போட்டித் தேர்வுகளில் முறைகேடு - குற்றவாளிகளை காட்டிக் கொடுத்த 'புதிய தொழில்நுட்பம்'

உத்தரப் பிரதேசம், போட்டித் தேர்வு, முறைகேடு

பட மூலாதாரம், BBC World Service

படக்குறிப்பு, உத்தரப் பிரதேசத்தில் தேர்வின்போது முறைகேடு நடப்பதைக் காட்டும் கோப்புப்படம்.
    • எழுதியவர், அனந்த் ஜனானே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சமீப நாட்களாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் அரசுப் போட்டித் தேர்வுகளில் ஆள்மாறாட்ட முறைகேடுகளைத் தடுக்க அம்மாநிலப் போலீசார் பயன்படுத்தும் புதிய முறையைப் பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது.

சிறப்புக் காவல் படையினர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டத்தில் ஈடுபடவர்களைப் பிடிக்கின்றனர்.

கடந்த ஜூன் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் நடந்த கிராம வளர்ச்சி அலுவலருக்கான போட்டித் தேர்வு நடந்தது. இதில், ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்ட 200 பேரை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கைது செய்திருக்கின்றன.

இவர்களை ‘சால்வர்கள்’ (Solvers) என்று அழைக்கின்றனர்.

ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவருக்குப் பதிலாக தேர்வெழுதுபவரை ‘சால்வர்’ என்று அழைக்கின்றனர்.

உத்தரப் பிரதேசம், போட்டித் தேர்வு, முறைகேடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முறைகேட்டைக் கண்டறிய, சிறப்புக் காவல் படையினர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினர்

எப்படி நடக்கிறது இந்த முறைகேடு?

இதில், உண்மையான தேர்வரின் புகைப்படத்தையும், சால்வரின் புகைப்படத்தையும், ஃபோட்டோஷாப் மென்பொருளின் மேம்பட்டப் பதிப்பின்மூலம் ஒன்றிணைக்கின்றனர். இது ஃபேஸ் மாஸ்கிங் (face masking) என்று அழைக்கப்படுகிறது.

பிறகு, இப்படம், தேர்வரின் நுழைவுச் சீட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தி, தேர்வருக்குப் பதிலாக சால்வர் தேர்வெழுதுகிறார்.

'சால்வர்கள்' பிடிபட்டது எப்படி?

இதற்கு சிறப்புக் காவல் படையினர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினர்.

தேர்வு நடத்தும் முகமை, தேர்வர்களின் ஆதார் அட்டையைப் பெற்றுக்கொள்கிறது. இதன்மூலம் அத்தனை தேர்வர்களின் ஆதார் புகைப்படங்களும் ஒரே இடத்தில் தொகுக்கப்படுகிறது. இது தேர்வு நாளன்று சிறப்புக்காவல் படையினரினரிடம் ஒப்படைக்கப் படுகிறது.

தேர்வு நாளன்று தேர்வர்களின் நுழைவுச்சீட்டில் இருக்கும் புகைப்படங்களும் காவல்துறையினருக்குக் கிடைக்கிறது.

நுழைவுச்சீட்டில் இருக்கும் படத்தை, காவல் துறையினர் விழித்திரை அடையாள மென்பொருள் (retinal recognition software) முக அடையாள மென்பொருள் (facial recognition software) மூலம் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

இது தேர்வர்களின் ஆதார் படத்தோடு ஒப்பிடப்படுகிறது. அதேபோல் போலீசாரின் தரவுகளில் ஏற்கனவே இருக்கும் நபர்களின் தகவல்களோடும் ஒப்பிட்டு, அவர்களின் அடையாளங்கள் ஆராயப்படுகின்றன.

இம்முறையில், சமீபத்தில் நடந்த கிராம வளர்ச்சி அலுவலர் தேர்வில், தேர்வு துவங்கி ஒரு மணி நேரத்தில் தேர்வர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. இதன்மூலம் கண்டறியப்படும் சால்வர்களை மெலும் விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களது கைபேசிகளில் இருந்து கூடுதல் சாட்சியங்கள் சேகரிக்கப்படுகின்றன.

உத்தர பிரதேச போலீசார், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களைப் பிடித்திருப்பது இதுவே முதன்முறை என்கின்றனர்.

உத்தரப் பிரதேசம், போட்டித் தேர்வு, முறைகேடு

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, உத்தரப் பிரதேசத்தில் தேர்வின்போது முறைகேடு நடப்பதைக் காட்டும் கோப்புப்படம்.

செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்வு கண்காணிப்பு

உத்தரப் பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகள், செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்வு கண்காணிப்புப் பணிகளையும் செய்யலாம், என்கின்றனர்.

இன்று பல தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுவதல், தேர்வர்களின் கணினி திரையை கண்காணிப்பாளர்களால் பார்க்க முடிவதில்லை. அதனால் தேர்வரின் முக பாவனைகளை வைத்து அவர் சால்வரா என்று கண்டுபிடிக்கிறார்கள்.

அதேபோல், தேர்வர் அவரது கணினித்திரையை வேறு ஒருவருடன் பகிர்ந்திருக்கிறாரா அல்லது இணையத்தைப் பயன்படுத்தி விடை எழுதுகிறாரா என்பதையும் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டுபிடிக்கின்றனர்.

உத்தரப் பிரதேசம், போட்டித் தேர்வு, முறைகேடு

பட மூலாதாரம், Getty Images

மூன்று நிலைகளில் முறைகேடு தடுப்பு

தேர்வுக்கு முன், தேர்வின்போது, தேர்வுக்குப் பின் என மூன்று நிலைகளில் முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சி நடைபெறுகிறது.

போட்டித் தேர்வு நடத்தும் வாரியங்கள், முகமைகள், மற்றும் நிறுவனங்களோடு சேர்ந்து செயல்படுவதால் இது சாத்தியமாகிற்து என்கின்றனர் போலீசார்.

அதேபோல் வினாத்தாள் கசிவைத் தடுக்கத் தவறும் முகமைகளின் மீதும் சிறப்புக் காவல் படையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பாதுகாப்பு வசதிகள் அதிகம் இல்லாத தொலைதூரப் பகுதிகளையே முறைகேட்டு மாஃபியாக்கள் குறிவைக்கின்றனர், என்று சிறப்புக் காவல் படையினர் கூறுகிறார்கள்.

உ.பி. தேர்வு முறைகேடு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 2018-ம் ஆண்டு உ.பி. காவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 22 பேர் கைதாயினர்.

சில சமயங்களில், இவர்கள் எப்படியாவது வினாத்தாளை வாங்கி, சால்வர்கள் மூலம் விடை எழுதி, அதை தேர்வர்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். சில சமயம் அவர்கள் இதற்கு ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களையும் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

கடந்த காலத்தில் முறைகேட்டில் ஈடுபடும் தேர்வர்களையும் சால்வர்களையும் தான் பிடித்து வந்ததாகவும், இப்போது முறைகேட்டின் மொத்த அமைப்பையும் தகர்க்க முலவதாகவும் சிறப்புக் காவல் படையினர் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: