விவாகரத்து பெற்ற பெண்களை தங்கள் முன்னாள் கணவரிடம் அனுப்பும் தாலிபன்கள்- காரணம் என்ன?

தாலிபன்
படக்குறிப்பு, 'பெண்' என்பதால் நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்று கூறிய தாலிபன் நீதித்துறை அதிகாரிகள் தன் பேச்சுக்கு செவி மடுக்கவில்லை என்று நஸ்தானா தெரிவிக்கிறார்
    • எழுதியவர், மாமுன் துரானி மற்றும் காவூன் கமூஷ்
    • பதவி, பிபிசி ஆப்கான் சேவை & பிபிசி உலக சேவை

தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் ஆப்கானிஸ்தானின் சட்ட அமைப்பை அவர்கள் மாற்றியமைப்பது மக்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தங்கள் அடிப்படைவாத நீதிபதிகள் தற்போதைய சட்டங்களை மட்டும் நிலைநிறுத்தவில்லை, அவர்கள் கடந்த காலத்திற்கு சென்று முந்தைய தீர்ப்புகளை திருத்தி எழுத கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள் என்று தாலிபன்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு மாபெரும் முயற்சியாக பொதுமக்களுக்கு ’இலவச மேல் முறையீடுகள்’ செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான பழைய நீதிமன்ற வழக்குகள் தாலிபனின் சொந்த ஷரியாவின் (இஸ்லாமிய சட்டம்) கீழ் மீண்டும் விசாரிக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது.

இதன் தாக்கம் பெண்கள் மீது அதிகமாக உள்ளது. பழைய ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட சில விவாகரத்துகள் செல்லாது என்று அறிவிக்கப்படுகின்றன.

இது பெண்களை மீண்டும் அவர்கள் விரும்பாத திருமணங்களுக்குள் தள்ளுகின்றன. மேலும் பெண் நீதிபதிகள் சட்ட அமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

''சீர்தூக்கிப்பார்க்கும் அளவிற்கு பெண்களுக்கு தகுதியோ, புத்திசாலித்தனமோ இல்லை. ஏனெனில் எங்கள் ஷரியா கொள்கைகளின்படி நீதித்துறை பணிக்கு உயர் புத்திசாலித்தனத்துடன் இருக்கும் நபர்கள் தேவை,'' என்கிறது தாலிபன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மீண்டும் நீதிமன்றத்திற்கு வருமாறு சம்மன்

தாலிபன்கள் அதிகாரத்திற்குத் திரும்பிய பத்து நாட்களுக்குப் பிறகு 20 வயதான பீபி நஸ்தானா, சமையலறையில் தனது தாய்க்கு உதவி செய்துகொண்டிருந்தபோது அவரது தந்தை தீடீரென்று வீட்டிற்கு வந்தார்.

நஸ்தானா தன் தந்தை தன் மூத்த சகோதரனிடம் சொல்லிக்கொண்டிருப்பதை கேட்ட அவர்களை நெருங்கிச்சென்றார்.

"என் பெயரைக் கேட்டதும் என் இதயம் படபடக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது" என்கிறார் நஸ்தானா.

அவரது சொந்த மாகாணமான உருஸ்கானில் உள்ள தாலிபன் நீதிமன்றம் அவரது வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அவரது விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வருமாறு அவருக்கு சம்மன் வந்தது.

நஸ்தானாவின் திருமணம் அவருக்கு பிடிக்காத ஒருவருடன் நடந்தது. தன் மகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் அவரை குறிப்பிட்ட ஒருவருக்கு திருமணம் செய்து தருவதாக அவரது தந்தை ஒப்புக்கொண்டார்.

அந்த நேரத்தில் நஸ்தானாவுக்கு ஏழு வயது. குடும்பப் பகையைத் தீர்த்து வைப்பதற்காக இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. 'மோசமான திருமணம்' என்று அறியப்படும் இந்த நடைமுறை குடும்ப 'எதிரியை' 'நண்பனாக' மாற்ற முயல்கிறது.

நஸ்தானாவும் அவரது சகோதரர் ஷாம்ஸும்
படக்குறிப்பு, நஸ்தானாவும் அவரது சகோதரர் ஷாம்ஸும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓட வேண்டியிருந்தது என்று கூறுகிறார்கள்

நஸ்தானாவுக்கு 15 வயதானபோது ஹெக்மத்துல்லா தனது ’மனைவியை’ வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். ஆனால் நஸ்தானா உடனடியாக பிரிந்து செல்ல மனு தாக்கல் செய்தார். இறுதியில் தனது சுதந்திரத்தை அவர் மீண்டும் பெற்றார்.

"அவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமே இருக்கவில்லை என்று நான் பலமுறை நீதிமன்றத்தில் தெரிவித்தேன்," என்கிறார் நஸ்தானா.

"கிட்டத்தட்ட இரண்டு வருட போராட்டத்திற்குப் பிறகு இறுதியில் நான் வழக்கில் வெற்றி பெற்றேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த நீதிமன்றம் 'நீங்கள் இப்போது பிரிந்துவிட்டீர்கள், நீங்கள் விரும்பும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்' என்று கூறியது." என்கிறார் அவர்.

இதைக்கொண்டாடும் விதமாக அவரது கிராமத்தில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளூர் மசூதியில் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு உணவு வழங்கப்பட்டது.

ஆனால் ஒரு வருடம் கழித்து தாலிபன் அதிகாரத்தை கைப்பற்றியது. நாடு முழுவதும் ஷரியாவின் (இஸ்லாமிய சட்டம்) கடுமையான வடிவத்தை விரைவாக அறிமுகப்படுத்தியது.

தற்போது தாலிபன் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ள அவரது முன்னாள் கணவர், முந்தைய அரசின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த முறை ஷரியாவின்படி நஸ்தானா நீதிமன்ற விசாரணையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

"நீதிமன்றத்திற்கு நான் வரக்கூடாது, ஏனெனில் அது ஷரியாவுக்கு எதிரானது என்று தாலிபன்கள் கூறிவிட்டனர். எனக்கு பதிலாக என் சகோதரர் என்னைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்," என்கிறார் நஸ்தானா.

"நாங்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையென்றால் என் சகோதரியை அவரிடம் (ஹெக்மத்துல்லா) பலவந்தமாக ஒப்படைத்துவிடுவோம் என்று அவர்கள் சொன்னார்கள்," என்று நஸ்தானாவின் 28 வயதான சகோதரர் ஷாம்ஸ் கூறுகிறார்.

புதிய தீர்ப்பு தனது சகோதரியின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஷாம்ஸ் நீதிபதியிடம் மன்றாடியபோதும் நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. நஸ்தானா உடனடியாக தனது முன்னாள் கணவர் ஹெக்மத்துல்லாவிடம் திரும்ப வேண்டும் என்று ஆணையிட்டது.

நஸ்தானா நாட்டிலிருந்து தப்பிச் செல்ல நேரம் பெறும் பொருட்டு இதற்கு மேல்முறையீட்டை தாக்கல் செய்தார். சொந்த ஊரைவிட்டு வெளியேறிய நஸ்தானா தனது சகோதரருடன் அண்டை நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

தாலிபன் உச்ச நீதிமன்றத்தின் வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர்.
படக்குறிப்பு, அப்துல்ரஹிம் ரஷீத், தாலிபன் உச்ச நீதிமன்றத்தின் வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர்.

உருஸ்கானில் நீதிபதி, ஊடகங்களுடன் பேச மறுத்துவிட்டார். இருப்பினும் பதில்களைத் தேட தலைநகர் காபூலில் உள்ள தாலிபனின் உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்றோம்.

"எங்கள் நீதிபதிகள் எல்லா கோணங்களிலும் வழக்கை ஆய்வு செய்து ஹெக்மத்துல்லாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்," என்று உச்ச நீதிமன்றத்தின் ஊடக அதிகாரி அப்துல்வாஹித் ஹக்கானி கூறினார்.

"ஹெக்மத்துல்லா மற்றும் நஸ்தானாவின் திருமணத்தை ரத்து செய்த முந்தைய ஊழல் நிர்வாகத்தின் தீர்ப்பு, ஷரியா மற்றும் திருமண விதிகளுக்கு எதிரானது. ஏனெனில் நீதிமன்ற விசாரணையின் போது, ஹெக்மத்துல்லா அங்கு இருக்கவில்லை,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெக்மத்துல்லாவிடம் பேச நாங்கள் முயற்சித்தோம். ஆனால் எங்களால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

2021 ஆகஸ்ட் மாதம் தாலிபன் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தீர்க்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் சுமார் 3,55,000 வழக்குகளில் நஸ்தானாவின் வழக்கும் ஒன்று. இதில் பெரும்பாலானவை கிரிமினல் வழக்குகள் என்று தாலிபன் கூறுகிறது. சுமார் 40% வழக்குகள் நிலம் தொடர்பான தகராறுகள் என்றும் 30% வழக்குகள் விவாகரத்து உட்பட குடும்ப பிரச்சனைகள் என்றும் அது தெரிவிக்கிறது.

தாலிபன் அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரங்களை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.

நீதி அமைப்பில் பெண்கள்

தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கடந்த கால ஊழலை ஒழித்து நீதி வழங்குவோம் என உறுதியளித்தனர்.

திட்டமிட்ட முறையில் எல்லா நீதிபதிகளையும் நீக்கிய அவர்கள் பெண்கள் நீதித்துறையில் பங்கேற்க தகுதியற்றவர்கள் என்றும் அறிவித்தனர்.

''சீர்தூக்கிப்பார்க்கும் அளவிற்கு பெண்களுக்கு தகுதியோ, புத்திசாலித்தனமோ இல்லை. ஏனெனில் எங்கள் ஷரியா கொள்கைகளின்படி நீதித்துறை பணிக்கு உயர் புத்திசாலித்தனத்துடன் இருக்கும் நபர்கள் தேவை,' என்று தாலிபன் உச்ச நீதிமன்றத்தின் வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் அப்துல்ரஹிம் ரஷித் தெரிவித்தார்.

தாலிபன்களால் நீக்கப்பட்ட பெண் நீதிபதிகளில் ஆப்கானிஸ்தான் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஃபவ்சியா அமினியும் ஒருவர். நஸ்தானா போன்ற பெண்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.

"ஒரு பெண் தன் கணவரை விவாகரத்து செய்து, நீதிமன்ற ஆவணங்கள் அதற்கு ஆதாரமாக இருந்தால் அது இறுதியானது. ஆட்சி மாறுவதால் சட்டத் தீர்ப்புகள் மாறாது." என்கிறார் அமினி.

பெண் நீதிபதிகளை நீக்குவது, பெண்களுக்கான புதிய சட்டப்பாதுகாப்பு கொண்டுவரப்படுவதை நிறுத்திவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

"நாங்கள் நீதித்துறையில் முக்கிய பங்கு வகித்தோம். உதாரணமாக 2009 இல் கொண்டுவரப்பட்ட ’பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சட்டம்’ எங்கள் சாதனைகளில் ஒன்றாகும். பெண்களுக்கான தங்குமிடங்களை ஒழுங்குபடுத்துதல், ஆதரவற்றவர்களுக்கான பாதுகாவலர் சட்டம் மற்றும் மனித கடத்தல் தடுப்புச்சட்டம் போன்றவற்றிலும் நாங்கள் பணியாற்றினோம்”என்கிறார் அவர்.

தாலிபன் நீதிமன்ற தீர்ப்புகள்
படக்குறிப்பு, முந்தைய அரசின் தீர்ப்புகள் திருத்தப்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள தாலிபன் உச்ச நீதிமன்ற அலமாரி

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆப்கானிய சட்ட அமைப்பின் உயர்மட்டத்தில் பணியாற்றிய பிறகு, நீதிபதி அமினி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததும் தான் முன்பு தண்டித்த ஆண்களிடமிருது தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறுகிறார்.

"எங்கள் சிவில் சட்டம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பழமையானது. இது தாலிபன் அமைப்பு நிறுவப்படுவதற்கு முன்பே நடைமுறையில் இருந்து வந்துள்ளது," என்கிறார் அமினி. "விவாகரத்துக்கான சட்டங்கள் உட்பட அனைத்து சிவில் மற்றும் தண்டனைச் சட்டங்களும் குர்ஆனிலிருந்து பெறப்பட்டவை,” என்கிறார் அவர்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஆட்சியாளர்கள் போதுமான அளவிற்கு இஸ்லாமை பின்பற்றுபவர்கள் அல்ல என்று இப்போது தாலிபன்கள் கூறுகிறார்கள்.

ஷரியா

தாலிபன் உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற வழக்குகளின் ஆவண குவியல்கள் அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறை எங்களுக்குக் காட்டப்பட்டது. முந்தைய அரசின் ஊழியர்கள் மற்றும் தாலிபன்களால் புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் இருவரும் மேசைகளைப் பகிர்ந்து கொள்ளும் சிறிய அலுவலக இடம் அது.

முந்தைய ஆட்சியின் போது தீர்ப்பு வழங்கப்பட்ட பெரும்பாலான வழக்குகள் தொடர்பாக புதிய மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால் புதிய நீதித்துறை அவற்றை மீண்டும் திறந்துள்ளது என்றும் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

"முன்னாள் நீதிமன்றங்கள் தண்டனை மற்றும் சிவில் சட்டத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தன. ஆனால் இப்போது எல்லா தீர்ப்புகளும் ஷரியா [இஸ்லாமிய சட்டம்] அடிப்படையில் வழங்கப்படுகின்றன," என்று அப்துல்ரஹிம் ரஷித் கூறுகிறார்.

தாலிபன்கள் பெரும்பாலும் ஹனாஃபி ஃபிக்ஹ் (நீதியியல்) மதச் சட்டத்தை நம்பியுள்ளனர். இது 8 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. ஒட்டோமான் பேரரசு உட்பட இஸ்லாமிய உலகம் முழுவதும் அது பின்பற்றபட்டு வந்தது. இன்று வரை பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் அது நடைமுறையில் உள்ளது.

விவாகரத்து ஆவணங்களைப் பார்வையிடும் நஸ்தானா
படக்குறிப்பு, நஸ்தானா தனது விவாகரத்து ஆவணங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் சென்றார்

கவனிப்பாரின்றி திண்டாட்டம்

அண்டை நாட்டிற்கு தப்பிச் சென்றதிலிருந்து நஸ்தானா இரண்டு பரபரப்பான சாலைகளுக்கு இடையே இருக்கும் நடைப்பாதையில் ஒரு மரத்தடியில் தங்கியிருக்கிறார். இறுக்கமாக கட்டப்பட்ட ஆவணங்களை மார்போடு அணைத்தபடி அவர் அமர்ந்திருக்கிறார். திருமண பந்தம் இல்லாத சுதந்திரமான பெண் என்ற அடையாளத்திற்கான ஒரே ஆதாரம் அதுதான்.

"உதவி வேண்டி ஐ.நா உட்பட பல கதவுகளை நான் தட்டினேன். ஆனால் யாரும் என் குரலைக் கேட்கவில்லை. ஆதரவு எங்கே? ஒரு பெண்ணாக நான் சுதந்திரமாக இருக்க எனக்கு உரிமை இல்லையா?" என்று வினவுகிறார் நஸ்தானா.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)