நடிகர் விஜய் கட்சிக் கொடியில் உள்ள யானை எதைக் குறிக்கிறது? எதிர்ப்பு எழுவது ஏன்?

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், TVK HQ

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய், வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று வெளியிட்டார்.

'கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சொந்தமானது. சட்டப்படி அதைப் பயன்படுத்த முடியாது' என, அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொடியில் யானையைப் பயன்படுத்துவதால், த.வெ.க எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் என்ன?

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், தனது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

புயலுக்குப் பின் அமைதி என்பதைப் போல இந்தக் கொடிக்குப் பின்னால் வரலாறு இருப்பதாகக் குறிப்பிட்ட நடிகர் விஜய், கட்சியின் கொள்கையைக் கூறும்போது கொடியின் வரலாற்றைக் கூற உள்ளதாகத் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியானது, சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில் அமைந்துள்ளது. கொடியின் நடுவில் இரண்டு ஆண் யானைகள் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவில் உள்ள சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலர் மற்றும் 28 நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த நட்சத்திரங்கள் நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், Facebook/Anandan

படக்குறிப்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆனந்தன்

கொடியில் யானை இருப்பது சரியா?

த.வெ.க-வின் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் பகுஜன் சமாஜ் கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

அக்கட்சியின் தேர்தல் சின்னமாக யானை உள்ளதாகவும் இது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றும் இதை மற்ற கட்சிகள் பயன்படுத்த முடியாது எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆனந்தன் தெரிவித்தார். இதுதொடர்பாக, வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் கொண்டு வந்த திருத்தத்தில், அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ, அங்கீகரிக்கப்படாத கட்சிகளோ யானை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ளதாகவும் ஆனந்தன் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணைய சட்டவிதிகளை த.வெ.க நிர்வாகிகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தரப்பில் இருந்து அனுப்பியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் உரிய முடிவை த.வெ.க நிர்வாகிகள் எடுக்க வேண்டும் எனவும் ஆனந்தன் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி விவகாரத்தை முறைப்படி அணுகுமாறு பகுஜன் சமாஜ் கட்சித் தலைமை தன்னிடம் அறிவுறுத்தியுள்ளதாக, பிபிசி தமிழிடம் ஆனந்தன் தெரிவித்தார்.

குறியீடுதான், சின்னம் அல்ல - த.வெ.க.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், Facebook/Loyola Mani

படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி

யானை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூறினாலும், சட்டரீதியான நடவடிக்கைகளைக் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் எடுக்க உள்ளதாகக் கூறுகிறார், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கட்சிக் கொடியில் யானையை ஒரு குறியீடாகத்தான் பயன்படுத்துகிறோம். அதைச் சின்னமாகப் பயன்படுத்தவில்லை. கொடியில் உள்ள வாகை மலரைப் போல யானையும் ஒரு குறியீடுதான். அதில் உள்ள 28 நட்சத்திரங்களும் குறியீடுதான். இது கொடி மட்டும்தான். தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு எண்ணிக்கையைப் பெற்றால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட சின்னம் கிடைக்கும்," என்கிறார் அவர்.

"யானை பலம் பொருந்தியது, அறிவுக்கூர்மையான விலங்கு. இன்றளவும் பூர்வகுடி மக்கள் யானையைக் கடவுளாக வழிபடுகின்றனர். மேலும் அது கூட்டுக் குடும்பமாக வாழக்கூடிய உயிரினம். அம்பேத்கரும் தனது கட்சியின் அடையாளமாக யானையைப் பயன்படுத்தியுள்ளார். யானை என்பது ஒடுக்கப்பட்ட மக்களை எழுச்சியூட்டுவதற்கான அடையாளமாக இருக்கிறது. அதையே கொடியில் குறியீடாகப் பயன்படுத்தினோம்," என்கிறார் லயோலா மணி.

தேர்தல் ஆணையம் என்ன செய்யக் கூடும்?

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், Facebook/Needamangalam Gopalaswami

படக்குறிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் கோபாலசுவாமி

"கொடியில் யானை உருவமும் சின்னம் வேறாகவும் இருந்தால் பிரச்னை வர வாய்ப்புள்ளதா?" என இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் கோபாலசுவாமியிடம் கேட்டபோது, "இதை மற்றவர்கள் எப்படி கவனிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது" என்று கூறினார்.

"இதுகுறித்து நீதிமன்றத்துக்குச் செல்லலாம். பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியில் ஒரு யானை உள்ளது. இவர்களின் கொடியில் இரண்டு யானைகள் உள்ளன. இந்த நாட்டில் சுமார் 75%-க்கும் அதிகமான மக்கள் படிப்பறிவு உள்ளவர்கள். அவர்களுக்கு இரண்டு யானைக்கும் ஒரு யானைக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுமா என்ற கேள்வி வரலாம்," என்றார்.

த.வெ.க.வின் யானை சின்னத்துக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என்றால், இதை சிவில் வழக்காக நீதிமன்றத்தில்தான் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கோபாலசுவாமி குறிப்பிடுகிறார்.

சிவில் வழக்காக இருப்பதால், தேர்தல் ஆணையம் நேரடியாகத் தலையிட வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார் கோபாலசுவாமி.

"நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது, இரண்டு யானைகளை வைத்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து என்ன பதில் வரப் போகிறது என்பது முக்கியமானது," என பிபிசி தமிழிடம் கோபாலசுவாமி தெரிவித்தார்.

மூன்றாவது சர்ச்சை

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், X/ActorVijay

படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் (கோப்புப்படம்)

நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை அறிவித்த நேரத்தில் இரண்டு சர்ச்சைகள் எழுந்தன.

ஒன்று ‘தமிழக வெற்றி கழகம்’ எனக் குறிப்பிட்டபோது, அதில் 'க்' என்ற ஒற்று இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதை ஏற்று, த.வெ.க.,வின் அதிகாரபூர்வ சமூக ஊடக பக்கங்களில் கட்சிப் பெயரில் 'க்' சேர்க்கப்பட்டது.

அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைச் சுருக்கி, டி.வி.கே., எனக் கூறப்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சியும் டி.வி.கே., என்ற பெயரில் அழைக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகி, த.வெ.க பெயரை மாற்றுமாறு கோரிக்கை வைக்க உள்ளதாக, த.வா.க., தலைவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். தற்போது த.வெ.க., கொடியில் உள்ள யானையை மையப்படுத்தி புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)