கமலா ஹாரிஸின் முழு குடும்ப பின்னணி - சென்னையை பூர்வீகமாக கொண்டவர் அமெரிக்காவில் சாதிக்க உறுதுணை யார்?

கணவருடன் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கணவருடன் கமலா ஹாரிஸ்
    • எழுதியவர், ஹோலி ஹோண்டெரிச்
    • பதவி, பிபிசி நியூஸ்

ஜோ பைடனின் துணை தளபதியாக கருதப்படுவதற்கு பதிலாக, ஒரு சாத்தியமான தளபதியாகக் கருதுவதற்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வாக்காளர்களிடம் தன்னை விரைவாக மறுஅறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.

கமலா ஹாரிஸ் அரசியல் வாழ்க்கையின் மிக முக்கிய தருணமான சிகாகோவில் நடைபெறும் ஜனநாயக கட்சி மாநாட்டில், அமெரிக்க வாக்காளர்கள் அவருக்குப் பின்னால் உள்ள குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் அவர் அந்த இடத்திற்கு வருவதற்கு உதவியவர்கள் குறித்தும் அறிந்துகொள்ள உள்ளனர்.

அவருடைய போட்டியாளர் டொனால்ட் டிரம்ப் போன்று அல்லாமல், கமலா ஹாரிஸுக்கு ஒருமுறை மட்டுமே திருமணமாகியுள்ளது. தன் கணவரின் குழந்தைகளுக்கு அவர் தாயாக உள்ளார். அவருடைய பெரிய, நவீன குடும்பத்தின் உறுப்பினர்கள் குறித்து இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

டக்ளஸ் எம்ஹாஃப், கணவர்

கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 2013-ம் ஆண்டில், பொழுதுபோக்கு துறை சம்பந்தமான வழக்கறிஞரான டக்ளஸ் எம்ஹாஃப்-ஐ சந்தித்தார். அடுத்த ஆண்டே இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அப்போதிலிருந்து 59 வயதான டக்ளஸ் எம்ஹாஃப், அமெரிக்க அரசியலில் வளர்ந்துவந்த அவருடைய மனைவிக்கு பக்கதுணையாக உள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு துணை அதிபரான முதல் கருப்பின மற்றும் தெற்காசிய பெண் என்று கமலா ஹாரிஸ் வரலாறு படைத்தார். அப்போது, அமெரிக்க அதிபர் அல்லது துணை அதிபரின் முதல் கணவராகவும் துணை அதிபர் ஒருவரின் கணவரான முதலாம் யூதர் என்றும் வரலாறு படைத்தார்.

அந்த ஆண்டே வழக்கறிஞர் தொழிலிருந்து வெளியேறி, துணை அதிபரின் கணவராக தன் பொறுப்பில் கவனம் செலுத்தினார். இது குறுகிய வட்டத்திலிருந்து அவரை வெளியே கொண்டு வந்தது. இவர் தற்போது ஜனநாயக கட்சியின் ஆர்வமிக்க ஆதரவாளராகவும் கமலா ஹாரிஸின் பிரசாரகராகவும் அறியப்படுகிறார்.

கோல் மற்றும் எல்லா எம்ஹாஃப், கணவரின் குழந்தைகள்

எம்ஹாஃப் உடனான திருமணம், கமலா ஹாரிஸை கோல் மற்றும் எல்லா-வுக்கு மாற்றாந்தாயாக்கியது. இவர்கள் இருவரும் எம்ஹாஃப் மற்றும் அவருடைய முதல் மனைவியான கெர்ஸ்டின் எம்ஹாஃப்-க்கு பிறந்த குழந்தைகள்.

தனக்கு இருக்கும் பல பெயர்களில் கோல் மற்றும் எல்லா இருவரும் வழங்கிய ‘மொமாலா’ (Momala) எனும் பாத்திரமே தனக்கு முக்கியமானது என கமலா ஹாரிஸ் அடிக்கடி கூறியுள்ளார். 30 வயதான கோல் மற்றும் 25 வயதான எல்லா ஆகிய இருவரும் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்களாக உள்ள நிலையில், இந்த அன்பு இருதரப்பிலும் இருப்பதை காண முடிகின்றது.

“இந்த உலகின் மிகச் சிறந்த மாற்றாந்தாய்”, என்பதுதான் 2020-ல் ஜனநாயக கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸ் குறித்த எல்லா-வின் அறிமுகம். “நீங்கள் எங்களின் தந்தைக்கு மட்டுமல்ல, பெரிய, ஒன்றுபட்ட எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறையினருக்கும் நீங்கள் ஒரு வலிமை தரும் சக்தியாக விளங்குகிறீர்கள்” என்றார்.

குழந்தைகளுடன் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோல் மற்றும் எல்லாவுக்கு 'மொமாலா'வாக இருப்பதுதான் தனக்குப் பிடித்தமான பாத்திரம் என, கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்

கொலராடோ கல்லூரியில் 2017-ல் பட்டம் பெற்ற கோல், தன் தந்தையை பின்பற்றி, பொழுதுபோக்கு துறைக்குள் நுழைந்தார். WME எனும் நிறுவனத்திலும் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்-யின் தயாரிப்பு நிறுவனமான பிளான் பி (Plan B) எனும் நிறுவனத்திலும் வேலை பார்த்தார்.

நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைன் எனப்படும் கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரியில் பட்டம் பெற்ற எல்லா, 2021-ல் ஐ.எம்.ஜி மாடல்ஸில் இணைந்து, புரோயென்ஸா ஷாலர் (Proenza Schouler) மற்றும் பலென்சியாகா (Balenciaga ) ஆகிய பெரிய நிறுவனங்களின் பேஷன் ஷோக்களில் பங்குபெற்றுள்ளார். பின்னலாடையில் நிபுணத்துவம் பெற்ற எல்லா, சாஃப்ட் ஹேண்ட்ஸ் எனும் பின்னலாடை நிறுவனத்தையும் 2021-ம் ஆண்டில் தொடங்கினார்.

கெர்ஸ்டின் எம்ஹாஃப், கமலா கணவரின் முன்னாள் மனைவி

கோல் மற்றும் எல்லா-வின் தாயான கெர்ஸ்டினும் கூட கமலா ஹாரிஸ் குறித்து நல்ல விதமாக பேசியுள்ளார். சமீபத்தில் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வான்ஸ், கமலா ஹாரிஸை “குழந்தையில்லாத பூனை பெண்மணி” (குழந்தையில்லாத பெண்களை குறிக்கும் இழிவான சொல்) என அழைத்த போது, ஹாரிஸுக்கு ஆதரக கெர்ஸ்டின் பேசினார்.

“கோல் மற்றும் எல்லா பதின்பருவத்தினராக இருந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக டக்ளஸ் மற்றும் என்னுடன் இணைந்து கமலா அவர்களுக்கு பெற்றோராக இருந்துள்ளார்", என சி.என்.என் ஊடகத்திடம் கெர்ஸ்டின் கூறியுள்ளார்.

“அவர் அன்பானவர், அக்கறையானவர், மிகவும் பாதுகாப்பானவர், எப்போதும் உடன் இருப்பவர். என்னுடைய ஒன்றுபட்ட குடும்பத்தை நான் நேசிக்கிறேன், கமலா இக்குடும்பத்தில் இருப்பதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.” என்றார் அவர்.

பிரிட்டிபேர்ட் (Prettybird) எனும் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கெர்ஸ்டின், 2020ஆம் ஆண்டு கமலா அதிபர் வேட்பாளராவதற்கான தேர்தல் பிரசாரத்திற்கு தன்னுடைய பங்களிப்பையும் அளித்தார்.

மாயா ஹாரிஸ், கமலாவின் சகோதரி

தன்னுடைய ஒரே சகோதரியும் தங்கையுமான மாயா ஹாரிஸிடம் மிக நெருக்கமானவராக அறியப்படுகிறார் கமலா ஹாரிஸ். பெற்றோரின் விவாகரத்திற்கு பின், அவர்கள் இருவரும் கலிஃபோர்னியாவின் பெர்க்லி-யில் தங்கள் தாய் சியாமளா கோபாலனின் அரவணைப்பில் வளர்ந்தனர்.

தன் அக்காவை போலவே மாயா, 1992-ம் ஆண்டில் ஸ்டான்ஃபோர்டு சட்டப் பள்ளியில் படித்து, சட்டத்துறையில் நுழைந்தார். லாப நோக்கற்ற மனித உரிமைகள் அமைப்பான வட கலிஃபோர்னியாவின் அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியனில் இணைவதற்கு முன்பாக வழக்கறிஞராகவும், சட்டம் கற்பிப்பவராகவும் இருந்தார். கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியனின் செயல் இயக்குநராக ஆனார்.

57 வயதான மாயா, பின்னர் அரசியலில் நுழைந்து, 2016 அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனுக்கு மூத்த கொள்கை ஆலோசகராக இருந்தார். பின்னர், பைடன்-கமலா ஹாரிஸுக்கு பிரசாரகராக ஆவதற்கு முன்பு, 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான அவருடைய சகோதரியின் முயற்சியில் அவருக்கு பிரசார தலைவராக இருந்தார்.

சகோதரியுடன் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான கமலா ஹாரிஸின் முயற்சியில் பிரசார தலைவராக இருந்தார் மாயா ஹாரிஸ்

மீனா ஹாரிஸ், தங்கையின் மகள்

மாயாவின் ஒரே குழந்தையான மீனா, கமலா ஹாரிஸ் குடும்ப பாரம்பரியத்தைப் பின்பற்றி சட்டம் படித்தார். உபெர், ஃபேஸ்புக் மற்றும் ஸ்லாக் (Slack) போன்ற பெருநிறுவனங்களில் பணிபுரிந்த மீனா, கமலா ஹாரிஸுக்கு அரசியலில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தாயான அவர், ஊடக மற்றும் வணிக நிறுவனமான ஃபெனோமினலைத் (Phenomenal) 2017 ஆம் ஆண்டு தொடங்கினார். மீனாவின் தொழில் வாழ்க்கை கமலாவுடன் சில வழிகளில் தொடர்புடையதாக உள்ளது.

ஜூன் 2020 இல், அவர் கமலா ஹாரிஸ் மற்றும் தன் அம்மாவைப் பற்றிய "கமலா அண்ட் மாயாஸ் பிக் ஐடியா" (Kamala and Maya’s Big Idea) என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தை வெளியிட்டார். ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஃபெனோமினல் "வைஸ் பிரசிடெண்ட் ஆன்ட்டி" என அச்சிடப்பட்ட ஆடைகளை விற்கத் தொடங்கினார்.

மீனா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாயாவின் ஒரே குழந்தையான மீனா, கமலா ஹாரிஸ் குடும்ப பாரம்பரியத்தைப் பின்பற்றி சட்டம் படித்தார்.

டோனி வெஸ்ட், தங்கையின் கணவர்

மாயாவின் கணவரும் மீனாவின் மாற்றாந்தந்தையுமான டோனி வெஸ்ட், கமலா ஹாரிஸ் குடும்பத்தின் மற்றொரு திறமையான உறுப்பினர், வழக்கறிஞர்.

ஸ்டான்ஃபோர்ட் சட்டப்பள்ளியில் பட்டம் பெற்ற அவர், (அங்குதான் அவர் மாயாவையும் அவருடைய சின்னஞ்சிறு மகளையும் சந்தித்தார்), தனியார் மற்றும் பொதுத் துறையின் உயர் மட்டங்களில் பணியாற்றியுள்ளார். அவர் அதிபர் பாரக் ஒபாமாவின் கீழ் இணை அட்டர்னி ஜெனரலாக இருந்தார் மற்றும் பெப்சிகோ நிறுவனத்தின் பொது ஆலோசகராக பணியாற்றினார்.

வெஸ்ட் இப்போது உபேர் நிறுவனத்தின் தலைமை சட்ட அதிகாரியாக உள்ளார். அதேசமயம், கமலா ஹாரிஸின் பிரசாரத்திற்கு முக்கிய ஆலோசகராகவும் உருவெடுத்துள்ளார்.

ஹாரிஸின் பிரசார அணிக்காக தன்னை அர்ப்பணிப்பதற்காக இந்த மாதம் டோனி வெஸ்ட் விடுமுறை எடுப்பதாக உபேர் தெரிவித்துள்ளது.

"குடும்பமே முதன்மையானது என்று நான் எப்போதும் நம்புகிறேன்" என்று வெஸ்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "எனவே எனது குடும்பம் மற்றும் கமலா ஹாரிஸை பிரசாரத்தில் ஆதரிப்பதற்காக என்னை முழுநேரமாக அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன்." என அவர் தெரிவித்துள்ளார்.

சியாமளா கோபாலன், தாய்

டாக்டர் சியாமளா கோபாலன் தனது மகள் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதைக் காணும் முன்பே இறந்துவிட்டாலும், கமலாவும் மாயா ஹாரிஸும் தங்களுடைய தொழிலில் கவனம் செலுத்த தாயார் ஊக்கப்படுத்தியதாகக் கூறுகின்றனர்.

"எனது எண்ணங்களும் அனுபவங்களும் முக்கியம் என்று எனக்கு முதலில் சொன்னவர் என் அம்மா" என்று 2022 இல் கமலா ஹாரிஸ் ஃபேஸ்புக்கில் எழுதினார். " 'கமலா, நீ பல விஷயங்களைச் செய்வதில் முதல் நபராக இருக்கலாம். எதிலும் கடைசி நபர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்’ என என் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வார்” என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ், டோனி வெஸ்ட், மாயா ஹாரிஸ், மீனா ஹாரிஸ் மற்றும் டோனி வெஸ்டின் தாயார் பெக்கி ரெட்டிக் ஆகியோர் 2010 கலிஃபோர்னியா அட்டர்னி பொதுத் தேர்தலின் போது வாக்கெடுப்புகளைப் பார்க்கிறார்கள்

2009 இல் இறந்த எம்.எஸ்.கோபாலன், அறிவியல் படிப்பதற்காக, தனது 19வது வயதில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றார், அங்கு மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.

சிவில் உரிமைகள் இயக்கத்தில் அவரது செயல்பாடுகள் அவரை பொருளாதார நிபுணர் மற்றும் ஜமைக்கா குடியேறியான தன் வருங்கால கணவர் டொனால்ட் ஹாரிஸை நோக்கி ஈர்த்தன. தன்னையும் தன் தங்கையையும் வளர்த்த பெருமை தன் தாயையே சாரும் என, கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அவருடைய தந்தையுடனான உறவு தெளிவாக தெரியவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)