9-ஆம் வகுப்பு மாணவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றம் சாட்ட முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தன்ஹா தஸ்னீம்
- பதவி, பிபிசி வங்காள மொழிச் சேவை
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட ஒன்பது பேரிடம் விசாரணை நடத்த சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal - ICT) முடிவு செய்துள்ளது.
இந்த ஒன்பது பேரின் மீதும் கொலை, இனப்படுகொலை, சித்திரவதை ஆகிய குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தின் போது கொல்லப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை கடந்த புதன்கிழமை அன்று (ஆகஸ்ட் 7-ஆம் தேதி) இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குற்றம் சட்டப்பட்டவர்கள் அனைவரும் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்படுவார்கள் என்று வங்கதேசத்தின் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இடைக்கால ஆலோசகர் பேராசிரியர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.
"தீர்ப்பாயம் விசாரணையைத் தொடகும் என்று நீங்கள் உறுதியாகச் சொல்லலாம். இது சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம். இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மற்றும் பிறருக்கு நாங்கள் எந்த வித சிறப்பு சலுகைகளும் அளிக்க மாட்டோம்," என்றார் நஸ்ருல்.
போர்க் குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா மீது வழக்குத் தொடர முடியுமா என்பதுதான் கேள்வி.
இந்தச் சட்டம் என்ன சொல்கிறது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம்
வங்கதேசத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மனித குலத்திற்கு எதிராக குற்றங்கள் செய்தவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவாமி லீக் கட்சி அறிவித்திருந்தது.
அந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ஆவாமி லீக் அரசாங்கம் வாக்குறுதி அளித்த படியே விசாரணைகளைத் தொடங்கியது.
1973-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டக் குற்றவியல் தீர்ப்பாணையச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த முடியும்.
1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த சுதந்திரப் போரின் போது நடந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்க இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
ஆனால், 2010-ஆம் ஆண்டு வரை, இந்தச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு வழக்கும் தொடரப்படவோ, இதன்கீழ் யாரும் தண்டிக்கப்படவோ இல்லை
2009-ஆம் ஆண்டு, வங்கதேச நாடாளுமன்றம் போர்க் குற்றவாளிகளை விசாரிப்பது தொடர்பான வாய்மொழித் தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதைத் தொடர்ந்து, தனிநபர்கள் மற்றும் குழுக்கள் மீது தீர்ப்பாணையங்களில் விசாரணைகளை நடத்துவதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தன்னிச்சையாக நடத்துவதற்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இதன் மூலம் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பாணையங்கள், வழக்கறிஞர் குழுக்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
சட்டம் என்ன சொல்கிறது?
சட்டத்தின் பிரிவு 3(1)-இன் படி, எந்தவொரு தனி நபரோ, குழுவோ, ராணுவம், அல்லது பாதுகாப்புப் படைகளின் உறுப்பினார்களோ சட்டத்தின் துணைப்பிரிவு (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குற்றத்திலாவது ஈடுபட்டால் அவர்களின் மீது வழக்கு தொடரப்படும்.
வங்கதேசத்தின் எல்லைக்குள் நுழைந்த குற்றத்திற்காக, எந்த நாட்டை சேர்ந்த தனிநபர் அல்லது குழுவை விசாரிக்க சட்டம் தீர்ப்பாயத்திற்கு அதிகாரத்தை வழங்குகிறது.
மனிதநேயம் மற்றும் அமைதிக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், ஜெனிவா உடன்படிக்கைக்கு முரணான செயல்பாடுகள், சர்வதேசச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்தல் போன்றவற்றை விசாரிக்க சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது இந்த சட்டத்தின்படி வழக்கு தொடர முடியும் என்று வங்கதேச அரசின் அட்டர்னி ஜெனரல் முகமது அசாதுஸமான் தெரிவித்தார்.
1973-ஆம் ஆண்டு சட்டத்தில் இருக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்ற வரையறையும் இதன் கீழ் வருகிறது என்று அவர் கூறினார்.
சட்டத்தின் பிரிவு 3-இன் துணைப்பிரிவு 2(a)-இன் படி மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாக ஷேக் ஹசீனா மீது குற்றம் சாட்டப்படலாம்.
இந்தப் பிரிவின்படி, கொலை, அழிவை ஏற்படுத்துதல், அடிமைப்படுத்துதல், நாடு கடத்தல், சிறைப்பிடித்தல், ஆள் கடத்தல், சித்திரவதை, கற்பழிப்பு, குடிமக்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகிய குற்றங்களுக்காக அவர் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாணையத்தில் விசாரிக்கப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
‘ஹசீனாவை விசாரிக்க முடியும்’
இதைத் தவிர, அரசியல், இன அல்லது மத அடிப்படையிலான துன்புறுத்தல்கள் போன்ற வழக்குகளும் இங்கு விசாரிக்கப்படலாம்.
ராணா தாஸ்குப்தா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாணையத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.
இருப்பினும், ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று அவர் ராஜினாமா செய்தார். அவர் வங்கதேசத்தின் இந்து-புத்த-கிறிஸ்தவ ஒற்றுமை மன்றத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
"இந்தச் சட்டத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. 1971-ஆம் ஆண்டின் சுதந்திரப் போரை கருத்தில் கொண்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் போரில் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்கிறார்.
முன்னர், இச்சட்டம் இயற்றப்பட்ட அதே நோக்கத்திற்காக இப்போது அது பயன்படுத்தப்படவில்லை என்று அவர் நம்புகிறார்.
இருப்பினும், இந்தச் சட்டம் மூலம் ஷேக் ஹசீனா மற்றும் மற்றவர்களை எளிதாக விசாரிக்க முடியும் என்று வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மன்சில் மோர்ஷெட் நம்புகிறார்.
"இதற்கு முன் இருந்த அரசாங்கத்தால் திருத்தப்பட்ட இச்சட்டம் மூலம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப்படுகொலைகளை விசாரிக்க முடியும்," என்று அவர் கூறினார்.
தீர்ப்பாயத்திற்கு எந்த குற்றத்திற்கும் எதிராக வழக்குத் தொடர அதிகாரம் இருக்கிறது என்பது சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் கூறுகிறார்.
இது குறித்து எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஷேக் ஹசீனா மீதுள்ள வழக்குகள்
ஆகஸ்ட் 5-ஆம் தேதி, சவர் என்ற ஊரில் அலிஃப் அகமது சியாம் என்ற மாணவர் தோட்டா ஒன்றினால் தாக்கப்பட்டார். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் இரண்டு நாட்களில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 9 பேர் மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மாணவரின் தந்தை புல்புல் கபீர் சார்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காஜி எம்.எச்.தனீம் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாணையத்தில் புகார் அளித்தார்.
அதே நாளில், மிர்பூரில் கல்லூரி மாணவர் ஃபைசுல் இஸ்லாம் ராஜோன் படுகொலை செய்யப்பட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமையன்று தலைநகர் டாக்காவின் ஷெரேபங்லா நகர் காவல் நிலையத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 11 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதில், அவர் ஷஹாபுதீன் என்ற ஆட்டோரிக்ஷா ஓட்டுநரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












