வக்ஃப் திருத்த மசோதாவில் சர்ச்சை எழ காரணம் என்ன? இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பது ஏன்?-முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சையத் மோஸிஸ் இமாம்
- பதவி, பிபிசி செய்தியாளர், லக்னோ
வக்ஃப் என்பது இஸ்லாம் சமயத்தில் மிகவும் மதிப்பு மிக்க செயலாகக் கருதப்படுகிறது. வக்ஃப் என்பது இறைப்பணிக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் ஆகும். அதை மீண்டும் உரிமை கோர இயலாது.
மத்திய அரசு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வக்ஃப் வாரியமும், எதிர்க்கட்சிகளும் இதன் தர்ம நன்கொடை பாரம்பரியம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளன.
இந்த மசோதாவை காரணமாக வைத்து வக்ஃப் சொத்துக்களை அரசு கையகப்படுத்த விரும்புவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் அரசோ, இந்த மசோதா வக்ஃப் சொத்துக்களை சிறப்பாக பயன்படுத்துவதற்காகவும், இது பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது என்று வாதாடுகிறது.
புதிய வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு குரல்கள் கிளம்பிய சூழலில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டு குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 31 நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?
ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை அரசியல் ரீதியாக எதிர்த்தாலும், ஆளும் கட்சியை ஆதரிக்கும் சில கட்சிகளும் இந்த மசோதா குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளன.
அவர்களது அதிருப்தி காரணமாகவே இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அரசு அனுப்ப நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி மணீஷ் திவாரி, ''இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. சமயத் தொண்டு தொடர்பான எந்த மசோதாவையும் கொண்டு வர அரசுக்கு உரிமை இல்லை. அரசின் இந்த முயற்சி கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதலாகும்," என்று தெரிவித்தார்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பியுமான அசாதுதின் ஒவைசி நாடாளுமன்றத்தில் “இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மத சுதந்திரத்தை மீறும் செயல்" என்று குற்றம்சாட்டினார்.
இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஒவைசியும் உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அரசாங்கம் கூறுவது என்ன?
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தபோது, அதன் சிறப்புகளை விவரித்தார்.
இந்த மசோதா கொண்டு வரப்பட்டால், வக்ஃப் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எளிதாகும் என அரசு கூறுகிறது.
நாடாளுமன்றத்தில் கிரண் ரிஜிஜு பேசுகையில், “இந்த மசோதா எந்த ஒரு மதத்தினரின் சுதந்திரத்திலும் தலையிடாது. இந்த மசோதா யாருடைய உரிமைகளையும் பறிப்பது பற்றி பேசவில்லை, மாறாக வக்ஃப் தொடர்பான விவகாரங்களில் உரிமை பெறாத மக்களுக்கான உரிமைகளை வழங்கவே கொண்டு வரப்பட்டுள்ளது," என்று கூறினார்.
எதிர்க்கட்சியினர் முஸ்லிம்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"வக்ஃப் வாரியத்தை மாஃபியாக்கள் கைப்பற்றி விட்டதாக எதிர்க்கட்சியின் தலைவர்கள் பலர் கூறியிருந்தனர். இருப்பினும் தங்கள் கட்சிக்காக அவர்கள் அமைதியாக உள்ளனர். இது குறித்து நாடு முழுவதும் விவாதித்துள்ளோம்,” என்றும் அவர் விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
திருத்தப்பட்டது என்ன?
வக்ஃப் சட்டம் 1995-ல் திருத்தம் கொண்டு வருவதற்காக வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் பெயர் "ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு'' சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act (UMEED)). அதாவது உமீத்.
இந்த மசோதாவின் விதியின்படி, இஸ்லாம் மதத்தை தொடர்ந்து ஐந்து வருடங்களாக பின்பற்றி வரும் ஒருவர் மட்டுமே நன்கொடையை வழங்க முடியும். அதாவது நன்கொடையாக வழங்கப்படும் சொத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும்.
வக்ஃப் சட்டத்தில் இரண்டு வகையான வக்ஃப் சொத்துக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் வகையானது அல்லாவின் பெயரில் வழங்கப்படுவது, அதாவது, 'அல்லாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்து. அதற்கு யாரும் வாரிசுரிமை கொண்டாட முடியாது,'.
இரண்டாவது வகை நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துகளை உரிமையாளர்களின் வாரிசுகள் கவனித்துக் கொள்ள இயலும்.
இந்த இரண்டாவது வகை நன்கொடையில்தான் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு அறிமுகம் செய்துள்ள புதிய மசோதாவில் இந்த விவகாரத்தில் தங்களின் வாரிசுரிமையை பெண்கள் இழக்க முடியாத வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு நன்கொடையாக அளிக்கப்பட்ட சொத்து அரசு கணக்குக்கு வந்தவுடன், அந்த சொத்துகளை கணவரை இழந்த பெண்கள் அல்லது பெற்றோர் இல்லாத குழந்தைகளின் நலனுக்காக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் பயன்படுத்த முடியும்.

பட மூலாதாரம், ANI
சொத்து தகராறு ஏற்பட்டால் என்ன நடக்கும்?
இப்போது, ஒரு சொத்து அல்லது நிலம் ஏற்கனவே அரசாங்கத்தின் வசம் இருந்தால், வக்ஃப் வாரியமும் அதை வக்ஃப் சொத்து என்று உரிமை கோரினால், புதிய மசோதாவின்படி, வக்ஃப்வின் கோரிக்கையானது மாவட்ட ஆட்சியினரின் முடிவை பொறுத்தே ஏற்றுக் கொள்ளப்படும்.
புதிய மசோதாவின் படி, அரசாங்கத்தின் வசம் உள்ள சொத்து மீது வக்ஃப் வாரியம் உரிமை கோரும் பட்சத்தில், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அறிக்கை அனுப்பலாம்.
மாவட்ட ஆட்சியரின் அறிக்கைக்கு பின், அந்த சொத்து அரசின் சொத்தாக கருதப்பட்டால், வருவாய் பதிவேடுகளில் அரசின் சொத்தாக நிரந்தரமாக பதிவு செய்யப்படும்.
முன்மொழியப்பட்ட மசோதாவில், கணக்கெடுக்கும் உரிமை வக்ஃப் வாரியத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மசோதாவின் விதிகளின்படி, எந்த சொத்தும் வக்ஃபுக்கு சொந்தமானதா இல்லையா என்பதை வக்ஃப் வாரியத்தால் கணக்கெடுக்க இயலாது.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி, வக்ஃப் வாரியத்தின் கணக்கெடுப்பு ஆணையருக்கு, வக்ஃப் என உரிமை கோரும் சொத்துக்களை கணக்கெடுக்கும் உரிமை உள்ளது. ஆனால் திருத்த மசோதாவில், அவரின் இந்த உரிமை பறிக்கப்பட்டு அது மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
மசோதாவில் வேறெந்த பிரிவுகள் சர்ச்சையை உருவாக்கியுள்ளது?
அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவின் இதர பிரிவுகளுக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதில் ஒன்று வக்ஃப் கவுன்சிலை அமைப்பது தொடர்பானது.
மத்திய வக்ஃப் கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களும் முஸ்லிம்களாக இருப்பது கட்டாயமாகும். ஆனால் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களும் இடம் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், மத்திய வக்ஃப் கவுன்சிலின் முஸ்லிம் உறுப்பினர்களில் இருவர் பெண்களாக இருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மசோதாவில் இடம் பெற்றுள்ள இதர அம்சங்களில் ஷியா மற்றும் சன்னி தவிர, போஹ்ரா மற்றும் அககானி இஸ்லாமியர்களுக்கும் தனித்தனியாக வாரியங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ANI
வக்ஃபின் செயல்முறைகள் என்ன?
வக்ஃப் செயல்முறை மிகவும் எளிமையானது. நிலம் வைத்திருக்கும் எவர் ஒருவரும் தனது சொத்தை நன்கொடையாக வழங்கலாம். அந்த நிலத்தை ஒரு மசூதிக்கோ, ஒரு இமாம்-பர்காவுக்கோ அல்லது தர்காவுக்கோ வழங்கலாம்.
இவ்வாறு தொண்டாக வழங்கப்பட்ட நிலத்தை அத்தகைய வழிபாட்டு தலங்களின் பராமரிப்புக்கு பயன்படுத்தலாம். ஆனால் புதிய மசோதாவில் வக்ஃப் பத்திரம் இல்லாமல் வக்ஃப் அமல்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய வக்ஃபுக்கும் வக்ஃப் பத்திரம் அவசியம் என்றும், இது போர்ட்டலில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் புதிய மசோதாவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வக்ஃப் நிலத்தை விற்க முடியாது. வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ தான் கொடுக்க முடியும்.
ஆனால் புதிய மசோதாவின் படி 12 வருடங்களுக்கு மேல் ஒருவர் அந்த சொத்தை வைத்திருந்தால் அவருக்கு அந்த சொத்தின் உரிமை கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இது முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மஹ்மூத் பிரச்சா பிபிசியிடம், “ஒரு வகையில் வக்ஃப் என்பது ஒரு சமூகத்தின் பொது நிலம். அரசு நிலத்தில் எப்படி ஆக்கிரமிப்புக்காரர்கள் உரிமை கோர இயலாதோ, அதே போலதான் வக்ஃப் சொத்து விஷயத்திலும் உரிமை கோருதல் பொருந்தாது," என்று தெரிவித்தார்.
ஆட்சியர் ராஜ்ஜியம் என குற்றம்
வக்ஃப் என அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு அரசு சொத்தும் வக்ஃப் ஆக கருதப்பட மாட்டாது என்று மசோதா கூறுகிறது.
இத்தகைய நிச்சயமற்ற சூழலில், அந்த மாவட்டத்தின் ஆட்சியர் உரிமையை நிர்ணயம் செய்து மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையில் அது அரசு சொத்தாக கருதப்பட்டால், அது வருவாய் பதிவேடுகளில் இணைக்கப்பட்டு புதுப்பிக்கப்படும்.
இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த அரசு சொத்தை வக்ஃப் வாரியம் உரிமை கோருகிறதா அது யாருக்கு சொந்தமானது என்பதை மாவட்ட ஆட்சியர் தான் தீர்மானிப்பார். இந்த மசோதா மாவட்ட ஆட்சியருக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட ஆட்சியரே ஒரு வாதியாக செயல்படுகின்ற சூழலில் அவர் எப்படி நடுநிலையோடு செயல்படுவார் என்று கேள்வி எழுப்புகிறார் பிரச்சா.
எந்த ஒரு நிலத்தையும் வக்ஃப் என அறிவிக்கும் முன், அரசு ஊழியரான சர்வேயர், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் நோட்டீஸ் கொடுத்து, ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றைப் பெற்று அதற்கு தீர்வு காண இயலும்.
வருவாய், கிராம நிர்வாகம், ரயில்வே, பாதுகாப்புத் துறை போன்ற அரசு துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த துறைகளின் ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன் பிறகு அறிக்கை தயாரிக்கும் சர்வேயர் அதனை வக்ஃப் வாரியத்துக்கும், அரசுக்கும் அனுப்புவார். இந்த செயல்முறை முடிந்ததும், அது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும்.
ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் சதாதுல்லா ஹுசைனி பிபிசியிடம் பேசும் போது, "இந்தத் மசோதா பழைய ஆங்கிலேயர் சட்டங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் மாவட்ட ஆட்சியர்களை இறுதி அதிகாரிகளாக நிறுவுவார்கள். இதன் மூலம் முஸ்லிம்களின் மதக் கொடைகளை நிர்வகிக்கும் உரிமைகளை மீற வழிவகை செய்யும்," என்று தெரிவித்தார்.
இது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் இருந்து சுற்றுச்சூழல் உரிமைகளையும், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் இருந்து வரி தொடர்பான உரிமைகளை திரும்பப் பெறுவது போன்றது என்று கூறினார் ஹுசைனி.
வக்ஃப் என்ற கருத்து நீண்ட கால மத மற்றும் தொண்டு பயன்பாட்டை அங்கீகரித்து வரும் அம்சமாகும். தற்போது அது அகற்றப்பட்டு வருகிறது. இந்த மாற்றம் வக்ஃப் சொத்துக்கள் தொடர்பாக மேலும் பல சர்ச்சைகளை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தலைபட்சமாக எடுக்கப்பட்ட முடிவு என குற்றச்சாட்டு
வக்ஃப் விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் ஃபுசைல் அகமது அய்யூபி, “இஸ்லாமிய அமைப்புகளுடன் விவாதிக்காமல் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரை கணக்கெடுப்பு ஆணையராக மாற்றுவது சரியல்ல. இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது இருந்த சட்டங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஏனென்றால் நிலம் அரசாங்கத்தின் வசம் இருக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியரே ஒரு வாதியாகிவிடுகிறார். அவரால் எப்படி நியாயம் வழங்க இயலும்? அவருடைய கைகளும் கட்டப்பட்டு இருக்கும்," என்று கூறினார்.
புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் ஆட்சியர் ஆட்சி அமலுக்கு வரும் என்றும், இருக்கும் சொத்துகளில் எது வக்ஃபுக்கு சொந்தமானது, எது இல்லை என்ற முடிவை அவரே எடுப்பார். இது வக்ஃபுக்கு தீங்காக அமையும் என்கிறார் ஜமியத் உலமா ஹிந்த் அமைப்பின் தலைவர் அர்ஷத் மதனி.
வக்ஃப் பத்திரம் இல்லாமல் இருக்கும் சொத்துகளை வக்ஃப் சொத்துக்களாக பரிசீலிக்க இயலாது என மசோதாவில் ஒரு விதி உள்ளது. அதாவது வக்ஃப் பத்திரம் இல்லாமல் ஏதேனும் சொத்து வக்ஃப் செய்யப்பட்டிருந்தால், அதன் சிக்கலை உருவாக்கும்.
ஷியா மதத் தலைவர் கல்பே ஜவாத் பிபிசியிடம் பேசிய போது, “இந்த மசோதா மூலம் வக்ஃப்பை ஒழிக்க சதி நடக்கிறது. பாஜகவிடம் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, ஆனால் இந்த மசோதாவை சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் எதிர்க்க வேண்டும், ஏனெனில் இது முஸ்லீம்கள் நன்கொடையாக வழங்கிய நிலத்தின் பிரச்னை, இதில் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாக இல்லை," என்று குற்றம் சாட்டினார்.
கல்பே ஜவாத் கூறுகையில், “வக்ஃப் நிலத்தில் 60 சதவீதம் அரசு வசம் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நவாப்கள் எழுதிய பல பழமையான வக்ஃப் பத்திரங்களை எப்படி கண்டுபிடிப்பது? வக்ஃப் நிலத்தை பெரிய ஆட்களுக்கு வழங்கவும், விற்கவும் தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. வக்ஃப்க்கு முடிவு கட்டும் நோக்கத்துடன், இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.
அய்யூபி மேலும், “ஏற்கனவே இருக்கும் விதிகள் ரத்து செய்யப்படுவதன் மூலம் நில மாஃபியாக்கள் வக்ஃப் சொத்துக்கு உரிமை கோரலாம், இது சர்ச்சையை மேலும் அதிகரிக்கும். தற்போதைய சூழலில் உரிமை கோர வாய்ப்புகள் உள்ளது," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
முஸ்லிம் அல்லாதோரை வக்ஃப் வாரிய உறுப்பினராக்கும் முயற்சி
அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவில் முஸ்லிம் அல்லாதவர்களும் வக்ஃப் வாரியத்தில் உறுப்பினர்களாகலாம் என்ற விதி உள்ளது. இதற்கு முஸ்லிம் மதத் தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
ஷியா மதத் தலைவர் கல்பே ஜவாத் கூறுகையில், “நிக்காவை ஒரு பண்டிதர் செய்வது போன்றும், திருமண சம்பிரதாயங்களை மௌலவி நடத்துவதும் போல் இருக்கிறது புதிய திருத்த மசோதோ. வக்ஃப் என்பது இஸ்லாமிய சட்டங்களின் படி உருவாக்கப்பட்டது. அதில் முஸ்லிம் அல்லாதோருக்கு என்ன வேலை? இந்து கோவில்களின் வாரியத்தில் முஸ்லிம்களை இணைக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
"பல கோவில்களில் தங்கம் இருப்பு உள்ளது. இந்த தங்கம் ரிசர்வ் வங்கிக்கு சென்றால் டாலரின் மதிப்பு ரூபாய்க்கு சமமாகிவிடும். அரசு இதை நோக்கமாக கொண்டு செயல்படுமா?" என்றும் கேள்வி எழுப்பினார் அவர்.
முஸ்லிம் அல்லாத ஒருவரை வக்ஃப் வாரியத்தில் உறுப்பினராக்கினால், சமணம், சீக்கியம், கிறிஸ்தவம் மற்றும் இந்து மதங்களின் வாரியங்களில் சட்டங்களை உருவாக்க வழி உருவாகும் என்றும் அதில் அந்தந்த மதங்களில் உள்ள இறை நம்பிக்கை இல்லாதோர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்படலாம் என்றும் அய்யூபி கூறுகிறார்.
உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் தலைவர் அலி ஜைதி பிபிசியிடம் பேசும் போது, “இப்போது இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு சென்றுள்ளது. தற்போது, ஒரு குழு மசோதா பற்றி ஆலோசித்து வருகிறது. வாரியம் அதன் சொத்துக்களை ஆய்வு செய்து வருகிறது," என்று தெரிவித்தார்.
இருப்பினும், நாட்டில் உள்ள அனைத்து வக்ஃப் வாரியங்களிலும், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் மட்டுமே ஷியா பிரிவினருக்கான வக்ஃப் வாரியங்கள் உள்ளன.
பெண்களை இணைத்திருப்பது வரவேற்கதக்கது
மசோதாவின் இதர பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒரே ஒரு பிரிவுக்கு இஸ்லாம் உலகின் அறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை. அது வக்ஃப் வாரியத்தில் பெண்களை இடம் பெற செய்யும் பிரிவாகும்.
ஹுசைனி அது குறித்து பேசும் போது, " பெண்களை வாரிய உறுப்பினர்களாக அறிவித்திருப்பது, ஷியா மற்றும் இதர பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது போன்ற சில மாற்றங்கள் நன்மையை அளிக்கிறது. நாங்கள் இந்த மசோதாவில் இருக்கும் நேர்மறையான கருத்துகளை ஏற்றுக் கொள்கிறோம். அதனை வரவேற்கிறோம்," என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், மக்களின் நன்மைக்காக சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று கூறிய ஹுசைனி, இது போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்ட நபர்களும் ஆலோசனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
"தேவை ஏற்படும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். ஏன் என்றால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நியாயத்தின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது. மக்களின் சொத்துகளை பாதுகாப்பதற்கு பதிலாக, இந்த மாற்றங்கள் அந்த சொத்தின் அழிவுகளுக்கு வித்திடுகிறது. எனவே இந்த மசோதாவை தடுத்து நிறுத்துவது அவசியமாகிறது," என்றும் ஹுசைனி கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
வக்ஃபின் சொத்து மற்றும் நிர்வாகம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2009ம் ஆண்டு வம்சி(VAMSI) போர்ட்டலை உருவாக்கியது. வக்ஃப் சொத்துகளின் தரவு தளமாக அது செயல்படுகிறது. தற்போது வரை 8,72,324 அசையா சொத்துகளும்,16,713 அசையும் சொத்துகளும் வக்ஃப் சொத்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 97% சொத்துகள் 15 மாநிலங்களில் உள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 2,32,457 சொத்துகள் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் 10,314 வக்ஃப் உடைமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த தரவுதளத்தின் படி, வெறும் 39% வக்ஃப் சொத்துகள் மட்டுமே சொத்து தகராறுகள் ஏதும் இல்லாமல் இருப்பவை.
50% மேற்பட்ட சொத்துகள் குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை. 7% சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 2% உடைமைகள் மீது சொத்து தகராறு உள்ளது.
சொத்து விவகாரம் தொடர்பாக, டெல்லியில் மத்திய அரசு 123 வக்ஃப் சொத்துகளை கையகப்படுத்தியுள்ளது. இதில் மசூதி ஒன்றும் அடங்கும். அது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள் கூறுவது என்ன?
பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜமால் சித்திக்கி, "வக்ஃப் வாரியத்தின் நிலங்கள் அனைத்தும் இதுவரை தவறாக பயன்படுத்துப்பட்டு வந்தன. விற்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள நிலங்கள் எங்கே என்று யாருக்கும் தெரியாது. வக்ஃப்வின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை கணக்கிட்டால், அதன் ஆண்டு வருமானம் ரூ. 3500 கோடியாக இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அது தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லை. தற்போது அரசாங்கம் இதை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியினர் தங்களின் வாக்கு வங்கிகளை பாதுகாக்க இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது," என்று தெரிவித்தார்.
அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவரான மௌலானா முஃப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, "வக்ஃப் வாரியம் தொடர்பாக மத்திய அரசு ஒரு மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மூலம், வக்ஃப் வாரிய சொத்து தொடர்பாக தன்னிச்சையாக வக்ஃப் வாரியம் செயல்படுவதை அரசாங்கம் நிறுத்தும். வக்ஃப் சொத்துகளை லாப நோக்கத்திற்காக நில மாஃபியாக்களுக்கு விற்பது அல்லது குத்தகைக்கு விடுவது கட்டுப்படுத்தப்படும்," என்று கூறினார்.
இந்தியாவின் அனைத்து வக்ஃப் வாரியங்களின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் நில மாஃபியாவுடன் இணைந்து வக்ஃப் சொத்துக்களை தன்னிச்சையாக பயன்படுத்துகின்றனர் என்று ரஸ்வி குற்றம் சாட்டினார்.
"வக்ஃப் வாரியம் தன்னுடைய பணியை உண்மையாக செய்திருந்தால், நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை கண்கூடாக பார்த்திருக்க முடியும். முன்னோர்கள் அவர்களின் சொத்துகளை வக்ஃபுக்கு நல்ல நோக்கத்திற்காக வழங்கினார்கள். அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து, முஸ்லீம் சிறுவர் சிறுமிகளுக்கு கல்வியை வழங்கியிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை," என்று கூறினார் ரஸ்வி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












