ஆளுநர் vs முதல்வர்: இருவருக்கும் நடந்த 'காட்டமான கடித பரிமாற்றம்' உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
செந்தில்பாலாஜி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எரிச்சலூட்டும், மிதமிஞ்சிய வார்த்தைகளைக் கூறியதாக ஆளுநர் ரவி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கை சந்தித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்வதாக நேற்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியானது. இது தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட பலரும் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து முதலமைச்சருக்கு ஆளுநர் அனுப்பிய ஐந்து பக்கக் கடிதமும் அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக அனுப்பிய கடிதமும் ஊடகங்களுக்கு வெளியானது.
ஆளுநர் கடிதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அனுப்பியிருந்த கடிதத்தில் முதலமைச்சர் மீது பல குற்றச்சாட்டுகளை ஆளுநர் வைத்திருந்தார்.
"அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தர பணம் வாங்குவது, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
அரசியல் சாசன ரீதியிலான தார்மீக நடைமுறைகளின் அடிப்படையிலும் அவர் மீது கிரிமினல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், சட்ட நடவடிக்கைகள் சரியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தேன்.
என்னுடைய அறிவுரையை சரியான வகையில் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஜூன் 1ஆம் தேதியன்று தூண்டக்கூடிய வாசகங்களைக் கொண்ட பதில் கடிதத்தை நீங்கள் எழுதினீர்கள். என்னுடைய அறிவுரையைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக மிக மோசமான மொழியைப் பயன்படுத்தியிருந்தீர்கள். நான் என் அரசியல் சாசன வரம்புகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுடைய பதில் மிக ஏமாற்றமளிப்பதாக இருந்தது.
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் அமைச்சராக தன் கடமையைச் செய்ய முடியாது என்ற காரணத்தைக் கூறி, அவரது அமைச்சரவை பொறுப்புகளை மாற்றியளிக்க பரிந்துரைத்து ஜூன் 15ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பினீர்கள். மேலும், இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் எனவும் கூறியிருந்தீர்கள்.

சாதாரண சூழலில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய ஆலோசனையை மீறி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் தொடரச் செய்யும் முடிவு உங்கள் பாரபட்சமான தன்மையைக் காட்டுகிறது.
செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வது என்பது சட்ட, நீதி நடைமுறைகளுக்கு ஊறு விளைவிக்கும் என்ற நியாயமான சந்தேகங்கள் இருக்கின்றன. அம்மாதிரியான ஒரு சூழல் மாநிலத்தில் அரசமைப்பு சட்ட நடைமுறை குலைவதற்கு வழிவகுக்கும்.
இந்த மாதிரியான ஒரு சூழலில் அரசமைப்பு சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளிக்கும் அதிகாரத்தின்படி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கி உத்தரவிடுகிறேன்," எனவும் கூறியிருந்தார்.
ஆளுநருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருந்தது என்ன?
ஆளுநருக்கு பதில் கொடுக்கும் விதமாக 6 பக்கங்களைக் கொண்ட கடிதம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ளார்.
“முதலாவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட 2 கடிதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனை கோரப்படவில்லை. இரண்டாவதாக முதல் கடிதத்தை நீங்கள் வெளியிட்ட சில மணிநேரங்களில், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தைக் கேட்பதற்காக அதைத் திரும்பப் பெற்றீர்கள்.
இதுபோன்ற முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் சட்ட ரீதியான கருத்தைக் கேட்கவில்லை; இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் தலையீடு உங்களை வழி நடத்தியது என்பதும், இந்திய அரசமைப்பு சட்டத்தை அலட்சியப்படுத்தி, அவசரப்பட்டு இச்செயலை செய்தீர்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கையாளும்போது ஆளுநர் போன்ற அரசமைப்பு அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்; ஆதாரமற்ற அச்சுறுத்தல்களைக் கொடுத்து அரசமைப்பு சட்டத்தை மீற வேண்டாம்.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர, குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை,” என மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, 2014 உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய முதலமைச்சர், “அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் கலாசாரத்திற்கு ஏற்ப உங்களிடம் இனிமையாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டிருக்கிறோம். அதற்காக அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான உங்கள் உத்தரவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும் என்ற அவசியமில்லை” என கடிதம் வாயிலாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
“என்னுடைய அமைச்சர்களை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. அது தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மட்டுமே உரிய தனி உரிமை. என் ஆலோசனையின்றி அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக என்னுடைய அமைச்சரைப் பதவி நீக்கம் செய்த உங்கள் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது” என ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Stalin
ஆளுநருக்கு அவர் மொழியில் அளிக்கப்பட்ட பதில்
உங்கள் கடிதத்திற்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆளுநர் தனது கடிதத்தில் முதலமைச்சர் குறித்து குறிப்பிட்டுள்ள நிலையில், அவரது மொழியில்தான் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்று மூத்த செய்தியாளர் ப்ரியன் பிபிசி தமிழிடம் கூறினார்.
“ஆளுநர் இந்த விவகாரத்தில் அநாகரிகமாக நடந்துள்ளார். அரசமைப்பு சட்டம் தொடர்பாகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அட்டர்னி ஜெனரல் போன்றோரை ஆளுநர் கலந்தாலோசிக்கவில்லை.
அரசமைப்பு தொடர்பாக அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் ஆளுநர் செயல்பட்டுள்ளார். முதலமைச்சர் பரிந்துரையின்பேரில்தான் ஆளுநர் அமைச்சரை நியமிக்கவே முடியும் என்றிருக்கும்போது எப்படி தன்னிச்சையாக நீக்க முடியும். நியமிக்கும் உரிமை இருக்கிறது என்பதால் வேறு நபரை அமைச்சராகத் தன்னிச்சையாக ஆளுநரால் நியமிக்க முடியுமா?
அமைச்சரவைக்கு தலைமை தாங்கும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் நியமிக்கும்போதுதான் 164(1) என்ற பிரிவே உயிர் பெறுகிறது. ஆளுநருக்கு சில பொறுப்புகளையும் கடமைகளையும் மட்டும்தான் அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ளது.
ஊழலுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறும் ஆளுநர், முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வாங்கி நிலுவையில் வைத்துள்ளார். அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடந்து 2 முன்னாள் அமைச்சர்கள் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் ஏன்?
பொறுப்பில் இருப்பவர் சட்டவிரோதமான ஒரு செயலில் செய்யும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும் ஆளுநரின் மொழியிலேயே அவருக்கு பதிலளிக்க வேண்டி இருக்கிறது. ” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












