புதினின் சேதியை யுக்ரேன் அதிபரிடம் சேர்க்கிறாரா? மோதி பயணம் பற்றி புதிய தகவல்கள்

ரஷ்ய அதிபர் புதின் கொடுத்த தகவல் என்ன? : மோதியின் யுக்ரேன் பயணப் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதி- யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி (கோப்புக்காட்சி)
    • எழுதியவர், ஸ்விட்லானா டோரோஷ்
    • பதவி, பிபிசி யுக்ரேன்

யுக்ரேனில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசியக் கொடி நாள் அனுசரிக்கப்படும் நிலையில், அன்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அங்கு தரையிறங்குகிறார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் புதினை மோதி சந்தித்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இது நிகழ்கிறது. அங்கு அவர் தனது நாடு எப்போதும் போருக்கு அமைதியான தீர்வை வலியுறுத்துவதாக கூறினார். மேலும் அமைதிக்கான பேச்சுவார்த்தை முயற்சியில் உதவத் தயாராக இருப்பதாகவும் மோதி குறிப்பிட்டார்.

யுக்ரேனில் போர் தொடங்கிய பத்து ஆண்டுகளில், இந்தியத் தலைவர்கள் யாரும் ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கவில்லை அல்லது சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வரவில்லை.

யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் ஐ.நா.வின் எந்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரஷ்யாவிற்கு தனது கடைசி பயணத்தின் போது, ​​ரஷ்ய ஏவுகணைகள் யுக்ரேனின் கீவ் மற்றும் பிற நகரங்களில் ஏவப்பட்ட போது, ​​மோதி புதினை "நண்பர்" என்று குறிப்பிட்டார். ரஷ்யா-இந்தியா உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணத்தின் போது என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இருந்து யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ஒரு செய்தியை கடத்த அவர் தயாராக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, மோதியின் இந்த யுக்ரேன் பயணத்தில் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது?

யுக்ரேன் போரும் மோதியும்

ரஷ்ய அதிபர் புதின் கொடுத்த தகவல் என்ன? : மோதியின் யுக்ரேன் பயணப் பின்னணி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ரஷ்யாவிற்கு தனது கடைசி பயணத்தின் போது, ​​ரஷ்ய ஏவுகணைகள் யுக்ரேனின் கீவ் மற்றும் பிற நகரங்களில் ஏவப்பட்ட போது, ​​மோதி புதினை நண்பர் என்று குறிப்பிட்டார்

மோதி ஜூலை தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். 2019 க்குப் பிறகு அவரது முதல் ரஷ்யா பயணம் இது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது முதல் சர்வதேச பயணம் இது.

யுக்ரேன் மீது ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மோதி ரஷ்யாவுக்கு சென்றார். ஜூலை 8 அன்று கீவ்வில் 33 பேர் உட்பட மொத்தம் 47 பேர் யுக்ரேனில் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஏவுகணைகள் குழந்தைகள் மருத்துவமனையையும் தாக்கியது.

இதனிடையே ரஷ்ய அதிபர் உடனான பேச்சுவார்த்தையின் போது, மோதியை புதின் "எனது அன்பு நண்பர்" என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய அதிபருடனான மோதியின் சந்திப்பும், மோதி புதினை நட்பாக ஆரத்தழுவியதும் யுக்ரேனில் சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

"இது மிகப் பெரிய ஏமாற்றம். அமைதி முயற்சிகளுக்கு விழுந்த அடி. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் (மோதி) அத்தகைய நாளில் மாஸ்கோவில் உலகின் கொடிய குற்றவாளியை ஆரத் தழுவுகிறார்" என்று ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

அதே நேரத்தில், ரஷ்யாவில் நரேந்திர மோதி ராணுவ மோதல்களுக்கு அமைதியான தீர்வுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.

"துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் போர்க்களத்தில் மோதல்களைத் தீர்க்க முடியாது என்பதை உங்கள் நண்பராக நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தில் கவனம் செலுத்துகிறோம்" என்று மோதி புதினிடம் கூறினார்.

"போர், மோதல், பயங்கரவாத தாக்குதல் என எதுவாக இருந்தாலும், மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் உயிர்கள் பலியாகும் போது, குறிப்பாக அப்பாவி குழந்தைகள் இறக்கும் போது அந்த வலியை உணர்வார்கள். அது உங்கள் இதயத்தில் ரத்தம் கசியும் உணர்வை கொடுக்கும், அந்த வலி தாங்க முடியாதது" என்றும் மோதி கூறினார்.

பேச்சுவார்த்தையால் ஏற்படும் முன்னேற்றத்தை இந்தியா ஆதரிக்கும் என்றும், ராணுவ மோதலுக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு காண எந்த வடிவத்திலும் ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாகவும் மோதி கூறினார்.

இருப்பினும், 2014 இல் மோதி இந்தியாவில் பதவியேற்றதிலிருந்து, ரஷ்யா தொடர்பான விஷயங்களில் இந்தியா நடுநிலையை கடைபிடித்தது.

யுக்ரேனின் டான்பாஸில் போர் தொடங்கியபோதும், கிரிமியா இணைக்கப்பட்டபோதிலும் இந்தியா நடுநிலையைக் கடைப்பிடித்தது. ரஷ்யாவின் நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் கண்டிக்கவில்லை அல்லது சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வரவில்லை.

ரஷ்யாவை சார்ந்திருக்கும் இந்தியா

ரஷ்யாவின் ஆயுதங்கள் மற்றும் எண்ணெயை இந்தியா சார்ந்திருப்பதே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் முழு அளவிலான போரின் தொடக்கம் மற்றும் ரஷ்யா மீது மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட பிறகு, ரஷ்யா இந்தியாவிற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான எண்ணெயை குறைந்த விலையில் விற்கத் தொடங்கியது. இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

"இந்தியா தனது சொந்த நலன்களில் அதிக கவனம் செலுத்துகிறது. நாட்டிற்கு பயனளிக்கும் இடங்களில் ஒத்துழைக்கும் என்ற தர்க்கத்துடன் இந்தியா செயல்படுகிறது" என்று யுக்ரேனிய ப்ரிஸம் மையத்தின் நிபுணர் ஓல்கா வோரோஜ்பைட் பிபிசி யுக்ரேன் சேவையிடம் கூறினார்.

"அதனால்தான் அவர்கள் ரஷ்யாவுடன் ஒத்துழைப்பதை அறமற்ற செயலாகப் பார்க்கவில்லை. அதிக சதவீத ஏழை மக்களை கொண்ட ஒரு நாட்டிற்கு ரஷ்யாவிடம் இந்திய ரூபாய் மதிப்பில் எண்ணெய் வாங்குவது நன்மை பயக்கும்" என்று அவர் விளக்கினார்.

அதே சமயம் உலகின் மிகப் பெரிய படைகளைக் கொண்ட இந்தியா, ரஷ்ய ஆயுதங்களை பெரிதும் நம்பியுள்ளது.

யுக்ரேனுக்கு எதிரான போருக்காக ரஷ்யா பாரிய ராணுவச் செலவினங்களைச் செய்த போதிலும், அது இந்தியாவின் முக்கிய ஆயுத விநியோகஸ்தராக உள்ளது.

இந்தியா கருத்தில் கொள்ளும் மற்றொரு முக்கியமான விஷயம் சீனாவுடனான ரஷ்யாவின் உறவுகள். சீனாவுடன் நெருக்கமான உறவுகளை நோக்கி ரஷ்யா குறிப்பிடத்தக்க நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்னைகளை கொண்டுள்ளது. எனவே ரஷ்யா-சீனா ஒத்துழைப்பை இந்தியா கவனிக்காமல் இருக்க முடியாது.

ரஷ்ய அதிபர் புதின் கொடுத்த தகவல் என்ன? : மோதியின் யுக்ரேன் பயணப் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேனுக்கான பேச்சுவார்த்தைகள்

இத்தகைய சூழ்நிலையில் யுக்ரேன் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

ரஷ்யப் பயணத்திற்கு பிறகு மோதி யுக்ரேன் பயணம் மேற்கொள்வது, ரஷ்யா சென்றபோது அவர் மீது எழுந்த விமர்சனங்களை மாற்றும் நோக்கம் கொண்டது என்று நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.

சமீபத்தில் வாஷிங்டனில் நடைபெற்ற `நேட்டோ’ உச்சி மாநாட்டில் பல நாடுகள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கடுமையாகக் கண்டித்தன.

"மாஸ்கோவில் நடந்த மோதி - புதின் சந்திப்பு குறித்து இந்தியாவிற்கு வெளியே மட்டுமல்ல, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது மோதி யுக்ரேன் செல்வது இந்த விமர்சனங்கள் உந்துதலாக இருந்திருக்கலாம்" என்கிறார் ஓல்கா வோரோஜ்பைட்.

மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து உலகளாவிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ப்ளூம்பெர்க் செய்தி தனது தகவல்களை மேற்கோள்காட்டி,'போரை முடிவுக்குக் கொண்டு வர மத்தியஸ்தர் பங்கு வகிக்க இந்திய தலைமை நிராகரித்துவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளது.

'இருப்பினும், ரஷ்யா மற்றும் யுக்ரேன் அதிபர்களுக்கு இடையே செய்திகளை கடத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது' என்று ப்ளூம்பெர்க் செய்தி கூறுகிறது

இதுபோன்ற விஷயங்கள் தற்போதைய மோதியின் பயணத்தின் பகுதியாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

''யுக்ரேனின் தேசியக் கொடி தினமான ஆகஸ்ட் 23 அன்று மோதியின் வருகை, யுக்ரேனின் இறையாண்மையை இந்தியா ஆதரிக்கிறது என்ற நிலைப்பாட்டை நிலைநிறுத்துகிறது. இதன் மூலம் புதினுக்கு ஒரு முக்கிய சமிக்ஞையை இந்தியா அனுப்புகிறது” என்று பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான விட்டலி போர்ட்னிகோவ் நம்புகிறார்.

"இது இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். அதே சமயம் புதினுக்கு ஒரு வகையான அரசியல் பழிவாங்கும் சம்பவமாகவும் இருக்கும்" என்று போர்ட்னிகோவ் கூறுகிறார்

"மோதி ரஷ்யா சென்றது அவருக்கு விமர்சனத்தை தேடி தந்தது. இப்போது, யுக்ரேனின் ஆயுதப் படைகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு புதின் முயற்சிக்கும் தருணத்தில், இந்தியப் பிரதமர் மோதி யுக்ரேனின் தலைமையைச் சந்திக்கிறார்."

''இந்த சுற்றுப்பயணம் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுகளை நோக்கிய இந்தியாவின் போக்கை உறுதிப்படுத்தும்'' என்று போர்ட்னிகோவ் கூறுகிறார்

யுக்ரேன் அதிபரின் அலுவலகம் ஜெலென்ஸ்கி மற்றும் நரேந்திர மோதி இடையே நிகழவுள்ளப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நோக்கம் குறித்து ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது. இருப்பினும் எந்த துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன என்று இன்னும் தெரியவில்லை.

ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டின் போது, இரு நாடுகளின் தலைவர்களும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல் பற்றி விவாதித்தனர்.

தாக்குதலில் அழிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை புனரமைக்கவும், யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கவும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

ஓல்கா வோரோஜ்பைட்டின் கூற்றுப்படி, ''பிரதமர் மோதி போர் விஷயத்தில் தனது நடுநிலை நிலைப்பாட்டை மாற்றுவது சாத்தியமில்லை, எனவே இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து எதிர்பார்க்கக்கூடியது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும்.'' என்கிறார்

" ஐரோப்பாவில் நடக்கும் பல்வேறு மோதல்கள் தொடர்பாக வரலாற்று ரீதியாக இந்தியா எப்போதும் நடுநிலையுடன் இருக்க முயற்சிக்கிறது. எனவே, யுக்ரேன் விஷயத்திலும் பெரும்பாலும், இதுதான் நடக்கும்" என்று அவர் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)