ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய ராட்சத பொருள் சந்திரயான் ராக்கெட்டின் பகுதியா?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ்
ஆஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய ராட்சத உலோக உருளை போன்ற பொருள் இந்தியாவுக்குச் சொந்தமானதா என்று சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் விளக்கமளித்துள்ளார்.
இது ராக்கெட்டின் பாகம் என்று கூறப்படுகிறது.
எனினும் “நாங்கள் அதை ஆய்வு செய்யாத வரை இது எங்களுடையது என்பதை உறுதிப்படுத்த முடியாது” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில நாள்களுக்கு முன்பு ராட்சத உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்தே இந்தப் பொருள் பற்றிய ஊகங்கள் நிலவி வருகின்றன.
இது கடந்த வெள்ளியன்று இந்தியா விண்ணுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதை நிபுணர்கள் மறுத்தனர்.
சுமார் 2.5 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள், கிரீன் ஹெட் கடற்கரையில் வசிப்பவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பொருள் காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூட முதலில் ஊகங்கள் எழுந்தன. 2014-ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் இந்த விமானம் காணாமல் போனது.
ஆனால் விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் இந்த பொருள் விமானத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்றும் அது ராக்கெட்டின் எரிபொருள் கலனாக இருக்கலாம் என்றும் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
"வெளிநாட்டு விண்வெளி ஏவு வாகனத்தில்" இருந்து ராட்சத உருளை விழுந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறியது.
இதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு வழக்கமாக பயன்படுத்தும் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் எரிபொருள் கலன் என்று ஊகங்கள் எழுந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் அனுப்ப இந்த வகை ராக்கெட் பயன்படுத்தப்பட்டால், அதன் எரிபொருள் கலனாக இது இருக்கலாம் என்று ஊகம் எழுந்தது. இந்தப் பொருள் பல மாதங்களாக நீரில் கிடந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும் ஊகங்கள் குறையவில்லை.
எனினும் “இது ராக்கெட்டின் ஒரு பகுதி” என்று பிபிசியிடம் உறுதிப்படுத்திய சோம்நாத், “எந்த மர்மமும் இல்லை” என்று கூறினார்.
"இது பிஎஸ்எல்வி அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் பாகமாக இருக்கலாம், அதைப் பார்த்து பகுப்பாய்வு செய்யாவிட்டால், அதை உறுதிப்படுத்த முடியாது," என்று அவர் கூறினார். எனினும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இன்னும் விவரங்களை வெளியிடவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












