மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், Navvi Studios / X
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி அன்று வெளியானது வாழை திரைப்படம்.
பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது படமான வாழை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் கலையரசன், பொன்வேல், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பல திரைநட்சத்திரங்கள் இந்த படத்தை வியந்து தங்களின் கருத்தை வெளியிட்ட காரணத்தால் படம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
வாழை திரைப்படம் குறித்து ஊடகங்கள் கூறும் விமர்சனங்கள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். படிக்க விரும்பும் சிறுவன் சிவணைந்தன், வறுமையான குடும்ப சூழலில் வங்கிக் கடனை அடைப்பதற்காக வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு செல்கிறார்.
குறைவான சம்பளத்திற்கு வேலை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வு கேட்டும் அந்த ஊர்க்காரர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி சம்பள உயர்வுக்கு ஒப்புக் கொள்கிறார் முதலாளி.
சம்பள உயர்வு வாங்கியதை மனதில் வைத்துக் கொண்டு, தன்னிடம் பணியாற்றும் மக்களை வேறொரு பிரச்னைகளுக்குள் சிக்க வைத்து விடுகிறார் அவர். இந்த ஆபத்தில் இருந்து சிவணைந்தன் தப்பித்தாரா? வாழைத்தார் சுமக்கும் பணியில் இருந்து அந்த சிறுவனுக்கு விடுதலை கிடைத்ததா என்று கதை நகர்கிறது.
மாரி செல்வராஜின் இயக்கம் எப்படி?
தான் சாட்சியாக இருந்த சம்பவத்தை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் மாரி என்று கூறியுள்ளது தினமணி.
"சுவையான வாழைப்பழத்திற்குப் பின் அதற்காக உழைத்தவர்கள் என்னென்ன பாடுகளைப்பட்டார்கள் என்பதை பார்க்கும் போது உணர்ச்சிகள் பெருகுகின்றன," என்று குறிப்பிட்டுள்ள தினமணி, "கருப்பு வெள்ளை காட்சியில் துவங்கும் திரைப்படம் இறுதியில் நம்மை உலுக்கும் காட்சிகளுடன் நிறைவடைகிறது," என்று தனது விமர்சனத்தில் எழுதியுள்ளது.
மீண்டும் மீண்டும் என் சினிமா, என் மக்கள்பட்ட வலிகளைப் பதிவு செய்வது என்பதில் மாரி செல்வராஜ் வைத்திருக்கும் உறுதி வாழையில் நன்றாகவே தெரிகிறது என்று அது குறிப்பிட்டிருந்தது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மிகவும் சிறப்பான படம் இது இந்தியா டுடே தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
''படம் இறுதி கட்டத்தை நோக்கி நகரும் போது அதன் தாக்கத்தை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள். அமைதியாக நீங்கள் அந்த திரையை பார்த்துக் கொண்டிருக்கும் போது சிவணைந்தன் மற்றும் அந்த கிராம மக்களை நினைப்பதைத் தவிர உங்களால் வேறேதும் செய்ய முடியாது'' என்று குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Mari Selvaraj / Twitter
நடிப்பு எப்படி இருக்கிறது?
சிவணைந்தனாக நடித்திருக்கும் பொன்வேலின் நடிப்பு தேசிய அளவு கவனம் பெறும் என்று கூறியுள்ளது தி இந்து நாளிதழின் விமர்சனம்.
பொன்வேல் இந்த படத்தின் உயிர்நாடியாக இருக்கிறார் என்று இந்தியா டுடே கூறியுள்ளது. "பொன்வேலும் ராகுலும் இந்த படத்தின் உயிர் நாடியாக இருக்கின்றனர். நீங்கள் அவர்களோடு சேர்ந்து சிரிப்பீர்கள். சேர்ந்து அழுவீர்கள்," என்று இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
''சிவணைந்தனாக நடித்த பொன்வேல் மற்றும் சேகராக நடித்த ராகுல் இருவரும் சரியான தேர்வு. நன்றாக நடித்திருக்கின்றனர். இருவரும் வாழைத்தோட்டத்திற்குள் ஓடும் போது நாமே ஓடுவதுபோல் பங்களிப்பைச் செய்துள்ளனர்'' என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.
சிவணைந்தனுக்கு அக்காவாக நடித்துள்ள திவ்யா துரைசாமி காதல் காட்சிகளில், குடும்பத்தின் நிலையை கண்டு வருந்தும் இடங்களிலும் நல்ல நடிப்பையே கொடுத்திருக்கிறார், என்று தினமணி பாராட்டியுள்ளது.
சிவணைந்தனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி கிளைமேக்ஸ் காட்சியில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.
பூங்கொடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை நிக்கிலா. "தன்னுடைய கதாப்பாத்திரத்தை நன்றாக உணர்ந்து அழகாக நடித்துள்ளார்," என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

பட மூலாதாரம், V2Cinemas / X
இதர கலைஞர்களின் பங்களிப்பு எவ்வாறாக உள்ளது?
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் உங்களை அவர்களின் உலகத்திற்கே அழைத்து சென்றுவிடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளது இந்தியா டுடே.
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருப்பதை குறிப்பிட்டிருக்கும் இந்தியா டுடே பாடல்களிலும் சரி பின்னணி இசையிலும் சரி அவை படத்தோடு பயணிக்கின்றன. ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும் வலுப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
சந்தோஷ் நாராயண் தன்னுடைய இசையால் நம்மை பயணிக்க வைக்கிறார் என்று குறிப்பிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், தன்னுடைய சமரசம் செய்து கொள்ளாத இசையை மாரியின் படங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறார் என்று புகழ்ந்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












