மனைவியிடம் அவரது தந்தையே அத்துமீறியது தெரிந்ததும் இந்த 'கண்ணியமிக்க கணவர்' என்ன செய்தார் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பர்கவா பரிக்
- பதவி, பிபிசி நியூஸ், குஜராத்தி
"திருமணத்துக்குப் பின், என் மனைவியை எனது வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டேன். சில நாட்களுக்குப் பின்னர் எனது வீட்டுக்கு வந்த மாமனார், எனது மனைவியை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் அவருடன் செல்ல எனது மனைவி மறுத்துவிட்டார். இருப்பினும் அவர் எனது மனைவியை வலியுறுத்தி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் மீண்டும் அங்கிருந்து எனது வீட்டுக்கு வந்த போது, அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதே போல் மீண்டும் சில நேரங்களில் நான் எனது மனைவியைக் கவனித்திருக்கிறேன். தாய் வீட்டுக்குப் போய் வந்தாலே அவரது மனதுக்குள் ஏதோ ஒரு பயம், கோபம், வேதனை போன்ற உணர்வுகள் வெளிப்பட்டதை நான் உணரத் தொடங்கினேன்."
“சில நாட்களுக்கு முன்பு, என் மாமனார் ஒரு மதிய நேரத்தில் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போதும் எனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவர் விரும்பினார். ஆனால் தந்தையுடன் வீட்டுக்குச் செல்ல எனது மனைவி விடாப்பிடியாக மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் தான் அந்த அதிர்ச்சி தகவல் எனக்குத் தெரியவந்தது. எனது மனைவியை அவரது தந்தையே பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பதே அந்தத் தகவல். இதை ஊர்ஜிதம் செய்த பின் நான் மனைவியை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் புகாரளித்தேன்."
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள கோம்திபூரில் வசிக்கும் ஒரு கணவனின் வேதனையளிக்கும் வார்த்தைகள் இவை. அவர் தனது மனைவிக்கு ஆறுதல் அளிக்க உறுதியுடன் இருந்ததைக் காணமுடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த தம்பதியினருக்கு அகமதாபாத் அருகே உள்ள ஜுஹாபுராவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்களது சாதி வழக்கப்படி திருமணம் நடந்தது. அதன் பின் அவர்களின் மண வாழ்க்கை எல்லோரையும் போல் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.
இருப்பினும், தனது சொந்த தந்தை தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது மனைவி ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டை எழுப்பினார். திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் இது போன்ற அருவருக்கத்தக்க செயலில் அந்த பெண்ணின் தந்தை ஈடுபட்டுவந்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து, மனைவிக்கு தொடர்ந்து ஆறுதல் கூறிய கணவன், கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது மனநிலையை மாற்ற முயன்றதுடன், எப்போதும் போல் மனைவிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கப் போவதாகவும் உறுதி அளித்தார். அதன் பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் அவரது மனைவியை ஊக்குவித்தார். இதைத் தொடர்ந்து கணவரின் ஆதரவுடன், அந்தப் பெண் வெஜல்பூர் காவல் நிலையத்தில் பலாத்கார புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சட்டப்படி தேவைப்படும் ஆதாரங்களைத் திரட்டிய பின், குற்றச்சாட்டுக்கு உள்ளான தந்தையைக் கைது செய்தனர்.
ஒரு மகளுக்கு அனைத்து வகையில் பாதுகாப்பாக இருக்கவேண்டிய தந்தையே தனது காம இச்சையைத் தணிக்க மகளை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அவர் பிபிசியிடம் பேசிய போது, "நான் ஆங்கில மீடியத்தில் படித்துக் கொண்டிருந்தேன். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் 11 ஆம் வகுப்பில் அறிவியலைப் பாடமாக எடுத்துப் படித்து கணினி பொறியியலாளராக விரும்பினேன். ஆனால் குடும்பத்தின் நிதிநிலையைச் சுட்டிக்காட்டி அதற்கு எனது தந்தை ஒத்துக்கொள்ளவில்லை. இதை எதிர்த்து நான் அவரிடம் வாக்குவாதம் செய்ததால் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவதாக மிரட்டினார்," என்றார்.
மகளின் பயத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட தந்தை
"இந்நிலையில், ஒருமுறை என் அம்மாவும் சகோதரியும் கோடை விடுமுறைக்கு என் மூத்த சகோதரியை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றனர். நான் என் தந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தேன். அன்று இரவு அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்."
"இதைப்பற்றி நான் யாரிடமாவது சொன்னால் என்னை வீட்டை விட்டு விரட்டிவிடுவதாக அவர் என்னை மிரட்டினர். மேலும் எனது தங்கையையும் பலாத்காரம் செய்யப் போவதாகவும் மிரட்டினர்."
"இதனால் நான் மிகவும் பயந்துவிட்டேன். எனது பயம் அவருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியது. என் அம்மா தையல் வேலைக்காகவும், என் சகோதரி பள்ளிக்குச் செல்வதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறிய போதெல்லாம் அவர் என்னை பல முறை பலாத்காரம் செய்தார்."
"இதனால் மனரீதியாக எனக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து எனது உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். அந்த மருந்துகளை இரவில் எடுத்துக்கொள்ள என்னை அவர் வற்புறுத்தினார். பின்னர் நான் தூங்கிய பிறகு எனது தந்தை என்னை மீண்டும் பலாத்காரம் செய்தார்."

பட மூலாதாரம், Getty Images
"இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலையில் எனக்கு திருமணம் நடந்தது. ஆனால் அதன் பின்னரும் என் தந்தை என்னை விடவில்லை. அடிக்கடி என் வீட்டுக்கு வந்து என்னை எனது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். என் கணவர் மிகவும் நல்ல மனிதர். எனது தந்தையுடன் செல்லுமாறு எனக்கு அறிவுரை கூறுவார். தந்தை என்ன சொல்கிறாரோ அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என எனக்கு புத்திமதி கூறுவார்."
"ஆனால், எனது தந்தையின் செயல் என் கணவருக்குத் தெரியவந்தால், என் திருமண வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படும் என எனது பயம் வேறு ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கியது. எனது தந்தையிடம் மட்டுமே பயந்து வந்த எனக்கு மணவாழ்க்கை முறிந்துவிடுமோ என்ற பயமும் சேர்ந்துகொண்டது. ஆனால் ஒரு நாள், என் தந்தை எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்."
"ஒருமுறை என் தந்தை எனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு 'என்னுடன் உடல் உறவு கொள்ள வேண்டும்' என்று வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட போது, எனது தந்தை அன்னை அடிக்க ஆரம்பித்தார்."
"வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு என்னை அவர் கண்மூடித்தனமாகத் தாக்கினார். என் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் என் மைத்துனிக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் அவர் வந்த போது, எனது தந்தை யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ரகசியமாக அங்கிருந்து வெளியேறிவிட்டார்."
எனினும் அவரது கணவர் தற்போது கடந்த காலத்தில் நேர்ந்த மோசமான நிகழ்வுகளை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அபலைப் பெண்

பட மூலாதாரம், Getty Images
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பிபிசியிடம் பேசிய போது, "நாங்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு, எனது மனைவியின் தந்தை அடிக்கடி தாய்வீட்டுக்கு வருமாறு அவரை வற்புறுத்தி வந்தார். ஆனால் பலமுறை என் மனைவி அங்கு செல்ல மறுத்துவிட்டார்," என்று கூறினார்.
“எனது மனைவி அவரது தாய்வீட்டுக்குச் சென்ற போதெல்லாம் 'நீங்களும் வாங்க. நீங்க வராம நான் அங்கு போகமாட்டேன்' என எப்பவும் அவருடன் என்னை அழைக்கத் தொடங்கினார். ஆனால் பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தந்தைமார்கள் அவர்களுடைய மகள்கள் மீது இருக்கும் பாசம் காரணமாக தாய் வீட்டுக்கு அழைப்பது வழக்கமான ஒன்று தான் என நான் நினைத்துக்கொள்வேன். அதனால எனது மனைவியை அவருடைய தந்தை அழைத்ததை ஒரு சாதாரணமான விஷயமாகவே நான் எடுத்துக்கொண்டேன். இது மட்டும் இல்லாமல் எனது குடும்பமும், எனது மாமனார் குடும்பமும் ஒரே ஊரில் இருந்ததால் அவர் எனது மனைவியை அடிக்கடி தாய் வீட்டுக்கு அழைத்ததாகவும் நான் நினைத்தேன்."
ஆனால், எனது மனைவி அவரது தாய் வீட்டுக்குச் சென்றால் இரவு நேரத்தில் பலமுறை அழுதுகொண்டே எனக்கு ஃபோன் செய்துவந்தார். உடனடியாக அங்கு சென்று அவரை எனது வீட்டுக்கு அழைத்துவர வற்புறுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்."
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தொடர்ந்து பேசிய போது, "ஒருமுறை எனது மாமனார் எனது வீட்டிற்கு வந்துள்ளார், அப்போது வீட்டில் யாரும் இல்லை. அந்த நேரத்தில் தான் மீண்டும் ஒரு முறை எனது மனைவியை பலாத்காரம் செய்ய அவர் முயற்சித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபமடைந்த அவர் எனது மனைவியை அடிக்கத் தொடங்கியுள்ளார். இது பற்றிக் கேள்விப்பட்ட எனது சகோதரி வீட்டிற்கு வந்த போது எனது மனைவி அழுதுகொண்டிருந்திருக்கிறார். எனது சகோதரியைப் பார்த்ததும் எனது மாமனார் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார்."
"அதன் பின் என் சகோதரி என் மனைவிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். அப்போது தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்திருக்கின்றர். நீண்ட நேரம் கழித்து, எனது மனைவியின் தந்தை அவரை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்தது குறித்து எனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். அதற்காகத் தான் அவரை தாய் வீட்டுக்கு வர அடிக்கடி வற்புறுத்தியது குறித்தும் அவர் அழுதுகொண்டே தெரிவித்திருக்கிறார்."
"இதையடுத்து எனது சகோதரியும், எனது மனைவியும் என்னைத் தொடர்புகொண்டு பேசினர். முக்கியமான விஷயம் குறித்துப் பேசவேண்டும் என்றும் உடனடியாக வீட்டுக்கு வருமாறும் எனது சகோதரி தெரிவித்ததை அடுத்து நான் எனது வீட்டுக்கு விரைந்தேன். அதன் பின்னர் தான் எனக்கு இந்த அருவருக்கத்தக்க செயல்கள் குறித்துத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, எனது வீட்டுக்கு எனது மானமார் வரக்கூடாது என நான் உறுதியாகச் சொல்லிவிட்டேன். நான் இப்படிச் சொன்னதற்காக அவர் என்னிடம் தகராறு செய்யத் தொடங்கினார்."
மேலும் என்னைப் பற்றி எனது மாமனார் பலரிடம் மோசமாகப் பேசியதுடன், குடும்பத்துக்குள் பிரச்சினைகளை நான் ஏற்படுத்தியதாகவும் என்மீது குற்றம் சுமத்தத் தொடங்கினார். இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இறுதியில் எனது மனைவியைப் பாதுகாப்பதற்காக காவல் துறையிடம் அவர் புகார் அளிக்க முடிவெடுத்தேன். பின்னர் காவல் நிலையத்தில் புகாரளிக்க எனது மனைவிக்கு அறிவுரை கூறினேன்."
தந்தையைக் கைது செய்த போலீசார்
வேஜல்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கே.பி. ராஜ்வி இந்த புகார் குறித்து புலன்விசாரணை செய்து வருகிறார். பிபிசியிடம் பேசிய அவர், "கடந்த சில நாட்களுக்கு முன் இந்த 22 வயதுப் பெண் தன் கணவருடன் காவல் நிலையத்துக்கு வந்து தன் தந்தைக்கு எதிராக பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்தார். புகாரைப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது," என்று தெரிவித்தார்.
"திருமணத்திற்கு முன்னும் பின்னும் தனது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இங்குள்ள ஜுஹாபுராவில் தான் இந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வசித்து வருகின்றனர். அவரது தந்தை ஒரு சிறிய தொழில் செய்துவருகிறார். அவர் தனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன."
"பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல் பரிசோதனை செய்து, மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழ் மற்றும் அந்தப் பெண் அளித்த சில சான்றுகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட தந்தையை நாங்கள் கைது செய்துள்ளோம்," என்றார் அவர்.
(இது குறித்துப் பேச குற்றம் சாட்டப்பட்ட தரப்பினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.)

பட மூலாதாரம், Getty Images
ஒரு தந்தை எப்படி இது போல் கொடூரமாகச் செயல்படமுடியும்?
மகளை பலாத்காரம் செய்யும் தந்தையின் மனநிலை குறித்து பிரபல மனநல மருத்துவர் டாக்டர். எம்.என். யாதவ் பிபிசியிடம் பேசினார். அப்போது, "இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், ஐந்து குழந்தைகளைப் பெற்ற பிறகு, அந்த தந்தைக்குத் தன் மனைவி மீதான ஈர்ப்பு குறைந்திருக்கலாம். அல்லது அவரது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அவரது மனைவி இருந்திருக்கலாம். இதன் காரணமாக அந்தத் தந்தையின் முதல் மகள் அவரது காமப் பசிக்குப் பலியாகியிருக்கக்கூடும். சில மோசமான மனநிலை கொண்ட மனிதர்கள் இது போன்ற பாலியல் வக்கிரங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது," என்றார்.
“இந்தப் பெண் சிறுமியாக இருந்த போது, தனது படிப்பை நிறுத்திய பிறகு, முழுக்க முழுக்க அவரது தந்தையை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாலியல் வக்கிரபுத்தி கொண்ட அந்தத் தந்தை, தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
திருமணத்துக்குப் பின் தனது கணவர் நல்லவர் என்பதைப் புரிந்துகொண்ட போது, அந்தப் பெண் இயல்பாகவே அவரது தந்தையின் வக்கிர புத்திக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருக்கிறார். ஆனால், அவரது கணவர் நல்லவராக இல்லாமலிருந்திருந்தால், அந்த அபலைப் பெண் தனது தந்தையின் வக்கிரச் செயல்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய பரிதாபமான நிலை ஏற்பட்டிருக்கும்," என்றார் மருத்துவர் எம்.என். யாதவ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








