கொல்கத்தா மருத்துவர் கொலை: பெண்களின் தன்னெழுச்சிப் போராட்டம் மமதாவை கவலையில் ஆழ்த்தியுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரபாகர் மணி திவாரி
- பதவி, பிபிசி இந்திக்காக, கொல்கத்தாவில் இருந்து
“ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும். வங்கதேசத்தைப் போல இங்கும் எனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. எனக்கு அதிகாரப் பேராசை இல்லை. இந்தச் சம்பவத்தில் சி.பி.எம் மற்றும் பா.ஜ.க-வினர் அரசியல் செய்கின்றனர். ஆர்.ஜி மருத்துவமனை மீதான தாக்குதலின் பின்னணியில் இவர்களே உள்ளனர்.”
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இளநிலைப் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வெளியிட்ட அறிக்கை இது.
இதற்கு முன், பொதுவாக அவர் எந்த விஷயத்திலும் இதுபோன்ற அறிக்கைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டதை பார்க்க முடியவில்லை. எனவே இச்சம்பவம் காரணமாக மமதா கடும் மன உளைச்சலில் உள்ளாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தனது மிகப் பெரிய வாக்கு வங்கி சிதைந்துவிடும் அபாயத்தை அவர் எதிர்கொள்கிறாரா? தனது மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் முறையாக இவ்வளவு கடினமான சவாலை அவர் எதிர்கொள்கிறாரா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Prabhakar Mani Tiwari
தெருவில் இறங்கிய மமதா
இந்தச் சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை மாலை மமதா வீதிகளில் இறங்கியதால் இந்த விவாதங்களும் கேள்விகளும் மேலும் வலுப்பெற்றுள்ளன.
பொதுவாக அவர் எந்த ஒரு விஷயத்திற்காகவும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவதில்லை. என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராகவே அவர் கடைசியாகதான் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு அரசு மற்றும் காவல்துறையின் பங்கு கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில், 'ரீக்ளெய்ம் தி நைட்' என்ற அறைகூவலின் பேரில் மாநிலத்தில் சுமார் 300 இடங்களில் பெண்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி போராட்டம் நடத்தியிருப்பது, மமதாவின் இந்த வலுவான வாக்கு வங்கி சிதைந்து போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாநிலத்தில் தேர்தல் இல்லாவிட்டாலும், இந்த விவகாரத்தைத் தங்களுக்கு சாதகமாக்கி, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை உயிர்ப்புடன் வைத்திருக்க எதிர்கட்சிகள் நிச்சயம் முயற்சி செய்யும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். இதற்கான முயற்சிகளும் தொடங்கியுள்ளன.

பட மூலாதாரம், Prabhakar Mani Tiwari
எதிர்க்கட்சிகளின் தாக்குதலும், மமதாவின் கவலையும்
மமதா பானர்ஜி அரசு எல்லா பக்கங்களில் இருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
பா.ஜ.க மற்றும் சி.பி.எம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரசும் அவருக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளது. இதில் ராகுல் காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோரும் அடங்குவர்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மாலை மமதா கொல்கத்தாவின் மௌலாலியில் இருந்து தரம்தல்லா பகுதிக்கு சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்தார். அவருடன் கட்சியின் எல்லா எம்.பி-க்கள் மற்றும் தலைவர்களும் நடைபயணத்தில் ஈடுபட்டனர். 'குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்’ என்ற முழக்கம் தொடர்து எழுப்பப்பட்டது.
அவர்கள் தங்கள் கைகளில் வாசக அட்டைகள் மற்றும் போஸ்டர்களை ஏந்தியிருந்தனர். சிலர் இந்தக் கோரிக்கை எழுதப்பட்டிருந்த வாசக அட்டைகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர்.
இப்பேரணியின் போது, மமதா கூப்பிய கைகளுடன் முன்னணியில் நடந்து கொண்டிருந்தார். தன் இயல்பிற்கேற்ப, அவ்வப்பொழுது ஆங்காங்கே நின்று பொது மக்களிடமும் பேசினார்.
ஆனால், அவர் முகத்தில் வழக்கமாக இருக்கும் தன்னம்பிக்கைக்கு பதிலாக கவலையின் ரேகைகள் காணப்பட்டன. பாத யாத்திரையின் போது இந்த ரேகைகள் சற்றே ஆழமாக இருந்தன என்று கூறுவது சரியாக இருக்கும்.

பட மூலாதாரம், Prabhakar Mani Tiwari
‘மமதாவும், அவரது அரசும் தவிக்கின்றன’
இந்தப் பாத யாத்திரை சென்ற அதே சாலையில் உள்ள ஒரு பழைய இரண்டு மாடி வீட்டில் வசிக்கிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் மஞ்சுநாத் பிஸ்வாஸ்.
"இந்த முறை மமதாவும் அவரது அரசும் ஒரு பொறியில் சிக்கியுள்ளனர். அவர் முழு சம்பவத்தையும் மறைக்க முயற்சிக்காமல் இருந்திருந்தால், இன்று வீதியில் இறங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வரைப் பாதுகாத்து, அவர் பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே அவருக்கு மீண்டும் வேறொரு பதவி வழங்கியது போன்றவை, அவரது கழுத்திற்கு சுருக்கு கயிறாக மாறியுள்ளன,” என்று குறிப்பிட்டார்.
மமதாவுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க பிரச்னைகளைத் தேடிய எதிர்க்கட்சிகளுக்குத் தற்போது இது வசதியாக போய்விட்டது என்று பிஸ்வாஸ் கூறினார்.
அதே சாலையில் கடை நடத்தி வரும் முகமது சபீர், “மாநில முதல்வர் ஒரு பெண். கட்சியில் 11 பெண் எம்.பி-க்கள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடந்த பிறகும் அரசு எதிர்பார்த்த அளவிற்கு முன்வந்து செயலில் இறங்கவில்லை,” என்று தெரிவித்தார்.
“இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டுள்ளது உண்மைதான். ஆனால் மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை அதன் சாதனையும் சிறப்பாக இல்லை.” என்று அவர் மேலும் கூறினார்.
இதனால்தான் எதிர்க்கட்சிகளின் தாக்குதலை மழுங்கடிக்க மமதா தற்போது மாநிலத்தின் சாமானிய மக்களுடன் இணைந்து குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Prabhakar Mani Tiwari
இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க மீதான குற்றச்சாட்டு
பாத யாத்திரைக்குப் பிறகு மமதா ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு தனது உரையில் எதிர்க்கட்சிகளை குறை கூறியதோடு, கூடவே சி.பி.ஐ ஞாயிற்றுக்கிழமைக்குள் விசாரணையை முடித்துக் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினார்.
ஹாத்ரஸ், உன்னாவ், மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த போது, மத்திய அரசு எத்தனை மத்திய குழுக்களை அங்கு அனுப்பியது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் மேற்கு வங்கத்தில் ஒருவரை எலி கடித்தால்கூட மத்திய அரசின் 55 குழுக்கள் இங்கு வந்துவிடுகின்றன என்று மமதா குறிப்பிட்டார்.
விசாரணையை முடிக்க 164 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் கேட்டதாகவும் முதல்வர் கோபமான தொனியில் கூறினார்.
“விசாரணை செயல்முறை நீளமானது மற்றும் நேரம் எடுக்கக் கூடியது. ஆனால் யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. இதை வைத்து அரசியல் செய்யப்பட்டது மற்றும் தற்போது சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. அது ஞாயிற்றுக்கிழமைக்குள் விசாரணையை முடித்து குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்,” என்றார் அவர்.
மகளிர் நலனுக்காக தனது அரசு ஆற்றி வரும் பணிகளைப் பட்டியலிட்டுப் பேசிய மமதா, மக்களவைக்கு 38% பெண்களை தனது கட்சி மட்டுமே அனுப்பியுள்ளது என்றார்.
“நகராட்சியில் 50% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ’ஸ்வாஸ்திய ஸாத்தி’ அட்டையில் கூட குடும்பத் தலைவர் என்ற முறையில் வீட்டின் பெண்ணின் பெயரே உள்ளது. பெண்களுக்காக கன்யாஸ்ரீ, ரூபஸ்ரீ போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக 'இடது (வாம்) மற்றும் ராமர் (ராம்) அதாவது இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க அரசியல் செய்வதாக முதல்வர் மீண்டும் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Prabhakar Mani Tiwari
முதல் சம்பவம் அல்ல
மமதா பானர்ஜி அரசு இதுபோன்ற சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல.
மமதா ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்து, அதாவது 2012-இல் கொல்கத்தாவின் ஆடம்பரமான பகுதியான ‘பார்க் ஸ்ட்ரீட்’டில் ஓடும் காரில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது.
பாதிக்கப்பட்ட பெண் முன் வந்து இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஆனால் அப்போது மமதா அதை ‘ஜோடிக்கப்பட்ட சம்பவம்’ என்று கூறியிருந்தார். இதனால் அவர் பெரும் கண்டனங்களை சந்திக்க நேரிட்டது.
அடுத்த வருடமே காம்துனியில் 20 வயது கல்லூரி மாணவி 8 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பின்னர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் வயலில் வீசப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, ’குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிறிய தண்டனை மட்டுமே கிடைக்கும் வகையில்’ நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றம் குற்றவாளிகளின் தண்டனையை மன்னித்த போது, காம்துனி வழக்கு மீண்டும் தலைப்புச் செய்தியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற சவால்களையும், தனக்கு எதிராக எழும் அரசியல் புயலையும் சமாளித்து ஒவ்வொரு முறையும் மமதா வெற்றி பெற்று வருகிறார் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். ஆனால் தற்போதைய இந்த சம்பவம் காவல்துறை, அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் அவரது அரசை பிரச்னையில் சிக்க வைத்துள்ளது.

பட மூலாதாரம், Prabhakar Mani Tiwari
மமதா அரசு தாக்குதலுக்கு உள்ளாவதற்கு வேறு காரணங்கள் என்ன?
மமதாவின் பாதயாத்திரை எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக அவரது பதில் என்று அரசியல் ஆய்வாளர் ஷிகா முகர்ஜி கூறுகிறார்.
இந்தச் சம்பவத்தை விட, நிர்வாகமும் காவல்துறையும் இந்த விஷயத்தை மூடி மறைக்க முயன்றதாகக் கூறப்படுவது பற்றியே பொது மக்களிடம் கோபம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்து ஒன்பது மணி நேரம் வரை இதுகுறித்து யாருக்கும் தகவல் கிடைக்கவில்லை. அதன் பிறகு இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் அவர்களது மகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. சிறிது நேரம் கழித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் போனில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ஜூனியர் டாக்டரின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தபோது போலீஸ் நடவடிக்கை நடப்பதாகக் கூறி மூன்று மணி நேரம் வேறு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாமல், கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவக் கல்லூரியின் முதல்வராக அவர் நியமிக்கப்பட்டார். இந்த முடிவானது, போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் ஜூனியர் டாக்டர்களின் கோபத் தீயில் எண்ணெய் வார்த்தது.
"மமதா பானர்ஜி அரசின் மீதான இந்த வெறுப்பு ஒரு நாளில் வளரவில்லை. ஆசிரியர் நியமனம் தவிர, ரேஷன், நிலக்கரி போன்ற ஊழல்கள், வடக்கு தினாஜ்பூர், தெற்கு 24 பர்கானா உள்ளிட்ட பல பகுதிகளில் கங்காரு நீதிமன்றங்களின் கொடூர தீர்ப்புகளும், இவற்றில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் தொடர்பு குறித்த ஆதாரங்கள் காரணமாகவும் சாமானியர்களின் மனதில் கோபம் மெள்ள மெள்ள அதிகரிக்க ஆரம்பித்தது. ஆர்.ஜி-கர் மருத்துவமனைச் சம்பவம் இந்தக் கோபத்தைக் கொழுந்துவிட்டு எரியச்செய்தது. இது மமதாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது,” என்கிறார் சமூக அறிவியல் பேராசிரியர் அனிருத் பால்.
“மமதாவின் பாத யாத்திரை எதிர்க்கட்சிகளுக்கு அவரது அரசியல் பதில். ஆனால், எதிர்கட்சிகளின் தாக்குதல்கள் பற்றி மமதாவுக்குப் பெரிதாக கவலையில்லை. சந்தேஷ்காலி உட்பட பல தாக்குதல்களை அவர் ஏற்கனவே வெற்றிகரமாக எதிர்த்துச் சமாளித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு எதிராக பெரும் எண்ணிக்கையில் பெண்களும் மாணவர்களும் வீதியில் இறங்கியுள்ள நிலையில் அரசு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுவிடுமோ என்று மமதா அஞ்சுகிறார்,” என்று அரசியல் ஆய்வாளர் ஷிகா முகர்ஜி கூறினார்.
“இந்தப் பெண்கள்தான் மமதாவின் மிகப்பெரிய வாக்கு வங்கி. 2008 பஞ்சாயத்து தேர்தலில் இருந்து இந்த வாக்கு வங்கி மூலம் மமதாவின் கட்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க-விடம் இருந்து கடும் சவாலை சந்தித்தாலும், இந்த ஓட்டு வங்கியின் உதவியால் அக்கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தது,” என்றார் அவர்.
”பெண்களின் கோபத்தை போக்க என்ன உத்தியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மமதா இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ’ரீக்ளைம் தி நைட்’ என்ற தன்னிச்சையான மற்றும் மிகவும் வெற்றிகரமான இயக்கம். இது அவரது முகத்தில் கவலையின் ரேகைகளை அது ஆழமாக்கியுள்ளது. இதுவரை அந்தப் பிரசாரம் குறித்து ஒரு வார்த்தை கூட அவர் பேசாமல் இருப்பதற்கு இதுவே காரணம். மாறாக பாத யாத்திரைக்குப் பின் நடந்த கூட்டத்தில், பெண்களுக்காக ஆற்றிய பணிகளை மட்டுமே அவர் பட்டியலிட்டார். பெண்களின் இந்த போராட்டம் மமதா பானர்ஜி அரசின் தலைக்கு மேலே வாள் போல தொங்கிக் கொண்டிருக்கிறது,” என்று ஷிகா கூறினார்.
அடுத்த சட்டபேரவைத் தேர்தலுக்கு ஏறக்குறைய இரண்டு வருடங்களே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் தங்கள் அரசின் மீது ஏமாற்றமடைந்தால் மமதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் அரசியல் வாழ்க்கை ஆபத்தில் சிக்கக்கூடும் என்றும் ஷிகா கூறுகிறார்.

பட மூலாதாரம், Prabhakar Mani Tiwari
மமதா முன் உள்ள உண்மையான சவால்
மறுபுறம், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்தப் பிரச்னையில் முதல் நாளிலிருந்தே சி.பி.எம் மற்றும் பா.ஜ.க., அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்துச் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான பெண்கள் தெருக்களில் இறங்கிய அதே இரவில், சி.பி.எம் கட்சியின் இளைஞர்கள் மற்றும் மாணவர் பிரிவினர் ஆர்.ஜி கர் மருத்துவமனை உட்பட மாநிலம் முழுவதும் பல இடங்களில் தனித்தனியாக போராட்டங்களை நடத்தினர்.
பா.ஜ.க-வும் தொடர்ந்து அரசைத் தாக்கி வருகிறது.
“மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ’பா.ஜ.க மற்றும் இடதுசாரிகள்’ தான் காரணம் என்று மமதா கூறியிருக்கிறார். ஆனால் மருத்துவமனையைத் தாக்குவதற்கு மமதாதான் திரிணாமூல் குண்டர்களை அனுப்பியுள்ளார்,” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பா.ஜ.கவின் சுபேந்து அதிகாரி ஒரு ட்வீட்டில் குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகாந்த் மஜும்தார் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு காவல்துறை ஆணையர் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை அக்கட்சியினர் சாலைகளில் வாகன போக்குவரத்தை நிறுத்தினர். போராட்டத்தின் போது சுகாந்த் மஜும்தாரை போலீசார் காவலில் வைத்தனர்.
மறுபுறம் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீது கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பெண் முதல்வர் ஆட்சியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி குறிப்பிட்டார். "இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அதை மூடி மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே குடும்பத்திற்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டது" என்றார் அவர்.
இந்தச் சம்பவம் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மமதா பானர்ஜி புரிந்து கொண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதனால் தான் தினமும் போலீஸ் கமிஷனரிடம் விளக்கம் அளிக்குமாறு கூறி வருகிறார். இது தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக வெள்ளிக்கிழமை கூட போலீஸ் கமிஷனர் செய்தியாளர்களிடம் கூறினார்.
போலீசார் விசாரணையில் மிகவும் நேர்மையாக இருந்தும் கூட, இது போன்ற தகவல்கள் காரணமாக போலீசாரின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது என்று அவர் சொன்னார். இது போன்ற வதந்திகளை மமதா பானர்ஜியும் விமர்சித்துள்ளார். எல்லா செய்திகளும் உண்மையல்ல என்று அவர் கூறினார்.
”மமதாவின் நெற்றியில் ஆழமாகப் பதிந்துள்ள கவலை ரேகைகள் அரசியல் எதிரிகளின் தாக்குதலின் அடையாளம் அல்ல, மாறாக தனது மகளிர் வாக்கு வங்கி சிதைத்துவிடுமோ என்ற அச்சத்தின் அடையாளம் அது. இந்த வழக்கு சி.பி.ஐ-இன் கைக்குச் சென்றபிறகும் தனது இயல்புக்கு ஒத்துவராத கருத்துகளை அவர் கூறுவதற்கு இதுவே காரணம்,” என்று மூத்த பத்திரிக்கையாளர் தாபஸ் முகர்ஜி கூறினார்.
"மமதா பானர்ஜியின் கோரிக்கையின்படி இந்த வழக்கின் விசாரணையை ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிப்பது சாத்தியமே இல்லை. பல கோணங்களில் நாங்கள் விசாரித்து வருகிறோம். எல்லா ஆவணங்களையும் ஆய்வு செய்வதுடன் டஜன்கணக்கானவர்களை விசாரிக்கவும், சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஸ்கேன் செய்வதற்கும் நீண்ட காலம் ஆகக்கூடும்,” என்று இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மறுபுறம், சி.பி.ஐ வெள்ளிக்கிழமையன்று ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. இது தவிர ஜூனியர் டாக்டர் பணிபுரிந்த துறையின் தலைவர் உட்பட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இன்னும் டஜன் கணக்கானவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சி.பி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மறுபுறம் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
கடந்த பல விவகாரங்களைப் போலவே இம்முறையும் மமதா பானர்ஜி தனது அரசை சுழலில் இருந்து காப்பாற்றுவாரா இல்லையா என்பது வரும் நாட்களில்தான் தெரியவரும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். ஆனால் தற்போது மகளிர் வாக்கு வங்கியை உடையாமல் காப்பாற்றும் கடும் சவாலை அவர் எதிர்கொண்டுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












