ஏழு வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்: பாலியல் சித்ரவதை செய்து கொன்ற இளைஞர் அளித்த வாக்குமூலம்

- எழுதியவர், பி. சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.
தருமபுரி மாவட்டம் புழுதிகரையை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் ஆதிமூலம்(30). இவர் மனைவி சுதா(27). இவர்களின் 7 வயது மகன் கடத்தூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் இவர் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 16ஆம் தேதி மாலையில் வீட்டுக்கு அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. எனவே, சிறுவனின் பெற்றோரும், உறவினரும் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், காட்டம்பட்டி பகுதியில் தண்ணீர் இல்லாமல், காலியான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் துர்நாற்றம் வீசுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
அங்கு, காணாமல் போன சிறுவன் மதியரசு, கழுத்துப் பகுதியில் காயங்களுடன் பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்ட நிலையில் தொட்டியில் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது.
சிறுவன் காணாமல் போனது எப்படி?
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தருமபுரி தீயணைப்புத் துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு, உடலை உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனை நரபலி கொடுப்பதற்காக யாராவது கடத்தினார்களா, சிறுவன் மரணத்தில் பின்னணியில் வேறு காரணங்கள எதுவும் உள்ளதா என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், “என் மகனை துடிக்கத் துடிக்க இப்படிச் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். என் மகனைக் காணவில்லை என்றுதான் கூறினார்கள், ஆனால் இப்போது இறந்துவிட்டான். இப்படிச் செய்தவனுக்கு தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும்,” என்று சிறுவனின் தாய் சுதா கண்ணீர் மல்கப் பேசினார்.

போலீசார் விசாரணையில், காணாமல் போன நாளன்று ஆதிமுலத்தின் உறவினரின் மகன் பிரகாஷ் உடன் சிறுவன் இருந்ததாகத் தெரிய வந்தது.
இதையடுத்து பிரகாஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவன் அளித்த வாக்குமூலம், அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பிபிசி தமிழிம் கூறுகையில், “சாக்லேட், ஐஸ்கீரிம் வாங்கித் தருவதாகக் கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு, கை கால்களை மின் வயரால் கட்டிப்போட்டு, வல்லுறவு செய்ததாகவும் பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்,” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விபரத்தை வெளியே தெரிவித்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில், சிறுவனை கொலை செய்து குடிநீர் மேல்நிலை தொட்டியில் போட்டுவிட்டு, அவர் ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாகவும் ஸ்டீபன் யேசுபாதம் தெரிவித்தார்.
“ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த, பிரகாஷ் கூலி வேலை செய்து வந்ததாகவும், இவரால் மேலும் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாகவும்” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
இதுதொடர்பாக, பிரகாஷ் மீது கொலை மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு

சிறுவன் கொலை தொடர்பாக கிருஷ்ணாபுரம் காவல் நிலைய குற்ற வழக்கு எண் 100/2023 பதிவு செய்யப்பட்டது. அதன்படி, போக்சோ சட்டம் & 302,201 IPC இன் 5(m)& 6 இல் சிறுவன் காணவில்லை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் பிரகாஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையில் பிரகாஷ் கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், “அடிக்கடி சிறுவனிடம் விளையாடி வந்ததாகவும், சமபவத்தன்று சிறுவனை புழுதிகரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை தொட்டிக்கு, ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றேன்.
சிறுவனின் வாய் மற்றும் இரண்டு கைகளையும் மின் வயர்களால் கட்டி, பாலியல் வல்லுறவு செய்தேன்,” என்று பிரகாஷ் வாக்குமூலம் அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “சிறுவனை வெளியே விட்டால், ஊரில் சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில் வலது கையால் கழுத்தை நெறித்துக் கொன்றதாகவும், சிறுவனின் உடலை மேல்நிலை தொட்டியின் உள்ளே தள்ளி விட்டு வந்ததாகவும் வாக்குமூலத்தில்” பிரகாஷ் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்
உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் சிறுவனின் உடலை வாங்க மறுத்துள்ளனர். "இந்தக் கொலையை ஒருவர் மட்டுமே செய்திருக்க முடியாது. இதில் இன்னும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம்.
எனவே உரிய விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் கூறி கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முன்பு தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து உளவியல் மருத்துவர் சி.வெள்ளைச்சாமி பிபிசி தமிழிடம் பேசியபோது, குழந்தைகள் தன்பாலின வல்லுறவுக்கு உள்ளாவது உலகம் முழுக்க இருக்கக்கூடிய பிரச்னை எனவும் ஒரு சில இடங்களிலேயே இது வெளியே தெரிய வருகிறது எனவும் கூறினார்.

குழந்தைகளை பாலியல் வல்லுறவு குற்றங்களில் இருந்து பாதுகாப்பது எப்படி?
இத்தகைய குற்றங்கள் பல இடங்களில் மறைமுகமாக நடந்துகொண்டிருப்பதாகவும் பெற்றோருக்கே தெரியாமல் குழந்தைகள் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் கூறிய அவர், “வக்கிர உணர்வு கொண்டவர்களால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்கள் ஒன்று பழிவாங்கும் நோக்கத்திலோ அல்லது தனது சுய மகிழ்ச்சிக்காகவோ இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுவும் ஒரு வகையான மனநோய்தான்,” என்று தெரிவித்தார்.
அதோடு, இந்த மாதிரி நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உளவியல் சிகிச்சை வழங்கினால்தான் சமூகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், “இவர்களைக் கண்டறிவது மிகவும் கடினம். அவர்கள் நம்மில் ஒருவராகவே இயல்பாகப் பழகுவார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளக் காத்திருந்து, அதை அரங்கேற்றுவார்கள்.
இவர்கள் யாருடனும் ஒன்றிப் பழக மாட்டார்கள். தனித்திருக்கவே அதிகம் விரும்புவார்கள். இவர்களுக்கு நண்பர்களும் குறைவாகவே இருப்பார்கள். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும்போதுதான் வெளியுலகுக்கு உண்மை தெரிய வரும்,” என்று விளக்கினார்.
குழந்தைகளிடம் பெற்றோர் தங்கள் முழு அன்பையும் வெளிப்படுத்திப் பழக வேண்டும் எனக் கூறும் உளவியல் மருத்துவர் வெள்ளைச்சாமி, அவர்களுக்கு நல்லது, கெட்டதை கற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
“அப்போதுதான் குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்னையை பெற்றோர் அறிய முடியும். அவர்களது பிரச்னைகளை பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்தால்தான், குழந்தைகளை இத்தகைய அபாயங்களில் இருந்து பாதுகாக்க முடியும்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












