மோதி யுக்ரேன் செல்ல இந்தியா மீது அமெரிக்கா கொடுத்த அழுத்தம்தான் காரணமா?

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி

பிரதமர் நரேந்திர மோதி இந்த வாரம் யுக்ரேனுக்கு அதிகாரபூர்வ பயணமாகச் செல்ல இருக்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

"யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார்" என்று வெளியுறவு அமைச்சக செயலர் (மேற்கு), தன்மய் லால் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

"இதுவொரு முக்கியமான மற்றும் வரலாற்றுப் பயணம். ஏனெனில் நமது தூதாண்மை உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் இந்திய பிரதமர் ஒருவர் யுக்ரேனுக்கு செல்வது இதுவே முதல்முறை" என்று அவர் கூறினார்.

ரஷ்யா-யுக்ரேன் மோதல் குறித்துப் பேசிய தன்மய் லால், "இந்தியா மிகவும் தெளிவான மற்றும் நிலையான நிலைப்பாட்டைப் பராமரிக்கிறது. இந்த மோதலை தூதாண்மை மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். அது நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். எனவே பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது," என்று குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இருதரப்புக்கும் ஏற்புடைய மாற்றுவழிகள் மூலம் மட்டுமே நிரந்தர அமைதியை அடைய முடியும். எனவே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றார் அவர்.

”இந்தச் சிக்கலான பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண சாத்தியமான எல்லா உதவிகளையும், பங்களிப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியா-யுக்ரேன் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவு என்னவாக இருக்கும் என்று முன்கூட்டியே கணிப்பது சரியாக இருக்காது,” என்று தன்மய் லால் தெரிவித்தார்.

யுக்ரேன் செல்வதற்கு முன் பிரதமர் மோதி போலந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

”போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்கின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோதி, ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் போலந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்து செல்கிறார்" என்றார் தன்மய் லால்.

நமது தூதாண்மை உறவுகள் நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸெலென்ஸ்கி என்ன சொன்னார்?

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் பயணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

"ஆகஸ்ட் 23ஆம் தேதி யுக்ரேனின் தேசியக் கொடி தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வருகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் துவங்கிய பிறகு இந்திய பிரதமர் ஒருவர் யுக்ரேனுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அதிபர் ஸெலென்ஸ்கி விவாதிப்பார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்" என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

கடுமையான எதிர்வினை

கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா-யுக்ரேன் போர் வெடித்த பிறகு பிரதமர் மோதி இத்தாலி மற்றும் ஜெர்மனியில் நடந்த ஜி7 உச்சி மாநாடுகளின் போது யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்தார். ஆனால் அவர் இதுவரை யுக்ரேனுக்கு செல்லவில்லை.

இத்தாலியில் ஸெலென்ஸ்கியை சந்தித்த மோதி, யுக்ரேன் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறினார்.

தற்போது பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணத் திட்டம் பலரிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றுள்ளது.

“இந்த நேரத்தில் மோதியின் யுக்ரேன் பயணம் மிகவும் மோசமானது என்று நிரூபணமாகலாம். யுக்ரேனின் சமீபத்திய கைப்பற்றல்களுக்குப் பிறகு ரஷ்யா அதன் மீது பெரும் தாக்குதலை நடத்தத் தயாராகி வருகிறது. இங்கு போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த ஆர்வமும் இல்லை,” என்று பாதுகாப்பு விவகார நிபுணர் பிரம்மா செலானி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தைக் குறிப்பிட்ட பிரம்மா செலானி, இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் மீது கவனம் செலுத்துமாறு மோதிக்கு அறிவுரை வழங்கினார்.

மோதி யுக்ரேன் செல்ல அமெரிக்காவின் அழுத்தமே காரணமா?

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஜூன் மாதம் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி இத்தாலி சென்றார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி ஜூலை மாதம் ரஷ்யா சென்றிருந்தார். ரஷ்ய அதிபர் புதினுடனான பிரதமர் மோதியின் சந்திப்பு குறித்து யுக்ரேன் அதிபர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால் தாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக வொலோதிமிர் ஸெலென்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

”இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர், ரத்தக்களரியை ஏற்படுத்தியுள்ள உலகின் மிகப்பெரிய குற்றவாளியைத் தழுவிக்கொண்டது அமைதி முயற்சிகளுக்கு மிகப்பெரிய அடி" என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் 'தி வயர்' வெளியிட்ட ஒரு வீடியோவில், தூதாண்மை விவகார நிபுணர் கிருஷ்ணன் சீனிவாசனும் யுக்ரேன் செல்லும் மோதியின் திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிரதமர் யுக்ரேன் சென்றால் நான் ஏமாற்றமடைவேன். இதிலிருந்து எந்த நேர்மறையான விளைவையும் நான் காணவில்லை. மேலும் இந்தியாவின் தற்போதைய கொள்கைகளுக்கு இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானதாக நிரூபணமாகக் கூடும்,” என்று கரண் தாப்பரின் நிகழ்ச்சி ஒன்றில் கிருஷ்ணன் சீனிவாசன் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தற்போதைய கொள்கை சரியானதுதான் என்று கூறிய கிருஷ்ணன் சீனிவாசன், ”இந்தியா வெளிப்புற அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பராமரிக்கிறது. ஆனால் இந்தப் பயணத்திற்குப் பிறகு இந்தியா மீது மேற்கத்திய நாடுகளின் எந்த அழுத்தமும் இல்லை என்பதைக் காட்டுவது கடினம்,” என்றும் தெரிவித்தார்.

'இந்தியாவின் சுதந்திர பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதி'

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

சர்வதேச விவகார நிபுணரும், ஜேஎன்யு பேராசிரியருமான ஸ்வரன் சிங், தனியார் செய்தி சேனலில் நடந்த ஒரு விவாதத்தில், “பிரதமர் மோதி ஜூலை 8ஆம் தேதி ரஷ்யாவுக்கு சென்றதிலிருந்து அவர் விரைவில் யுக்ரேனுக்கும் செல்வார் என்றே தோன்றியதாக,” குறிப்பிட்டார்.

"இந்தியா உலகிற்கு புத்தரைக் கொடுத்தது, போரை அல்ல என்பது உண்மைதான். ஆனால் அவரது ரஷ்ய பயணத்திற்குப் பிறகு அமெரிக்கா கடுமையான எதிர்வினையை வெளியிட்டது. பிரதமரின் யுக்ரேன் பயணம் அதன் தாக்கமாகவும் இருக்கலாம். ஆனால் இது இந்தியாவின் சுதந்திரமான பாதுகாப்பு செயல் உத்தியின் ஒரு பகுதி என்று நான் கருதுகிறேன்,” என்றார் அவர்.

கடந்த 2022 பிப்ரவரியில் யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இருப்பினும் இந்தியா, சீனா போன்ற நட்பு நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்கின்றன.

இந்தப் போருக்கு ரஷ்யாவை நேரடியாகக் குற்றம் சாட்டுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. ரஷ்யா இதை ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அழைக்கிறது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தை மற்றும் தூதாண்மை வழிகள் மூலம் மோதலைத் தீர்க்குமாறு இரு அண்டை நாடுகளையும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

”ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது. குறிப்பாக சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா முயலும் நேரத்தில் இந்தக் கவலை வெளியானது,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், 'மோதி யுக்ரேனுக்கு பயணம் மேற்கொண்டால் அதை நாங்கள் வரவேற்போம்' என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்தார்.

அமெரிக்க தூதரின் எதிர்வினை

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூன்றாவது முறையாக பிரதமரான பிறகு நரேந்திர மோதி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரஷ்யாவை தேர்வு செய்தார்.

ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் நரேந்திர மோதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் யுக்ரேனில் டஜன்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஏவுகணைத் தாக்குதலில் சில குழந்தைகள் இறந்த செய்தியும் வெளியானது.

அதே நேரத்தில் நேட்டோவின் சிறப்பு உச்சி மாநாடும் வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியும் பங்கேற்றார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் வெளியுறவு அதிகாரி டொனால்ட் லூ உட்பட பல மூத்த அமெரிக்க அதிகாரிகள் மோதியின் ரஷ்ய பயணம் ‘நேரம் மற்றும் அது தரும் செய்தியின் அடிப்படையில் ஏமாற்றம் தருவதாக’ கூறினர்.

குறிப்பாக மோதிக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையே நடந்த கட்டித் தழுவலை ஸெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்தார்.

இதுதவிர அமெரிக்காவை ’லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்றும் ’போர்க் காலங்களில் செயல் உத்தி சுயாட்சி என்று எதுவும் இல்லை’ என்றும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறினார்.

இதைத் தொடர்ந்து ஜேக் சல்லிவனிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார்.

'சேதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி'

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதியின் ரஷ்ய பயணத்தை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கடுமையாக விமர்சித்தார்.

‘மோதியின் ரஷ்ய பயணத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ’தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

பிரதமர் மோதி யுக்ரேனுக்கும் பயணம் மேற்கொள்ளக் கூடும் என்று வெளியுறவு அமைச்சகம் அந்த நேரத்தில் சூசகமாகத் தெரிவித்திருந்தது.

இந்தியாவுக்கான யுக்ரேன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ’இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது’ தொடர்பாக யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் தொலைபேசியில் பேசினார்.

இதுதவிர இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் யுக்ரேன் பாதுகாப்பு ஆலோசகர் ஆண்ட்ரே யெர்மக் இடையிலும் தொலைபேசி உரையாடல் நடந்தது.

இந்தியா-யுக்ரேன் உறவுகள்

பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் குறித்து எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோதியும் அதிபர் ஸெலென்ஸ்கியும் சந்தித்தனர்.

இந்தியாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. ரஷ்யா - யுக்ரேன் போருக்கு முன்பு ஏராளமான இந்திய மாணவர்கள் யுக்ரேனுக்கு உயர்கல்விக்காகச் சென்றனர்.

இதுதவிர இந்தியா மற்றும் யுக்ரேன் இடையே பரஸ்பர வர்த்தகமும் உள்ளது. யுக்ரேனிடம் இருந்து பல்வேறு பொருட்களை வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.

இருதரப்பு உறவுகளில் பதற்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவை விமர்சிக்க இந்தியாவின் மறுப்பு ஆகியவற்றுக்கு இடையே யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் திமித்ரி குலேபா இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக இந்தியா வந்தார் என்று 'தி இந்து' நாளிதழில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது.

குலேபாவுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றமும், அமைதித் தீர்வு குறித்த விரிவான விவாதமும் நடைபெற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மார்ச் 25ஆம் தேதி தனது வருகையை அறிவித்த குலேபா, ’இந்தியாவை ’ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச குரல் மற்றும் ஒரு முக்கியமான உலகளாவிய சக்தியாக’ யுக்ரேன் பார்ப்பதாகக் கூறினார்.

மாறாக, மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் இருந்த போதிலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதை 2022 ஆகஸ்டில் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தியாவிற்கு வழங்கப்படும் ஒவ்வொரு பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயிலும் "குறிப்பிடத்தக்க அளவு யுக்ரேனிய ரத்தம் உள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே நட்பும் திறந்த உறவும் இருப்பதாகவும், ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு யுக்ரேன் உதவி செய்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் போர் தொடங்கியதில் இருந்து யுக்ரேன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் சென்ற ஒரு சில தலைவர்களில் மோதியும் ஒருவராக இருப்பார்.

இவர்களில் ஹங்கேரி, இந்தோனீசியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் அடங்குவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)