மணிப்பூர் வன்முறை: தேசிய குடிமக்கள் பதிவேடு கோரிக்கை எழுவது ஏன்? முழு கள நிலவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி நியூஸ்
இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற சாய்கோம் ராக்கெட், தனது பாக்கெட்டிலிருந்து ஒரு தோட்டாவை எடுத்து தனது மகனைக் கொன்ற தோட்டா அதுதான் என்று கூறுகிறார்.
ஜூலை 10 ஆம் தேதி காலை, இம்பாலில் இருந்து சிறிது தொலைவில் உள்ள கடங்பண்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதில் அவரது 28 வயது மகன் சாய்கோம் ஷுபோல் காயமடைந்ததாகவும் செய்தி வந்தது.
இதுகுறித்து அவர் பேசுகையில், “போனில் பேசியபோது காலில் குண்டு காயம் இருந்ததாகச் சொன்னார்கள். காலில் தோட்டா இருந்தால் சிகிச்சை மூலம் குணமாகும் என்று நினைத்தேன். அங்கு சென்ற பிறகுதான் என் மகன் இறந்து விட்டான் என நான் தெரிந்துகொண்டேன்," என்கிறார்.
சாய்கோம் ஷுபோல் கடந்த சில நாட்களாக மெய்தேய் சமூகத்தின் கிராமப் பாதுகாப்புக் குழுவில் தன்னார்வலராகப் பணியாற்றி வந்தார்.
மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினரிடையே வன்முறைகள் அதிகரிக்கும் ஆபத்துள்ள பகுதிகளில் இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், DEVASH KUMAR
ஜூலை 10 காலை, இம்பால் பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்து வரும் வன்முறைகளுக்கு இடையே சாய்கோம் ராக்கெட்டுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
சாய்கோம் ராக்கெட் தனது மகனைக் கொன்ற புல்லட்டைப் பயன்படுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறார்.
மேலும், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் வன்முறைகள் ஏன் நிற்கவில்லை என்பதை மத்திய, மாநில அரசுகளால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்.
"ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறான செயல்களைச் செய்யக்கூடாது. மனித வாழ்க்கையை பொம்மை வாழ்க்கையாகக் கருதக் கூடாது. தற்போது மத்தியிலும் மணிப்பூரிலும் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த இரண்டு அரசுகளும் ஏதாவது செய்ய முடியாதா? ஏன் உங்களால் முடியாது?"
இறந்த ஷுபோலின் வீட்டில் பெரும் சோகமாக மக்கள் திரண்டுள்ளனர். ஷுபோலின் தாய் தனது மகன் உயிரிழந்தது குறித்து மிகுந்த துயரத்தில் சிக்கித் தவிக்கிறார்.

பட மூலாதாரம், DEVASH KUMAR
இந்த மரணச் செய்தி வந்த சில மணி நேரத்துக்குப் பிறகு, இம்பாலின் தெருக்களில் உள்ளூர் மக்களின் வேதனையும் கோபமும் வெடித்தது.
ஷுபோல் வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில், இம்பாலின் புகழ்பெற்ற எம்மா சந்தைக்கு அருகில் உள்ள அனைத்து சாலைகளிலும் பெண்கள் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
மணிப்பூர் முதல்வர் என். பைரென் சிங்கின் வீட்டிற்கு இந்த பெண்கள் செல்ல முடியாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் மணிப்பூரின் இன வன்முறையின் மற்றொரு அத்தியாயம் இம்பாலின் தெருக்களில் எழுதப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற நிருபமா லைஷ்ராம், "ஒரு இளைஞர் எங்களுக்காக உயிரிழந்தார். நாளை இன்னும் எத்தனை பேர் சாகப்போகிறார்கள் என்று தெரியவில்லை. தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள். இது எங்கள் வேண்டுகோள். நாங்கள் சாக விரும்பவில்லை. எங்களுக்கு குடும்பம் உள்ளது. தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்," என உருக்கமாக வேண்டுகிறார்.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எதுவும் கூறாதது இந்த பெண்களையும் வேதனைப்படுத்தியுள்ளது.
போராட்டத்தை முன்னின்று நடத்தும் ரனிடா லைஷ்ராம் பேசுகையில், "மோடிஜியிடம் நான் என்ன கேட்க விரும்புகிறேன் என்றால், நாங்கள் இந்தியர்கள் இல்லையா என்பதே ஆகும். உண்மையில் அவர் நம்மைப் பற்றி கொஞ்சம் நினைத்தால், நம்மை இந்தியராகக் கருதுகிறார் என்றால், மணிப்பூரில் பெரும் மாற்றம் நடப்பதைக் காணமுடியும்," என்று கூறினார். இங்கு கல்வி நிலையங்கள், தொழிலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கண்ணில் தெரிபவை எல்லாம் கண்முன்னே அழிகின்றன.
அமைதியாக அமர்ந்திருப்பதால் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காது. மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்துதான் சரி செய்ய முடியும். கூடிய விரைவில் தீர்வு பற்றி சிந்தியுங்கள். இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது," என்றார்.

பட மூலாதாரம், DEVASH KUMAR
மே 3 அன்று வன்முறை தொடங்கியதில் இருந்து, மணிப்பூரில் 142 பேர் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட 60,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் கூற்றுப்படி, இந்த வன்முறையில் 5000 தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், வன்முறை தொடர்பாக மொத்தம் 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 6,745 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
தற்போது, மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து பதிவு செய்ய யாரும் தயாராக இல்லை. ஆனால் நிலைமை மெதுவாக முன்னேறி வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
வன்முறை தொடங்கிய சுராசந்த்பூருக்கு நாங்கள் சென்றோம்.
சுராசந்த்பூர் இம்பாலில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இப்போது இங்கு வருவது முன்பைப் போல் எளிதல்ல.
இம்பால் மற்றும் சுராசந்த்பூர் இடையே உள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ஒரு பகுதி இடையக மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் பல சோதனைச் சாவடிகளைக் கடந்து, நாங்கள் சுராசந்த்பூரை அடைந்தோம்.
வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இங்கு ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு "நினைவுச் சுவர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும், நூற்றுக்கணக்கான மக்கள் இந்த நினைவிடத்தில் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களுக்கு முன்னால் துயரத்துடன் போராடுகிறார்கள்.
நினைவுச் சின்னத்தில் இறந்தவர்களின் படங்களில் இரண்டு மாத குழந்தையின் படமும் அடங்கும். நினைவுச்சின்னத்தின் முன் தெருவில் தினமும் டஜன் கணக்கான பெண்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

பட மூலாதாரம், DEVASH KUMAR
அத்தகைய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கிறிஸ்டி சுந்தக் கூறுகிறார், "எங்களிடம் அரசாங்கம் இல்லை. எங்களுக்காக நிற்க யாரும் இல்லை, எங்களுக்காக பேச யாரும் இல்லை. எனவே நாங்கள் செய்யக்கூடியது இங்கே வந்து எங்கள் சகோதர - சகோதரிகளுக்காக துக்கப்படுவது தான். எங்களைக் காப்பாற்றுங்கள். இதுவே உலகிற்கு எங்களின் செய்தி," என்கிறார்.
குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் பகுதியில் தனி நிர்வாகக் கோரிக்கை வலுத்து வருகிறது.
பழங்குடியின மக்கள் தலைவர்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மேரி ஜோன்ஸ், "எங்களுக்கு முற்றிலும் தனி நிர்வாகம் வேண்டும். அது ஒரு மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ இருக்கலாம். பழங்குடியின மக்களுக்கான தீர்வுகளை நாங்களே ஏற்படுத்திக்கொள்வோம்," என்கிறார்.
வன்முறைகளுக்கு மணிப்பூர் அரசும் மெய்தேய் சமூகத்தினரும் தான் காரணமா?
இந்த வன்முறைக்கு மெய்தேய் சமூகமும் மணிப்பூர் அரசும் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேரி ஜோன்ஸ் கூறுகிறார், "நாங்கள் மணிப்பூர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக எங்களைக் கருதவில்லை. நாங்கள் நடத்தப்பட்ட விதத்தின் அடிப்படையில் பார்த்தால், மணிப்பூர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக எங்களை எப்படிக் கருதுவது? நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்கள் எங்களை ஏற்கனவே அந்நியப்படுத்திவிட்டார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஆயுதமேந்திய கிராமப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதைப் போலவே, சுராசந்த்பூரின் பல இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி வீதிகளில் இறங்கியதைக் கண்டோம்.
வன்முறை தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மணிப்பூரின் சுராசந்த்பூர் பகுதியில் சூழ்நிலை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் இங்கு பரவிய பதற்றம் இன்னும் நீடிக்கிறது.

பட மூலாதாரம், DEVASH KUMAR
சுராசந்த்பூர் இம்பால் பள்ளத்தாக்கிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களும் மிசோரம் வழியாக நீண்ட பாதையில் கொண்டு செல்லப்படுகின்றன.
வன்முறையின் போது குடும்பத்தினரையும், நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களையும் இழந்த சோகம் இங்குள்ள மக்கள் மனதில் இன்னும் நீங்காமல் இருக்கிறது. இந்த துயர்த்துடன் கோபமும் சேர்ந்து ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ளவர்கள் இந்த இடத்தின் பெயரை மாற்ற முடிவு செய்திருப்பது கோபத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. சுராசந்த்பூர் என்று எழுதியிருந்த இடங்களில் எல்லாம் அது அழிக்கப்பட்டு, லாம்கா என்ற புதிய பெயர் எழுதப்பட்டுள்ளது.
மணிப்பூரின் மெய்தேய் மன்னரால் சூரசந்த்பூர் என்ற பெயர் அந்த ஊருக்கு சூட்டப்பட்டதாகவும், தற்போது தனி நிர்வாகத்தை நாடுவதால், மணிப்பூரின் மெய்தேய் மன்னர்கள் தொடர்பான எதையும் நினைவில் வைத்திருக்க விரும்பவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.
மலைப்பாங்கான பகுதிகளில் தனி நிர்வாகம் வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் எழுந்தாலும், மறுபுறம் மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் நுழைந்தவர்களுக்கு இந்த வன்முறையில் பெரும் பங்கு இருப்பதாக சமவெளி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதனால்தான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் இப்போது என்ஆர்சி சட்டத்தை நிறைவேற்றி மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அடையாளம் காணக் கோருகின்றனர்.
இதனை மலையகத்தில் வாழும் குகி சமூக மக்கள் மறுக்கின்றனர்.
"அவர்கள் எங்களை இந்தியர்களாகக் கருதவில்லை. எங்களை வெளியாட்களாகக் கருதுகிறார்கள். நாங்கள் மியான்மரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். எப்படிச் சொல்வார்கள்? நாங்கள் மியான்மரைச் சேர்ந்தவர்கள் அல்ல," என்கிறார் சூராசந்த்பூரில் போராட்டம் நடத்தும் ஹட்னினெங். "நாங்கள் அங்கிருந்து வரவில்லை. நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம். எங்கள் முன்னோர்கள் போரின் போது ஆங்கிலேயர்களுடன் இங்கு இருந்தனர். நாங்கள் இந்த இடத்தின் பூர்வீக குடிமக்கள். அவர்கள் எங்களை எப்படி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறுவார்கள்?"

பட மூலாதாரம், DEVASH KUMAR
நிங்தூஜா லான்ச்சா ஒரு திரைப்பட தயாரிப்பாளர். மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களே தற்போதைய வன்முறைகளுக்கு முக்கிய காரணம் என்று அவர் நம்புகிறார்.
லான்ச்சா கூறுகையில், "அவர்களை அடையாளம் கண்டு சரிபார்க்க சில வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். இல்லையெனில், இதுபோன்ற மோதல்களும் நெருக்கடிகளும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்," என்றார்.
மெய்தேய் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் தொடர்வதால், இது எப்போது, எப்படி நிறுத்தப்படும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. லான்ச்சா கூறுகையில்,"சில வகையான நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால், இரு சமூகத்தினருக்கும், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நம்பிக்கை இல்லாதது பிரச்சினையை மேலும் வலுவாக்குகிறது," என்றார்.

பட மூலாதாரம், DEVASH KUMAR
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடந்து வரும் வன்முறையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
சுகானு என்ற கிராமத்தை ஆய்வு செய்ய நாங்கள் சென்றபோது, உள்ளூர் பெண்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்ததைக் கண்டோம்.
அத்தகைய பெண்களின் ஒரு குழுவை வழிநடத்தும் நௌரெம் சுமிதா, "இந்த வாகனங்களை நாங்கள் சோதனை செய்கிறோம். யார் என்ன கொண்டு செல்கிறார்கள் என கண்டறியவேண்டும். சிலர் துப்பாக்கிகள் போன்றவற்றை எடுத்துச் செல்கிறார்கள். அனைவரின் பாதுகாப்பிற்காக அனைத்து வாகனங்களையும் சோதனை செய்கிறோம்," என்றனர்.
இந்த பெண்கள் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தாக்குவார்கள் என்று இவர்கள் பயப்படுகிறார்கள். சுகானுவுக்குச் செல்லும் சாலையில், ஒவ்வொரு சில கிலோமீட்டருக்கும் இதே போன்ற சோதனைச் சாவடிகளைக் கண்டோம்.
சுகானு என்பது பல தசாப்தங்களாக மெய்தேய் மற்றும் குகி ஆகிய இரு சமூகங்களும் அருகருகே வாழ்ந்து வரும் ஒரு பகுதி.
மே 3-ம் தேதி மாநிலத்தில் வன்முறை வெடித்தபோது, இங்கு வசிக்கும் இரு சமூகத்தினரும் சமாதான ஒப்பந்தம் செய்து, ஒருவருக்கொருவர் வன்முறையில் ஈடுபட மாட்டோம் என்று முடிவு செய்தனர். இந்த சமாதான ஒப்பந்தம் 24 நாட்கள் நீடித்தது. மே 28 அன்று சுகானுவிலும் வன்முறை வெடித்தது.
இதனால், இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எஞ்சியிருப்பவர்கள் இனி வரும் காலங்களில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.
இங்கிருந்து தப்பி ஓடியவர்களில் மெய்தேய் மற்றும் குகி ஆகிய இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். சுமார் 7,000 பேர் வசிக்கும் இந்தப் பகுதியில் இப்போது ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், DEVASH KUMAR
குகி சமூகம் வாழும் பகுதிகளில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மீட்டுள்ளதாக சுகானுவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கே சிலர் அவர்களுடைய அடையாளங்களை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையுடன் எங்களுடன் பேசினர்.
இங்கு வசிக்கும் ஒருவர், "எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆனால் எனது கிராமத்தை நான் பாதுகாக்க வேண்டும். எனது மக்களை நான் பாதுகாக்க வேண்டும். மக்கள் இல்லாமல் இந்த கிராமம் கிராமமாக இருக்காது" என்றார்.
சுகானு போன்ற பல பகுதிகளில் உள்ளூர் மக்களை விட பாதுகாப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். பல இடங்களில், உள்ளூர் மக்கள் ஆயுதங்களை ஏந்தியபடி தங்கள் கிராமங்களில் சுற்றித் திரிவதைக் காணலாம்.

பட மூலாதாரம், DEVASH KUMAR
இந்த வன்முறை குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. இது தொடர்பாக சிபிஐயும் விசாரணையை தொடங்கியுள்ளது.
நிலைமை சீரடைந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் மாநிலத்தில் நாளுக்கு நாள் நடக்கும் வன்முறைகள், இரு சமூகத்தினரிடையே அவநம்பிக்கையின் பிளவு ஆழமடைந்து வருவதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், மணிப்பூரின் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பயங்கர பாதிப்பில் சிக்கித் தவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












