ஸ்மார்ட் மீட்டர்: தற்போதைய மீட்டர்களை விட இதில் கூடுதலாக என்ன இருக்கிறது? தனியார்மயத்தின் முதல் படியா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
தமிழ்நாடு முழுவதும் விரைவில் மின் பயன்பாட்டைக் கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் அமலாகிறது.
நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டம். இந்தியாவில் 22.98 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ள நிலையில், இவற்றில் 66.86 லட்சம் மீட்டர்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளன. இவை தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்றன.
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக ஸ்மார்ட் மீட்டர்
தென்னிந்தியாவில் அதிக ஸ்மார்ட் மீட்டர்கள் தமிழ்நாட்டில் தான் பொருத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 3.01 கோடி மீட்டர்கள், கேரளாவில் 1.32 கோடி மீட்டர்கள், ஆந்திராவில் 56.10 லட்சம் மீட்டர்கள், கர்நாடகாவில் 22 ஆயிரம் மீட்டர்கள், தெலங்கானாவில் 9 ஆயிரம் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் பொருத்தப்பட வேண்டிய 3,01,40,849 ஸ்மார்ட் மீட்டர்களில் இதுவரை 1,26,510 மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை சோதனை முறையில் பொருத்தப்பட்டு அவற்றின் வெற்றிகரமான பயன்பாட்டுக்கு பின் தற்போது மீதமுள்ள ஸ்மார்ட் மீட்டர்களை இன்னும் சில வாரங்களில் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்வாரியம் எடுத்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஸ்மார்ட் மீட்டர் சோதனை வெற்றி
தமிழ்நாட்டில் ஆறு லட்சம் கி.மீ தொலைவுக்கு மின் கம்பிகள் உள்ளன. மூன்று லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. 1900 துணை மின் நிலையங்கள் உள்ளன. இவை தமிழ்நாட்டில் 3 கோடியே 30 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கி வருகின்றன. இவை அனைத்தும் 2025ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர்களாக மாறப் போகின்றன.
தமிழ்நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக 19 ஆயிரம் கோடி செலவில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் மட்டும் 59 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.
மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்குத் தேவையான 1.83 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பெறுவதற்கான டெண்டர் விடப்பட்டது. அடுத்த கட்டமாக மீட்டர்களை வாங்கவும் நடவடிக்கைகளை மின்சாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
பரிசோதனை முயற்சியாக சென்னை தியாகராய நகரில் 1.3 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டன. கடைகளிலும் வீடுகளிலும் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டர்களின் செயல்பாடு வெற்றிகரமாக இருந்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் இன்னும் சில வாரங்களில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் என்றால் என்ன? இதன் அம்சங்கள் என்ன?
ஸ்மார்ட் மீட்டர் என்பது மின் பயன்பாட்டையும் அதற்கு உரிய கட்டணத்தையும் இணையத்தின் உதவியுடன் துல்லியமாகக் கணக்கிட பொருத்தப்படும் மீட்டர் ஆகும்.
ஸ்மார்ட் மீட்டர் மூலம் தானாக மின் பயன்பாட்டு கணக்குகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மீட்டர்களில் மின் பணியாளர் ஒருவர் நேரில் வந்து, பயன்பாட்டுக் கணக்கை அட்டையில் குறிக்கவேண்டும்.
இனி அந்த நடைமுறை தேவைப்படாது. தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழக அலுவலகத்தில் இருக்கும் கணினியில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தேதியில் கணக்குகள் பதிவேற்றம் ஆகிவிடும்.
ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் பயன்பாட்டை தொலைவில் இருந்து துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். அதாவது சென்னை சைதாப்பேட்டையில் குறிப்பிட்ட தெருவில் உள்ள ஒரு வீட்டின் மின் பயன்பாடு தற்போது என்ன என்பதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்துகொள்ள முடியும். இதே போல பகுதி வாரியாகவும் தெரிந்துகொள்ள முடியும்.

பட மூலாதாரம், Getty Images
வீட்டுக்கு வராமலே மின் இணைப்பு துண்டிப்பு
கட்டணம் செலுத்தாத ஒருவரின் இணைப்பைத் துண்டிக்க இனி மின் பணியாளர் ஒருவர் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை.
குறிப்பிட்ட தேதியில் பணம் பெறாவிட்டால், மின் கட்டணம் செலுத்தாத நபர்கள் அனைவரின் இணைப்பையும் மின் வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே துண்டிக்க முடியும்.
அதேபோல அந்த நபர் கட்டணத்தைச் செலுத்திய பிறகு யாரும் நேரில் வரவேண்டிய அவசியமில்லை. தானாக 12 நொடிகளில் இணைப்பு மீண்டும் வழங்கப்படும். அலுவலக நேரம் அல்லாமல் வேறு எந்த நேரத்தில் தொகையைச் செலுத்தினாலும் 12 நொடிகளில் இணைப்பு சீர்செய்யப்படும்.
ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்திய பிறகு அரசு நினைத்தால் மாதம் ஒருமுறை கட்டணம் செலுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தலாம்.
மின்மாற்றி பழுதாவதைத் தடுக்கலாம்
ஸ்மார்ட் மீட்டர் அமலாக்கம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழக அதிகாரி ஒருவர், வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் 3.2 கோடி இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படவுள்ளதாகக் கூறினார்.
"ஒவ்வொரு நேரத்திலும் எவ்வளவு மின் பயன்பாடு எனத் தெரிந்து கொள்வதால் மின்மாற்றிகள் அதிக பளு காரணமாக செயலிழந்து போவதைத் தடுக்க முடியும். மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மின்சாரம் வழங்கமுடியும்.
மேலும், ஒரு நபர் வீட்டு உபயோகத்துக்கு என மின் இணைப்பு பெற்று விட்டு அலுவலக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டால், அதை எளிதில் கண்டறிய முடியும். மாலை 7 மணிக்கு மேல் தினமும் பயன்பாடு இல்லை என்றால் அதில் ஏதோ தவறு இருக்கிறது எனக் கண்டறிந்து விடுவோம்,” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
‘பழைய மீட்டரிலேயே மின் பயன்பாட்டை கண்காணிக்கலாம்’
ஆனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் என்ன அவசியம் என தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.காந்தி கேள்வி எழுப்புகிறார்.
தற்போது பயன்படுத்தப்படும் மீட்டர்களிலேயே மின் பயன்பாட்டை தொலைதூரத்திலிருந்து கண்காணிக்க முடியும் என்கிறார் அவர்.
“தற்போதுள்ள ஸ்டாடிக் மீட்டர்களில் ஒரு சிம் பொருத்தினால் போதும், தொலைவிலிருந்து மின் பயன்பாட்டைக் கண்காணிக்கலாம். அப்படித்தான் துணை நிலைய மின் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் தெரிந்துகொள்கிறது,” என்றார்.
தற்போதுள்ள மீட்டரில் இல்லாத ஓர் அம்சம் ஸ்மார்ட் மீட்டரில் உள்ளது. ஆனால், அது தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்கிறார் காந்தி.
“நுகர்வோரின் மின் இணைப்பை ஸ்மார்ட் மீட்டர் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழக அலுவலகத்திலிருந்தே துண்டிக்க முடியும். வரிசையில் நின்று மின் கட்டணத்தைச் செலுத்தும் தமிழ்நாட்டில் இந்த அம்சம் தேவையில்லை. தற்போதுள்ள மின் பயன்பாடு மற்றும் கட்டண கணக்கீடு முறையே சிறப்பானது,” என்று காந்தி கூறுகிறார்.
“24 ஆயிரம் கோடி வீண் செலவு”
எனவே, 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது வீண் செலவு எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
“ஒரு சிங்கிள் ஃபேஸ் ஸ்மார்ட் மீட்டரின் விலை ரூ.6 ஆயிரம். ஆனால் தற்போதுள்ள ஸ்டாடிக் மீட்டர் விலை ரூ.650. மூன்று ஃபேஸ் ஸ்மார்ட் மீட்டரின் விலை ரூ.10 ஆயிரம். அதுவே பழைய மீட்டரின் விலை ரூ.1600.
தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் தயாரிப்பு நிறுவனங்களிலும் சில தொழிற்சாலைகளிலும் ஏற்கெனவே ஸ்மார்ட் மீட்டர் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றுக்குத் தேவையான மென்பொருள் தேவைகளைப் பராமரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் கடந்த இரண்டு மாதங்களாக செலுத்தவேண்டிய கட்டணத்தைக் கொடுக்க முடியவில்லை.
வெறும் 30 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்களையே பராமரிக்க முடியவில்லை என்றால் 3 கோடி மீட்டர்களை எப்படிப் பராமரிக்க போகிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

“ஸ்மார்ட் மீட்டர் தனியார்மயத்தின் முதல் படி”
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மின் வாரிய ஊழியர்கள் சங்கம் இது தனியார்மயத்தின் முதல் படி என்கிறது. அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ் ராஜேந்திரன் இதுகுறித்துப் பேசுகையில் எதிர்காலத்தில் மின் கட்டணத்தைத் தனியார் நிர்ணயிக்கும் நிலை ஏற்படும் என்கிறார்.
ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் தனியார் நிறுவனங்களுக்கு பராமரிப்பு செலவை தமிழ்நாடு மின்வாரியம் செலுத்த வேண்டும் எனக் கூறுவது அபத்தம்.
ஏற்கெனேவ நிதிச்சுமையில் திண்டாடி வரும் வாரியத்துக்கு இது கூடுதல் பளுவாகும். தமிழ்நாட்டில் உள்ள கணக்கீடு பணியாளர்கள் 6 ஆயிரம் பேரின் வேலை பறிபோகும். எதிர்காலத்தில் இதை ப்ரீபெய்டு மீட்டராக மாற்றும் திட்டம் உள்ளது. மின் பயன்பாடு அதிகமுள்ள காலை மற்றும் மாலை நேரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்,” என்கிறார் அவர்.
‘ஸ்மார்ட் மீட்டர் தவிர்க்க இயலாது’
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும், பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் தவறு இல்லை என்றும் தமிழ்நாடு புதுச்சேரி நுகர்வோர் சங்க அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் கூறுகிறார்.
“தற்போதுள்ள புதுப்பிக்கப்பட்ட மீட்டர்களிலேயே மிகத் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது. தொலைக்காட்சியை ரிமோட் மூலம் அணைத்துவிட்டு, ஸ்விட்சை அணைக்காமல் இருந்தாலும், ஏசி-ஐ அணைத்துவிட்டு, அதன் ஸ்டெபிலைசரை அணைக்காமல் இருந்தாலும் அதற்கான மின் பயன்பாடு தற்போதும் கணக்கிடப்படுகிறது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் இந்தக் கணக்கீடு மேலும் துல்லியமாக இருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தித்தானே ஆகவேண்டும்?” எனக் கேட்கிறார் அவர்.
மேலும் தனியார்மயத்தைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்று அவர் கூறுகிறார்.
“கடந்த 1972ஆம் ஆண்டுக்கு முன் மின்சார விநியோகம் தனியாரிடமே இருந்தது. அதன் பின்னரே மின்சார வாரியம் எடுத்துக்கொண்டது. தனியார் மின்சார தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கு, மின்சாரச் சட்டம் 2003 அனுமதி அளிக்கிறது.
அரசுக்கும் தனியாருக்குமான போட்டியில் தரமான மின்சாரம் மக்களுக்குக் கிடைக்கும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இருப்பதால் கட்டண நிர்ணயம் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












