கிருஷ்ணகிரி: குறவர் இன பெண்களுக்கு ஆந்திர போலீஸ் பாலியல் கொடுமை செய்ததா? பிபிசி கள ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்களுக்கு பாலியல் கொடுமை? பிபிசி தமிழ் களஆய்வு
படக்குறிப்பு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்களை பிபிசி தமிழ் குழுவினர் நேரில் சந்தித்தனர்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஜூன் 11ஆம் தேதி இரவு. அன்றைய இரவு சுதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கமான சராசரி இரவாக அமையவில்லை. அன்றிரவு திடீரென அவரது குடியிருப்புப் பகுதியில் சரசரவென காவல்துறை வாகனங்கள் வருவதைப் பார்த்து சுதா பதற்றமடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் புளியாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சுதா குறவர் இனத்தைச் சேர்ந்தவர்.

''எங்களிடம் போலீசார் எதுவும் கேட்கவில்லை. ஏறுங்கள், ஏறுங்கள் என எங்களை மிரட்டினார்கள். என் கணவர் மீது நகை திருட்டு வழக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை என்னை யாரும் இதுபோல நடத்தியதில்லை. ஒரு கேள்வி கேட்பதற்குள், எங்கள் குடும்பத்தினரை அடித்து ஜீப்பில் ஏற்றினார்கள்,'' என்கிறார் சுதா.

நகை திருட்டு வழக்குகளில் தொடர்புள்ள அய்யப்பன் என்ற நபரை விசாரணைக்காக அழைத்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், அய்யப்பன் மட்டுமின்றி அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண்களை விசாரணைக்கு உட்படுத்தினர்.

சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷாந்த் ரெட்டியை பிபிசி தெலுங்கு சேவை தொடர்புகொண்டபோது, குற்றம் சுமத்தப்பட்ட ஆறு காவலர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது பாலியல் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அந்த விசாரணையின்போது தங்களுக்கு மோசமான உடல் மற்றும் பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் நடைபெற்றதாக அய்யப்பன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்களை பிபிசி தமிழ் நேரில் சந்தித்தது. கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் அவர்கள் தங்கியிருந்தனர்.

குறவர் இன பெண்கள் அழைத்துச் செல்லப்பட்ட பின்னணி

புளியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் மீது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் மற்றும் நகை திருட்டு தொடர்பாக மூன்று வழக்குகள் உள்ளன என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகள், கடந்த ஜனவரி மாதம் சித்தூர் மாவட்டத்தில் பதிவான நகை திருட்டு வழக்கு ஒன்றில் அவரைக் கைது செய்ய ஜூன் 11ஆம் தேதி புளியாண்டப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, அவரைக் கைது செய்த நேரத்தில், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளையும் உடன் கூட்டிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரை ஜூன் 12ஆம் தேதி ஆன்லைனில் அய்யப்பனின் உறவுக்காரப் பெண் ஒருவர் பதிவு செய்கிறார். அந்த நாள் இரவு மீண்டும், அவரையும் மற்ற இரண்டு பெண்களையும் ஆந்திர மாநில காவல் துறை விசாரணைக்கு வரவேண்டும் என அழைத்துச் செல்கிறது.

இந்த இரண்டு நாட்களில் அய்யப்பன் குடும்பத்தினர் ஆந்திர மாநில காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டது குறித்து எந்தத் தகவலும் ஆந்திர மாநில அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு பிபிசி தமிழிடம் உறுதி செய்தார்.

விசாரணை என்ற பெயரில் வன்முறை - குற்றம் சாட்டும் பெண்கள்

கிருஷ்ணகிரி குறவர் இன பெண்கள் ஆந்திர போலீசார் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு
படக்குறிப்பு, அய்யப்பன் உள்பட 10 நபர்கள் நகை திருட்டு வழக்கில் ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது

அய்யப்பன் உள்பட 10 நபர்கள் நகை திருட்டு வழக்கில் ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அதில் அய்யப்பன் மற்றும் அவரது உறவினர் பெண் என இரண்டு நபர்கள் தவிர மற்ற எட்டு நபர்கள் ஜூன் 17ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

விசாரணை என்ற பெயரில் தங்களுக்கு மோசமான சித்ரவதை மற்றும் பாலியல் தாக்குதல் நடைபெற்றதாக பெண்கள் கூறுகின்றனர். ஐந்து மற்றும் ஏழு வயதே நிரம்பிய தங்களது இரண்டு குழந்தைகள், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பார்த்து அச்சம் விலகாமல் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

பாலியல் தாக்குதல் நடைபெற்றது குறித்துப் பேசிய சுதா, ''தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டால்தான் என் கணவரை விடுவேன், இல்லாவிட்டால் அவரை தூக்கில் மாட்டிவிடுவேன்' என்று சொல்லி என்னை பயங்கரமாக மிரட்டினார்கள்.

லத்தியால் என் பின்புறத்தில் அடித்தார்கள். நீ என்னுடன் ஒத்துழைத்து இருந்தால்தான் உன் கணவரை உயிரோடு விடுவேன் என என்னிடம் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தவறாக நடந்து கொண்டார்," என்று விசாரணையின்போது என்ன நடந்தது எனக் கூறினார்.

கிருஷ்ணகிரி குறவர் இன பெண்கள் ஆந்திர போலீசார் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு
படக்குறிப்பு, தங்களை முகத்தை மூடிய நிலையில், ஒரு துணியைப் போர்த்தி ஆந்திர போலீசார் அழைத்துச் சென்றதாக சுதா கூறுகிறார்.

திருட்டு வழக்கில் தன் கணவரை விசாரிக்க வேண்டுமெனில், தன்னை ஏன் கூட்டிச் செல்ல வேண்டும் என்று பலமுறை கேட்டும் அவர்கள் தன்னைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ஜூன் 11ஆம் தேதி காவல் துறையினர் தன்னை அழைத்துச் சென்றபோது எதற்காகத் தன்னை அழைத்துச் செல்கிறார்கள் என்ற தகவலைச் சொல்லவில்லை என்று கூறும் சுதா, "தங்களை முகத்தை மூடிய நிலையில், ஒரு துணியைப் போர்த்தி அழைத்துச் சென்றதாகவும்" கூறுகிறார்.

''எங்கள் கிராமத்தில் யாருமே இதுபோல் சோதனையோ, கைதோ செய்யப்பட்டதில்லை. மோசமாக எங்களைக் கொண்டுபோனது இவர்கள்தான்.

எங்களை கவர் போட்டு மூடி மார்பு மீதும், இடுப்பு மீதும் கை வைத்து கூட்டிச் சென்றது இவர்கள்தான்,'' என தழுதழுக்கும் குரலில் அவர் நம்மிடம் பேசினார்.

கிருஷ்ணகிரி குறவர் இன பெண்கள் ஆந்திர போலீசார் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு
படக்குறிப்பு, தனக்கு நடந்ததாக சித்ரவதைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளக்கூட முயன்றதாக செல்வி கூறுகிறார்.

முதலில் கிருஷ்ணகிரியில் இருந்து தங்களை பெங்களூருவுக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் இரண்டு இடங்களில் மாற்றி தங்க வைத்துச் சென்றதாகவும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.

அப்படி மாற்றி மாற்றி வைக்கப்பட்ட இடங்களில் கொடுமை செய்த பிறகு, ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்கிறார் செல்வி(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

''பெங்களூரு பைப் குடோன் என்ற இடத்தில் எங்களை அடைத்து வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு பல இடங்களுக்கு எங்களைக் கொண்டு சென்றார்கள்.

இரும்பு ராட் எடுத்து வந்து, அதில் மிளகாய்போடி தூவி, நான் வீட்டுக்கு தூரம் என்றுகூட என்றுகூடப் பார்க்காமல் பிறப்புறுப்பில் வைத்துவிட்டார்கள். எரிச்சல் என்னால் தாங்க முடியவில்லை," என்று தனக்கு செய்யப்பட்ட சித்ரவதை குறித்துக் கூறினார் செல்வி.

தனக்கு நடந்ததாகவும் தற்கொலை செய்துகொள்ளக்கூட முயன்றதாகவும் அவர் கூறுகிறார்.

"அவர்கள் செய்த பாலியல் சித்ரவதைகளைத் தாங்க முடியாமல், செத்துப் போகலாம்னு முயற்சி செய்தேன். ஆனால், எல்லா நேரமும் பெண் கான்ஸ்டபிள் கூடவே இருந்ததால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை."

இவரும் தனக்கு வழக்கு தொடர்பாக எந்தத் தகவலும் தெரியாது என்று பலமுறை கூறியபோதும், திருடப்பட்ட நகையை மீட்டுத் தரவேண்டும் என்று சொல்லி மோசமாக அடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

கிருஷ்ணகிரி குறவர் இன பெண்கள் ஆந்திர போலீசார் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு
படக்குறிப்பு, ஜூன் 16ஆம் தேதி சித்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தங்களிடம் வெள்ளைத் தாள்களில் கையெழுத்து வாங்கியதாக இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.

ஒரு கட்டத்திற்கு மேல், வலி பொறுக்க முடியாமல் காவலர்கள் சொன்ன எல்லா குற்றத்தையும் ஒப்புக்கொண்டு, காவல்துறையின் பிடியிலிருந்து வெளியேற முயன்றதாக நம்மிடம் பேசிய வேணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார்.

''அன்று இரவு முழுவதும் அடித்தார்கள். 'நாலு கிலோ நகை வாங்கிக் கொடுத்துவிட்டு போங்கள், உங்களை விட்டு விடுகிறோம்' என்றார்கள். பெங்களூரு பைப் குடோனில் வைத்து எங்களை அடித்தார்கள், சித்ரவதை செய்தார்கள்.

அடிக்கு பயந்து நாங்கள் வாங்கிக் கொடுக்கிறோம் என்று சொன்னோம். அந்த ஊருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு விவசாய நிலம் இருக்கிறது. அது வைத்துச் சாப்பிடுகிறோம்.

சும்மா இருக்கும் எங்களை நகையை வாங்கிக்கொடு, நகையை வாங்கிக்கொடு என்று டார்ச்சர் செய்தார்கள். அதனால் அவர்கள் சொன்ன எல்லா குற்றத்தையும் செய்ததாக ஒப்புக்கொண்டோம்,'' என்கிறார் வேணி.

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை

பிபிசி தமிழுக்குக் கிடைத்த மருத்துவ அறிக்கை
படக்குறிப்பு, பிபிசி தமிழுக்குக் கிடைத்த மருத்துவ அறிக்கை

ஜூன் 16ஆம் தேதி சித்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தங்களிடம் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும், தங்களுக்கு எதுவும் படித்துக் காட்டப்படவில்லை என்றும் இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.

''பல வெள்ளைத் தாள்களில் கையெழுத்து வாங்கினார்கள். நாங்கள் யாரும் படித்தவர்கள் இல்லை, ஒருவருக்கு கையெழுத்து கூட போடத் தெரியாது என்பதால் கைநாட்டுதான் வாங்கினார்கள்.

தெலுங்கு மொழியில்தான் ஒரு சில பக்கங்களில் எழுதியிருந்தார்கள். எதற்காக கையெழுத்து போடச் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, விளக்கம் தரவில்லை. 'நீங்கள் உங்கள் ஊருக்குப் போக வேண்டுமெனில், கையெழுத்து போடுங்கள்' என்றார்கள். அதனால், நாங்கள் கையெழுத்து போட்டுக் கொடுத்தோம்,'' என்றும் அந்தப் பெண்கள் சொல்கிறார்கள்.

ஒருவழியாக, ஜூன் 17ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்று தாங்களாகவே அனுமதித்துக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அய்யப்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு நபர்களும் மூன்று நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டனர் என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது.

''எங்களுக்கு முறையான சிகிச்சை தரவில்லை. எங்களுக்கு எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னார்கள். பாலியல் வன்முறை நடைபெற்றுள்ளது என்று சொன்ன பிறகும் நாங்கள் நலமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்,'' என்கிறார் சுதா.

கிருஷ்ணகிரி குறவர் இன பெண்கள் ஆந்திர போலீசார் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு
படக்குறிப்பு, புகாரளித்த பெண்களுக்குப் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்கிறார் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த ராதா

பிபிசி தமிழுக்குக் கிடைத்துள்ள அந்த மருத்துவ அறிக்கையில், நான்கு நாட்கள் அந்தப் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் தாக்குதல் நடைபெற்றுள்ளதா, இல்லையா என்பதை நிறுவும் சோதனைகளும் நடைபெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இருந்தபோதும், ஆந்திராவின் சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷாத் ரெட்டி , குற்றம் சாட்டப்பட்ட ஆறு காவலர்கள் மீது பாலியல் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அந்தப் பெண்களை நேரில் சந்தித்த, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த ராதாவிடம் பேசினோம். அவர் போதிய சிகிச்சை அவர்களுக்குத் தரப்படவில்லை என்கிறார்.

''நாங்கள் உள்ளே சென்று பார்த்தபோது, மருத்துவர்கள் எங்களிடம் எல்லோரும் நலமாக இருப்பதாகச் சொன்னார்கள்.

கருப்பை வரை சோதனை செய்து பார்த்துவிட்டதாகவும், அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதாகவும் கூறிய மருத்துவர்கள், அவர்களை கூட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஒரு பெண்ணால் நடக்கமுடியவில்லை அவரை மட்டும் இங்கே தங்கவைக்கலாமா என்று கேட்டபோது, தேவையில்லை என்றார்கள். அங்கு பெண்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை முறையாகத் தரப்படவில்லை,'' என்று ராதா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி குறவர் இன பெண்கள் ஆந்திர போலீசார் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு

பட மூலாதாரம், PRO

படக்குறிப்பு, குறவர் இன பெண்கள் அளித்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயுவை நேரில் சந்தித்துப் பேசியபோது, பெண்களுக்கு முறையான மருத்துவ உதவி அளிக்கப்பட்டதாகவும், பாலியல் தாக்குதல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அதற்கான சிறப்பு சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாலியல் தாக்குதல் உறுதியானால், அவர்களுக்கான இழப்பீடு கிடைப்பதற்கும் முயற்சிகள் எடுப்பதாகத் தெரிவித்தார். குறவர் இன பெண்கள் அளித்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த சிறப்புக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி இரண்டு முறை குறவர் இனப் பெண்களை நேரில் சந்தித்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட பெண்களிடம் அவர்களுடைய பிரச்னைகள் குறித்து கேட்டறிவதற்காகப் பேசியபோது, அவர்கள் ஒவ்வொருவரும் முரண்பட்ட விதத்தில் கருத்துகளை தெரிவித்ததாகச் சொல்கிறார்.

மேலும், ''அவர்கள் சொல்லும் சில கருத்துகள் முரண்பட்ட விதத்தில் இருக்கின்றன. இருப்பினும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் அவர்கள் அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேறி பிற இடங்களில் வசிக்கிறார்கள். மருத்துவ அறிக்கையில் பாலியல் தாக்குதல் உறுதியானால், பெண்களுக்கு உதவித்தொகை தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்,'' என்றும் கூறினார்.

புளியாண்டப்பட்டி கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?

புளியாண்டப்பட்டி கிராமம்
படக்குறிப்பு, புளியாண்டப்பட்டி கிராமம்

புளியாண்டப்பட்டி கிராமத்திற்கு நாம் நேரில் சென்றபோது, அய்யப்பன் குடும்பத்தைப் பற்றி கிராம மக்கள் யாரும் பேசுவதற்கு முன்வரவில்லை.

பலரும், அய்யப்பன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு தொடர்ந்து தங்குவதில்லை என்பதால் அவர்களுடன் பழக்கம் இல்லை என்றனர்.

நள்ளிரவில் பெண்களை அழைத்துச் சென்றது குறித்துக் கேட்டபோது, ''இரவு நேரத்தில் நடந்ததால், எங்களுக்குத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து டிவியில் பார்த்துதான் நாங்கள் விஷயத்தைத் தெரிந்துகொண்டோம்.

இதற்கு முன்னதாக அவ்வப்போது, காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து செல்வார்கள் என்பதால் நாங்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை,'' என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஊர் மக்கள் தெரிவித்தனர்.

விசாரணை குறித்த கேள்விகள்

ஆந்திர மாநில காவல்துறையினர் எவ்வாறு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, தமிழகத்தில் இருந்து விசாரணைக்காக ஒரு குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடிந்தது என்று கேள்வி எழுப்புகிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி.

கிருஷ்ணகிரி குறவர் இன பெண்கள் ஆந்திர போலீசார் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு
படக்குறிப்பு, திருட்டு மற்றும் செம்மரக் கடத்தல் தொடர்பான பல வழக்குகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்களை அந்த மாவட்ட நிர்வாகத்திடம் சொல்லாமல் கைது செய்வது தொடர்வதாகக் கூறுகிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி

''அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள் என்று கூறுவதைவிட, சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்திருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

விசாரணை என்றால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முன்னதாகவே விசாரணை செய்யப்படும் நாள், இடம் சொல்லப்பட்டிருக்க வேண்டும். கிராமத்தில் திடீரென கும்பலாக காவலர்கள் வந்து இவர்களை இழுத்துச் சென்றுள்ளனர் என்பது மனித உரிமை மீறல்,'' என்று புகழேந்தி குற்றம் சாட்டுகிறார்.

இந்தியாவில் பெரிதும் பின்பற்றப்படும் டி.கே.பாசு வழக்கின் கீழ் வழங்கப்பட்ட கைது தொடர்பான விதிமுறைகளில், உள்ள விதிகள் எதுவும் இதில் பின்பற்றப்படவில்லை என்கிறார் அவர்.

''பெண்களைக் கைது செய்யவேண்டுமெனில், சூரிய உதயத்திற்கு முன் மற்றும் சூரியன் மறைந்த பின் கைது செய்யக்கூடாது என்ற விதி இருக்கிறது. பெண்களுக்கு என்ன காரணத்திற்காகக் கைது செய்யப்படுகிறார்கள் என்பது சொல்லப்படவில்லை.

அதுவும் நள்ளிரவில் கைது செய்திருக்கிறார்கள், அவர்களை அருகில் உள்ள குற்றவியல் நடுவரிடம் அழைத்துச் சென்று ஆஜர் செய்துதான் அழைத்துச் செல்லவேண்டும்.

தமிழ்நாடு காவல்துறையும் இதை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தது என்று தெரியவில்லை. திருட்டு மற்றும் செம்மரக் கடத்தல் தொடர்பான பல வழக்குகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்களை அந்த மாவட்ட நிர்வாகத்திடம் சொல்லாமல் கைது செய்வது தொடர்கிறது,'' என்கிறார் புகழேந்தி.

காவல்துறை அதிகாரிகளின் பதில்

கிருஷ்ணகிரி குறவர் இன பெண்கள் ஆந்திர போலீசார் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு
படக்குறிப்பு, தமிழக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் அய்யப்பன் குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்டனரா என்று கேட்டபோது, சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷாந்த் ரெட்டி பதில் கூறவில்லை.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது குவியும் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தெரிந்துகொள்ள முயன்றோம்.

சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷாந்த் ரெட்டியை பிபிசி தெலுங்கு சேவை தொடர்புகொண்டபோது, குற்றம் சுமத்தப்பட்ட ஆறு காவலர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது பாலியல் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

ஆனால் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் அய்யப்பன் குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்டனரா என்று கேட்டபோது, அவர் பதில் கூறவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகள் செயல்பட்ட விதம் குறித்துப் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, ''அய்யப்பன் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்களிடம் புகார் கொடுத்ததும், நபர்கள் காணாமல் போனது குறித்த வழக்கு ஒன்றைப் பதிவு செய்தோம்.

பின்னர் அந்த வழக்கில், பாலியல் தாக்குதல் மற்றும் எந்தத் தகவலும் சொல்லாமல் கைது செய்தது குறித்துக் கூடுதல் தகவல்களைச் சேர்த்து, வழக்கின் பிரிவுகளைத் திருத்தி அமைத்திருக்கிறோம்," என்று கூறினார்.

அதோடு, பாலியல் தாக்குதல் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், மருத்துவ அறிக்கை வந்ததும் அதைக் கொண்டு வழக்கை எப்படி எடுத்துச் செல்வது என்று முடிவு செய்யப்படும் என்றும் கூறினார் ஆட்சியர் சரயு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: