காந்தி 'தேசத்தந்தை' ஆனது எப்படி? அதனை வலதுசாரிகள் ஏன் எதிர்க்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அசோக்குமார் பாண்டே
- பதவி, பிபிசி இந்தி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி, பாபுஜி, தேசத்தந்தை ஆகிய பெயர்களால் காந்தி அறியப்படுகிறார்.
ஜின்னா, சாவர்க்கர், அம்பேத்கர் போன்ற சில தலைவர்களே அவரது முழு பெயரை பயன்படுத்தியுள்ளனர். சில முக்கிய இந்திய தலைவர்கள் மிஸ்டர் காந்தி என்று அவரை அழைக்கின்றனர்.
ஜவஹர்ஹலால் நேரு மற்றும் வல்லபாய் படேலின் கடிதங்களில் 'அன்புள்ள பாபுஜி’ என்ற வார்த்தை காந்தியைக் குறிப்பிட அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காந்தியின் மகன் மற்றும் குஜராத்தி பின்னணி கொண்ட சிலர் அவரை பாபுஜி என அழைக்கின்றனர். இதற்கு குஜராத்தி மொழியில் தந்தை என்று பொருள். எனவே இளம் காங்கிரஸ் தலைவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்த தொடங்கினர்.
சம்பாரண் சத்தியாகிரக இயக்கத்திற்குப் பிறகு காந்திக்கு 'மகாத்மா' என்ற புதிய பெயர் கிடைத்தது. இந்தப் பெயரை ரவீந்திரநாத் தாகூர் வழங்கியதாக கூறப்பட்டாலும் யார், எப்போது வழங்கினர் என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால், தன்னுடைய நல்லொழுக்கம் நிறைந்த வாழ்க்கை, எளிமையான உடை மூலம் நாட்டு மக்களை காந்தி கவர்ந்தார். மக்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதால், 'மகாத்மா' என்பது அவரது பொதுவான பெயராக பின்னர் மாறியது.
எதிர்ப்பாளர்கள் பலரும்கூட அவரை மகாத்மாஜி என்று தன்னுடைய உரையிலும் கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளனர். நாதுராம் கோட்சே கூட பிரபலமான தன்னுடைய நீதிமன்ற உரையில் காந்தியை 'ஜி' என்று மரியாதையுடனே குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
தேசத்தந்தை சர்ச்சை
ஆனால், தற்போது தேசத்தந்தை என்ற பட்டத்தையொட்டி சர்ச்சைகள் எழுகின்றன. காந்தி எப்படி தேசத்தின் தந்தையாக இருக்க முடியும் என வலதுசாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த சர்ச்சைகளைத் தாண்டி, யார் காந்திக்கு இந்தப் பட்டத்தை அளித்தது என்பது தொடர்பாகவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் ஹத்ராஸைச் சேர்ந்த கௌரவ் அகர்வால் என்பவர் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாசார அமைச்சகம், காந்தியை தேசத்தந்தை என அழைக்க வேண்டும் என எந்த விதிகளையும் அரசு விதிக்கவில்லை என்றது.
2012ஆம் ஆண்டு லக்னோ மாணவர் ஒருவர், அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடமும், பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் இது தொடர்பாக சட்டம் கோரியபோது, 18(1)வது விதியை உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியது. அதன்படி, ராணுவத் துறையைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் இத்தகைய பதவிகள் வழங்க முடியாது என்று கூறியது.
இதுதவிர, காந்தியை தேசத்தந்தையாக அறிவிக்க கோரி அனில் தத் ஷர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, காந்தி தேசத்தந்தை என்பதை ஏற்பதாகவும், அவரை இந்த நாடு மிகவும் மதிக்கிறது என்றும் கூறியது. அதே நேரம் அதை முறைப்படி அறிவிக்க வேண்டும் என்பதை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
சமீபத்தில் காந்தியை தேசத்தந்தையாக ஏற்க முடியாது என்று தெரிவித்த சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், ஆயிரமாண்டு பழமையான இந்தியாவிற்கு எப்படி ஒருவர் தந்தையாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
எனவே இப்படியான சூழலில் காந்திக்கு அந்த அடைமொழியை கொடுத்தது யார், அது எப்படி பயன்பாட்டிற்கு வந்தது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
சிறையில் இறந்த கஸ்தூரிபாய்

பட மூலாதாரம், Getty Images
நாட்டில் 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' தீவிரமடைந்த போது காங்கிரஸை சட்டவிரோதமானது என்று ஆங்கிலேயர்கள் அறிவித்தது மட்டுமல்லாமல், அதன் முக்கிய தலைவர்களையும் சிறையில் அடைத்தனர்.
காந்தி, அவரது மனைவி கஸ்தூரிபாய், தனிச்செயலாளர் மகாதேவ் தேசாய் மற்றும் சிலருடன் புனேயில் உள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டார்.
அரண்மனை என்ற பெயரும், அதை நினைவுச் சின்னமாக வைத்திருக்கும் விதமும் அந்த இடத்திற்குஅரண்மனையின் தோற்றத்தை தற்போது அளிக்கலாம்.
ஆனால் ஸ்டான்லி வோல்பார்ட் தனது 'காந்தியின் பேரார்வம்' என்ற புத்தகத்தில் அந்த சமயத்தில் அங்கு கால்வாய்கள் இருந்ததாகக் கூறியுள்ளார். எனவே அங்கு மிகையான ஈரப்பதம் இருந்தது. அதனால் கொசுக்களின் ஆதிக்கமும் மலேரியா வருவதற்கான வாய்ப்பும் இருந்தது.
இது அந்தக் காலகட்டத்தில் மோசமான சிறைகளில் ஒன்று என்றும் வோல்பார்ட் குறிப்பிட்டுள்ளார். இங்கு இருந்த போது 1942 ஆகஸ்ட் 15இல் காந்தியின் செயலாளர் மகாதேவ் தேசாய் மரணமடைந்தார். அதற்கு முன்னதாகவே இந்தச் சிறையில் இருந்த போது கஸ்தூரிபாயும் மரணமடைந்துவிட்டார். காந்தியின் உடல்நிலையும் மிகவும் மோசமடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
கஸ்தூரிபாயை ‘இந்திய மக்களின் தாய்’ என்றழைத்த நேதாஜி
அந்த சமயத்தில் நேதாஜி ஜெர்மனியில் இருந்து ஜப்பான் சென்றிருந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நேதாஜியை மிகவும் உற்சாகப்படுத்தியது. தான் விரும்பும் சுதந்திர இந்தியா கனவை சாத்தியமாக்குவதற்கான சிறந்த வாய்ப்பாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நேதாஜி பார்த்தார்.
ஜப்பான் உதவியுடன் இந்திய தேசிய ராணுவம் இந்தியாவிற்குள் நுழையும் போது மக்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடன் இணைந்து கிளர்ச்சி செய்வார்கள் என்றும் அது ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற உதவும் என்றும் நேதாஜி நினைத்தார்.
நீண்ட காலம் ஜப்பானில் வாழ்ந்து இந்தியாவின் சுதந்திரத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்துவந்த ராஷ்பிகாரி போஸ் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான உண்மை அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் உள்ளது.
ராஷ்பிகாரி போஸ் ஒரு கட்டத்தில் சாவர்க்கரைப் புகழ்ந்ததாகவும், 1942இல் சாவர்க்கரின் பிரிட்டிஷ் சார்பு நிலைப்பாட்டால் ஏமாற்றமடைந்து காங்கிரசை இந்திய மக்களின் பிரதிநிதியாக அறிவித்ததாகவும் அவரது 'போஸ் ஆஃப் நாகமுரயா’ என்ற வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் தகேஷி நகாஜிமா குறிப்பிட்டுள்ளார்.
1942, பிப்ரவரி 22இல் கஸ்தூரிபாய் காந்தியின் மரணத்தை அறிந்து காந்திக்கு நேதாஜி கடிதம் எழுதினார். கடிதத்தின் தொடக்கத்தில் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி மரணமடைந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். கஸ்தூரிபாய் தனது 74வது வயதில் பூனாவில் ஆங்கிலேயர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் உயிர் இழந்தார்.
நாட்டில் மற்றும் நாட்டிற்கு வெளியே வசிக்கும் 38 கோடியே 80 லட்சம் இந்தியர்களோடு நானும் துக்கத்தை அனுசரிக்கிறேன் என்றும் நேதாஜி குறிப்பிட்டிருந்தார்.
கஸ்தூரிபாய் எதிர்கொண்ட சவால்களை நினைவுகூர்ந்த நேதாஜி அவரை தேசத்தின் தாய் என்று குறிப்பிட்டார். 'Testament of Subhash Bose' என்ற புத்தகத்தின் 69 மற்றும் 70ஆவது பக்கத்தில் 'இந்திய மக்களின் தாய்க்கு அஞ்சலி' என்ற தலைப்பில் இந்தக் கடிதம் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த சொல்லாடல் அதிகம் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
காந்தியை 'தேசத்தந்தை' என்று முதலில் அழைத்தது யார்?
இது நிகழ்ந்து இரண்டறை ஆண்டுகளுக்குப் பிறகு காந்திக்கான நேதாஜியின் ஒரு செய்தியில் தேசத்தின் தந்தை என்று சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக தன்னுடைய செய்தியில் மகாத்மாஜி என்று மட்டுமே நேதாஜி குறிப்பிட்டு வந்தார்.
ஜப்பானில் இருந்து ஆசாத் ஹிந்த் வானொலி ஒலிபரப்பிய இந்தச் செய்தி, நேதாஜியின் கடிதங்கள் மற்றும் செய்திகளை வைத்து சுகதா போஸ் மற்றும் சிசிர் குமார் போஸ் ஆகியோரால் தொகுக்கப்பட்ட 'Blood Bath'என்ற புத்தகத்தின் 24 முதல் 34ஆம் பக்கங்களிலும், Delhi Chalo என்ற புத்தகத்தின் 212 முதல் 222ஆம் பக்கங்களிலும், 'Essential Writings of Netaji Subhash Chandra Bose' என்ற புத்தகத்தின் 300 முதல் 309ஆம் பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய பேச்சின் தொடக்கத்தில் வழக்கம் போல மகாத்மாஜி என்றே நேதாஜி குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவரது கொள்கைகளை விவாதிக்கும் போது, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழியை பரிந்துரைத்து, ஜப்பான் உதவியை நியாயப்படுத்துகிறார்.
பின்னர் தன் உரையின் கடைசி வரியில், தேசத்தின் தந்தையே (ராஷ்டிரா பிதா) இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் உங்களின் ஆசிர்வாதத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என நேதாஜி குறிப்பிடுகிறார்.
காந்தியை தேசத்தந்தை என்று ஒருவர் குறிப்பிடுவது இதுவே முதல்முறை. இந்த அடைமொழி உடனடியாக பிரபலம் அடையாவிட்டாலும், காந்தியைக் குறிப்பிட படிப்படியாக பயன்படுத்தப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












