பிரதமர் மோதி, யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்தபின் என்ன சொன்னார்?

பட மூலாதாரம், X/ANI
யுக்ரேன் படைகள் ரஷ்யாவின் எல்லைக்குள் சென்றுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு பயணம் செய்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 23) யுக்ரேன் சென்றடைந்த அவர், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேசினார். ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் பலியான இடத்தை இருவரும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோதி, ‘இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை குழந்தைகளின் குடும்பங்கள் பெறவேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதாகக்’ குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வீடியோவில், பிரதமர் மோதி ஸெலென்ஸ்கியின் தோளில் நீண்ட நேரம் கையை வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியும் இந்தச் சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், X/narendramodi
கடந்த மாதம் பிரதமர் மோதி ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, யுக்ரேன் அதிபர், மோதி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஒன்றாக இருந்த படங்களுக்குக் கடுமையாக எதிர்வினையற்றியிருந்தார்.
ரஷ்ய அதிபரை மோதி சந்தித்தபோது மேற்கத்திய நாடுகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தின. யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி மோதியின் மாஸ்கோ பயணத்தை விமர்சித்திருந்தார்.
"உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் குற்றவாளி ஒருவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது," என்று யுக்ரேன் அதிபர் அப்போது கூறினார்.
அதைத்தொடர்ந்து, தற்போது மோதி யுக்ரேனுக்கு சென்றுள்ளது உலக அரசியல் சூழலில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாகப் போர் நடந்து வருகிறது. இந்தப் போர் தொடர்பாக ரஷ்யாவை இந்தியா நேரடியாக விமர்சித்ததில்லை. இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.


பட மூலாதாரம், PIB India
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
போலாந்தில் பிரதமர் மோதி
யுக்ரேனுக்கு அரசு முறை பயணம் செய்வதற்கு முன்பு போலாந்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி எந்தப் பிரச்னைகளுக்கும் போர் தீர்வாகாது என்று கூறினார்.
போலாந்து பிரதமர் டோனல்ட் டஸ்குடன் பேசிய பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டத் தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கத் தயாராக உள்ளோம் என்று கூறினார்.
"அப்பாவி மக்கள் பிரச்னையின்போது உயிரிழப்பது மனிதகுலம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது," என்று மோதி கூறினார்.
"இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநிறுத்தத் தேவையான பேச்சுவார்த்தை மற்றும் அரசு நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க விரும்புகிறோம். தமது நட்பு நாடுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது," என்று கூறினார் மோடி.
போலாந்தில் இருந்து யுக்ரேனுக்கு ரயிலில் சென்ற மோதி அங்கே யுக்ரேனிய அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, யுக்ரேன் செல்வதற்கு முன்பு போலாந்து நாட்டுக்குச் சென்ற மோதி இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
"பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் போலாந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருகை மதிப்புமிக்க நண்பருடனான ஒருங்கிணைப்பை ஆழமாக்கியுள்ளது. பொருளாதார மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேலும் மேம்படுத்த முயன்று வருகிறோம்."
"எங்களின் நட்பு, இந்த உலகை மேலும் சிறப்பாக மாற்றத் தேவையான பங்களிப்பை வழங்கும். போலாந்து நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டிருந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யா சென்ற மோதி
நரேந்திர மோதி ஜூலை தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். இது 2019க்குப் பிறகு அவரது முதல் ரஷ்யா பயணம்.
அது மட்டுமின்றி இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் மேற்கொண்ட முதல் சர்வதேச பயணமும் இதுதான்.
யுக்ரேன் மீது ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்த நேரத்தில் மோதி ரஷ்யாவுக்கு சென்றார். யுக்ரேனில் ஜூலை 8 அன்று கீயவ் நகரில் 33 பேர் உட்பட மொத்தம் 47 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஏவுகணைகள் குழந்தைகள் மருத்துவமனையையும் தாக்கியது.
இதனிடையே ரஷ்ய அதிபர் உடனான பேச்சுவார்த்தையின்போது, மோதியை புதின் "எனது அன்பு நண்பர்" என்று குறிப்பிட்டார்.
ரஷ்ய அதிபருடனான மோதியின் சந்திப்பும், மோதி புதினை நட்பாக ஆரத்தழுவியதும் யுக்ரேனில் சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பயணம்
ஆகஸ்ட் 21, 22 தேதிகளில் போலாந்திற்கு சென்ற மோதி அங்கிருந்து ஆகஸ்ட் 23 (வெள்ளிக்கிழமை) அன்று யுக்ரேனுக்கு சென்றார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என்று ஆகஸ்ட் 19ம் தேதி அன்று குறிப்பிட்டிருந்தது.
ஜூன் மாதம் யுக்ரேன் விவகாரம் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் மோதி பங்கேற்கவில்லை. மாறாக, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பங்கேற்றார். இருப்பினும் அதே மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் மோதியும் ஸெலன்ஸியும் சந்தித்துக் கொண்டனர். "பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க நடவடிக்கைகள் மூலமே அமைதியை எட்ட இய்லும்," என்று அவர் தெரிவித்தார்.
மோதி நேரடியாக, யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்கவில்லை என்ற போதிலும், தொடர்ச்சியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எதற்காக இந்த சந்திப்பு?
யுக்ரேனுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள மோதி, பொருளாதாரம், உள்கட்டமைப்பு, ஆரோக்கியம், கல்வி, மருந்தாக்க துறை, பாதுகாப்பு, கலாசாரம் குறித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுக்ரேனின் அதிபர் அலுவலகம் இதுகுறித்துப் பேசும்போது நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது.
இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு முன்பே உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து, பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்திய மற்றும் யுக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஜெயஷங்கர் மற்றும் திமித்ரோ குலேபா மார்ச் மாதம் டெல்லியில் சந்தித்துக் கொண்டனர். அப்போது போருக்கு முந்தைய சூழலில் நடைபெற்றதைப் போன்று வர்த்தகம் நடைபெற வேண்டும் என்று இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
தற்போதைய சந்திப்பில் ரஷ்யா - யுக்ரேன் போர் குறித்தும் விவாதிக்கப்படும் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜாங்க நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை மூலமே இந்த விவகாரத்திற்குத் தீர்வு எட்டப்படும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச அளவில் தன்னை உயர்த்திக் கொள்ளவும், போருக்கு மத்தியில் தன்னை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் இந்தியா இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று இந்திய ஊடகங்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
"மேற்கு உலகம் மற்றும் ரஷ்யாவுடனான இந்திய உறவில் சமநிலையைப் பேண இந்தியாவுக்கு இது மிக முக்கியமான ஒன்று. மேலும், உலக உணவுப் பாதுகாப்பு குறித்து இந்தியா தன்னுடைய கருத்துகளை வெளியிட இது உதவியாக இருக்கும். உலகளாவிய பிரச்னையாக கருதப்படும் இதுபோன்ற விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு இருப்பது உலக அரங்கில் இந்தியாவை முக்கிய நாடாக மாற்றும்," என்று ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் யுக்ரேன் ஊடுருவியுள்ள நிலையில், தி பிரின்ட் செய்தி இணையதளம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோதியின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே இந்தியா தன்னுடைய பங்களிப்பை வழங்குவதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கும் இதுதான் சரியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் அதிகாரப்பூர்வமான அரசு ஊடகம் மோதியின் யுக்ரேன் வருகை குறித்து செய்தி வெளியிடவில்லை. இருப்பினும் சில ரஷ்ய ஊடகங்கள் இதுகுறித்த தங்களின் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
ரஷ்ய ஊடகங்கள் சொல்வது என்ன?
மாஸ்கோவிஸ்கி கொம்சோமோலெட்ஸ் (Moskovsky Komsomolets) என்ற பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவுடன் நட்பு பாராட்டிய நாட்டின் தலைவர் தன்னை விமர்சித்த ஸெலன்ஸ்கியை கீயவில் சந்திக்க உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது.
மாஸ்கோவில் புதினுடன் பேசிய பிரதமர் மோதிக்கு கீயவ் கண்டனங்களைப் பதிவு செய்த சில வாரங்கள் கழித்து அவர் யுக்ரேனுக்கு பயணம் செய்வதையும் மேற்கோள் காட்டியுள்ளது அந்த நாளிதழ்.
ரஷ்ய ஆதரவு செய்தித்தாளான இஸ்வெஸ்டியா, "ரஷ்ய - யுக்ரேன் போரில் தன்னை ஒரு மத்தியஸ்தராக நிலை நிறுத்திக்கொள்ள இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று" எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், "தெற்கத்திய நாடுகள் அனைத்தும், அரசியல் ஆதாயங்களுக்காக, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணத் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றன," என்று குறிப்பிட்டிருந்தது.
தனியார் செய்தி நிறுவனமான நெசாவிசிமயா கஜெட்டா (Nezavisimaya Gazeta), "இந்தியா ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே சமநிலையைப் பேண முயல்கிறது. எனவே மோதியின் யுக்ரேன் பயணம் ரஷ்யாவுக்கு எதிரான போக்கு என்ற கோணத்தில் அணுகக்கூடாது," என்று குறிப்பிட்டிருந்தது.
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












