'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மேத்யூ ஹென்றி
    • பதவி, பிபிசி விளையாட்டுச் செய்தியாளர் துபை

ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரன் எடுப்பது பற்றி விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் தன்னுடைய சிறந்த பேட்டிங் போட்டியாளரான விராட் கோலியை புகழ்வதில் அவர் தாமதிக்கவில்லை.

துபையில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் விராட் கோலி இந்திய அணி வெற்றி இலக்கை எட்டும் வரை களத்தில் இல்லாது போயிருக்கலாம். ஆனால், இந்தியா மீண்டும் ஒரு முறை சிறந்த சேஸிங் மூலம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

"இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடிக்கும் பேட்டர்களில் சிறந்தவர் யார் என்று விவாதித்தால், அது அவர் தான்" என கோலி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

ஆனால் இதில் விவாதத்திற்கே இடமில்லை. புள்ளிவிவரமே, கோலியே இதில் தலைசிறந்தவர் என்பதைக் காட்டுகிறது.

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோலி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தலைசிறந்த சேஸரா?

கோலி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தலைசிறந்த சேஸரா? என்ற கேள்விக்கு எளிமையான பதில் "ஆம்".

இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 84 ரன்கள் குவித்தார் கோலி. சர்வதேச போட்டிகளில் சேஸிங்கில் அவரது சராசரி 64.50. இது இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க பேட்டர் ஏ.பி. டி வில்லியர்ஸைக் காட்டிலும் 8 ரன்கள் அதிகம்.

ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள 51 சதங்களில் 28 சதங்கள் சேஸிங்கின் போது வந்தவை. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரை விட கோலி 11 சதங்கள் அதிகம் அடித்துள்ளார்.

இந்தியா சேஸிங்கில் வெற்றியடைந்த போட்டிகளில் விராட் கோலியின் சராசரி 89.50 என மிகப்பெரியதாக உள்ளது. அவர் மீண்டும் மீண்டும் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தருகிறார்.

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோலி அடித்த 51 சதங்களில் 28 சேஸிங்கில் அடித்தவை

கோலி சொல்லும் சேஸிங் ரகசியம் என்ன?

போட்டியின் அழுத்தத்தை தனது தோள்களில் சுமந்தவாறே ரன்களை சேர்க்கும் அசாத்தியத் திறமை கோலியிடம் உள்ளது.

"இந்த போட்டி முழுமையாக அழுத்தத்தை தாங்குவதைப் பொருத்தது, குறிப்பாக அரையிறுதி, இறுதி போன்ற பெரிய போட்டிகளின் போது நிலைத்து நின்று நீண்ட இன்னிங்சை ஆடுகையில், அணியின் கைவசம் விக்கெட்டுகள் இருக்கும் பட்சத்தில், எதிரணியினர் தாமாகவே விட்டுக்கொடுத்து விடுவார்கள். போட்டியை வெல்வதும் எளிதாகிவிடும்" செவ்வாய்க்கிழமை நடந்த போட்டிக்குப் பின்னர் விராட் கோலி இவ்வாறு கூறினார்.

கோலியின் சிறந்த திறன் என்பது ஒன்றிரண்டு ரன்களாகச் சேர்ப்பது.

ஒரு நாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை ஒன்றிரண்டாக எடுத்துள்ளார் கோலி. இவர் எப்போதுமே இடைவெளியை கவனித்து பேட்டிங்கை ரொட்டேட் செய்வதன் மூலம், பேட்டர்கள் மீது அழுத்தம் தருவதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்குவதில்லை.

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோலியின் சிறந்த திறன் என்பது சிங்கிள் ரொட்டேட் செய்வது

"விளையாட்டின் போது உங்களைத் தூண்டும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்" என்கிறார் விராட் கோலி.

"என்னைப் பொருத்தவரையிலும் எத்தனை ஓவர்கள் எஞ்சியிருக்கின்றன, எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்பதை அறிவது தூண்டுவதாக இருக்கும்"

"தேவைப்படும் ரன்ரேட் ஓவருக்கு 6 ரன்னாக இருந்தால் கூட, கையில் 6 அல்லது 7 விக்கெட்டுகள் இருந்தால் நான் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் உங்களுக்குத் தெரியும். களத்தில் நிலைத்து ஆடும் 2 பேட்டர்கள் போட்டியின் போக்கையே மாற்றி விடுவார்கள். கடைசி கட்டத்தில் எதிரணி விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து திருப்திப்பட்டுக் கொள்ளலாம். போட்டியை வெல்ல முடியாது." என்றார் கோலி.

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் , கோலியை ஆட்டமிழக்கச் செய்ய ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பந்தை வீசி வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆனால் ஒரு நாள் போட்டிகளில் புதிய பந்தில் இது இல்லை, ஆஃப் ஸ்டம்ப்-க்கு வெளியே செல்லும் பந்துகளில் கோலியின் சராசரி 50க்கும் மேலாக இருக்கிறது.

அவரை ஒரு திட்டமிடலோடு சீக்கிரமாக வீழ்த்தாவிட்டால், எதிரணிக்கு சிக்கல்தான்.

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேவைப்படும் ரன்ரேட் ஓவருக்கு 6 ஆக இருந்தால் கூட, கைவசம் விக்கெட் இருந்தால் கவலை இல்லை

'இது அடிமேல் அடி வைத்து முன்னேறுவது'

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன்றிரண்டு ரன்களாக ரொட்டேட் செய்வதில் கோலி சிறந்தவராக இருக்கிறார். தான் எதிர்கொண்டதில் 33% பந்துகளை மட்டுமே அவர் ரன் எடுக்காமல் விட்டுள்ளார்.

இதே மைதானத்தில் 250 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணியின், பேட்டர் வில்லியம்சனின் டாட் பால் 57.5% ஆகும்.

பவுண்டரியே அடிக்காமல் ஸ்கோரை உயர்த்தி கொண்டே இருந்திருக்கிறார் கோலி.

ஆஸ்திரேலிய அணியில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த ஆடம் ஸம்பா போன்ற லெக் ஸ்பின்னர்களையும் தந்திரமாக எதிர்கொண்டு, ரன்களை கோலி சேர்த்தார். ஆடம் ஸம்பா இதற்கு முன்பு ஒரு நாள் போட்டிகளில் 5 முறை கோலி விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

இந்த போட்டியிலும் 6வது முறையாக கோலி விக்கெட்டை ஸம்பா வீழ்த்தினார். ஆனால், அந்த நேரத்தில் இந்திய அணிக்கு வெற்றி எட்டிவிடும் தூரத்திலேயே இருந்தது.

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

"சதம் பற்றி கவலை இல்லை"

முடிவில் ஒரே ஆச்சரியம் என்னவென்றால் அவர் மூன்றிலக்க ரன்களை எட்டவில்லை என்பது தான்.

"நீங்கள் தனிப்பட்ட இலக்குகளை பற்றி யோசிக்காவிட்டால், வெற்றி நிகழும் போது அதுவும் தாமாகவே நடக்கும்" என சதத்தை தவற விட்டது குறித்து கோலி பேசுகிறார்.

"என்னைப் பொருத்தவரை, வெற்றியில் பெருமை கொள்வது மற்றும் அணிக்கு சிறந்தது எதுவோ அதை செய்வது தான் முக்கியம். மூன்றிலக்க ரன்களை எட்டினால் சிறப்பு. இதுபோன்ற போட்டிகளில் சதத்தை எட்டும் முன் அவுட்டானாலும், அணிக்கு கிடைக்கும் வெற்றி, வீரர்களுடன் டிரெஸ்ஸிங் அறையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்" என்கிறார் கோலி.

"அதுபோன்ற விஷயங்கள் (சதம் அடிப்பது) இனி பெரிதல்ல. ஒரு படி மேலே சென்று அணிக்கான வேலையைச் செய்வது தான் முக்கியம்" என்கிறார் கோலி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)