இலங்கை அதிபர் தேர்தலில் அதிகரிக்கும் வேட்பாளர்கள்- இது நாட்டிற்கு எப்படி சுமையாக மாறுகிறது?

இலங்கை அதிபர் தேர்லின் வேட்பாளர்கள்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர்

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது அங்கு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்குக் காரணம், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அதிபர் தேர்தலுக்கான செலவுகளும் தேவைகளும் ஏறக்குறைய எல்லா வகையிலும் அதிகரித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகரித்திருப்பது, இலங்கை அதிபர் தேர்தலை எந்தெந்த வகையில் பாதிக்கும்?

எவ்வாறு அதிபர் வேட்பாளராகலாம்?

அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட இரண்டு வழிகள் உள்ளன. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவது அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.50,000 (இலங்கை ரூபாய்) வைப்புத் தொகையாகவும், சுயேச்சை அல்லது பிற அரசியல் கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.75,000 (இலங்கை ரூபாய்) பாதுகாப்பு வைப்புத் தொகையாகவும் செலுத்த வேண்டும்.

நியமிக்கப்பட்ட தேதியில் வைப்புத் தொகையை செலுத்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள், அதிபர் வேட்பாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படிப்படியாக அதிகரிக்கும் வேட்பாளர்கள் எண்ணிக்கை

ஆறு அதிபர் வேட்பாளர்களுடன் 1982 இல் நடந்த முதல் அதிபர் தேர்தலுக்குப் பிறகு, 1988 அதிபர் தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டனர்.

மிகக் குறைவான வேட்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இலங்கை அதிபர் தேர்தல் அதுதான். அதுவரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை நியமித்திருந்த நிலையில், 1994ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கினர். 1999 மற்றும் 2005 அதிபர் தேர்தல்களில் 13 வேட்பாளர்கள் இருந்தனர்.

2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிபர் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆகும்.

இது 2015இல் 19ஆகக் குறைந்தது, ஆனால் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இம்முறை, 2024 ஆம் ஆண்டிற்கான அதிபர் தேர்தலில் 40 பேர் வைப்புத் தொகை செலுத்தியிருப்பதுடன் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 39 வேட்பு மனுக்களும் தேர்தல் செயலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்முறை, 2024 அதிபர் தேர்தலில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 அதிபர் தேர்தலில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

இரண்டு அடி நீள வாக்குச்சீட்டு

அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் (35) 2019 ஆம் ஆண்டு போட்டியிட்ட நிலையில், இலங்கை வரலாற்றில் மிக நீளமான வாக்குச்சீட்டு அந்த ஆண்டு அச்சிடப்பட்டது.

வாக்குச் சீட்டு 24 அங்குலத்துக்கும் அதிகமாக இருந்தது. வாக்காளர்கள் இரண்டு அடி நீளமுள்ள அந்த வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி வாக்களித்தனர்.

இம்முறை 39 வேட்பாளர்கள் என்பதால் அதை விட நீளமான வாக்குச்சீட்டு தேவைப்படும்.

அதிக வேட்பாளர்களால் ஏற்படும் சிக்கல்

வாக்குச் சீட்டின் அளவு அதிகரிக்கும்போது, காகிதங்கள் மற்றும் அச்சிடுவதற்கான செலவும் அதிகரிக்கிறது. வேட்பாளர்களின் அதிகரிப்பால் வாக்களிக்கும் செயல்முறையின் சிக்கலான தன்மையும் அதிகரிக்கும்.

2019ஆம் ஆண்டு நடந்தது போல் இம்முறையும் தேர்தல் ஆணைக்குழு கூடுதலான வாக்குப்பெட்டிகளை வழங்க வேண்டும் என்பதால் அதற்கான கூடுதல் செலவையும் தேர்தல் ஆணைக்குழு ஏற்க வேண்டும்.

ஓட்டுப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போக்குவரத்து வசதிகளையும், அவர்களின் பாதுகாப்பிற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கைக்கும் அதிக நேரம் ஆகலாம்.

ஒரு வாக்காளர், வாக்களித்து, மடித்து வாக்குப்பெட்டியில் போடும் நீளமான வாக்குச்சீட்டை, அதிகாரிகள் பிரித்து குறைந்தது மூன்று முறை எண்ண வேண்டும்.

எந்தவொரு வேட்பாளரும் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளுக்காக அதிகாரிகள் மீண்டும் எண்ண வேண்டும்.

2019 அதிபர் தேர்தலில், தேர்தல் ஆணையம் தடிமனான அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்தியது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 2019 அதிபர் தேர்தலில், தேர்தல் ஆணைக்குழு தடிமனான அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்தியது.

அதிகரிக்கும் தேர்தல் செலவுகள்

2015 மற்றும் 2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்களுக்காக செலவிடப்பட்ட தொகைகளைக் கருத்தில் கொண்டால், 2015 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் தேர்தல் செலவுகள் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னரும் தேர்தல் ஆணையர் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2015 ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்காக ரூபாய் 270 கோடிகள் (இலங்கை ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இது ரூபாய் 456 கோடிகளாக (இலங்கை ரூபாய்) உயர்ந்தது.

2024 அதிபர் தேர்தலுக்கு ரூபாய் 1000 கோடி (இலங்கை ரூபாய்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாக்குச் சீட்டு அச்சடிக்கும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

2019 அதிபர் தேர்தலின் போது பாதுகாப்பிற்காக 72,808 காவலர்கள் மற்றும் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய பொருளாதார நிலவரப்படி, 2024 தேர்தலில் பாதுகாப்புக்கான செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும்.

'ஒவ்வொரு ரூபாயும் பொதுமக்களின் வரிப்பணம்’

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இலங்கை தேர்தல் ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பதிலளித்தார்.

"அதிபர் தேர்தலில், உண்மையான கொள்கையை, உண்மையான சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நேர்மையான வேட்பாளர்கள் போட்டியிடுவது நல்லது." என்று கூறினார்.

"வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, செலவும் அதிகரிக்கிறது. இதற்கான ஒவ்வொரு ரூபாயும் இந்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் இருந்து எடுக்கப்படுகிறது." என்றும் கூறினார்.

செப்டெம்பர் 21 ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 அதிபர் தேர்தலுக்கு ரூபாய் 1000 கோடி (இலங்கை ரூபாய்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிபர் வேட்பாளருக்கான சலுகைகள்

அதிபர் தேர்தல் சட்டம், 1981ஆம் ஆண்டு 15ஆம் பிரிவின் படி, ஒவ்வொரு அதிபர் வேட்பாளரும் பல சலுகைகளைக் கொண்டுள்ளனர்.

அந்த சட்டத்தின் 117வது பிரிவின்படி, ஒவ்வொரு அதிபர் வேட்பாளரும் இலங்கை தொலைக்காட்சி மற்றும் இலங்கை வானொலியில், தங்களது பிரசார நடவடிக்கைகளை இலவசமாக மேற்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரம்புகளுக்கு உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு மட்டுமே அதற்கு உரிமை உண்டு.

அதே சட்டத்தின் 114வது பிரிவின்படி, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு, தபால் துறை ஜெனரலின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, கட்டணம் செலுத்தாமல், தங்கள் தேர்தல் தொடர்பான ஆவணத்தை அனுப்பும் உரிமையும் வேட்பாளர்களுக்கு உண்டு.

மேலும், தேர்தல் காலத்தில் அதிபர் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதும் வழக்கம்.

இந்தச் சலுகைகள் அனைத்தும் நாட்டு மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் நிறுவனங்களால் வழங்கப்படுவதால், வேட்பாளர்கள் அதிகரிப்பால் அந்த நிறுவனங்களுக்குச் செலவும் அதிகம்.

மேலும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனியாக வாக்குச்சாவடி முகவர், மண்டல முகவர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதால் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய தனது பெயரை வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் நோக்கில் சிலர் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று கூறினார்.

அதிபர் தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து

வைப்புத் தொகையை உயர்த்துவது தீர்வாகுமா?

அதிபர் தேர்தலில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கலுக்கான வைப்புத் தொகை குறைவாக இருப்பதே காரணம் என பல தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போதைய வைப்புத் தொகை 1981 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. இலங்கை ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வைப்புத் தொகை தொடர்பான முடிவு திருத்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

'ஜனநாயகத்திலுள்ள நெருக்கடியை காட்டுகிறது'

அதிபர் தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது நாட்டின் ஜனநாயகத்திலுள்ள நெருக்கடியை வெளிக்காட்டுகிறது என்று ஸ்ரீ ஜயவர்தனேபுர பல்கலைக்கழகத்தின் சமூக அரசியல் பிரிவின் தலைமை பேராசிரியர் விஷாக சூரியபண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கான வைப்புத்தொகையை அதிகரிப்பது, வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பொருத்தமானதாக இருக்கும் என்று பிபிசி சிங்கள சேவையிடம் அவர் கூறினார்.

"அரசியல் கட்சிகள் கலைக்கப்படுகிறது. ஆளுமைகள் உருவாகிறார்கள். அப்படியென்றால் ஜனநாயகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முக்கிய கட்சிகள் இதனை கையாள முழுவதுமாக தவறிவிட்டன. இந்த வேட்பாளர்கள் யாரும் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.'' என்கிறார் அவர்

இந்த நிலைமை ஜனநாயகத்தின் முக்கிய பகுதியான, பெரும்பான்மை மக்களின் ஒப்புதல் பெறுவது குறித்த கேள்வியை எழுப்புகிறது என்று பேராசிரியர் கூறுகிறார்.

"அத்தகைய சூழ்நிலையில், பெரும்பான்மை விருப்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு விருப்பம் வெளிப்படுத்தப்படுகிறது." என்கிறார் அவர்

தேர்தல் காலத்தில் சில சலுகைகளுக்காக சிலர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இப்போதும் கூட வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் முழுவதும் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு வைப்புத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்."என்கிறார்

இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஜனநாயகத்தில் சிக்கலை ஏற்படுத்தாதா என்று பேராசிரியையிடம் கேட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

"அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது அவர்கள் நல்ல கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக வைப்புத்தொகையை உயர்த்தி, தேவையான வரையறைகள் கொண்டுவரப்பட்டால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தடுக்கப்படாது. ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் முறையினால் ஜனநாயகம் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்." என்கிறார் அவர்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)