ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா - 14 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய கனவு

கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெற்றியைக் கொண்டாடும் கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா

துபையில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது.

50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் வென்றதில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது.

இப்போது இந்த வெற்றியின் மூலம் அந்த 14 ஆண்டுகள் கனவு நிறைவேறியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்திய அணியின் பேட்டிங்

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். ஆனால், முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே இருவரும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.

4வது ஓவரில், ஆஸ்திரேலியாவின் பென் த்வார்ஷுயிஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார் சுப்மான் கில். அவர் 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்ததாக 7வது ஓவரில், கூப்பர் கோனொலி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. அவர் 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பிறகு, விராத் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி சேர்ந்து, இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு, நிதானமான ஆடி வந்த நிலையில், ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் ஷ்ரேயாஸ். அவர் 62 பந்துகளில், 45 ரன்கள் எடுத்திருந்தார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறப்பாக ஆடி வந்த கோலி, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 ரன்களில் ஆட்டமிழந்தார்

சதத்தை தவறவிட்ட கோலி

சிறப்பாக ஆடி வந்த கோலி, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 43வது ஓவரில், ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் அவர் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பிறகு, ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் வெற்றியை நோக்கி அணியை நிதானமாக வழிநடத்திச் சென்றனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

48வது ஓவரில், இந்தியா வெற்றி பெற 6 ரன்களே தேவை எனும்நிலையில், நாதன் எல்லிஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் ஹர்திக் பாண்டியா. அதன் பிறகு ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார். இறுதியாக 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 ரன்களே தேவைப்பட்டது.

அப்போது, க்ளென் மேக்ஸ்வெல் வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் கே.எல்.ராகுல். இதையடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

இந்திய பந்துவீச்சில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருப்பது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல, முதல் இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஷர் படேல் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக, டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனொலி களமிறங்கினார். கூப்பர், தொடக்கம் முதலே சற்று தடுமாறி வந்த நிலையில், மூன்றாவது ஓவரில் ஷமி பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பொறுப்பை உணர்ந்து விளையாடத் தொடங்கினார். ஸ்மித்- டிராவிஸ் ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், எட்டாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் டிராவிஸ்.

அவர் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன், 33 பந்துகளில், 39 ரன்களை எடுத்திருந்தார். ஆனால், டிராவிஸ் எந்த ரன்னும் எடுக்காமல் இருந்தபோதே, அவர் கொடுத்த கேட்சை ஷமி தவறிவிட்டார்.

டிராவிஸ் வெளியேறிய பிறகு, மார்னஸ் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 ஓவர்களுக்குள், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்திருந்தது.

அதன் பின்னர், கிட்டத்தட்ட 13 ஓவர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்களால், ஸ்மித்- மார்னஸ் ஜோடியை பிரிக்க முடியவில்லை. அதேசமயம், ஷமி, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோர் அதிக ரன்களையும் கொடுக்காமல் சிறப்பாகவே பந்துவீசினர்.

பிறகு 22-வது ஓவரில், ஜடேஜா வீசிய பந்தில் 'எல்பிடபிள்யூ' முறையில் ஆட்டமிழந்தார் மார்னஸ். அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பிறகு சீரான இடைவெளியில் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார் கேப்டன் ஸ்மித்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருண் சக்கரவர்த்தி

ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்ட கேப்டன் ஸ்மித்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தார்

26வது ஓவரில், தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ஸ்மித். 68 பந்துகளில் 50 ரன்களை எட்டியிருந்தார். அதற்கு அடுத்த ஓவரில், ஆஸ்திரேலிய அணி தனது நான்காவது விக்கெட்டை இழந்தது. ஜடேஜா பந்தில், விராத் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ்.

சிறப்பாக விளையாடி வந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஸ்மித் 36 ரன்களில் இருந்தபோதே கொடுத்த ஒரு கேட்சை ஷமி தவறவிட்டார்.

ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கத் தொடங்கிய நிலையில், ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அடுத்ததாக க்ளென் மேக்ஸ்வெல், 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து, அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது, 37.3 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய இரு விக்கெட்டுகள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேப்டன் ஸ்மித், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்

ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின என்றே கூறலாம். 50 ஓவர்களில் 270 ரன்களையாவது ஆஸ்திரேலியா எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. 45வது ஓவரில், வருண் சக்கரவர்த்தி தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார்.

29 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த ஆஸ்திரேலியாவின் பென் த்வார்ஷுயிஸை அவர் வெளியேற்றினார். மறுபுறம் நிதானமாக பேட் செய்து கொண்டிருந்த அலெக்ஸ் கேரியும் சற்று நேரத்தில் ரன் அவுட் ஆனது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.

அவர் 57 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரியத் தொடங்கின, குறிப்பாக கடைசி ஐந்து ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

49.3 ஓவர்களின் முடிவில், 10 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்திருந்தது ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டாஸை இழந்த இந்தியா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இதுவரையிலான நான்கு ஆட்டத்திலும் இந்திய அணி டாஸ் வெல்லவில்லை

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார்.

டாஸ் இழந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, "நான் இரண்டிற்கும் (பேட்டிங் மற்றும் பந்துவீச்சு) தயாராக இருந்தேன். இங்குள்ள விக்கெட்டுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. இரண்டு மனமாக இருக்கும்போது, ​​டாஸை இழப்பது தான் நல்லது." என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)