தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்

பட மூலாதாரம், PMD SRI LANKA
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இந்த விஜயமானது மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் கால்நடை பராமரிப்புத்துறையில் கூட்டு நோக்கத்தின் பிரகடனம், இந்தியா மற்றும் இலங்கை இடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கைக்குள் யூ.பி.ஐ டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறையை மேம்படுத்தல் மற்றும் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதிப் பத்திரம் இலங்கையிடம் கையளிப்பு போன்ற உடன்படிக்கைகள் கைமாற்றப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான தனது அதிகாரபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கடந்த ஆண்டுகளில் எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய ஆதரவுக்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி பேச்சு
இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிடுகின்றது.
இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கப்பல், விமான சேவைகளை அதிகரிக்க முடிவு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய - இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பட மூலாதாரம், PMD SRI LANKA
இந்தியா- இலங்கை இடையே பாலம் சாத்தியமா?
சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை மீண்டும் தொடங்குதல் , ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட பிற இடங்களுக்கு இடையே படகு சேவைகளை விரைவாக மீண்டும் தொடங்குவது தொடர்பாக பணியாற்றுவது குறித்து பேசப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை - யாழ்ப்பாணம் இடையே விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம் மக்களிடையே உறவுகள் மேம்படுத்துள்ளது. எனவே, இந்த விமான சேவையை கொழும்பு வரை விரிவுப்படுத்துவது குறித்தும் சென்னை மற்றும் திருகோணமலை, மட்டக்களிப்பு மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கு இடையே விமான சேவையை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வது குறித்தும் சந்திப்பில் பேசப்பட்டது.
இதேபோல் இந்தியாவின் ரூபாயில் வர்த்தகம் செய்வது, யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வது போன்றவற்றுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான நில அணுகலை மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான பல்லாண்டு பழமையான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துதல் குறித்து பேசப்பட்டது. அத்தகைய இணைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் நடத்தப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், PMD SRI LANKA
தமிழ்நாடு - இலங்கை இடையே மின்கம்பி வட இணைப்புத் திட்டம்
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை மின்சக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கு மின்சக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் மின்சக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையை மின்சக்தி மையமாக மாற்றுவது பற்றி பேச்சு
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தனது இந்திய விஜயம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போட்டிமிகு உலகில் பரஸ்பர சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான புவியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மேலும் ஊக்கமளிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை மின்சக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு மின்சக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் மின்சக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

பட மூலாதாரம், PMD SRI LANKA
இந்திய வெளியுறவு அமைச்சருடன் ரணில் சந்திப்பு
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கரிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு, வெளிவிவகார அமைச்சர் வரவேற்பளித்ததுடன், அவருடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நேற்றைய தினம் நடத்தியிருந்தார்
இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதானியுடன் ரணில் சந்திப்பு
அத்துடன், அதானி குழுமத்தின் ஸ்தாபகத் தலைவர் கௌத்தம் அதானியுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இலங்கையில் அதானி குழுமத்தின் முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி, காற்றாலை மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












