செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி: இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை தரும் 10 வேலைகள் இவைதான்

இந்த 10 வேலைகளுக்குதான் மவுசு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரெதாக்சியன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

செயற்கை நுண்ணறிவு(A.I) தொழில்நுட்பம் காரணமாக பல்வேறு துறைகளில் மனிதர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படக்கூடும் என்ற கூற்று ஒருபுறம் வலுவாக வைக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியானது பெரும்பகுதி வேலைகளை அழித்துவிடும் என்ற அச்சம் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு காரணமாக என்ன நடந்து வருகிறது என்பதையும் பல்வேறு துறைகளில் எவ்வளவு வேகமாக செயற்கை நுண்ணறிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதையும் நாம் அனைவரும் கண்கூட பார்த்து வருகிறோம்” என்று கூறுகிறார் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) நிர்வாக இயக்குநரும், புதிய பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கான மையத்தின் தலைவருமான சாடியா ஜாஹிடி.

அடுத்த ஐந்தாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படும் வேலையாக செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் மற்றும் இயந்திர கற்றல் நிபுணர்கள் பணிகள் இருந்தாலும் உலகப் பொருளாதார மன்றத்தின்படி, வேறு சில வேலைகளிலும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் நிபுணத்துவம் பெற்றவர், விவசாய உபகரணங்களை இயக்குபவர்கள் போன்றவர்களை பணியில் அமர்த்துவது என்பது அதிகரித்து வருகிறது. இந்த வேலைஅடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிக தேவை இருக்கும் முதல் 10 வேலைகளில் ஒன்றாகவும் உள்ளது.

உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 45 பொருளாதாரங்களில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பணிபுரியும் 803 பெரிய நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிக தேவை இருக்கும் 10 வேலைகள் தொடர்பான ஆய்வை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் மேற்கொண்டது.

கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் கிட்டத்தட்ட 75% நிறுவனங்கள் தங்கள் வணிகத்தில் செயற்கை நுண்ணறிவைப் பின்பற்ற வாய்ப்பு இருப்பதாக நம்புகின்றன என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

மேலும் வேலைகள் மீதான தொழில்நுட்ப தாக்கம் குறித்து பேசும்போது, நான் இழந்ததை விட அதிக வேலைவாய்ப்புகள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்று பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் மதிப்பிடுகின்றனர்.

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF)ஆய்வின்படி, 2023 மற்றும் 2027 க்கு இடையில் அதிக வளர்ச்சி திறன் உள்ள வேலைகளில் முதல் 10 வேலைகள் குறித்து பார்ப்போம்.

எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

செயற்கை நுண்ணறிவு நிபுணர் மற்றும் இயந்திர கற்றல் நிபுணர்

மனித சிந்தனைகளை கணினிகள் மூலம் பிரதிபலிக்க வைப்பதே இந்த வேலையின் பிரதான நோக்கம்.

மக்களைப் போலவே சிந்திக்கவும் சிக்கலான பிரச்னைகளை தீர்க்கவும் திறன் படைத்த கணினி அமைப்புகளை செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் உருவாக்குகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு அமைப்பால் சிக்கல்களை தீர்க்கவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், பொதுவாக மனிதர்களால் செய்யப்படும் பணிகளை முடிக்கவைப்பதிலுமே இவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

எனவே, பல்வேறு தரவுகளை பகுப்பாய்வு செய்து சொந்த முடிவுகளை எடுக்கும் வகையில் இயந்திரம் முழுவதுமாக தன்னாட்சி முறையில் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட சிக்கலை மிகத் திறமையாக தீர்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவுக்கு இயந்திர கற்றல் நிபுணர் உதவுகிறார். பல்வேறு விதமான சிக்கல்களை தீர்த்து வைப்பது உங்களின் குறிக்கோள் அல்ல என்பதை இங்கு நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பல்வேறு சிக்கல்களையும் தீர்க்கும் திறன் படைத்த நுண்ணறிவுகளை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள் ஈடுபடுகிறார்கள் என்றால், இத்தகைய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் ஒரு சிக்கலுக்கு மிகவும் துல்லியமாகவும் விரைவாகவும் முடிவுகளை அடைய இயந்திர கற்றல் நிபுணர்கள் உதவுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானியும் இயந்திர கற்றல் நிபுணரும் தங்களது அறிவை அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும்.

எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் நிபுணர்கள்

இவர்களின் பிரதான பணி, சுற்றுச்சூழலில் தங்கள் நிறுவனத்தால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் ஆற்றல் வள திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது.

நீங்கள் எந்த நிறுவனத்துக்கு வேலை செய்கின்றீர்கள் என்பதை பொறுத்து உங்களின் பொறுப்பும் வேறுபடும். எடுத்துக்காட்டாக, மாசுபடுத்தும் உமிழ்வைக் குறைப்பதற்கான திட்டங்களை நிர்வகித்தல், ஆற்றல் நுகர்வை குறைப்பது அல்லது முதலீட்டுத் திட்டங்களில் சுற்றுச்சூழல் கொள்கைகளின் வளர்ச்சியில் பங்கேற்பது என இது மாறுபடும்.

நீங்கள் பணியாற்றும் துறை பரந்துபட்டது என்பதால், நிலைத்தன்மை குறித்த நிபுணர் ஆவதற்கு என்று தனிப்பட்ட எந்த பாதையும் கிடையாது.

பொதுவாக இந்த வகை நிபுணர்கள் சுற்றுச்சூழல் அறிவியல் தொடர்பான படிப்புகளை படித்திருப்பார்கள் என்றாலும் தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வது, சிக்கலை கண்டறிவது, நிறுவனத்துக்கு பயனுள்ள தீர்வுகளை கூறுவது போன்ற திறமையும் தேவை.

வணிக நுண்ணறிவு ஆய்வாளர்

ஒரு நிறுவனம் தனது வணிகம் தொடர்பான முடிவுகளை எடுக்க உதவுவது குறித்த படிப்புகளை வணிக நுண்ணறிவு ஆய்வாளர்கள் படிக்கின்றனர்.

இவர்கள் ஏராளமான தகவல்களை பகுப்பாய்வு செய்து, ஒரு நிறுவனத்துக்கு பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதன் உற்பத்தியையும் செயல்திறனையும் மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்கள்

நிறுவனங்களில் செயல்முறைகளை படிக்கும் இவர்கள், அளவீடுகளை மதிப்பாய்வு செய்வது, தங்கள் தொழில்துறை மற்றும் போட்டியாளர்கள் தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்வது, வாய்ப்புகளை எப்படி ஏற்படுத்துவது என்பதை அடையாளம் காண்பது மற்றும் வணிக சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை முன்மொழிகிறார்கள்.

பொதுவாக, அவர் நிறுவனத்தில் உள்ள செயல்முறைகளைப் படிக்கிறார், அளவீடுகளை மதிப்பாய்வு செய்கிறார், தொழில்துறை மற்றும் போட்டியாளர் தரவை பகுப்பாய்வு செய்கிறார், வாய்ப்புகளை அடையாளம் காண்கிறார் மற்றும் வணிக சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை முன்மொழிகிறார்.

கணினி அறிவியல், தரவு அறிவியல், புள்ளியியல், வணிக நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் பிற தொடர்புடைய துறைகள் பற்றிய அறிவையெல்லாம் அவர் ஒன்றாக சேர்த்து செயல்படுத்துகிறார்.

எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

4. தகவல் பாதுகாப்பு ஆய்வாளர்

பயனர்களின் கிரெடிட் கார்டு எண்கள், பாஸ்வோர்டுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் போன்றவை மற்றும் தங்கள் நிறுவனம் தொடர்பான முக்கியமான வணிக தரவுகள் கசிவது நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, இவற்றைபாதுகாப்பதற்கு நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன.

எனவே, தகவல் பாதுகாப்பு ஆய்வாளரின் தேவை என்பது இங்கு அவசியமாகிறது. சைபர் தாக்குதல்களில் இருந்து கணினி இணைப்புகள், கணினிகள், தரவுகள் மற்றும் முக்கியமான தகவல்களை பாதுகாப்பதற்கு இவர்கள் உதவுகின்றனர்.

சைபர் தாக்குதல் நடத்த முடியாதபடியான அமைப்பை வடிவமைப்பது, கண்காணிப்பது, பாதுகாப்பு அமைப்புகளைப் புதுப்பிப்பது, ஒருவேளை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பவை தொடர்பாக இவர்கள் குழுவாக இணைந்து வேலை செய்கின்றனர்.

இந்த பணியில் ஈடுபட விரும்புபவர்கள் குறைந்தபட்சம் கணினி தொடர்பான பட்டங்களை பெற்றிருக்க வேண்டும். நாடுகளை பொறுத்து சைபர் செக்யூரிட்டி தொடர்பான சான்றிதழ்கள் படிப்புகளும் உள்ளன.

எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

5. ஃபின்டெக் பொறியாளர்

உலகில் வேகமாக வளர்ந்து வரும் மென்பொருள் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஃபின்டெக் தொழிலும் ஒன்றாகும். நிதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வார்த்தையே ஃபின்டெக். நிதி சார்ந்த சேவைகளை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் வழங்கும் நிறுவனங்கள் ஃபின்டெக் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஃபின்டெக் துறையில் பணியாற்றும் பொறியாளர், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட அறிவார்ந்த வங்கியியல், வாடிக்கையாளர் சேவை தொடர்பான அமைப்புகளின் மேலாண்மை, டிஜிட்டல் கட்டணச் செயலாக்கம், குறியாக்கவியலின் அடிப்படையில் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள், டிஜிட்டல் சொத்து மேலாண்மை அல்லது இடர் மேலாண்மைக்கான தரவு பகுப்பாய்வு போன்ற தொழில்நுட்ப நிதியில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஜாவா ஸ்கிரிப்ட், பைத்தான், ரூபி, பிஹெச்பி, ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ் போன்ற பலவிதமான ப்ரோகிராமிங் மொழிகளை அவர்கள் கையாள்வதுடன் மிகப்பெரிய தரவுகள், க்ளவுட் தளங்களிலும் வேலை செய்கின்றனர்.

எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

6. தரவு ஆய்வாளர் மற்றும் தரவு விஞ்ஞானி

இந்த இரண்டு வேலைகளை செய்பவர்களின் பணியும் ஒன்றாக இருப்பதுபோன்று முதலில் தோன்றக்கூடும்.

இருவரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் தரவுகளில் உள்ள போக்குகள் அல்லது நிலை குறித்து ஆராய்ந்து கூறுகின்றனர். ஆனால், தரவு ஆய்வாளர்களை விட தரவு விஞ்ஞானிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் உள்ளன. அதனால்தான் தரவு விஞ்ஞானி பணி உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறது.

தரவுகள் தொடர்பாக தங்களின் சொந்த கேள்விகளை உருவாக்குவது, இயந்திர கற்றலுக்கான மாடல்களை உருவாக்குவது போன்றவற்றில் தரவு விஞ்ஞானிகள் ஈடுபடுகின்றனர். மறுபுறம், ஏற்கனவே இலக்குகளை வைத்திருக்கும் குழுக்களுக்கு தரவு ஆய்வாளர் உதவி செய்கிறார்.

வணிகம், நிதி, அறிவியல், மருத்துவம் மற்றும் அரசுத் துறைகளிலும் தரவு ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இருவரும் புள்ளிவிவரங்கள் மற்றும் மேம்பட்ட புரோகிராமிங் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

தரவு விஞ்ஞானிகள், தரவு ஆய்வாளர்கள் போன்று தரவு பொறியாளர்கள் என்பவர்களும் உண்டு. அவர்கள் அதிவேக அளவிலான தரவுகளை கையாள்வதோடு, அவற்றில் மாறுதல் செய்யவதும் அவற்றை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு அனுப்பும் வகையில் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் ஈடுபடுகின்றனர்.

இந்த துறையை பொறுத்தவரையில் தற்போதும் எதிர்காலத்திலும் மிகவும் விரும்பப்படும் வேலையாக டேட்டா சயின்ஸ் இருக்கும் என்று ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ கருதுகிறது.

எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

7. ரோபோடிக்ஸ் பொறியாளர்

மனிதர்களால் செய்ய முடியும் மற்றும் செய்ய முடியாத செயல்களை செய்யும் வகையிலான ரோபோக்களை உருவாகுவதற்கு இவர்கள் உதவுகின்றனர்.

ரோபோவின் முன்மாதிரிகளை வடிவமைக்கும் இவர்கள், அதனை உருவாக்குவது, பராமரிப்பது, பழுது ஏற்பட்டால் சரி செய்வது போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். இவற்றுடன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, ஏற்கனவே இருக்கும் ரோபோக்களுக்கான புதிய கருவிகளையும் உருவாக்குகின்றனர்.

வேறு கிரகங்களை ஆராய்வது, மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை முறைகளை மேம்படுத்த உதவுவது, தொழிற்சாலைகளில் தயாரிப்பில் ஈடுபடுவது போன்றவற்றுக்கு இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் ரோபோடிக்ஸ் பொறியாளர் ஆக வேண்டும் என்று விரும்பினால், ரோபோட்டிக்ஸில் பட்டம் படிப்பதோடு, அந்த அறிவுடன் குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவத்தை உருவாக்கிகொள்ள வேண்டும்.

8. எலக்ட்ரோ டெக்னாலஜி பொறியாளர்

மின்னணு, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள், கூறுகள், மோட்டார்கள் மற்றும் உபகரணங்களின் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டை வடிவமைத்தல், ஆலோசனை, திட்டமிடுதல் மற்றும் வழிநடத்துதல் போன்ற ஆராய்ச்சிகளை எலக்ட்ரோடெக்னாலஜி பொறியியலாளர்கள் மேற்கொள்கின்றனர்.

ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து மின் மற்றும் மின்னணு அமைப்புகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பைக் கண்காணிப்பது கட்டுப்பாட்டு அமைப்புகளின் பொறுப்பாகும்.

பல்வேறு விதமான மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்புகளில் பணியாற்ற எலக்ட்ரோ டெக்னாலஜி பொறியாளருக்கு அவர்களின் அறிவு உதவுகிறது.

மின், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பைக் கண்காணிக்க நீங்கள் கட்டுப்பாட்டுத் தரங்களை தொடங்கி நிர்வகிக்கலாம்.

மின்சார பொறியாளர்கள், மின்னணு பொறியாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர்கள் போன்ற சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கியது தொழில்நுட்ப பொறியியல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வல்லுநர்கள் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிகின்றனர்.

எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

9. வேளாண் உபகரணங்கள் இயக்குபவர்

தொழில்நுட்பத்தில் வளர்ந்துகொண்டே சென்றாலும் வேளாண்மை சார்ந்த பணிகளுக்கான தேவையும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், வேளாண்மைக்கு பயன்படும் உபகரணங்களை இயக்குபவருக்கான தேவை அதிகமாக இருக்கும்.

மண்ணை உழுதல், நடவு செய்தல், பயிர்களை பயிரிடுதல் மற்றும் அறுவடை செய்தல், விலங்குகளுக்கு உணவளித்தல் மற்றும் மேய்த்தல், அவற்றின் கழிவுகளை அகற்றுதல் போன்ற விவசாய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இயந்திரங்களை இயக்குவதே அவர்களின் முக்கிய பணியாகும்.

மூட்டை கட்டுதல், நீர்ப்பாசனம் செய்தல், வாகனங்களை ஓட்டுதல் அல்லது அறுவடைக்குப் பிறகு உமி, கதிரடித்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களைக் கையாளுதல் போன்ற பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம்.

டிராக்டர் என்று மட்டுமில்லாமல், உரம் தெளிக்கப்படும் கருவிகளை இயக்குதல், லாரிகள், சரக்கு ஏற்றும் வாகனங்களை ஓட்டுவது போன்றவற்றிலும் அவர்கள் ஈடுபடலாம் .

எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

10. டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நிபுணர்

இணையமும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் வணிகம் நடைபெறும் விதத்தையும் வாடிக்கையாளர்களிடம் எப்படி சென்று சேர்வது என்பதையும் பெருமளவில் மாற்றியுள்ளது. அத்தகைய சூழலில் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நிபுணர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

தற்போதைய டிஜிட்டல் மாறுதல்களுக்கு ஏற்ப வணிகத்தை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது, வியூகங்களை வகுப்பது போன்றவற்றில் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நிபுணர்கள் ஈடுபடுகின்றனர்.

எனவே, தங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்ன தேவை, எப்படிப்பட்ட டிஜிட்டல் மாறுதல் திட்டங்களை வகுப்பது போன்றவை குறித்து அறிந்துகொள்வதற்கு அவர்கள் தங்கள் நிறுவனத்துடன் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நிறுவனத்தின் தற்போதைய தொழில்நுட்பங்களைப் புதுப்பித்தல், புதியவற்றைப் பெறுதல், நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தல், பல்வேறு பணிப்பாய்வுகளுக்கு மாற்றத்தில் ஒத்துழைத்தல் மற்றும் புதிய தொழில்நுட்பக் கருவிகளுக்கு ஏற்ற மாதிரியான வேலை மாதிரிகள் போன்ற பணிகளைச் செய்யும் நிபுணர்கள் குழுவின் ஒரு பகுதியாக டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நிபுணர்கள் உள்ளார்.

இந்த துறையில் வேலையை தொடங்குவதற்கு தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்றவற்றில் அறிவு நிபுணத்துவமும் அவசியம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: