கிரிண்டர் செயலியில் தன்பாலின ஈர்ப்பாளர்களை குறிவைத்து நடக்கும் மோசடிகள் - தடை செய்வது தீர்வாகுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று காதலர் தினம். கிரிண்டர் (Grindr) ஆப்பில் எதிர்முனையில் இளைஞர் ஒருவர், என்னுடன் சாட்டிங் செய்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில், 'வீட்டில் யாரும் இல்லை. உன்னால் வர முடியுமா?' எனக் கேட்டார். நானும் மகிழ்ச்சியோடு அவரைச் சந்திக்கக் கிளம்பினேன். ஆனால், அதுவே என் வாழ்க்கையில் நான் சந்தித்த கொடூர நிகழ்வு" என்கிறார் விருதுநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
அருப்புக்கோட்டையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மறைவான ஓர் இடத்துக்கு அந்த இளைஞர் அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற ஐந்து நிமிடங்களில் இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் அவரைத் தாக்கியுள்ளனர்.
"நீ எதுக்கு இங்கே வந்தேன்னு தெரியும். முதல்ல உன் வீட்டைக் காட்டு" என மிரட்டியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பணம் கேட்டு அவர்கள் மிரட்டவும், தனது மொபைலில் உள்ள ஜிபே, போன் பே செயலிகளில் போதிய பணம் இல்லை எனக் கூறிய பிறகு, தான் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரத்தைப் பறித்துவிட்டு அனுப்பிவிட்டதாக பிபிசி தமிழிடம் வேதனைப்பட்டார்.
இந்த நபர் மட்டுமல்ல, பால் புதுமையினர் பலரும் தங்களுக்கான புதிய நண்பர்களைக் கண்டடையும் இடமாக கிரிண்டர் (Grindr) செயலியைப் பார்க்கின்றனர். இதையே மூலதனமாக வைத்து, சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவதாக, ஆகஸ்ட் 13 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு, திருநெல்வேலியில் நடந்த ஒரு சம்பவம் அடிப்படையாக அமைந்தது.
நெல்லை சம்பவம்
திருநெல்வேலியைச் சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாத இறுதியில் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, கிரிண்டர் செயலியில் தனக்கான நட்பைத் தேடியுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் அறிமுகம் ஆனார்.
'அந்த நபருடன் மூன்றடைப்பு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றேன். அங்கு சென்ற சில நிமிடங்களில் மூன்று பேர் அங்கு வந்தனர், அவர்கள் என்னைத் தாக்கினர். பாலியல்ரீதியாக என்னைத் துன்புறுத்தி வீடியோ எடுத்துக்கொண்டனர்' எனப் புகார் மனுவில் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பணம் கேட்டு மிரட்டித் தன்னிடம் இருந்த 11,500 ரூபாய், 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டதோடு, தமது கிரெடிட் கார்டில் இருந்து 1,15,000 ரூபாயையும் எடுத்துவிட்டதாக புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில் ஜூலை 2ஆம் தேதி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கிரிண்டர் செயலி - நீதிபதி சொன்னது என்ன?
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறை தேடியபோது, முனீர்பள்ளம் காவல் நிலையத்திலும் இதே பாணியில் வழக்கு ஒன்று பதிவாகி இருந்ததைக் கண்டறிந்தனர். இந்த வழக்கில் மகாராஜா என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
"நாங்கள் விசாரித்தது இந்த ஒரு சம்பவம்தான். ஆனால், அவர்களோ சுமார் இருபது பேருக்கு மேல் மிரட்டிப் பணம் பறித்துள்ளதாகக் கூறுகின்றனர். பாதிரியார் ஒருவரிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பறித்ததாகக் கூறினர்.
ஆனால், பாதிக்கப்பட்டதாக அந்த ஒரு நபர் மட்டுமே புகார் கொடுத்தார். இவர்களை இணைக்கும் பாலமாக கிரிண்டர் ஆப் இருந்துள்ளது," என்கிறார் மூன்றடைப்பு காவல் நிலைய தலைமைக் காவலர் ஜெபஸ்டின் லெனின்.
தங்கள் பெயர் வெளியில் வந்துவிட்டால் மானம், மரியாதை போய்விடும் என்ற அச்சமே, இதுபோன்ற மிரட்டல்களுக்குக் காரணமாக அமைவதாகவும் ஜெபஸ்டின் லெனின் குறிப்பிடுகிறார்.

தனக்கு ஜாமீன் கேட்டு மகாராஜா தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பளிக்கும்போது, கிரிண்டர் செயலி பற்றிக் குறிப்பிட்ட நீதிபதி பரத சக்ரவர்த்தி, செயலியைத் தடை செய்வதற்கு மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு தமிழக காவல்துறை தலைவர் மூலமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட உள்ளதாக, தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞர் அன்புநிதி தெரிவித்தார்.
இதுபோன்று மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பிபிசி தமிழிடம் அன்புநிதி குறிப்பிட்டார்.
தடை செய்யச் சொல்வது சரியா?
''கிரிண்டர் செயலியை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை'' என்கிறார், ராமகிருஷ்ணன். இவர் பால் புதுமையினரின் (LGBTQ) நலனுக்காகச் செயல்படும் சாத்தி (Saathi) என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
LGBTQ சமூகத்தினருக்கான முக்கிய செயலியாக கிரிண்டர் இருக்கிறது. முன்பு புளூட் (BLUD) செயலி இருந்தது. அதைத் தடை செய்துவிட்டதால், கிரிண்டர் மற்றும் டிண்டரில் (Tinder) தங்களுக்கான நட்பை தன்பாலின ஈர்ப்பாளர்கள் தேடுகின்றனர். இவர்களைக் கண்டறிந்து பணம் பறிப்பதை இலக்காக வைத்து அண்மைக் காலமாக மிரட்டல் கும்பல்கள் அதிகரித்துவிட்டதாகக் கூறுகிறார், எல்.ராமகிருஷ்ணன்.
கிரிண்டர் செயலி மூலம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு பணம் பறிப்பவர்கள், பால் புதுமையினர் பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் பெரும்பாலும் எதிர்பாலின ஈர்ப்புள்ளவராக இருப்பார்கள். அவர்கள் பணம் சம்பாதிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதாக ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
"கிரிண்டர் செயலியை ஆண், பெண் என அனைவரும் பயன்படுத்துகின்றனர். சிலர் அதைத் தங்களின் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகத் தவறான நபர்களிடம் சிக்கி பணத்தை இழப்பதாக" கூறுகிறார் ராமகிருஷ்ணன்.
இந்திய சமூகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களை சமூகம் ஏற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கமே, இதுபோன்று பணம் பறிக்கும் நபர்களுக்குக் கூடுதல் தைரியத்தைக் கொடுப்பதாகக் கூறுகிறார், 'நிறங்கள்' அமைப்பைச் சேர்ந்த நவீன்.

பட மூலாதாரம், Naveen
''பொது சமூகத்தின் மனநிலை மாறும்போது பயம் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். என்னை மிரட்டினாலும் கவலையில்லை என்ற நீண்டகாலத் தீர்வுக்குத் தயாராக வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்களை நீதிமன்றங்கள் அங்கீகரித்த பின்னரும் இதுபோன்ற புகார்களின் மீது காவல்துறை அலட்சியம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்கிறார் நவீன்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு என்றே அமைப்புகளும் குழுக்களும் உள்ளன. இதன் மூலம் பாதுகாப்பான இடங்களில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், கிராமங்களில் உடல்ரீதியான தேவைக்கு ஆட்களைத் தேடும்போது, இதுபோன்ற செயலிகளைச் சிலர் நம்பிச் செல்வதாக, சாத்தி அமைப்பின் ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
கிரிண்டர் நிறுவனத்தின் விதிகள் என்ன?
அதேநேரம், கிரிண்டர் செயலியை வழிநடத்தும் நிறுவனம், தங்களின் சட்டவிதிகளைப் பற்றி விரிவாக அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
தங்களின் பயனர்கள் செய்யக்கூடிய எந்தக் காரியமும் கிரிண்டரை கட்டுப்படுத்தாது எனவும் மற்ற பயனர்களுடனான தொடர்புகளுக்குச் சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது.
பயனர்களின் நோக்கம், அடையாளம், நடத்தை ஆகியவை குறித்து கிரிண்டர் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்த கிரிண்டர் செயலியை, தற்போது அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது.
கிரிண்டர் செயலியை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், Ramakrishnan
''ஆன்லைனை மட்டும் சார்ந்திருக்காமல், தன்பாலின சமூகக் குழுக்கள் மூலம் சந்தித்து பரஸ்பர நட்புடன் பழகி வரும்போது இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை'' என்கிறார் ராமகிருஷ்ணன். இதைத் தவிர்க்க சில யோசனைகளையும் அவர் முன்வைக்கிறார்.
- ஒருவருடன் ஆன்லைன் சேட்டிங் செய்துவிட்டு, தனிமையான இடங்களில் சந்திப்பதைவிட பொதுமக்கள் கூடும் இடங்களில் முதலில் சந்திக்க வேண்டும். அந்த நபர் மீது நம்பிக்கை வந்த பின்னர் பழகலாம்.
- ஒருவரைச் சந்திக்கச் செல்வதாக இருந்தால் தங்களுக்கு நம்பிக்கையான நபர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு சந்திக்கச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னரும் பதில் வரவில்லையெனில் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
- தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பால் புதுமையினர் குழுக்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது நட்பு வட்டம் விரிவடையும். அதன் மூலம் ஓர் இணையர் (Partner) கிடைப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












