ரஷ்ய மண்ணில் யுக்ரேனின் அசாத்திய நடவடிக்கை- அடுத்து என்ன நடக்கும், புதின் என்ன செய்ய போகிறார்?

தைரியமான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊருடுவல் மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை யுக்ரேன் கைப்பற்றியது

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தைரியமான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊருடுவல் மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை யுக்ரேன் கைப்பற்றியது
    • எழுதியவர், பிராங்க் கார்ட்னர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ரஷ்யாவில் கடந்த ஒரு வாரமாக கைப்பற்றிய சிறிய பகுதியை நிரந்தரமாக ஆக்கரமிக்கப்போவதில்லை என யுக்ரேனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு அறிவிப்பை யுக்ரேன் வெளியிட்டிருந்தாலும், அது ஒரு கடினமான தேர்வினை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்யா மீதான அழுத்ததை அதிகரிக்க படைகளை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டுமா அல்லது தனது ராணுவத்தை பின்வாங்க வேண்டுமா? என்பதுதான் அது

ஒவ்வொரு நாளும் ரஷ்யவின் டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை யுக்ரேனின் ராணுவப்படையினர் எதிர்கொண்டது. இதனால் ஊக்கமிழந்த யுக்ரேனின் ராணுவத்தின் முன்களப்படை, டான்பாஸில் பின்னடைவை சந்தித்தது. இத்தகைய சூழலில், கோடை காலத்தில் ஒரு நல்ல செய்திக்காக யுக்ரேன் காத்திருக்க வேண்டியிருந்தது.

தைரியமான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊருடுவல் மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை யுக்ரேன் கைப்பற்றியது அந்த காத்திருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிகரற்ற ஒருங்கிணைப்பு

பிரிட்டிஷ் ராணுவத்தை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் பேசியபோது, "இந்தத் தாக்குதலின் மிகவும் சுவாரஸ்யமான விஷயம், யுக்ரேனிய ராணுவத்தின் அசாதாரண ஒருங்கிணைப்புதான். காலாட்படை, வான் பாதுகாப்பு, மின்னணு போர் அமைப்புகள் மற்றும் பீரங்கிகளும் இந்த தாக்குதல் நடவடிக்கையில் இடம்பெற்றிருந்தன. இது ஒரு சிறப்பான செயல்பாடு ." என கூறினார்.

யுக்ரேன் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெற்ற நவீன ஆயுதங்களை பயன்படுத்தி இருப்பது போல தெரிகிறது.

கடந்த ஆண்டு கோடைகாலத்தில் யுக்ரேனின் தென்-கிழக்கு மாகாணங்களில் இருந்து ரஷ்ய ராணுவத்தை வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்த யுக்ரேன்,இம்முறை இந்த ஆயுதங்களை சிறந்த முறையில் உபயோகப்படுத்தி உள்ளது

ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துள்ள யுக்ரேனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

யுக்ரேன் புதினின் வீட்டுக்குள் (ரஷ்யா) போரை எடுத்துச்செல்ல விரும்பியது, இதன் மூலம் புதினின் மக்களும் சண்டையின் வலி என்ன என்பதை உணர்வார்கள் என கருதியது.

மேலும், சமீபத்தில் டான்பாஸ்-இல் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு யுக்ரேன் தன்னால் இன்னும் வெற்றிகரமாக தாக்குதலை நடத்த முடியும் என்பதை வெளிக்காட்ட விரும்பியது. இந்த நடவடிக்கை மூலம், அதிநவீன ஆயுதங்கள் உதவியுடன், தங்களால் போரில் ஈடுபட முடியும் என்பதை யுக்ரேன் நிரூபித்துள்ளது.

இப்போது ரஷ்யா மீண்டும் தனது முழு படையுடன் யுக்ரேன் வீரர்களை கொல்வதற்கு முன் அல்லது யுக்ரேன் ஆக்கிரமித்த இடத்தை கைப்பற்றும் முன், மரியாதையுடன் யுக்ரேன் ரஷ்ய எல்லைகளில் இருந்து திரும்ப வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை யுக்ரேன் ராணுவம் பின்வாங்கினால், இரு குறிக்கோள்கள் சாதிக்க முடியாமல் போகலாம். ரஷ்யா மீது கூடுதல் அழுத்தம் செலுத்தி, அதன் படைகளை டான்பாஸ் பகுதியில் இருந்து பின்வாங்க செய்வது, மற்றொன்று, ரஷ்யாவின் நிலத்தை கையகப்படுத்தி, எதிர்கால அமைதிப் பேச்சுக்களில் அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது.

யுக்ரேன் இராணுவம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, உக்ரைன் ரஷ்ய பகுதிகளில் எவ்வளவு காலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று சொல்வது கடினம்.

உக்ரைனின் இந்த நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளதா?

இங்கிலாந்தின் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் பிளாக்டன் இதுகுறித்து கூறுகையில், "யுக்ரேன் ரஷ்ய மண் மீது கொண்டிருக்கும் தனது பிடியை இறுக்கும் பட்சத்தில், ரஷ்ய ஆக்கிரமித்திருக்கும் தனது நிலத்தை திரும்பப்பெற அழுத்தம் செலுத்த முடியும். ரஷ்ய மக்கள் இடைய இருக்கும் சக்திவாய்ந்த தலைவர் புதினின் என்ற பிம்பத்தை இதன் மூலம் யுக்ரேன் உடைக்க முடியும்."

இங்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. யுக்ரேன் ஒரு சுதந்திர நாடாக இருக்கவே கூடாது என கருதும் புதினால்,ரஷ்ய மண்ணை யுக்ரேன் ஆக்கிரமித்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

புதின் தன்னால் முடிந்த வரை இதைத் தவிர்க்கவும், டான்பாஸில் தனது ராணுவம் வலுவாக இருக்க வேண்டும் எனவும் விரும்புவார். அங்கு ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி யுக்ரேனின் தாக்குதலுக்கு டான்பாஸின் உள்ளூர் மக்களை தண்டிப்பார்.

ஒருவேளை யுக்ரேன் தொடர்ந்து ரஷ்ய பகுதிகளில் ஆக்கிரமிப்பை பலப்படுத்த முயற்சித்தால், ரஷ்யாவின் முழு பலத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இவ்வளவு பெரிய பகுதியைப் ஆக்கிரமித்து பாதுகாக்க யுக்ரேனுக்கு நிறைய ஆட்பலம் தேவைப்படும் என்று டாக்டர் பிளாக்டன் எச்சரிக்கிறார்.

ஆனால், ஒரு விஷயத்தை மறுக்க முடியாது - இதுதான் இந்த ஆண்டின் யுக்ரேனின் தைரியமான நடவடிக்கை மற்றும் அபாயகரமானதும் கூட.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)