மாதம் ரூ.5,000 வழங்கும் தேசிய இளைஞர் தன்னார்வத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஏ கிஷோர் பாபு
- பதவி, பிபிசிக்காக
சமூக முன்னேற்றத்திறகாகத் தங்களால் முடிந்த சேவையைச் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் சில காலம் தன்னார்வலராக பணியாற்ற வாய்ப்பளிக்கும் வகையில், 'தேசிய இளைஞர் தன்னார்வலர்' (National Service Volunteer -NSV) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து தன்னார்வலராகப் பணியாற்றுபவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.5000 கவுரவத் தொகையும் வழங்கி வருகிறது.
தேசிய இளைஞர் தன்னார்வத் திட்டம் என்றால் என்ன? திட்டத்தில் சேருவதற்கான தகுதித் தேவைகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது?
தேசிய இளைஞர் தன்னார்வத் திட்டம் என்றால் என்ன?
இந்தத் திட்டத்தின் கீழ் சேருபவர்கள் 'தேசிய இளைஞர் காவலர்கள்' (National Youth Corps’ – NYC) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இத்திட்டம் 2011 முதல் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் தலைமையிலான 'நேரு யுவ கேந்திரா சங்கதன்' என்ற அமைப்பின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன் கீழ், விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தன்னார்வலராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். அப்போது அவர்களுக்கு மாதம் தோறும் 5000 ரூபாய் கௌரவ சம்பளம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 12,000 தன்னார்வலர்களை மத்திய அரசு தேர்வு செய்கிறது. அவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள தொகுதி அளவிலான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு பணியாற்றுகின்றனர்.
யார் விண்ணப்பிக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images
இத்திட்டத்தில் தன்னார்வலராக சேர விரும்புவோரின் வயது 18 முதல் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலில் நான்கு வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
கல்வி தகுதி என்ன?
இத்திட்டத்தில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது?
பட்டப்படிப்பை முடித்த மற்றும் தொழில்நுட்ப திறன் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு தேசிய இளைஞர் தன்னார்வலராக தேர்வு செய்யப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆண்ட்ராய்டு போன் மற்றும் பல்வேறு வகையான ஆப்ஸைப் பயன்படுத்துவதில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வழக்கமான மாணவர்கள் தன்னார்வலர்களாக சேர முடியுமா?
முடியாது. கல்லூரிகளில் முழுநேர மாணவர்களாகப் படிக்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் சேர முடியாது. அவர்கள் தங்கள் கல்லூரிகளில் என்.சி.சி அல்லது என்.எஸ்.எஸ் திட்டங்களில் சேரலாம்.
பகுதி நேர தன்னார்வலராக பணியாற்றலாமா?
அப்படிப் பணியாற்றமுடியாது.
தன்னார்வலர்களின் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படும்?

பட மூலாதாரம், Getty Images
- தேசிய இளைஞர் தன்னார்வலராக அல்லது தேசிய இளைஞர் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேரு யுவஜன கேந்திரா அதிகாரிகளால் சமூக சேவைகளை வழங்க அந்தந்த பகுதிகளில் உள்ள தொகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
- ஒரு மாவட்டத்தின் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்கள் சேர்ந்து ஒரு தொகுதியாகக் கருதப்படும். அந்தப் பகுதி பஞ்சாயத்துகளில் உள்ள சமூக பிரச்னைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து இந்தத் தன்னார்வலர்கள் அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- அந்த பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- பெண் தன்னார்வலர்கள் அப்பகுதி பெண்களை ஒன்று திரட்டி அங்கு நிலவும் பிரச்னைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- ஸ்கில் இந்தியா, க்ளீன் இந்தியா, ஃபிட் இந்தியா, ஆசாதிகா அம்ரித் கால் போன்ற நிகழ்ச்சிகளும் அந்தந்த ஊராட்சிகளில் நடத்த உதவ வேண்டும்.
- பிளாஸ்டிக் இல்லாத பஞ்சாயத்துகளை உருவாக்க தன்னார்வலர்கள் அங்கு ஸ்வச் பாரத் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
- அந்தந்த கிராமங்கள், பஞ்சாயத்துகள் மற்றும் மண்டலங்களில் அதிகம் அறியப்படாத சமூக சேவகர்கள், திறமையாளர்கள், சமூகப் புரட்சியாளர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
- உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து அந்தந்த ஊராட்சிகளில் சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர் மன்றங்களை அமைப்பதில் தன்னார்வலர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?

பட மூலாதாரம், Getty Images
இத்திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், இளைஞர் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள். அந்தப் பகுதியின் முன்னணி நாளிதழ்களிலும் விளம்பரங்கள் கொடுக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- ஆதார் அட்டை
- 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
- சாதிச் சான்றிதழ் (SC, ST, OBC)
- உயர் கல்வித் தகுதிகள் ஏதேனும் இருந்தால் அதற்கான சான்றிதழ்கள்
- உங்கள் முகவரிச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம்/ரேஷன் அட்டை)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












