால், நம்முடைய வளர்சிதை மாற்றம் குறையும். இதனால், நமது உடல் எடை அதிகமாகும்."

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் டாக்டர் பர்மீத் கௌர் கூறுகையில், "பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எண்ணெயை எடுத்துக்கொண்டால், நம்முடைய வளர்சிதை மாற்றம் குறையும். இதனால், நம் உடலில் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமனும் அதிகமாகும். மேலும், இது நமக்கு நார்ச்சத்து, தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தராமல், கூடுதல் கலோரிகளையே தரும்." என்றார்.

மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையின் பேரியாட்ரிக் (உடல் பருமனுக்கான சிகிச்சை) அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமன் கோயல், "எண்ணெயில் பொதுவாகவே கொழுப்பு அதிகமாக இருக்கும். நமது உடல் பெரும்பாலான கலோரிகளை கொழுப்பிலிருந்து தான் பெறும். புரதச் சத்திலிருந்து நான்கு கலோரிகளை பெற்றால், கொழுப்பிலிருந்து 9 கலோரிகளை நாம் பெறுவோம். எனவே, அதிகமான கலோரிகளுடன் நாம் உண்ணும் எதுவாக இருந்தாலும், உடல் பருமனுக்கு வழிவகுக்கும், குறிப்பாக ஏற்கெனவே உடல் பருமனாக உள்ளவர்களுக்கு எடை மேலும் அதிகமாகும்." என தெரிவித்தார்.

தினசரி சமையலில் எண்ணெய் எவ்வளவு சேர்க்க வேண்டும்?

சமையல் எண்ணெய், உடல் பருமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எண்ணெயை அதிகமாக சூடுபடுத்துவது அதன் தரத்தை பாதிக்கிறது

எண்ணெயை குறைவாக உபயோகிப்பதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் மகேந்திர நர்வாரியா. அதிகளவு எண்ணெயை மக்கள் பயன்படுத்துவதால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.

டாக்டர் பர்மீத் கௌர் கூறுகையில், "நம் உடலில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ, கே ஆகிய வைட்டமின்களை ஜீரணிக்க கொழுப்பு நமக்கு உதவுகிறது. எனவே, நம் உடலுக்கு குறிப்பிட்ட அளவு கொழுப்பு தேவை." என்றார்.

மேலும், "வயதுக்கேற்ப மக்கள் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதிக உடலுழைப்பு இல்லாத ஒருவர் ஒரு நாளைக்கு 4-5 தேக்கரண்டி எண்ணெய் தான் எடுக்க வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு 20-25 கிராம் எண்ணெய். இதுவே ஒருவருக்கு அதிகமான அளவுதான்." என கூறுகிறார்.

எனினும், உடல் பருமனுக்கு எண்ணெய் மட்டுமே காரணம் அல்ல. டாக்டர் ராமன் கோயல் கூறுகையில், "உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் எந்தளவுக்கு இனிப்புகள் உட்கொள்ளப்படுகின்றன தெரியுமா? இனிப்புகளும் உடல் பருமனை அதிகரிக்கும்" என்றார்.

தினசரி சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

எண்ணெய், உடல் பருமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எண்ணெய் தரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்

பர்மீத் கௌர் கூறுகையில், "இந்தியாவில் அந்தந்த பிராந்தியங்களில் கிடைக்கும் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டாலான எண்ணெய் (rice bran oil) ஆகியவை தென்னிந்தியாவில் கிடைக்கும். கடலை எண்ணெய் குஜராத்திலும் மற்ற மாநிலங்களில் கடுகு எண்ணெயும் கிடைக்கும்." என்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, பொறிப்பதற்கு பயன்படுத்திய எண்ணெயை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மேலும், ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களையும் நாம் தவிர்க்க வேண்டும்.

மேலும், எண்ணெயின் தரமும் முக்கியமானது. சமையல் எண்ணெயை நாம் அதிகமாக சூடுபடுத்துவது உடலுக்கு நல்லதல்ல.

ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) கூறுகிறது. ஏனெனில், அந்த எண்ணெயில் கெட்ட கொழுப்புகள் (trans fat) அதிகமாக இருக்கும்.

ஹார்வர்டு பொது சுகாதார பள்ளியின் இணையதளத்தில், இத்தகைய கெட்ட கொழுப்புகள் உடலுக்கு மோசமானவை என குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய கொழுப்புகள் எல்.டி.எல் போன்ற தீய கொழுப்புகளை அதிகரித்து ஹெச்.டி.எல் போன்ற நல்ல கொழுப்புகளை குறைக்கும். இதனால், உடலில் வீக்கம் அதிகரித்து, இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்பு, நோயெதிர்ப்பு ஆகியவற்றை பாதிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)