தமிழ்நாடு பத்திரப்பதிவு அலுவலகங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதா?

பத்திரப் பதிவு அலுவலகங்களில்வருமான வரித்துறை ஆய்வு
படக்குறிப்பு, சென்னை செங்குன்றம், திருச்சி மாவட்டம் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. உண்மையில் நடந்தது என்ன?

ஜூலை நான்காம் தேதியன்று சென்னை செங்குன்றம், திருச்சி மாவட்டம் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து 17 மணி நேரத்திற்கு இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனைக்குக் காரணம் என்ன?

தமிழ்நாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்புள்ள விற்பனை ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதற்காக பதிவாளர் அலுவலகத்திற்கு வரும்போது, விற்பவரிடமிருந்தும் வாங்குபவரிடமிருந்தும் நிரந்தரக் கணக்கு எண் - PAN பெறப்படுகிறது. இந்த எண் இல்லாதவர்கள் வருமானவரி சட்டத்தின்படி படிவம் 60ஐ பூர்த்தி செய்து அளிக்கவேண்டும்.

முப்பது லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்துகள் பரிவர்த்தனை செய்யப்படும்போது, விற்பவர், வாங்குபவர் பற்றிய விவரங்கள், அவர்களது ஆதார்எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற கூடுதல் விவரங்கள் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் அந்தந்த சார் - பதிவாளர்களால் பதிவேற்றம் செய்யப்படும்.

சமீப காலமாக சொத்தை விற்பனை செய்பவர், அதனை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு, அவை அப்போதே UIDAI ஆதார் தரவுத்தளத்தில் சரிபார்க்கப்படுகின்றன. ஆதார் எண்ணுடன் PAN எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவுதொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு நிகழ் நேரத்திலேயே வழங்கும் ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளன.

பத்திரப் பதிவு அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு
படக்குறிப்பு, ஆய்வின்போது இரு அலுவலகங்களிலும் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பதிவுசெய்யப்பட்ட சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் ஆராயப்பட்டன.

இந்த நடைமுறைகள் செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலங்களில் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாகவே 2017-2018ஆம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்களை வருமான வரித்துறை சரிபார்த்ததோடு, நேரிலும் வந்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின்போது இரு அலுவலகங்களிலும் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பதிவுசெய்யப்பட்ட சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் ஆராயப்பட்டன. இந்த முதற்கட்ட ஆய்வுகளில் செங்குன்றத்திலும் உறையூரிலும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பல கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் பதிவுசெய்யப்பட்டு, அது தொடர்பான விவரங்கள் உரிய காலத்திற்குள் வருமான வரித்துறை அனுப்பப்படாதது தெரியவந்துள்ளது.

இந்த சோதனைகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், சில ஊடகங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் தொடர்பான விவரங்கள் மறைக்கப்பட்டதாக செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தத் தகவல் எதையும் வருமான வரித்துறை உறுதிப்படுத்தவில்லை.

நடந்தது முறைகேடா, கவனக்குறைவா?

வருமான வரித்துறை நடத்திய ஆய்வு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகச் சொல்கிறார் பதிவுத் துறையின் முன்னாள் கூடுதல் தலைவர் ஆ. ஆறுமுகநயினார்.

"முன்பெல்லாம் பதிவுத் துறையில் ரூ.25 லட்சத்திற்கு மேல் சொத்துகளைப் பதிவுசெய்வதாக இரு்நதால் வாங்குபவர் வருமான வரித் துறையில் அனுமதி பெற வேண்டும். ரூ.50 லட்சத்திற்கு மேல் சொத்தின் மதிப்பு இருந்தால் விற்பவரும் அனுமதி பெற வேண்டும். சொத்தின் மதிப்பை விற்பவர் பத்திரத்தில் குறைத்துக் காட்டியிருந்தால், அந்தக் குறைவான விலையைக் கொடுத்து வருமான வரித் துறையே சொத்தை வாங்கி, ஏலம் விடும் நடைமுறைகள் எல்லாம் இருந்தன.

இது பொது மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதால், விதிகள் தளர்த்தப்பட்டன. தற்போது சொத்துகள் பதிவுக்காக வரும்போது ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடைய சொத்துகள், பத்து லட்சத்திற்கு மேல் மதிப்புடைய சொத்துகள், 25 லட்சத்திற்கு மேல் மதிப்புடைய சொத்துகள் என பிரிக்கப்பட்டு அவற்றை வாங்குபவர், விற்பவர் பற்றிய விவரம் தொகுக்கப்பட வேண்டும். அந்தத் தகவல், ஒரு சிடியில் பிரதி செய்யப்பட்டு வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும்.

வருமான வரித்துறை ஆய்வு

பட மூலாதாரம், Empics

படக்குறிப்பு, வருமான வரித்துறை நடத்திய ஆய்வு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகச் சொல்கிறார் பதிவுத் துறையின் முன்னாள் கூடுதல் தலைவர் ஆ. ஆறுமுகநயினார்.

சில சமயங்களில் வேலைப் பளுவின் காரணமாக சில பதிவு அலுவலர்கள் இந்தத் தகவலை உரிய நேரத்தில் அனுப்பாமல் விட்டுவிடுவார்கள். இது ஏய்ப்பு அல்ல. ஏனென்னால், பதிவுசெய்த பத்திரத்தில் சொத்தின் மதிப்பு இருக்கும். அதை மாற்ற முடியாது. வருமான வரித் துறைக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கவில்லை என்பதுதான்.

முன்பெல்லாம் வருமான வரித் துறை அதிகாரிகள், அவர்களே பதிவாளர் அலுவலகங்களுக்கு வருவார்கள். உயர் மதிப்புள்ள சொத்துகள் பதிவுசெய்யப்பட்டது குறித்த விவரங்களை சோதிப்பார்கள். சேகரிப்பார்கள். இப்போது பதிவுத்துறைதான் அனுப்ப வேண்டியுள்ளது.

ஆனால், பதிவுத் துறையில் கடுமையான வேலைப் பளு இருக்கிறது. மிக பரபரப்பாக இயங்கும் பதிவு அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 200 பத்திரங்கள் வரை பதிவாகின்றன. அப்படியானால் ஒரு அலுவலருக்கு ஒரு பத்திரத்திற்கு 6 நிமிடம்தான் கிடைக்கும். இதற்கு நடுவில் இது போன்ற பணிகள் தாமதமாகிவிடும்.

தற்போது பதிவுத் துறையும் மாநில அரசின் வருவாய் துறையும் இணைக்கப்பட்டுள்ளன. இதுபோல பதிவுத் துறையையும் வருமான வரித் துறையையும் இணைத்துவிட வேண்டும். இதுவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக அமையும்" என்கிறார் ஆ. ஆறுமுக நயினார்.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவர் அனுப்பியுள்ள அறிக்கையில், சொத்து பதிவு தொடர்பான தகவல்களை உரிய காலத்திற்குள் வருமான வரித் துறையில் பதிவேற்றம் செய்யாத இவ்விரு அலுவலகங்களின் சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: