முடிவுகளை மாற்றும் மோதி: மெஜாரிட்டி இல்லாததால் தடுமாற்றமா? அல்லது முதிர்ச்சியின் வெளிப்பாடா?

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீபத்தில் அரசு பணிகளில் நேரடி நியமனம் (lateral entry) தொடர்பான விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது.
    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆகஸ்ட் 8, 2024. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நரேந்திர மோதி அரசு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்பியது.

இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தைக் குறிவைப்பதாகவும் இது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆகஸ்ட் 13, 2024. கடுமையான விமர்சனங்கள் எழுந்ததன் காரணமாக, ஒளிபரப்பு மசோதாவின் புதிய வரைவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்த உத்தேச சட்டத்தின் மூலம் ஆன்லைன் உள்ளடக்கத்தின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டுவர அரசு முயல்வதாக விமர்சனம் எழுந்தது.

ஆகஸ்ட் 20, 2024. நேரடி நியமனம் மூலம் 24 அமைச்சகங்களில் 45 அதிகாரிகளைப் பணியமர்த்துவதற்காக வெளியிட்ட விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசு யுபிஎஸ்சி-ஐ கேட்டுக்கொண்டது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட விளம்பரத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளும் பாஜகவின் தோழமைக் கட்சிகளும் இந்தத் திட்டத்தை விமர்சித்தன. அதன் கீழ் செய்யப்பட இருக்கும் நியமனங்களில் இட ஒதுக்கீடு ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பின.

கடந்த இரண்டு வாரங்களில் நடந்த இந்த மூன்று சம்பவங்களைப் பார்க்கும்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் பதவியேற்ற மத்திய அரசு, தனது பல முன்மொழிவுகள் அல்லது முடிவுகளைத் திரும்பப் பெற வேண்டிய அழுத்தத்தில் உள்ளதா என்ற கேள்வி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நேரடி நியமனம் தொடர்பாக அரசியல் சலசலப்பு

நேரடி நியமன திட்டத்தின் கீழ் முதன்முறையாக இப்போதுதான் நியமனங்கள் செய்யப்பட உள்ளன என்று சொல்ல முடியாது.

மோதி அரசில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் முறையாக இத்திட்டத்தின் கீழ் நியமனங்கள் நடந்தன.

இதுவரை 63 நியமனங்கள் இதன்மூலம் செய்யப்பட்டுள்ளன. அதில் 35 பேர் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு ஜூலை வரை நேரடி நியமனத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 57 பேர் தங்கள் பதவிகளில் பணியாற்றி வந்தனர்.

ஆனால் இம்முறை இத்திட்டத்தின் கீழ் 45 புதிய நியமனங்களுக்கான விளம்பரத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்ட உடனேயே அரசியல் சலசலப்பு தொடங்கியது.

இந்த நியமனங்களில் இடஒதுக்கீடு முறை இல்லாததால் இது சமூக நீதிக்கு எதிரானது என்றும், பின்வாசல் வழியாகப் பணி நியமனம் செய்வது போன்ற சதி என்றும் எதிர்கட்சிகள் கூறின.

லேட்ரல் என்ட்ரி என்பது தலித்துகள், ஓபிசி பிரிவினர் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல் என்றும், ஒதுக்கீட்டைப் பறிக்கும் முயற்சி என்றும் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

அதோடு, லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வானும், நேரடி நியமனத் திட்டத்தைத் தவறு என்று தான் கருதுவதாகவும், அத்தகைய நியமனங்களுக்கு தான் ஆதரவாக இல்லை என்றும் கூறியதால் மத்திய அரசின் பிரச்னைகள் மேலும் அதிகரித்தன.

ஆகஸ்ட் 20ஆம் தேதி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், யுபிஎஸ்சி தலைவருக்கு எழுதிய கடிதத்தில், ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

நேரடி நியமன செயல்முறை அரசியலமைப்பில் பொதிந்துள்ள சமத்துவம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடிப்படையில் குறிப்பாக இட ஒதுக்கீடு விதிகளைப் பின்பற்றும் விதமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோதி கருதுவதாக இந்தக் கடிதத்தில் ஜிதேந்திர சிங் எழுதியுள்ளார்.

பிரதமரை பொருத்தவரை அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு என்பது நமது சமூக நீதிக் கட்டமைப்பின் முக்கிய அங்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணையைப் பேணுவது முக்கியம் என்றும் அதனால் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தகுதியானவர்கள் அரசுப் பணிகளில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் என்றும் அவர் எழுதினார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்குப் பிறகு இதுகுறித்துப் பேசிய ராகுல் காந்தி, "அரசியலமைப்பு சட்டத்தையும், இட ஒதுக்கீட்டு முறையையும் எப்பாடுபட்டாவது பாதுகாப்போம். பா.ஜ.க.வின் 'லேட்ரல் என்ட்ரி' போன்ற சதிகளை முறியடிப்போம். இதை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். 50% இட ஒதுக்கீடு வரம்பைத் தகர்த்து, சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்,” என்று கூறினார்.

கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் மறுபரிசீலனை

சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கும்போது, மத்திய அரசு பின்வாங்குவதாகத் தோன்றுகிறது.

ஆனால் கடந்த காலத்தைப் பார்த்தால் பிரதமர் மோதி தலைமையிலான கடந்த இரண்டு ஆட்சிகளின்போதும் முடிவுகள் திரும்பப் பெறப்பட்ட அல்லது மறுபரிசீலனை செய்யப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

இவற்றில் மிகப்பெரிய முடிவு 2021ஆம் ஆண்டில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டதாகும். இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது.

இந்திய விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோதி அரசு விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 2021இல் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டியிருந்தது

கடந்த 2022ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவில் 81 திருத்தங்களைச் செய்ய பரிந்துரைத்தபோது அந்த மசோதாவை அரசு திரும்பப் பெற்றது.

இருப்பினும் இந்த மசோதா 2023 ஆம் ஆண்டு மீண்டும் கொண்டு வரப்பட்டு அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சர்ச்சைக்குரிய 6 திருத்தங்களை அரசு திரும்பப் பெற்றது.

'அரசின் தன்னிச்சை போக்கு இனி சாத்தியமில்லை'

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு பின் தன் கட்சி எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்து, கூட்டணி கட்சிகளை நம்பியிருப்பதன் விளைவு, தற்போது மத்திய அரசில் தெரிகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பேராசிரியர் அபூர்வானந்த் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்தி துறையில் பேராசிரியராக உள்ளார். அவர் புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர் மற்றும் கட்டுரையாளராரும் கூட.

மத்திய அரசு தனது விருப்பப்படி நாடாளுமன்றத்தை நடத்துவது இனி நடக்காது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன என்று அவர் கூறுகிறார்.

"அரசின் கூட்டணி கட்சிகளுக்கு தங்கள் தொகுதிகள் தொடர்பாக சொந்த நிர்பந்தங்கள் உள்ளன என்பதும் உண்மை. அரசில் அங்கம் வகிக்கும் போது அவர்களால் அதை புறக்கணிக்க முடியாது. மறுபுறம் எதிர்க்கட்சியும் மிகவும் வலுவாகிவிட்டது," என்று பேராசிரியர் அபூர்வானந்த் கூறுகிறார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை.

"எனவே இந்த அரசு இப்போது, ’சட்ட உருவாக்கத்தில்’ மிகவும் பலவீனமாகிவிட்டது. முன்பு அரசு முற்றிலும் தன்னிச்சையாக சட்டங்களை இயற்றியது. சிஏஏ மற்றும் முத்தலாக் சட்டங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால் இப்போது சட்டம் இயற்றுவதில் இந்த அரசு மிகவும் பலவீனமாகிவிட்டது,” என்கிறார் அவர்.

நேரடி நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் உடனடியாக கவனத்தை ஈர்த்ததால் இந்த விவகாரம் வேகம் பிடித்தது என்கிறார் அவர்.

"பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகள் சமூகத்தில் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த பிரிவினர். அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. எனவே நீங்கள் முஸ்லிம்களை புறக்கணிக்க முடியும். அவர்களை கட்டாயப்படுத்த முடியும். ஆனால் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், ஓபிசிக்கள் மற்றும் தலித்துகளின் அச்சங்களை புறக்கணிக்க முடியாது. அதனால்தான் லேட்டரல் எண்ட்ரி முடிவு திரும்பப் பெறப்பட்டது,"என்று அவர் தெரிவித்தார்.

விவாத பொருளாக மாறிய அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீடு

2018 ஆம் ஆண்டில் மோதி அரசு முதல்முறையாக நேரடி நியமனங்களை மேற்கொண்டபோதும் எதிர்ப்பு இருந்தது என்று பேராசிரியர் அபூர்வானந்த் குறிப்பிட்டார்.

''ஆனால், 2018 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் குழம்பி இருந்தன. தங்களைப் பற்றிய தன்னம்பிக்கை அவற்றுக்கு இருக்கவில்லை. கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதில் வலு இருக்கவில்லை. தற்போதைய சூழல் முற்றிலும் வேறுபட்டது,” என்றார் அவர்.

"சமீபத்திய தேர்தலின் அரசியல் விவாதங்களில் அரசியல் சாசனம் முக்கிய இடம் பிடித்தது. இடஒதுக்கீடு திட்டத்தை பலவீனமானதாகவும், பொருத்தமற்றதாகவும் மாற்ற அரசு முயற்சிக்கிறது என்று பல்வேறு வழிகளில் அச்சங்கள் எழுப்பப்படுகின்றன.”

"தலித்துகள் மற்றும் ஓபிசிக்களும் பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள். இந்த தேர்தல் முடிவுகள் தலித்துகள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதை காட்டியது. பாஜகவால் இந்த ஆபத்தை எதிர்கொள்ள முடியாது" என்றார் அவர்

சட்டங்கள் இயற்றுவதைப் பொறுத்த வரையில் வரவிருக்கும் காலம், அரசுக்கு கடினமானதாக இருக்கும் என்று பேராசிரியர் அபூர்வானந்த் கருதுகிறார்.

"ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஆட்சி செய்வது இந்த அரசின் இயல்பு அல்ல. எனவே ஒவ்வொரு முறையும் அவர்கள் பின்வாங்க வேண்டியிருக்கும். இந்த அரசு தனது சொந்த விருப்பப்படி செயல்படும், பிறகு எந்த பிரச்னை வந்தாலும் பின்வாங்க வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.

'அரசு தலைவணங்கவில்லை'

மறுபுறம் அரசு சில முடிவுகளை திரும்பப் பெறுவதில் அல்லது மறுபரிசீலனை செய்வதில் முதிர்ச்சியடைந்த சிந்தனையை வெளிப்படுத்தியதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

டாக்டர் சுவ்ரோகமல் தத்தா ஒரு பிரபல அரசியல் நிபுணர்.

அரசு யு-டர்ன் எடுத்ததாகவோ அல்லது எந்த முடிவுகளிலிருந்தும் பின்வாங்கியதாகவோ அவர் கருதவில்லை.

வக்ஃப் வாரிய மசோதா விவகாரத்தை குறிப்பிட்ட அவர், "சில முக்கியமான விஷயங்களை இன்னும் தீவிரமாக விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஒவ்வொரு அரசும் இதைத்தான் செய்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மசோதாக்கள் அனுப்பப்படவில்லை என்று சொல்லமுடியாது,” என்றார்.

"ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான மசோதாக்கள் நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. இது ஒரு அரசியலமைப்பு செயல்முறை மற்றும் அரசின் அரசியலமைப்பு உரிமையாகும், இதை அரசு எந்த விஷயத்திலும் பயன்படுத்தலாம் "என அவர் கூறுகிறார்

அமித் ஷா மற்றும் அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வக்ஃப் வாரிய மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வக்ஃப் வாரிய மசோதாவைப் பொருத்தவரை, அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை என்று டாக்டர் தத்தா கூறுகிறார்.

"நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்திலும் இதைப்பார்க்க முடிந்தது. இந்த மசோதாவை ஐக்கிய ஜனதா தளம் ஆதரித்தது. சிராக் பஸ்வானின் கட்சியும் ஆதரித்தது. இரு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்தன. முஸ்லிம் தரப்புடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி சொன்னது உண்மைதான்.”

"ஆனால் இந்த மசோதாவுக்கு தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவு அளித்தது. இருப்பினும் முஸ்லிம் அறிவுஜீவிகள் மற்றும் நிபுணர்களின் கருத்தைக்கேட்டு இதை மேம்படுத்த முடியும் என்று அரசு கருதியது. எனவே இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அரசு தனது சொந்த விருப்பத்தின் பேரில் இதைச்செய்தது. எதிர்க்கட்சியின் அழுத்தம் காரணமாக அல்ல," என்று டாக்டர் சுவ்ரோகமல் தத்தா குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங் மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியாவின் நியமனங்கள்

நேரடி நியமனம் பற்றிப்பேசிய டாக்டர் தத்தா, கடந்த காலங்களில் அரசுகள் இந்த முறையில் நியமனங்கள் செய்ததற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் திட்டக் கமிஷன் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோரின் உதாரணங்களை சுட்டிக்காட்டிய அவர், "காங்கிரஸ் காலத்தில் லேட்ரல் என்ட்ரி மூலம் நியமனங்கள் எதுவும் செய்யப்படவில்லையா என்ன? அந்த நியமனங்கள் செய்யப்பட்ட போது இடஒதுக்கீடு அல்லது அவர்களின் சாதி மனதில் கொள்ளப்பட்டதா? அவர்களின் திறன்களைக் கருத்தில் கொண்டு இந்த நியமனங்கள் செய்யப்பட்டன,” என்று கூறினார்.

நாட்டில் இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரங்களில் காங்கிரஸ் விஷத்தை பரப்ப விரும்புவதாகவும், நாட்டை சாதி அடிப்படையில் பிரிக்க நினைப்பதாகவும் டாக்டர் தத்தா குற்றம் சாட்டினார்.

மன்மோகன் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மன்மோகன் சிங் மற்றும் மாண்டெக் சிங் அலுவாலியா

”லேட்ரல் எண்ட்ரி திட்டத்தில் இடஒதுக்கீடு குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அதில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து யோசனைகள் வழங்கப்படலாம் என்றும் அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த திட்டத்தை மேம்படுத்தலாம் என்றும் அவர் கருதியதே இதற்கு காரணம்,” என்று டாக்டர் தத்தா குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சிகளின் கேவலமான அரசியலை நிறுத்துவதற்காக, ’யோசனைகளை ஆராய்ந்து திட்டத்தை மேம்படுத்தலாம்’ என்று பிரதமர் கூறிவிட்டார். அரசு அடிபணிந்து விட்டது என்று இதற்கு அர்த்தமில்லை. நாட்டின் நலனுக்கு அத்தியாவசியமானதை அரசு தொடர்ந்து செய்யும். எதிர்க்கட்சிகள் ஆயுதமாக ஆக்க முயன்ற ஒரு விஷயத்தை பிரதமர் மிகவும் புத்திசாலித்தனமாக அமைதிப்படுத்திவிட்டார் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)