திமுக - பாஜக: தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறுமா? அடுத்தடுத்த இரு நிகழ்வுகளால் எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அரசியலில் சமீபத்திய இரு நிகழ்வுகள் கட்சிகள் அணி மாற்றத்திற்கான தயாராகி வருகின்றனவா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மூத்த அமைச்சர்களும் பங்கேற்றதும், கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதுமே இதற்குக் காரணம்.
எதிர்க்கட்சியான அதிமுக இதுகுறித்த சந்தேகங்களை எழுப்ப திமுக மட்டுமின்றி, பாஜகவும் கூட விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசியல் அரங்கில் என்ன நடக்கிறது? அடுத்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆளுநரின் தேநீர் விருந்தும், நாணய வெளியீட்டு விழாவும்

பட மூலாதாரம், @Udhaystalin
ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றது முதலே, அவரது தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தே வந்துள்ளது. கட்சி சார்பிலோ, அரசு சார்பிலோ யாரும் கலந்து கொண்டதில்லை.
ஆனால்,இம்முறை ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றது அரசியல் அரங்கில் பலரது புருவங்களை உயர்த்தியது.
அடுத்தபடியாக, ஆகஸ்ட் 18ஆம் தேதி கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
அந்த நாணயத்தில் கருணாநிதி கையெழுத்தில் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகமும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பாஜகவுடன் ரகசிய கூட்டு’ என்ற அதிமுக விமர்சனம்

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY/FACEBOOK
"ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க., புறக்கணிக்கும் என்று கூறிவிட்டு அரசு கலந்து கொள்ளும் என்கின்றனர். அக்கட்சிக்கு ஸ்டாலின் தலைவர், பொதுச்செயலாளர் துரைமுருகன். அவர்கள் இருவருமே கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுகின்றனர்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் மூலம் தி.மு.க., பா.ஜ.க உறவு வெளிப்பட்டுவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
கோவையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "அ.தி.மு.க., ஆட்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிட்ட போது, கூட்டணியில் இருந்தாலும் கூட பா.ஜ.க-வை அழைக்கவில்லை. நாணய வெளியீட்டு விழாவுக்கு ராகுல்காந்தியை அழைக்காததன் மூலம் தி.மு.க - பா.ஜ.க உறவு வெட்ட வெளிச்சமாகிவிட்டது" என்று குற்றம்சாட்டினார்.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் இந்தியில் எழுத்துகள் உள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், "தமிழ் தமிழ் என்று உச்சரித்தாலும் இந்திக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் தருவது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினார்.
அதிமுக குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில் என்ன?

பட மூலாதாரம், FACEBOOK
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அரசில் உள்ளவர்களை பழனிசாமி அரசு அழைத்தும் அவர்கள் மதிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், முதலமைச்சரின் இந்த கூற்றை கடந்த அ.தி.மு.க அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் மறுத்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அன்றைக்கு ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். நாங்கள் யாரை அழைத்தோம் என்பது நிர்வாகத்தில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். ஸ்டாலினுக்கு தெரிய வாய்ப்பில்லை. அன்று மத்திய அரசில் உள்ள யாருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை" என்றார்.
கருணாநிதி நாணயத்தில் இந்தி இடம் பெற்றிருப்பது தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க., எம்.பி., ஆ.ராசா எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார்.
"இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். எம்.ஜி.ஆருக்கு வெளியிட்ட நாணயத்திலும் இந்தி இருப்பதை பழனிசாமி அறியவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
விழாவை நடத்தியது மத்திய அரசா? மாநில அரசா?

பட மூலாதாரம், @mkstalin
"விழா அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயர் இடம்பெறவில்லை. தமிழக அரசின் இலச்சினைதான் இடம்பெற்றுள்ளது. அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்பி அழைத்தவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர். இந்நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தியை அழைத்திருக்கலாம்" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
கடந்த திங்கள்கிழமையன்று சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின், "நாணயத்தை வெளியிட்டது மத்திய அரசு. இது தி.மு.க நிகழ்ச்சி அல்ல. மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை" என்றார்.
இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, "மாநில அரசின் ஏற்பாட்டில் மத்திய அரசு நடத்திய விழா. மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் பங்கேற்று நாணயத்தை வெளியிட்டார். இதை முதலமைச்சரும் தெளிவாக கூறிவிட்டார்" என்றார்.
ஆளுநரின் தேநீர் விருந்து சர்ச்சைக்கு திமுகவின் விளக்கம்

பட மூலாதாரம், RSBharathi/X
"ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தி.மு.க., என்ற கட்சி பங்கேற்காது. அரசின் சார்பில் யாராவது பங்கேற்பார்களா என்பதை முதலமைச்சர் தெரிவிப்பார்" என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆர்.எஸ். பாரதி முன்னர் தெரிவித்திருந்தார். அதன் பிறகு தேநீர் விருந்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆளுநர் என்ற பதவியின் மீதும் அந்தப் பொறுப்பின் மீதும் முதலமைச்சர் பெரும் மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், அந்த கோட்பாட்டின் அடிப்படையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதாகவும் கூறினார்.
ஆளுநரின் தேநீர் விருந்தை கட்சி புறக்கணித்துவிட்டது, அரசு சார்பில்தான் முதலமைச்சரும், அமைச்சர்களும் பங்கற்றார்கள் என்பதை இதன் மூலம் திமுக தரப்பு தெளிவுபடுத்தியது.
பாஜக கூறியது என்ன?
கடந்த செவ்வாய் அன்று (ஆகஸ்ட் 20) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இதில் அரசியலுக்கு இடமில்லை" என்றார்.
தி.மு.க. - பாஜக இடையே ரகசிய உறவு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியதை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். "ரகசிய உறவு என்று கூறுவதற்கு என்ன காரணம்... பா.ஜ.க என்ன தொடக்கூடாத கட்சியா?" என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பா.ஜ.க எதிர்ப்பில் திமுக சமரசமா?
மேற்கூறிய இரு நிகழ்வுகளும் பா.ஜ.க எதிர்ப்பில் தி.மு.க., அரசு சமரசம் செய்து கொள்கிறதா? என்கிற கேள்வியை தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதனையே எதிர்க்கட்சியான அதிமுகவின் விமர்சனமும் வெளிப்படுத்துகிறது.
"கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக நான் பார்க்கவில்லை. நாணயத்தை வெளியிட வந்த ராஜ்நாத் சிங், கருணாநிதியின் சமாதிக்கு சென்றதே அரசியல் தான்" என்று தனது பார்வையை முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி.
மத்திய ஆட்சியில் மைனாரிட்டியாக உள்ள பா.ஜ.க அரசுக்கு புதிய கூட்டணிகள் தேவை என்பதால், தி.மு.கவை நோக்கி வலை வீசப்படுவதாக குறிப்பிடும் ஆர்.மணி, "சமாதியை ராஜ்நாத் சிங் சுற்றி வரும்போது, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் இருக்கும் புகைப்படம், மக்களுக்கு என்ன மாதிரியான தகவலை தெரிவிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தி.மு.க.,வுக்கு மத்திய அரசின் நிதி தேவை. தவிர, மத்திய புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடிகளைத் தவிர்க்க விரும்புகிறது" என பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க செய்தித் தொடர்பு செயலருமான வைகைச்செல்வனின் கருத்தும் இதையொட்டியதாகவே இருக்கிறது.
பிபிசி தமிழிடம் பேசிய வைகைச்செல்வன், "தி.மு.க.,வின் நட்பு பா.ஜ.க.,வுக்கு தேவைப்படுகிறது. தி.மு.க.,வுக்கும் பா.ஜ.க.,வின் உறவு தேவைப்படுகிறது. இது ரகசிய உறவாக நீடித்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசு இயங்குவதற்கு பா.ஜ.க.,வின் நட்பு தி.மு.க.,வுக்கு தேவைப்படுவதாக இதை எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.
‘தொடர்ந்து விரோதப் போக்கில் செயல்பட முடியாது’

பட மூலாதாரம், Getty Images
தி.மு.க., மீதான விமர்சனங்கள் குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் பேசிய போது, "எந்த இடத்திலும் பா.ஜ.க அரசு மற்றும் அதன் கொள்கையின் மீதான விமர்சனத்தை தி.மு.க., மென்மையாக அணுகவில்லை. கடந்த வாரம் நடந்த தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்கிறார்.
"அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அரசின் பிரதிநிதியாக ஆளுநர் இருக்கும்போது, தொடர்ந்து விரோதப் போக்கில் செயல்பட முடியாது" எனக் குறிப்பிடும் கான்ஸ்டன்டைன், நாணய வெளியீட்டு விழா சர்ச்சைக்கு பதில் அளித்தார்.
"நாணய வெளியீட்டு விழாவுக்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்தார். அரசியல் களத்தில் எதிரெதிர் நின்றாலும் தமிழர்களாக அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஜனநாயக முதிர்ச்சி. பா.ம.க நிறுவனர் ராமதாஸையும் தி.மு.க., அழைத்தது. இது நூற்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி." என்கிறார் கான்ஸ்டன்டைன்.
2026 தேர்தலில் கூட்டணிகள் மாறுமா?
பா.ஜ.கவுடன் தி.மு.க., இணக்கமாக செல்வதால் இந்தியா கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.மணி.
"2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன்தான் தி.மு.க., கூட்டணி இருக்கும். மோதி எதிர்ப்பு என்பதுதான் தி.மு.கவுக்கு பிரதானம். நேரடியாக பா.ஜ.கவுடன் தி.மு.க., செல்லாது. ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் மத்திய அரசுடன் பல வகைகளில் இணக்கமாக இருக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில், பா.ஜ.க எதிர்ப்பை தற்போதைக்கு தி.மு.க தள்ளி வைத்துள்ளது" என்கிறார் ஆர்.மணி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












